Thursday, June 19, 2014

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்"-தின் முட்டள் தனம்

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம், இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு ஆர்பாட்டத்தினை செய்து முடித்துள்ளது. அது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாத் பல புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அப்புகைப்படத்தின் படி கணிசமான மக்கள் குவிந்திருந்திருக்கின்றனரென்று தெரிகிறது.

இந்த மக்களைக் குவிக்க, அவர்களை அழைத்து அந்த தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டிருந்த அறிவிப்பு செய்தியும் அவர்களது இணையதளத்தில் காணப்படுகிறது. அந்த அறிவிப்பினைக் கீழே மேற்கோள்-குறிகளுக்கிடயே காட்டியுள்ளேன்:

"
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

நியாயவான்களே, முஸ்லிம்களின் உயிரைக் காப்பதற்கும், அவர்களின் உடமைகளை மீட்பதற்கும் புயலெனப் புறப்பட்டு வாரீர்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
"

இவர்களது இந்த அழைப்பு விடுக்கும் அறிவிப்பின் வாசகங்களைப் பார்ப்போம். அதில் உள்ள ஒரு வாசகம்: "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்". இதுவரை நான்கு முஸ்லீம்கள் இறந்துள்ளனர். இத்தனைக்கும் அவர்கள் செய்திவெளியிட்ட தேதியன்று மூன்று முஸ்லீம்கள்தான் இறந்துள்ளனர். இப்படியிருக்க, "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்"- என்று எழுதுவது சரியா? இவ்வாறு எழுதுவது அபாண்டமல்லவா? இது மதவெறியினைத் தூண்டும் செயலல்லவா? இவர்களது இந்த துல்லியமற்ற மற்றும் ஏகத்திற்கும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை சோடிப்புகளால், எத்தனைப் பேர்களது மனதில் பதற்றத்தினை அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கூட்டத்தினைக் கூட்டியுள்ளனர்? இது முறையா?

மேலும் "சிங்கள ராஜபக்ச அரசைக் கண்டித்து" என்று எழுதியுள்ளனர். அவர் சிங்களராக இருப்பது எப்படி இந்தப் பிரச்சனைக்குப் பொருந்தும். தவ்ஹீத் ஜமாத் முட்டாள்களின் கூடாரம் என்பதற்கு இது சான்றல்லவா? "குரங்கு பார்க்கும் குரங்கு செய்யும்" என்ற பழமொழிக்கேற்றவாறு குரங்குக் கூட்டமாக இருக்கிறதல்லவா இந்த தவ்ஹீத் ஜமாத்?

இது தவிர,

கீழ் கண்டவாறல்லவா முஸ்லீம்களை வழி நடத்திருக்கவேண்டும்:

1. பெருவாரி மக்களிடம் சிறுமான்மையான முஸ்லீம்களே நீங்கள் உங்கள் அடையாளத்தினைத் திணிக்க முயற்சிக்காதீர்கள். அவரகளது கலாச்சாரங்களை அழிக்க முயற்சியெடுக்காதீர்கள். "ஹலால் சர்டிஃபிக்கேட்" போன்ற அடையாள மேலோங்களுக்கான அட்டகாசங்களை விட்டுவிடுங்கள். பெருவாரி மக்களிடம் ஒற்றுமையுடன் நீங்கள் இல்லையென்றால் அழிந்துபோவீர்கள் --- என்று அறிவுறுத்திருக்கவேண்டாமா?

2. இலங்கை வாழ் முஸ்லீம் பெண்களே, உங்களிடம் ஏற்கனவே மதத்திற்குட்பட்ட நல்ல செயலான, "தலைக்குத் துண்டு அணிதல்" எனும் பாரம்பரியம் இருந்து வருகிறது. அது போதுமானது. "புர்கா" அணிவதுதான் மார்க்கமென்று ஒன்றுமில்லை. "புர்க்கா" அணிவதால், பள்ளிகளிலும் பணியிடங்களிலும் பிரச்சனை வருகிறதென்றால், "புர்கா" அணிவதற்கு பதிலாக உங்கள் பாரம்பரியப் படியே நடந்து கொள்ளுங்கள். உங்கள் மதத்தினை நீங்கள் பின்பற்றுவதற்கு ஒற்றுமையான சூழல் கட்டாயம் தேவை.  -- என்று அறிவுறுத்த வேண்டாமா?

Friday, February 21, 2014

ராஜீவ் கொலை சம்பந்தப்பட்டோரின் விடுதலையில் எங்கு தவறு நடக்கிறது?

1. ராஜீவ் காந்தி அவர்கள் இந்திய ராணுவத்தினை அனுப்பும் போது அதை ஒரு கற்பழிப்பு எந்திரமாகக் கருதி அனுப்பவில்லை. ஒரு கொல்லும் இயந்திரமாகக் கருதியே அனுப்பினார். கற்பழிப்புகளுக்கு ராஜீவினைப் பொறுப்பாக்குவதைவிட இந்திய ராணுவத்தினை போர்களத்தில் வழி நடத்தியவர்களைத்தான் பொறுப்பாக்கவேண்டும். இராணுவத்தினை ஒரு கொல்லும் இயந்திரமாகக் கருதி மற்றொரு கொல்லும் இயந்திரத்தினைச் சந்திக்க அனுப்புவது தார்மீகமான செயல். இராஜீவினைக் கொல்லும் அளவிற்கு திட்டம் தீட்டும் ஆற்றலுள்ள விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தின் சம்பந்தப்பட்டவர்களை இந்தியாவில் எதிர்கொள்ள ஆற்றலுடையவர்களே.

2. ராஜீவ்காந்தியின் செயலாகிய படையனுப்புதலை ஒரு கொல்லும் இயந்திரத்தினை அனுப்பும் செயலென்று நோக்கினால், ராஜீவ் அவர்கள் விடுதலைப் புலிகளின் தார்மீகமான இலக்கே ஆகும். அதே சமயத்தில் அவரைக் கொல்லப் பயன்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டியவர்களென்ற நியாயத்தின் அடிப்படையில் மரணதண்டனைப் பெறுவதே நியாயம்.

3. மரணதண்டனைப் பெற்றோர் மன்னிப்புக் கோரவில்லையென்றே கருதுகிறேன். கருணை மனு, அதாவது கருணை காட்டச் சொல்லிக் கெஞ்சுதல், மன்னிப்புக் கோருதலுக்கு நிகராகாது. மன்னிப்புக் கோருதல் என்பதில் செய்த செயலினைத் தவறென்றுக் கருதி மனவருத்தம் கொள்ளலும் உள்ளடக்கம். கருணை மனு என்பதில், "நீ கருணையுடைவனாக இரு" எனும் அறிவுரைதான் வெளிப்படும்.

4. மன்னிப்புக் கோரி இருந்தால், அவர்களை மன்னிப்பது ராஜீவின் குடும்பத்தினரது செயலுக்குட்பட்ட விஷயமட்டுமல்ல. அவருடன் இறந்த மற்ற 14 பேர்களின் குடும்பத்தினரது மன்னிப்பும் முக்கியம்.

8. சட்டப் படி ஜனாதிபதிக்கு கருணை காட்டும் அதிகாரமிருந்தாலும், ஆன்மீகத்தின் அடிப்படையில் அவரால் மன்னிக்க முடியாது. எனவே, "ஜனாதிபதியிடம் கருணை மனு" எனும் சட்ட அனுமதி நகைப்புக்குறியது.

9. சம்பந்தப்பட்டோர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுதான் முறை. அவர்கள் மன்னித்தால் மட்டுமே விடுதலை அளிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் கடவுளிடம் மன்னிப்புக் கோரிவிட்டு, கடவுளைச் சந்திப்பதுதான் முறை. மன்னிப்புக் கோருதலென்பது தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதுடன் சம்பந்தப்பட்டதென்று கருதுவதே கூடாது. மன்னிப்புக் கோருதலென்பது மனவருத்தத்தினை மட்டுமே சம்பந்தப் படுத்திய ஒரு விஷயம்.

Wednesday, February 19, 2014

சூஃபிஸம், வஹ்ஹாபிஸம் மற்றும் அத்வைதம்: தீன்-முகம்மது அவர்களிடம் நேர்காணல்

 சூஃபி தத்துவங்கள் பற்றி தீன் முகம்மது என்பவர் சிறந்த விளக்கங்களை அளிக்கிறார். அந்த வீடியோவினை கீழே கொடுத்துள்ளேன். அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், தமிழ்-முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்கும் வண்ணம் பற்பல அரபி கலைச் சொற்கள் உரையாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிமல்லாதோர்களும் விளங்கிக் கொள்வதற்காக அந்த கலைச்சொற்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

அந்த வீடியோவினைப் பகிர்ந்துகொள்வதற்கு முன் அந்த வீடியோவில் கூறப்படும் சில‌ கருத்துக்களைப் பற்றி சிறு விமர்சனங்களை முன்வைக்கிறேன்.
 அந்த வீடியோவில், அத்வைதக் கோட்பாடுகளுக்கும் சூஃபி தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றிப் பேசப்படுகிறது. தீன்-முகம்மதவர்கள், அத்வைதம் பற்றி தான் நன்கு அறிந்தவரல்ல என்றும், சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதினைப் பற்றி சிறிதுப் படித்துள்ளதாகவும் கூறிவிட்டு, சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாகத் தான் படித்த சிலவற்றவைகளையும் கூறுகிறார். பின்பு சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாக தான் கூறியது, எவ்வாறு சூஃபி தத்துவத்தினின்று வேறுபடுகின்றதென்றும் கூறுகிறார்.

ஏறத்தாள இந்தப் பிரபஞ்சமே (Universe, அண்டம், உலகம்) இறைவன் என்று சங்கராச்சாரியார் கூறியதாக தீன்-முகம்மது அவர்கள் அபிப்ராயம் கொண்டுள்ளார். இந்த அபிப்ராயம் சூஃபிக் கொள்கையிலிருந்து மாறுபடுகிறது என்றுக் கூறி எவ்வாறு மாறுபடுகிறதென்பதினை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

 பிரபஞ்சத்தில் காணப்படுபவைகளுக்கு இருக்கக் கூடியத் தன்மை போலியானதென்றும், அந்த இருக்கக் கூடியத் தன்மை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்றும், ஆனால் பொருட்களுக்கு அந்தத் தன்மை கடவுளிடமிருந்து வழங்கப்படுகிறதென்றும், இது சூஃபி நம்பிக்கையின் அம்சமென்றும் கூறுகிறார் தீன்-முகம்மதவர்கள்.  எனவே பொருட்களின் தொகுப்பினைக் கடவுளென்று கூறமுடியாதென்று தீன்-முகம்மதவர்கள் விளக்குகிறார். எனவே இது சங்கராச்சாரியார் கூறியதாகத் தான் கூறிய‌திலிருந்து வேறுபடுகிறதென்றும் விளக்குகிறார்.

 ஆனால் சங்கராச்சாரியாரவர்கள் கூறியதாக தீன் முகம்மதவர்கள் கூறியதை சங்கராச்சாரியாரவர்கள் கூறவில்லையென்று கருதுகிறேன். பொருட்களைக் கடவுளென்று சங்கராச்சாரியார் கூறியவரல்ல. மாறாக, பொருட்களின் மீதான‌ விளைவுகள், தன்மைகள் அவனுடையவையென்று அவர் கூறியவரென்று நம்புகிறேன். ஏறத்தாழ சூஃபிக்களின் நம்பிக்கையாக தீன்-முகம்மதவர்கள் விவரிப்ப‌தைத்தான் சங்கராச்சாரியாரும் கூறியுள்ளாரென்று நம்புகிறேன். அத்வைதம் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கமும் இதைத்தான் கூறுகிறது. இப்னு-அரபி எனும் சூஃபி கூறியதும்  சங்கராச்சாரியார் கூறியதும், ஒரே வாக்கியங்களில் உள்ளன: "இந்த உலகம் போலி ஆனால் முற்றிலும் போலியல்ல".

 புரிந்து கொள்வதற்காக இந்த வீடியோவில் கையாளப்படும் உதாரணமாகிய அலை ஒரு நல்ல உதாரணம். பொருட்களைக் கடவுளென்பது, தண்ணீரினை அலையென்று கூறுவதற்கு சமமானது. எனவே தவறானது. மேலும் அலைக்கு இருக்கக்கூடியத் தன்மை நிரந்தரமானதல்ல, எனவே அலையும் கடவுளின் பகுதியல்ல, ஏனெனில் கடவுள் நிரந்தரமானவன். இருக்கக் கூடியத்தன்மை, அலைக்கு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. அலையின் இருக்கக் கூடியத்தன்மையினை அலையினுடையதென்பது, இறைவனுக்கு இணைவத்தலெனும் இஸ்லாமியக்குற்றமாகும். அது நம்மைப் போலியுலகில் ஆட்டிப்படைக்கும்.

வீடியோவில் கையாளப்படும் பச்சை நிறம் பற்றிய உதாரணமும் அருமை.

  மேலும் பற்பல அம்சங்களில் அத்வைதமும் சூஃபி தத்துவங்களும் உடன்படுகின்றன. சூஃபி தத்துவங்கள், "இறைவன் ஒருவன்", "இறைவனுக்கு இணையில்லை" என்ற கருத்துக்களின் அடிப்படையில் ஏற்பட்ட சிந்தனையாதலால், சூஃபி தத்துவங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய தத்துவங்களுமாகும்.


இப்போது அந்த வீடியோவில் கையாளப்படும் அரபு கலைச் சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புக் கீழே உள்ளன. மூன்றாம் நிமிடத்திலிருந்து வரும் காட்சிகளுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

"ஷாஃபி மத்ஹபு" ----- இலங்கை முஸ்லீம்கள் பின்பற்றும் ஒரு விதமான மதச்சட்ட அமைப்பு முறை;
"காதிரியா, ஷாதுலியா, நக்க்ஷபந்தியா தரீக்காக்கள்" ----- இவைகள் ஒருவிதமான குரு-குல பயிற்சி முறைகள் அல்லது தொடர்கள்;
"திக்ரு"-- இறைவனின் பெயர்களைக் கூறி அவனை ஞாபகம் கொள்ளும் ஒரு முறை
"தசவ்வுஃப்" - சூஃபிஸம்
"சுன்னா"- நபி அவர்களது முறைகள்
"அக்கீதா"- இஸ்லாமிய இறைக் கொள்கை
"வஹ்ஹாபிச இயக்கம்" - குர்-ஆன் மற்றும் நபி அவர்கள் பற்றி நூற்றாண்டு காலங்கள் கழித்து எழுதப்பட்ட செய்திகளை, "ஆதாரபூர்வமானது", "பலஹீனமானது" பிரிக்கும் முறைகளில் எந்த தவறுமில்லையென்று மனப்பூர்வமாக நம்பும் இயக்கங்கள்.
"குஃப்ர்" - இஸ்லாமியக் கொள்கைகளை நிராகரித்தல்
"ஷிர்க்" - இறைவனுக்கு இணையாக எதையாவது கருதுதல்
"மஹப்பத்" - அன்பு
"தீன்"-- இறைவன் பற்றிய‌ நம்பிக்கைகளுடன் வாழும் முறை
"காஃபிர்கள்" -- இறைவனை அல்லது இஸ்லாமிய தத்துவங்களை நிராகரிப்பவர்கள்
"இஸ்லாமிய கிலாஃபத்" -- இந்த வீடியோவில் தீன் முகம்மதவர்கள் இந்த வார்த்தைகள் மூலம் சுட்டுவது அரேபியா மீதான துருக்கிய ஒட்டோமானியர்களின்  இஸ்லாமிய ஆட்சி
"உலமாக்கள்" -- இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பற்றிக் கற்றறிந்தவர்கள்
"கஸ்ஸாலி" -- இவர் சூஃபிஸம் இஸ்லாத்திற்குட்பட்ட நம்பிக்கையே என நிரூபித்தவர்
"ஷாஃபி" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"அபூ ஹனீஃபா" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"இப்னு தைமிய்யா" - இவர் கஸ்ஸாலிக்கு எதிர்பதமானவர்.
"ஷேகுல் இஸ்லாம்" - "இஸ்லாமிய குரு". இது வஹ்ஹாபிகள் இப்னு தைமிய்யாவிற்கு கொடுத்தப் பட்டம்
"அமானத்" - ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை
"வஸீலா தேடுதல்" - உதவி தேடுதல்
"ஹதீஸ்" - நபி அவர்கள் பற்றிய செய்திகள்
"உஜூத்" --- உள்ளமை, இருக்கக்கூடியத் தன்மை, existence
"உஜூதுல் வாஜிப்" --- "கட்டாயமாக இருக்கக் கூடியத் தன்மை"
"மும்கினுல் உஜூத்" --- "இருக்க சாத்தியமானவைகளின் இருக்கக் கூடியத் தன்மை"
"மவ்ஜூத்" --- இருப்பவை
"சிஃபத்" - பண்பு, தன்மை
"ஹதம்" -- இல்லாமை
"குன்" - "ஆகுக" என்று கட்டளையிடுதல்
"வஹ்தத்துல் உஜூத்"  -- இருக்கக் கூடியத் தன்மையினை ஒன்று என நம்பும் மெஞ்ஞானத் தத்துவம் (Oneness of Existence)
"ஒதுவெடுப்பது" --- தொழுகைக்கு முன்பு தனது உறுப்புக்களை தண்ணீர் கொண்டு தூய்மை செய்தல்
"அனல் ஹக்" - நானே உண்மை (இங்கு "உண்மை" என்பது கடவுளின் பெயர்களில் ஒன்று எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது)
"ஷரியத்" - வெளிரங்கமான சட்டதிட்டங்கள்
"மாரிஃபா" - இறைவன் பற்றிய ஞானம்
"காலிக்" - படைப்பவன்
"ஃபத்வா" - மதத் தீர்ப்பு

Friday, February 14, 2014

பிஜேயின் கடவுளின் விலங்கியல் பெயர் : ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ் (Homo Sedentarius-Sedes)


தமிழக வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான "பிஜே" எனும் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் ஒரு சமயம் தான் பங்கேற்ற விவாதத்தின் போது, தனது கடவுள் எப்படிப்பட்டெதென‌ விவரித்தார். இந்த விவரிப்பு 2010-ல் நிகழ்ந்தது. அவரது விவரிப்பின் படி அவரது கடவுள் கீழ்காணும் அம்சங்களைப் பெற்றுள்ளது.

1. கடவுள் வானத்தில் ஒரு திசையில் தொலைதூரத்தில் உள்ளது
2. அது ஒரு நாற்காலி போன்ற ஆசனத்தில் அமர்ந்துள்ளது.
3. அந்த நாற்காலியை 8 ஜின்கள்/வானவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்
4. அதற்கு கைகள் மற்றும் கால்கள் உண்டு
5. அது மனிதனை தனது சாயலில் படைத்துள்ளது. அதாவது கடவுள் மனிதனின் சாயலில் இருக்கிறது.
6. ஆனால், அந்த மனிதக் கடவுளுக்கு சாவு கிடையாது.

விலங்கியல் படி அவரது அந்த கடவுள் எனும் விலங்கிற்கு பெயரிடவேண்டும். அதுதான் முறை. ("விலங்கு" எனும் வார்த்தையை நான் "மிருகம்" எனும் தரம் தாழ்ந்த பொருளில் பயன்படுத்தவில்லை. விலங்கியல் அம்சங்களைப் பெற்ற அனைத்து உறுப்பினர்களும் விலங்குகள் தான். மனிதர்கள் உட்பட விலங்குகள்தான்.)

 அவரது கடவுள், மனிதனைப் போல இருப்பதால், "ஹோமோ" ஜீனஸ் (Genus) வகையைச் சேர்ந்தது. ஆசனத்தில் அமர்ந்துள்ளதென்பதினை இலத்தீனில் மொழிபெயர்த்து அதன் இனப் பெயரினைக் கூறலாம். (அதாவது Species பெயர்). இலத்தீனில் மொழிபெயர்ப்பதென்பது, அறிவியல் மரபிற்க்காக.

"ஆசனத்தில் அமர்ந்துள்ளது" என்பதினை, இலத்தீனில் "செடென்டேரியஸ்-செடெஸ்" (Sedentarius-Sedes) எனக் கூறலாம். இதனை "Google Translator" உதவிகொண்டு மொழிபெயர்த்தேன்.

எனவே பிஜேயின் கடவுளின் அறிவியல் பெயர்: "ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ்" Homo Sedentarius-Sedes.

எனது இந்த அறிவியல்-பணிக்காக சன்மானங்களை வழங்க விரும்புவோர்கள் 123456 என்ற ஸ்டேட் பேங்க் அக்கெளண்டிற்கு அனுப்பும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, February 13, 2014

"கடவுள் ஒருவன்", "கடவுள் எல்லையற்றவன்": ஒரு சிந்தனை

 கடவுள் ஒருவனே என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது திருமந்திரத்தின் முதல் வரி. "உங்கள் எஜமானன் ஒருவனே" என்பது ஷிர்டி சாய்பாபாவின் முதன்மையான போதனை. இதனையே கபீரும் கூறியுள்ளார். ரிக்-வேத வரிகளும் கூறுகின்றன. "இறைவன் ஒருவன், அவன் எத்தேவையும் அற்றவன்" என்பது முஸ்லிம் குழந்தைகள் மனனம் செய்விப்பதற்கு அவர்களது தாய்மார்கள் தேர்ந்தெடுக்கும் முதல் குர்-ஆன் வரிகள். கடவுளுக்கு ஒப்பில்லையென்று வள்ளுவர் சொல்வதிலிருந்தும், வள்ளுவரும் "கடவுள் ஒருவனே" என்று கூறுபவரென அறியலாம்.

 (இந்தப் பதிவில் "உலகம்" என்ற வார்த்தையை Universe என்ற பொருளிள் பயன்படுத்துகிறேன்). உலகம் ஒரு காலப் புள்ளியில் தோன்றி இருக்கலாம் என்பது அறிவியலும் பல மத-நம்பிக்கைகளும் முன்வைக்கும் கொள்கை. இதன் அடிப்படையில் கடவுளின் "ஒருமை"ப் பற்றி, அதாவது, கடவுளின் ஒருமைத் தன்மைப் பற்றி சில சிந்தனைகள் கீழே:

"உலகம் தோன்றியதன் மூலம் மற்றும் காரண கர்த்தா கடவுளே" என்ற கருத்தினையும், "கடவுள் ஒருவன்" என்ற கருத்தினையும் சேர்த்து ஒரு நேர்கோட்டு சிந்தனை (straight forward thought), சில விஷ‌யங்களைக் கூறுகிறது.

இந்த "ஒருமை" அல்லது "ஒன்று" என்பது, நாம் மனதில் புரிந்து வைத்துள்ள "ஒன்று" என்பதாகாது. ஆனால் பாமர நிலையுள்ள பெரும்பான்மையான மக்கள் கடவுளின் "ஒருமைத் தன்மை" என்பதினை நாம் வழக்கில் பயன்படுத்தும் "ஒன்று" என்பதைப் போன்றதென்று கருதுவது ஆன்மீகத்தின் ஆரம்ப நிலைக்கு ஏற்றதே.

 ஏன் கடவுளின் ஒருமையும் நாம் புரிந்து வைத்துள்ள "ஒருமை" அல்லது "ஒன்று"-ம் சமமானதல்ல? சற்று சிந்திப்போம்

நாம் புரிந்து வைத்துள்ள "ஒன்று" எனும் வார்த்தை, அல்லது "ஒருமை" எனும் வார்த்தை, "பன்மை" எனும் வார்த்தையின் புரிதலினால் ஏற்பட்டது. உதாரணத்திற்கு, "இரண்டு" எனும் வார்தையின் அர்த்தத்தை மையப்படுத்தி, "ஒன்று" எனும் வார்தையைப் புரிந்து வைத்திருக்கின்றோம். அல்லது, "மூன்று", "நான்கு" எனும் வார்த்தைகளின் அர்த்தங்களை மையப் படுத்தி, "ஒன்று" எனும் வார்த்தையினைப் புரிந்து வைத்திருக்கின்றோம்.

 ஆனால், கடவுளின் "ஒருமை"யென்பது ஆழமானது. உலகம் "தோன்றியது" எனும் கருத்தில் நம்பிக்கை வைத்தால், கடவுளுக்கு அருகில் எதுவுமில்லை என்பது விளங்கும். எனவே "கடவுள் ஒருவன்" என்பதினைப் "பன்மை" என்பதிலிருந்து விளங்க முடியாது.

உங்களுக்கு அருகில் எந்தப் பொருட்களுமே இல்லாத நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலையில், நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, நீங்கள் "ஒருவன்" என்றக் கருத்துக்குப் பொருள் உள்ளதா?

கடவுளின் ஒருமையை அவ்வளவு எளிதாக விளங்கிக் கொள்ள முடியாது. விளங்கிக் கொள்ளும் நிலையைத்தான், சூஃபிக்கள், "மாரிஃபத்" (இறை ஞானம்) என்கிறார்கள். பெளத்தர்கள் இந்த புரிதலை, "பேருண்மையை விளங்குதல்" என்கின்றனர். ஏன் எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை நம்மால்? காரணம், நாம் பன்மையில் ஊறித் திளைக்கின்றோம். பன்மையெனும் அர்த்தத்திலிருந்துதான் ஒருமையெனும் அர்த்தத்தினை விளங்குகிறோம்.

இந்தப் பன்மையின் அர்த்தத்தினை அழிப்பதற்காகத்தான், சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், "திக்ரு" எனும் பயிற்சியினை செய்கின்றனர். உண்ணும் போதும், உறங்கும் போதும், அமர்ந்த நிலையிலும், நடக்கும் போதும், தனது மூச்சுக்காற்றினை விடும்போதும் இழுக்கும்போதும் கடவுளின் பெயர் கூறிவிடுகின்றனர். தன்னைச் சுற்றி நடப்பவைகள் மீது கவனம் செலுத்தி, அவ்வாறு நடக்கும் செயல்களில் கடவுளின் தன்மைகளைத் தேடுகின்றனர். கடவுளின் தன்மைகளாக இஸ்லாமிய நம்பிக்கை, 99 தன்மைகளைப் பட்டியல் இடுகிறது. "அளவற்ற அன்புடையவன்", "அளவற்ற அருளுடையவன்", "மன்னிப்பவன்", "தோழன்", "வழிகாட்டி" முதலியவைகள் அவனது தன்மைகளின் உதாரணங்கள். இவைகளைத் தனது சுற்று சூழலில் கவனிப்பதும் "திக்ர்"-எனும் பயிற்சியின் அங்கம். பின்பு அந்த கடவுள் தன்மைகளை அந்த மாணாக்கன் வெளிப்படுத்த முயற்சிக்கிக்கவும் அந்த "திக்ரு" அவனை வழிப்படுத்துகிறது. இந்தப் பயிற்சி அந்த மாணக்கனை பண் படுத்துகிறது. இந்தப் பயிற்சி அவனது அகந்தையினை முதலில் அழிக்கிறது. அகந்தையே அந்தப் பன்மை-மையப் புரிதலுக்கு ஊற்று.

எப்போது அந்த மாணாக்கன், பன்மை-மையப் புரிதலிலிருந்து விடுபடுகின்றானோ, அப்போது அவன் எங்கும் இறைத் தன்மைகளைக் காணுவான். குர்-ஆன் வரிப்படி, "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்".

இப்போது வஹ்ஹாபிகளின் கொள்கைப் பற்றி வருவோம். (வஹ்ஹாபிகள் பற்றி நான் பேசாமல் இருக்கவே முடியாதென்றே நினைக்கிறேன்). "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்" என்று குர் ஆன் கூறினாலும், வஹ்ஹாபிகள் இதனைப் "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் கொள்கை என்றும், அது இஸ்லாத்திற்கு விரோதமானதென்றும் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே சூஃபிக்கள் வழிக்கேடர்கள் என்றும் கூறுகின்றனர்.

வஹ்ஹாபிகளின் இந்தக் கருத்து அறிவிலித்தனமானது. சூஃபிக்கள், தனது பயிற்சியின் மூலம், தான் எனும் அகந்தையினை அழித்தப் பிறகுதான் இது அவர்கள் மனதில் நிகழ்கிரதென்பதினால், அவ்வாறு அகந்தையினை அழிக்காத பாமரனினால் சூஃபிக்களைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்க பாமரன் அவர்களை மதிப்பிட‌ முயற்சிக்கவே கூடாது. (இங்கு அகந்தை என நான் சொல்வதினை, அரபியில் நஃப்ஸ் என்று சொல்லுவார்கள்.)

இது பற்றி மேலும் சிந்திப்போம்.....

"திரும்பிய திசைகளிலெல்லாம் கடவுளின் முகத்தினைக் காண்பார்கள்" என்பதும், "பார்ப்பதெல்லாம் கடவுள்" என்பதும் ஒன்றல்ல. "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் வாக்கியம், பார்க்கும் பொருட்களை "பன்மை" என்பதினைக் கொண்டு வரையறுத்து கடவுளைப் பன்மையின் அடிப்படையிலேயே விளக்க முயச்சிக்கும் வாக்கியம். எனவே இந்த இருவாக்கியங்களும் ஒன்றுபோல தோன்றினாலும் வேறுபட்டவை. இதில் மிக கவனமாக இருக்கவேண்டும். சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், இந்த சருக்கல்களை அறிந்தவர்களே. எனவே இதனை, "கத்திமேல் நடக்கும் பாதை" என்றும் சொல்வார்கள். இந்தப் பாதையில் நடக்கும் போது மதி நுட்பத்துடன் நடக்கவேண்டும்.

இது போன்ற சருக்கல்களின் வாய்ப்பினாலேயே, முகம்மது நபி அவர்கள் இந்தப்பாதையினை தனது நெருங்கிய ஈடுபாடுகொண்ட நண்பர்களுக்கு மட்டும் போதித்தார். அலி மற்றும் அபூபக்கர் போன்றோர்கள் அந்த நெருங்கிய நண்பர்களுக்கு உதாரணம். இருப்பினும் இந்த பாதையின் கருத்துக்கள் குர்-ஆனில் உள்ள பல வரிகளில் ஆங்காங்கே பிரதிபலிக்கின்றன. இந்தப் பாதையில், ஒரு மாணவன் செய்யவேண்டிய பணிகள் எல்லாம், உள்ளம் சார்ந்தவை. முகம்மது நபி அவர்கள் போதித்த "ஷரியா" என்பது வெளிரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அவைகள் உடை அமைப்பு, கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டது. அதே சமயத்தில், உள்ளம் சம்பந்தமாக அவர்கள் கற்றுக் கொடுத்தப் பாதையில், "இறை நம்பிக்கை", "இறை யச்சம்" (அரபியில் "தக்வா") மற்றும் "இஹ்சான்" ஆகியவைகள் அம்சங்கள். இதில் "இஹ்சான்" எனும் அரபி வார்த்தைக்கு சமமான தமிழ் வார்த்தை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. இந்த "இஹ்சான்" என்பது தான் நான் இது வரை விவரித்த சூஃபி பாதை. "ஷரியா" எனும் வெளிரங்க வாழ்க்கைமுறையினை பாமரனுக்கும், அந்த ஷரியாவுடன் சேர்த்த "இஹ்சான்" அல்லது சூஃபி பாதையைச் சற்று மதி நுட்பமுடையவர்களுக்கும் என நபி அவர்கள் போதித்தார்கள்.

மேலும் சிந்திப்போம்....

இறைவனது தன்மைகள் அனைத்தும் அளவற்றது. உதாரனத்திற்கு, "அளவற்ற அருளாளன்", "அளவற்ற அன்புடையவன்", "அனைத்தையும் பார்ப்பவன்", "அனைத்தையும் கேட்பவன்". சுருக்கமாகக் கூறவேண்டுமானால் இறைவன் எல்லையற்றவன்.

இந்த "எல்லையற்றவன்" என்பதினைக் கருத்தில் கொண்டால், நாம் இன்னொரு சருக்கலிலிருந்தும் விடுபட முடியும். கடவுள் என்பவனை இருப்பவைகளின் தொகுப்பு என்றும் வரையறுக்கக் கூடாது. இந்த எல்லையற்றத் தன்மை என்பதினை நாம் எளிதாக உணரவே முடியாது. கணிதத்தில் "எல்லையற்றது" என ஒரு "எண்" உள்ளது. எல்லையற்றது என்பதினை பாமரன் எப்படிப் புரிந்து கொள்வான்? எல்லையற்றதிலிருந்து "இரண்டு" எண்ணைக் கழித்தால் அது மீண்டும் எல்லையற்றது என்பதினை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் புரிந்து கொள்ள முடியுமா? முடியாது, ஏனென்றால், "எல்லையற்றது" என்பதினை நாம் உணர்ந்தது கிடையாது.

கடவுளின் இந்த "ஒருமைத் தன்மை" மற்றும் "எல்லையற்றத் தன்மை" என்பதினைப் புரிவதன் முதல் படிதான் அகந்தையினை ஒழிப்பதென்பது.

Sunday, February 09, 2014

பெரியார்தாசனுக்கு ஹமீத் ஜாஃபர் விடுத்த‌ வேண்டுகோள், யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் பொருந்தும்

பெரியார்தாசன் மதம் மாறிய பிறகு, வஹ்ஹாபிகளின் கையில் சிக்கினார். அவர் நேர்மையானவர் என்றாலும், வஹ்ஹாபிகள் புறம் சூழ்ந்து, அவரது துதிபாடவும் மயங்கிவிட்டார் பெரியார்தாசன். வஹ்ஹாபிய அம்சங்கள் சிலவற்றை அவர் போதிக்கவும் செய்தார். (வஹ்ஹாபிகளின் ஒரு பிரிவிடம் சிக்கினாரென்று சொல்லவேண்டும். மற்றொரு பிரிவினரான பிஜே, தனது பிரிவுக்கு வராத காரணத்தினால், பிஜே அவர் மீது புழுதிவாரி தூற்றிக்கொண்டிருந்தார்).

அப்போது "ஆபிதீன்-பக்கங்கள்" எனும் தளத்தில், ஹமீத் ஜாஃபர் அவர்களது வேண்டுகோளினை படித்தேன். அது பெரியார்தாசன் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோள். அதனை கீழே எடுத்துப் போட்டுள்ளேன்:

"ஐயா , பேராசிரியர் அவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்."

இந்த அறிவுரை யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் பொருந்தும். இந்த அறிவுரையில் "ஐயா, பேராசிரியர் அவர்களே" என்பதினை, "தம்பி யுவன்ஷங்கர் அவர்களே" என மாற்றி, யாராவது அவருக்கு ஈமெயில் அனுப்புங்கள்.

ஹமீத்-ஜாஃபர் அவர்கள் கூறியபடியே ஏ ஆர் ரஹ்மானுக்கு இலவச அறிவுரையினை நமது இணையதள வஹ்ஹாபிகள் பல கட்டுரைகள் வழியாக வாரி வழங்கினர். இந்த இலவச அறிவுரைகள், அவர் ஆஸ்கார் பரிசினைப் பெற்றபோது உச்சத்தில் இருந்தது. "சமரசம்" எனும் பத்திரிக்கையின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன், ஜமாத்தே இஸ்லாமி எனும் அமைப்பில் இருப்பவர். அவர் ஏ ஆர் ரஹ்மானுக்கு தனது புண்ணாக்கு அறிவுரைகளை வழங்கி தனது பத்திரிக்கையில் ஒரு கட்டுரையை எழுதினார்.

"கேட் ஸ்டீவன்" (Cat Steven) எனும் இசைக் கலைஞரும் மதமாறிய போது ஆரம்பத்தில் வஹ்ஹாபிய சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு இடமளித்ததால், தனது இசை-வாழ்க்கையினை 27 வருடங்கள் நிறுத்திவைத்தார். பிறகு, கடந்த சில வருடங்களாக மட்டுமே இசைப் பக்கம் திரும்பியுள்ளார்.

ஆனால் இத்தகைய "மதம் மாறுதல்" பற்றிய செய்திகளை, தனது அடையாள மேலோங்குதல் எனும் தொனியில் பரப்புவது நமது சமூகத்தின் மீது மற்ற சமூகத்தினரது வெறுப்பினை வளர்க்கவே உதவும் என்பதினை உணரவேண்டும். இதற்காகக் குதூகலிப்பவர்கள், "ஷேக் சின்ன காசிம்" எனும் இசைக் கலைஞர் வேறு மதத்திற்கு மாறினார் என்பதினையும் உணர்ந்து அடக்கிவாசிக்க வேண்டும்.

Sunday, February 02, 2014

"மதம்"- " நம்பிக்கை": வேறுபாடு பற்றி ஒரு சிந்தனை

அனைத்து மதத்தினர் மத்தியிலும் "நம்பிக்கை" என்று ஒன்று உண்டு. அந்த நம்பிக்கையை, "மதம்" என்பதன் ஒரு அங்கமென்று பலரும் கருதுவர். இத்தகைய கருதல், பலவிதமான பூசல்களுக்கு வித்திடுகிறது என்று எனது கணிப்பு.

மதம் என்பது வாழ்க்கை முறை. மார்க்கம். இதை ஏற்றால், "எனது மதம், மதமல்ல; மார்க்கம்" என்று ஒவ்வொரு மதத்தினரும் சிக்கலான தத்துவங்களைப் பேசிக் கொண்டிருக்கவேண்டியதில்லை. முஸ்லீம்கள், "இஸ்லாம் என்பது மதமல்ல; அது மார்க்கம்." என்று கூறுகின்றனர். இதையே, பெளத்தர்களும் கூறுகின்றனர், சனாதனியர்களும் கூறுகின்றனர். இந்த "மதமல்ல; மார்க்கம்", என்ற விவரிப்புக்கான தேவை, "மதம்" என்ற சொல்லிற்கான அர்த்தம் வேறு "மார்க்கம்" என்ற சொல்லிற்கான அர்த்தம் வேறென்று கருதுவதால் தான்.

"நம்பிக்கை" என்பது "நம்பிக்கைகள்". எவைகளை நிரூபிக்கும் அளவிற்கு விவரிக்க‌ முடியாமல் நம்புகிறோமோ அவைகளை நம்பிக்கைகள் எனலாம். நம்பிக்கையில்லாதா மனிதர்கள் இருக்கவே முடியாது. பெரியார் கூட ஒரு நம்பிக்கையுடைய மனிதர்தான். "கடவுள்" என்று ஒன்று இல்லை என்று நம்பியவர். சமூகத்தில் நீதிவேண்டுமென‌ என நம்பியவர். இவைகளை அவரால் கூட நிரூபிக்கும் அளவிற்கு விவரிக்க முடியாது, அல்லது நிரூபணம் செய்யமுடியாது.

சமூகத்தில் நீதிவேண்டுமென்பது கூட ஒரு நம்பிக்கைதான். அதற்கு வக்காலத்து செய்ய வேண்டுமானால், "அநீதி" எனும் பின்புலத்தில் மட்டுமே செய்யமுடியும். "நீதி - அநீதி" என்று இருபுறத்தையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பிற்கு, அதாவது, நீதி- அநீதி என்ற பிரிவினையே செய்யப்படாத ஒரு அமைப்பிற்கு, "நீதி வேண்டும்" என்ற கருத்தாக்கத்திற்கே பொருளில்லை. நாம் சமூகத்தின் அங்கம் என்பதால், சமூகம் என்பது "நீதி முறைகளுடன் செயல்படும் ஒரு அமைப்பு" என மனதில் நாம் வரையறுத்துவைத்திருப்பதால், சமூகத்திற்கு நீதி தேவை என நம்புகிறோம்.

 திறமை/அதிகாரம்/சக்தி ஆகியவைகள்தான் சமூகத்தின் செயல்பாடுகளுக்கான காரணம் என்று ஒருவர் அமைக்கும் சமூகத்தில், நீதி-அநீதிகள் அனர்த்தமாகின்றன. "survival for the fittest" என்பது இவர்களது நம்பிக்கையாகிவிடுகிறது.

மீண்டும் மதம்- நம்பிக்கை பற்றிய விஷயத்திற்கு வருவோம்.

இதனால், "இந்து நம்பிக்கை" என்ற சொல்லிற்கும், "இஸ்லாமிய மதம்" என்ற சொல்லிற்கும் அர்த்தமில்லை. இந்து மதத்தினர்கள் எனக் கருதப்படுபவர்களில், அத்வைதம், புராண நம்பிக்கைகள் என ஒன்றுக் கொன்று சம்பந்தமே இல்லாத நம்பிக்கைகள் இருக்கின்றன.

அது போலவே, "இஸ்லாமிய மதம்" என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. "இஸ்லாமிய நம்பிக்கைகள்" என்று உண்டு.

மிக எளிதாக விளக்குவதற்காக, "பிஜே" எனும் "பி ஜெயினுல் ஆபிதீன்" என்பவரையும் "ஷேக் அப்துல்லா ஜமாலி" என்பவரையும் எடுத்துக் கொள்வோம். இவர்கள் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்களது நம்பிக்கைகள் வேறுபடுகின்றன.

பிஜே என்பவரின் நம்பிக்கையில் பின்வரும் அம்சங்கள் உள்ளன: கடவுள் உருவமுடையவ‌ன்; அந்த உருவம் ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளது. அந்த நாற்காலியை எட்டு "ஜின்கள்" எனப்படுபவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்; அந்த உருவம் வானத்தில் ஒரு திசையில் அமந்துள்ளது; அந்த உருவத்திற்கு கால், கைகள் உண்டு; மனிதன் என்பவன் அவருடைய உருவத்தில் படைக்கப்பட்டுள்ளான்; அதாவது கடவுள் மனிதனைப் போல இருப்பான். இந்த நம்பிக்கைக்கு பெயர் என்று எதுவும் இல்லை என்றாலும், பிஜே இதனை "இஸ்லாமிய நம்பிக்கை" எனக் கருதுவதால், இதனை இஸ்லாமிய நம்பிக்கை எனக் கொள்வோம்.

"ஷேக் அப்துல்லா ஜமாலி" என்பவரின் நம்பிக்கையில் பின்வரும் அம்சங்கள் உள்ளன. அனைத்துப் பொருட்களும் கடவுளின் ஒளியினால் ("நூர்") படைக்கப் பட்டுள்ளது; கடவுளைப் போன்று எதுவும் இல்லை; நாம் மனிதர்களிடம் உதவி கேட்டால் கூட அது கடவுளிடம் கேட்டதற்கே சமம் என்று கருதவேண்டும்; நாம் மனிதர்களுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணியே ஆகும் எனக் கருதவேண்டும்; கடவுள் தனது படைப்பினங்களைக் கொண்டும் உதவுவான். இதனை பிஜே இஸ்லாமிய நம்பிக்கை இல்லையென்றும், "சூஃபித்துவம்" என்றும் கூறுவார். ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் படி இது இஸ்லாமிய நம்பிக்கை.

 ஆனால் மதம் எனும் அடிப்படையில் இருவரும் "இஸ்லாமிய மதம்" அல்ல. நான் மேலே சொன்னவாரு "இஸ்லாமிய மதம்" என்று ஒன்றுமே கிடையாது. "அரேபிய மதம்" என்று வேண்டுமானால் ஒன்று உண்டு. அந்த அரேபிய மதம் என்பது "அரேபிய வாழ்க்கை முறை அல்லது மார்க்கம்" என்பதாகும். பிஜேக்கு நான்கு மனைவி கிடையாது, ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கும் கிடையாது என்றே நினைக்கிறேன். பிஜேயும் ஜமாலியும் கைலி அணிகின்றனர். அரேபியர்களைப் போலல்லாமல் வேறு உடை உடுத்துகின்றனர். ஒட்டக் கறிகளை சுவைத்திருக்க மாட்டார்கள். எனவே இவர்கள் இருவரும் இஸ்லாமிய‌ மதத்தினையோ அரேபிய மதத்தினையோ சேர்ந்தவர்களில்லை.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள், இஸ்லாமிய நம்பிக்கையினைக் கொண்டுள்ளார்; தமிழ் முஸ்லீம்களின் மதத்தினைக் கொண்டுள்ளார். பிஜே அவர்கள் தான் கூறும் இஸ்லாமிய நம்பிக்கையையும், தமிழ் முஸ்லீம்களின் மதத்தினையும் கொண்டுள்ளார்.

இதேப் போல பாரதியார், அத்வைத/இஸ்லாமிய/பெளத்த/சூஃபி நம்பிக்கையையும், தமிழ் பிராமணர்களின் மதத்தினையும் கொண்டவர். (பெளத்தர்கள் "கடவுள்" எனும் வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், "உண்மை" என்ற வார்த்தையினைப் பயன்படுத்தியுள்ளனர். "உண்மை" என்பது இஸ்லாமிய மற்றும்  வேத நம்பிக்கைகளின் படி கடவுளின் பெயர்களில் ஒன்று.)

வள்ளலாரும் பாரதியார் போலவே. அவருடைய மதம் தமிழ்-சைவர்களின் மதம். அவரின் நம்பிக்கை இஸ்லாமிய/அத்வைத/பெளத்த நம்பிக்கை.

பெரியாரின் மதம் ஈரோடு தமிழர்கள் அல்லது தெலுங்கு தமிழர்களின் மதம். அவருடைய நம்பிக்கை, இஸ்லாமிய, பெளத்த/அத்வைத நம்பிக்கையின் சில அம்சங்கள்.

மோடி, அத்வானி, ஹெச் ராஜா, காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களின் நம்பிக்கைகள் புராண நம்பிக்கைகள்: அதாவது கடவுளுக்கு உருவம் உண்டு; அவைகள் பலவகைப்படும்; அவைகள் குடும்பஸ்தர்கள்

Thursday, January 30, 2014

பிஜே மற்றும் TNTJ-வின் நாகரீகத்தினைப் பாரீர்

 சம்சுதீன் காசிமி என்பவர் பிஜே எனும் பி. ஜெயினுல் ஆபிதீன் என்பவருடைய  கூச்சலுக்கு எதிரான கொள்கையை உடையவர் என்பதால், அந்த காசிமியினை எப்படியெல்லாம் திட்டுகின்றனர் அந்த  TNTJ-வினர் என்று பாருங்கள்.

அவைகளின் ஒரு பகுதியினை கீழே கட்-பேஸ்ட் செய்துள்ளேன்:

"தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, முஸ்லிம் சமுதாயப் பெண்களின் கற்பொழுக்கத்தை கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.

"ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.

"இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.

"தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல…."

இப்படி கூறியுள்ளனர் பிஜெயின் இயக்கமாகிய TNTJ-யினர். சம்சுதீன் காசிமியின் பதில் இதோ: 
http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=1005%3Apj-araajagam-msq-maruppu&catid=41%3Aothers&lang=en


பின் குறிப்பு:
இதன் பின்புலம் அறியாதவர்களுக்காக இந்த விளக்கம். பிஜே என்பவர் "TNTJ" அல்லது "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் அமைப்பின் நிறுவனர். அந்த இயக்கம் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம். அவர் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் எனக் கூறுபவர். இவரையோ அல்லது இவரது TNTJ-யினரையோ எதிர்த்து யாரேனும் சொன்னால், TNTJ-யினர் மேடையேறி திட்டுவர். எதிர்த்துக் கருத்து சொன்னவரின் குடும்பத்தினர்களையெல்லாம் விரசமாக ஆபாசமாகப் பேசுவர். எதிர்த்துக் கருத்து சொன்னவரின் உடல்-ஊணத்தினைக் கூட எள்ளி நகையாடுவர். கடந்த காலங்களில், இப்படி நக்கீரன்-கோபால், கமல் ஹாசன், பாரதிராஜா, மனுஷ்யபுத்திரன் ஆகியோரைத் திட்டியுள்ளனர். இவர்களின் தலைவர் பிஜே என்பவர், சாஃட்வேர்திருடல் தர்மத்திற்குட்பட்ட செயலென்று பகிரங்கமாக அறிவித்தவர்.

காசிமி என்பவரோ முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தர்மமாகாது எனக் கூறுபவர். இவர் ஒரு பள்ளிவாசலில் மத-ஊழியராகப் பணியாற்றுபவர்.

Thursday, January 09, 2014

பிஜேயிடம் கேள்வி கேட்கும் கோமாளிகள்


 பிஜே எனும் பி. ஜெயினுல்லாபிதீனை ஒரு பெறிய அறிஞர் எனக் கருதி அவரிடம் கேள்வி கேட்டு அவரது பதில்களைக் கேட்கும் அவரது வாசகர்கள், அடிமட்ட மூடத்தனத்தில் இருக்கின்றனர் என்பதினை, அவர்களது கேள்விகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் பிஜே எனும் அந்த நபர், மூடர்களின் தலைவர் அல்லது "அபூ ஜாஹில்" என்று அரபியில் அழைக்கத் தக்கவர் எனவும் புரிந்து கொள்ளலாம்.

 அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம்:

  "கொசுவை அழிக்க எலக்ட்ரிக் பேட் பயன்படுத்தலாமா?" இந்த கேள்வியினை மதஅடிப்படையிலான பதிலினை எதிர்பார்த்து அவரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பார் என யோசித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியினை ஒரு அறிவுபூர்வமான கேள்வியாகக் கருதி பிஜெயும் தனது இணையதளத்தில் அந்தக் கேள்விக்கு பதி கூறியிருக்கிறார். ஒரு வஹ்ஹாபிய இஸ்லாம் என்பது இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதில் தான் இருக்கிறது. இவர் சொல்லும் பதிலின் அடிப்படையில், இந்த கொசுக்கடி விஷயத்தில் செயல்பட்டால், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும் என்று அந்த கேள்வி கேட்டவர் கருதுகிறார். என்ன ஒரு கொடுமை !

 "மோசடியாக பொருளாதாரம் சேர்த்த ஒருவரின் வாரிசுகளுக்கு அவரின் சொத்து ஹலாலா?" ("ஹலால்" என்ற அரபி வார்த்தைக்கு "ஏற்றுக்கொள்ளத்தக்கது" அல்லது "ஆகுமானது" என்று பொருள்.) இந்தக் கேள்வியும் அவரது இணையதளத்தில் காணப்படுகிறது. இந்த கேள்விக்குக் கூட பதில்தெரியாத மூடராக கேள்வி கேட்டவர் இருக்கிறார். இவர்களது வஹ்ஹாபிய இஸ்லாத்தில் இறையச்சம் என்றால் என்ன என்று தெரியாத நிலை இருக்கிறது என்பதினை அறிய முடிகிறது. ஃபத்வாக்களின் மூலம் ஆன்மீகத்தினைப் பெறமுடியும் எனும் மூடத்தனத்தினை நாம் இந்த கேள்வியில் காணுகிறோம். இந்த மூடத்தனமான, பத்தாம் பசலியான‌ கேள்விகள் பிஜேயிடம் முக்கியத்துவம் பெறுவதால், அவர் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதினையும் நாம் காண்கிறோம்.

 கேட்கப்பட்டுள்ள மற்றொரு கேள்வி: "அரசு தரும் உதவிகளை நாம் வாங்கலாமா". ஒரு மூடனுக்கு இந்தக் கேள்விக்குக் கூட ஆன்மீக அடிப்படையில் பதில் தெரியவில்லை. அந்த மூடனுக்கு பதில் சொல்லும் மூடன் இந்தப் பிஜே. வஹ்ஹாபிய இஸ்லாம் பலரையும் மூடர்களாக்கும் என்பதற்கு இது மற்றொரு ஆதாராம்.

மூடர்களின் கேள்விகளைப் பட்டியல் போட்டுள்ளேன்:

"வட்டி வாங்குபவரின் நோன்பு கஞ்சி ஹலாலா?"

"முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாமா ?"
"குழந்தைகளை தத்து எடுக்கலாமா?"

"பெண் வீட்டார் மார்க்கத்திற்கு முரணாக செயல்படும் போது அவர்களுடன் சேருவது பாவமா வழிகேடா?" (இந்த வஹ்ஹாபியர்களிடம் மட்டும்தான் பாவமான காரியமும் வழிகேடான செயலும் வெவ்வேறானது போலும்.)

"வீட்டோடு மாப்பிளையாக இருப்பது சரியா?"

"மருமகன் தனது மாமனார் மாமியாரை கவனித்துக் கொள்வதும் கடமையா ?" (கேள்வி கேட்ட மூடனுக்கு அவனது வஹ்ஹாபிய இஸ்லாம் எப்படி ஆன்மீக முன்னேற்றத்தினைத் தரும்?)

"நிச்சயம் செய்யபட்ட பிறகு மணப் பெண்ணிடம் உடல் ரீதியாக குறை உள்ளதை அறிந்தால் திருமணத்தை நிறுத்திக் கொள்ளலாமா ?" (இந்த கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லாத மூடன் வஹ்ஹாபியாக இருப்பதினால் தான் பிஜேயிடம் கேள்விக் கேட்கின்றான்).

"மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம்?"

"மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?"

"பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா" (இது ஒரு மூட வஹ்ஹாபியப் பெண்ணின் கேள்வி போலும்)

"பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா?" (தலாக் சொல்லுதல் என்றால் விவாகரத்து செய்தல் சென்று பொருள்)

"மனைவிக்காக தாயைத் திட்டலாமா" (மாபெரும் மூடனின் கேள்வி இது என்று சொல்லவேண்டும்.)

இது போன்ற மூடத்தனமான கேள்விகள், அந்த மூடன் பிஜேயின் இணையதளத்தில் மலிந்து கிடக்கின்றன. இது போன்ற மூடத்தனத்திடம் இருந்து மக்கள் விடுபடவேண்டுமானால், வஹ்ஹாபிசம் ஒழிந்தால்தான் சாத்தியம். ஆன்மீக இஸ்லாம் மட்டுமே முஸ்லீம்களுக்கு சிறந்த வழி.