Wednesday, February 19, 2014

சூஃபிஸம், வஹ்ஹாபிஸம் மற்றும் அத்வைதம்: தீன்-முகம்மது அவர்களிடம் நேர்காணல்

 சூஃபி தத்துவங்கள் பற்றி தீன் முகம்மது என்பவர் சிறந்த விளக்கங்களை அளிக்கிறார். அந்த வீடியோவினை கீழே கொடுத்துள்ளேன். அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், தமிழ்-முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்கும் வண்ணம் பற்பல அரபி கலைச் சொற்கள் உரையாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிமல்லாதோர்களும் விளங்கிக் கொள்வதற்காக அந்த கலைச்சொற்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

அந்த வீடியோவினைப் பகிர்ந்துகொள்வதற்கு முன் அந்த வீடியோவில் கூறப்படும் சில‌ கருத்துக்களைப் பற்றி சிறு விமர்சனங்களை முன்வைக்கிறேன்.




 அந்த வீடியோவில், அத்வைதக் கோட்பாடுகளுக்கும் சூஃபி தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றிப் பேசப்படுகிறது. தீன்-முகம்மதவர்கள், அத்வைதம் பற்றி தான் நன்கு அறிந்தவரல்ல என்றும், சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதினைப் பற்றி சிறிதுப் படித்துள்ளதாகவும் கூறிவிட்டு, சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாகத் தான் படித்த சிலவற்றவைகளையும் கூறுகிறார். பின்பு சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாக தான் கூறியது, எவ்வாறு சூஃபி தத்துவத்தினின்று வேறுபடுகின்றதென்றும் கூறுகிறார்.

ஏறத்தாள இந்தப் பிரபஞ்சமே (Universe, அண்டம், உலகம்) இறைவன் என்று சங்கராச்சாரியார் கூறியதாக தீன்-முகம்மது அவர்கள் அபிப்ராயம் கொண்டுள்ளார். இந்த அபிப்ராயம் சூஃபிக் கொள்கையிலிருந்து மாறுபடுகிறது என்றுக் கூறி எவ்வாறு மாறுபடுகிறதென்பதினை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

 பிரபஞ்சத்தில் காணப்படுபவைகளுக்கு இருக்கக் கூடியத் தன்மை போலியானதென்றும், அந்த இருக்கக் கூடியத் தன்மை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்றும், ஆனால் பொருட்களுக்கு அந்தத் தன்மை கடவுளிடமிருந்து வழங்கப்படுகிறதென்றும், இது சூஃபி நம்பிக்கையின் அம்சமென்றும் கூறுகிறார் தீன்-முகம்மதவர்கள்.  எனவே பொருட்களின் தொகுப்பினைக் கடவுளென்று கூறமுடியாதென்று தீன்-முகம்மதவர்கள் விளக்குகிறார். எனவே இது சங்கராச்சாரியார் கூறியதாகத் தான் கூறிய‌திலிருந்து வேறுபடுகிறதென்றும் விளக்குகிறார்.

 ஆனால் சங்கராச்சாரியாரவர்கள் கூறியதாக தீன் முகம்மதவர்கள் கூறியதை சங்கராச்சாரியாரவர்கள் கூறவில்லையென்று கருதுகிறேன். பொருட்களைக் கடவுளென்று சங்கராச்சாரியார் கூறியவரல்ல. மாறாக, பொருட்களின் மீதான‌ விளைவுகள், தன்மைகள் அவனுடையவையென்று அவர் கூறியவரென்று நம்புகிறேன். ஏறத்தாழ சூஃபிக்களின் நம்பிக்கையாக தீன்-முகம்மதவர்கள் விவரிப்ப‌தைத்தான் சங்கராச்சாரியாரும் கூறியுள்ளாரென்று நம்புகிறேன். அத்வைதம் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கமும் இதைத்தான் கூறுகிறது. இப்னு-அரபி எனும் சூஃபி கூறியதும்  சங்கராச்சாரியார் கூறியதும், ஒரே வாக்கியங்களில் உள்ளன: "இந்த உலகம் போலி ஆனால் முற்றிலும் போலியல்ல".

 புரிந்து கொள்வதற்காக இந்த வீடியோவில் கையாளப்படும் உதாரணமாகிய அலை ஒரு நல்ல உதாரணம். பொருட்களைக் கடவுளென்பது, தண்ணீரினை அலையென்று கூறுவதற்கு சமமானது. எனவே தவறானது. மேலும் அலைக்கு இருக்கக்கூடியத் தன்மை நிரந்தரமானதல்ல, எனவே அலையும் கடவுளின் பகுதியல்ல, ஏனெனில் கடவுள் நிரந்தரமானவன். இருக்கக் கூடியத்தன்மை, அலைக்கு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. அலையின் இருக்கக் கூடியத்தன்மையினை அலையினுடையதென்பது, இறைவனுக்கு இணைவத்தலெனும் இஸ்லாமியக்குற்றமாகும். அது நம்மைப் போலியுலகில் ஆட்டிப்படைக்கும்.

வீடியோவில் கையாளப்படும் பச்சை நிறம் பற்றிய உதாரணமும் அருமை.

