Sunday, April 06, 2008

சீனாவும் தலாய்லாமாவும் இந்து பத்திரிக்கையும்

தலாய்லாமாவினை பின் லாடனுடன் இந்து ராம் ஒப்பிட்டுவிட்டதாக ஒரு பதிவினைப் படிக்க நேர்ந்தது. இந்து ராம் அவ்வாறு ஒப்பிடவில்லை என்று அவர் எழுதியதைப் படிக்கும் போது புரிந்தது.

தலாய்லாமாவினை பின்லாடனுடன் ஒப்பிட முடியாதெனினும், தலாய்லாமாவினை அவரது தோற்றத்தினுடனும் ஒப்பிட முடியாது. இந்த தொடுப்பினைப் பார்க்கவும்.

தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களின் முழுவீச்சான கோறுதலான, "திபெத்தியர்களின் சாவு எண்ணிக்கை 99" என்பதினை உண்மை என்று கொண்டாலும், இது சாதாரணமாக இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனத்தில் 10 அல்லது 20 நாட்களில் கொல்லும் மக்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், பிபிசி போன்ற இணைய தளங்களில் இச்ச்ய்தி அதி முக்கியத்துவம் பெறுவதற்கு, பிபிசி உள்ளிட்ட ஊடகங்களின் சீனா விரோத போக்குக்கும், தலாய்லாமாவின் போக்குக்கும் ஒத்த நிலை இருப்பதுவே ஆகும். இதனால் தலாய்லாமாவின் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்ட, "பண்பாட்டு அடிப்படையிலான இன்வொழிப்பு திபெத்தில் நிகழ்கிறது" எனும் கோறுதல்கள் இவ்வூடகங்களில் எதிரொலிக்கப்படுகின்றன.

இவைகளுக்கு முக்கிய காரணம், சமீபத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியே. அதன் செல்வாக்கு கிழக்கு ஆசியாவுடன் மட்டும் நின்றுவிடாது, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஃப்ரிக்காவிலும் வளர்ச்சிஅடைந்துள்ளது. அதனுடைய அரசியல் நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கடந்த லெபனான் போரின் போது வெளிப்பட்டது. சூடான் மேற்கத்திய மதிப்புகளுக்கு எதிராக இருப்பதினால், சூடானில் நிகழும் கலவரத்தினை "இனவொழிப்பு" எனும் சொல்லாடலைக் கொண்டு வர்ணித்து மகிழ்வுற மேற்கத்திய நாடுகள் எத்தனிக்கும் போது, அதனுடன் சீனா நல்லுறவு கொண்டுள்ளது. மேலும் அதன் உறவு வடகொரியாவுடனும் வெனிசுவேலாவுடனும் க்யூபாவுடனும் சிறப்பாகவே உள்ளது. மிக முக்கியமாக ஈரானுடனான‌ அதன் உறவு மிகச் சிறப்பாகவே உள்ளது.

இதனால் இவை அனைத்திலும் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்த கருத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது, அதிக வியப்பினை அளிக்கவில்லை. திபெத்தில் இறந்ததாக‌ தலாய்லாமா கூறிக்கொள்ளும் 99 பேர்கள் அவர்களின் பார்வையில் ஈராக்கில் இறந்த மில்லியன் மக்களைவிடவும், ஆஃகானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளில் கூட விமான‌குண்டு வீசி கொள்ளப்பட்ட மக்களைவிடவும் அதிகமாகத்தோன்றுவதால் அவைகள் தலைப்புச் செய்திகளாக அவ்வூடகங்களின் இணையதளங்களில் பல மணி நேரமோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ நீடித்தன. இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தில் கொல்லும் செய்திகள் பெரும்பாலும் அந்த பிராந்திய செய்தியாக மட்டுமே சுருங்கிவிடுகின்றன.

ஊடகங்களின் மூலம் நான் பார்த்த வரையில், திபெத்தில் மனிதஉரிமை மீறல்கள் இல்லை. உலகில் உள்ள மற்ற ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பகுதிகளில் நிகழும் மனிதவுரிமை மீறல்களான வீட்டிற்குள் புகுந்து கற்பழித்தல், காணாமல் போகுதல், என்கவுண்டர் எனும் பேரில் போட்டுத் தாக்குதல் போன்றவைகள் திபெத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. தலாய்லாமா சார்பான பிபிசியில் கூட நான் காணவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நிலைக்கு தாளம் போடாமலும், இந்திய‌ மதவாதிகளின் நிலைக்குத் தாளம் போடாமலும், "தேசியம்" மற்றும் "பிராந்தியம்" எனும் பேரில் இந்தியாவில் தாண்டவமாடுபவர்களுக்கு சார்பில்லாமலும், "தமிழ்த்தேசியம்" எனும் பேரில் மதவெறியினைக் கொண்டு செயல்படும் கூட்டத்திற்கு எதிரான நிலையைக் கடை பிடித்தும், பெண்ணுரிமை மற்றும் சாதிவொழிப்பு போன்ற பெரியாரின் முற்போக்கான கொள்கைகளையும் தூக்கிப் பிடித்திருக்கும் இந்து பத்திரிக்கையின் ஆசிரியரான ராம் வியக்கத்தக்கவர். ஆனால் அவர் மீதான விமர்சன‌ங்கள் இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.