  மேலும் பற்பல அம்சங்களில் அத்வைதமும் சூஃபி தத்துவங்களும் உடன்படுகின்றன. சூஃபி தத்துவங்கள், "இறைவன் ஒருவன்", "இறைவனுக்கு இணையில்லை" என்ற கருத்துக்களின் அடிப்படையில் ஏற்பட்ட சிந்தனையாதலால், சூஃபி தத்துவங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய தத்துவங்களுமாகும்.


இப்போது அந்த வீடியோவில் கையாளப்படும் அரபு கலைச் சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புக் கீழே உள்ளன. மூன்றாம் நிமிடத்திலிருந்து வரும் காட்சிகளுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

"ஷாஃபி மத்ஹபு" ----- இலங்கை முஸ்லீம்கள் பின்பற்றும் ஒரு விதமான மதச்சட்ட அமைப்பு முறை;
"காதிரியா, ஷாதுலியா, நக்க்ஷபந்தியா தரீக்காக்கள்" ----- இவைகள் ஒருவிதமான குரு-குல பயிற்சி முறைகள் அல்லது தொடர்கள்;
"திக்ரு"-- இறைவனின் பெயர்களைக் கூறி அவனை ஞாபகம் கொள்ளும் ஒரு முறை
"தசவ்வுஃப்" - சூஃபிஸம்
"சுன்னா"- நபி அவர்களது முறைகள்
"அக்கீதா"- இஸ்லாமிய இறைக் கொள்கை
"வஹ்ஹாபிச இயக்கம்" - குர்-ஆன் மற்றும் நபி அவர்கள் பற்றி நூற்றாண்டு காலங்கள் கழித்து எழுதப்பட்ட செய்திகளை, "ஆதாரபூர்வமானது", "பலஹீனமானது" பிரிக்கும் முறைகளில் எந்த தவறுமில்லையென்று மனப்பூர்வமாக நம்பும் இயக்கங்கள்.
"குஃப்ர்" - இஸ்லாமியக் கொள்கைகளை நிராகரித்தல்
"ஷிர்க்" - இறைவனுக்கு இணையாக எதையாவது கருதுதல்
"மஹப்பத்" - அன்பு
"தீன்"-- இறைவன் பற்றிய‌ நம்பிக்கைகளுடன் வாழும் முறை
"காஃபிர்கள்" -- இறைவனை அல்லது இஸ்லாமிய தத்துவங்களை நிராகரிப்பவர்கள்
"இஸ்லாமிய கிலாஃபத்" -- இந்த வீடியோவில் தீன் முகம்மதவர்கள் இந்த வார்த்தைகள் மூலம் சுட்டுவது அரேபியா மீதான துருக்கிய ஒட்டோமானியர்களின்  இஸ்லாமிய ஆட்சி
"உலமாக்கள்" -- இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பற்றிக் கற்றறிந்தவர்கள்
"கஸ்ஸாலி" -- இவர் சூஃபிஸம் இஸ்லாத்திற்குட்பட்ட நம்பிக்கையே என நிரூபித்தவர்
"ஷாஃபி" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"அபூ ஹனீஃபா" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"இப்னு தைமிய்யா" - இவர் கஸ்ஸாலிக்கு எதிர்பதமானவர்.
"ஷேகுல் இஸ்லாம்" - "இஸ்லாமிய குரு". இது வஹ்ஹாபிகள் இப்னு தைமிய்யாவிற்கு கொடுத்தப் பட்டம்
"அமானத்" - ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை
"வஸீலா தேடுதல்" - உதவி தேடுதல்
"ஹதீஸ்" - நபி அவர்கள் பற்றிய செய்திகள்
"உஜூத்" --- உள்ளமை, இருக்கக்கூடியத் தன்மை, existence
"உஜூதுல் வாஜிப்" --- "கட்டாயமாக இருக்கக் கூடியத் தன்மை"
"மும்கினுல் உஜூத்" --- "இருக்க சாத்தியமானவைகளின் இருக்கக் கூடியத் தன்மை"
"மவ்ஜூத்" --- இருப்பவை
"சிஃபத்" - பண்பு, தன்மை
"ஹதம்" -- இல்லாமை
"குன்" - "ஆகுக" என்று கட்டளையிடுதல்
"வஹ்தத்துல் உஜூத்"  -- இருக்கக் கூடியத் தன்மையினை ஒன்று என நம்பும் மெஞ்ஞானத் தத்துவம் (Oneness of Existence)
"ஒதுவெடுப்பது" --- தொழுகைக்கு முன்பு தனது உறுப்புக்களை தண்ணீர் கொண்டு தூய்மை செய்தல்
"அனல் ஹக்" - நானே உண்மை (இங்கு "உண்மை" என்பது கடவுளின் பெயர்களில் ஒன்று எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது)
"ஷரியத்" - வெளிரங்கமான சட்டதிட்டங்கள்
"மாரிஃபா" - இறைவன் பற்றிய ஞானம்
"காலிக்" - படைப்பவன்
"ஃபத்வா" - மதத் தீர்ப்பு

No comments: