Monday, March 22, 2010

'அஹிம்சை'யும், 'ஹிம்சை'யும்

உயிர்களைக் கொன்று உண்பதென்பதும், உயிர்களை அவைகளின் சுதந்திரத்திற்கு மாறாக பிடித்து வைத்திருப்பது என்பதும் வேறு-வேறுச் செயல்கள்.

இதில் முந்தையதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்; நமது பரிணாமத்தினைக் கருத்தில் கொள்கையில். அதாவது அது இயற்கை. பல உயிர்கள் வேறு பல உயிர்களை நேரடியாகவோ மறைமுகமாவோ சார்ந்து வாழ்கின்றன.

ஆனால் பிந்தையது ? இது மனிதனுக்கே உரிய ஆணவச் செயலின் வெளிப்பாடு. தன்னிடம் உள்ள அந்த ஆணவமானது தவறானதென அவனுக்கே தெரியுமொன்று அது.

மிருகக் காட்சி சாலைகளில், நமது பொழுதுபோக்கிற்காகவும் நாம் கொடுக்கும் காசிற்காகவும் அடைபட்டுக்கிடக்கும் மிருகங்களுக்காக ஏதேனும் ஒரு அமைப்பு போராடுகிறதா ?

'மிருகவதைக்கு-எதிர்' என்ற பேரில், எத்தனை விதமாக காழ்ப்புணர்சிகளை பல அமைப்புகள் கொட்டுகின்றன. காலங்காலமாக மனிதன் பரிணாமத்துடன் ஒன்றி அவன் அசைவனாக இருப்பதினைக் கடிந்து அவனது உரிமையைப் பரிக்க அணிவகுக்கும் அமைப்புகள்தான் எத்தனை !

மேலும் அவ்வாறு காலங்காலமாக அசைவம் அருந்தாமல் இருப்பவர்கள், தங்களது மரக்கறிப் பண்பாட்டு மேன்மைக்காக, அசைவம் உண்பவர்களிடமிருந்து அவர்களது உரிமையைப் பறிக்க, அல்லது சமுதாயத்தில் அவர்களை அடிமட்டத்திற்கு அழுத்த எத்தனை விதங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன ? கல்வி, வேலைவாய்ப்பு முதல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல் வரை இந்த பாகுபாடுகளை மிகத்தெளிவாகக் காணலாம்.

மரக்கறியை மட்டும் உண்போர்களை vegetarian என்றும், அவ்வாறல்லாதவர்களை non-vegetarian என்றும் அழைப்பதில் கூட தவறு உள்ளது. ஏனெனில் non-vegetarian எனப்படுபவர்கள், மரக்கறியையும் அருந்துவது வழக்கம். அதுவும் மரக்கறியைத்தான் அதிக அளவில் அருந்துவர். இருப்பினும் அவர்களை non-vegetarian என அழைப்பது, ஏதோ அவர்களை அசாதாரணமானவர்கள் என்ற தோரனையில் காட்டுகிறது. ஆனால் இந்திய அளவில் நோக்கும் போதும், உலக அளவில் நோக்கும்போதும், அசைவம் அருந்துவது மிகச் சாதாரணமானதாகவும், மரக்கறிமட்டும் அருந்துவதே அசாதாரணமானதாகவும் உள்ளது. எனவே vegetarian/non-vegetarian எனும் பிரித்தல்-முறையைவிட, vegetarian/normal என்ற பிரித்தல்-முறையே சிறப்பானது.

மரக்கறியை மட்டும் உண்போர்களை, அது அவர்களது பண்பாடு என்ற வகையில் மதிக்கிறேன். ஆனால் "உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது" என்பதற்காக அவர்கள் மரக்கறியினை உண்கிறார்கள் என்பதினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய உணர்வு இருப்பவர்கள் இருந்தாலும், மரக்கறி மட்டும் உண்போரில் பெரும்பான்மையானவர்கள், தனது பண்பாட்டினை ஒட்டி நடப்பதற்காக மட்டுமே அதைக்கடைபிடிக்கின்றனர் என்பதினை நாம் பார்க்கலாம். அவ்வாறு ஹிம்சையைத் தளமாகக் கொண்ட பல கூறுகள் அவர்களது பண்பாடுகளில் இருப்பதினைக் காணலாம்.

இந்தப் பதிவினை எழுத ஒரு புகைப்படம் காரணமாக இருந்தது. அப்புகைப்படம் கீழே உள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஆவார். இவரது சீடர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி, Art of Living எனும் பயிற்ச்சியினைக் கற்றுக் கொள்வது வழக்கம். இவர் ஒரு இந்து சமயப் பெரியவர். மரக்கறியைமட்டும்தான் உண்பவர்.

ஆனால் ஒரு கிளியின் சிறகுகளைவெட்டி தனது தோளில் அமரவைத்து போஸ் கொடுக்கவேண்டிய தேவை அவருக்கு. (படம் உதவி: தமிழ்ஹிந்து தளம்)

Friday, March 19, 2010

வஹ்ஹாபிய டேக்-ஓவர்: islamonline.net

இஸ்லாம் ஆன்லைன் ( www.islamonline.net ) எனும் தளம், ஓரளவிற்கு அனைத்து முஸ்லிம் தரப்புகளையும் அனுசரித்து இயங்கிய இணையதளமாக இருந்து வந்தது. மேலும், முஸ்லீம் அல்லாதவர்கள் பலரும் புரிந்துகொள்ளக் கூடிய விதத்தில், இஸ்லாம் பற்றிய, அல்லது இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை அனைத்துத் தரப்பிற்கும் எடுத்துச் செல்லும் தளமாக இருந்து வந்தது. இதனால் முஸ்லீம்கள் அல்லாத பல எழுத்தாளர்களும் இந்தத் தளத்தில் எழுதி வந்தனர்.

இந்த தளத்தினை வெகு நாட்களாக வாசிப்பவர்களுக்குத் தெரியும், அது ஒரு நடுநிலையானத் தளம் என்பது. இந்த தளம், சூஃபிக்களை, அவர்கள் வஹ்ஹாபிகளில்லை என்ற காரணத்திற்காக மற்ற இஸ்லாமியத்தளங்களைப் போல ஒதுக்குவதில்லை. இந்த தளத்தில், இஸ்லாம் சம்பந்தப்பட்டக் கேள்விகள் மற்றும் பிரச்சனைகளுக்கு பல 'ஆலிம்கள்' என்று அழைக்கப்படும் படித்தவர்கள் விளக்கம் அளிப்பர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஷேக் யூசுஃப் அல்-கரதாவி என்பவர் ஆவார். அவரே இந்த தளத்தின் நிறுவனரும் ஆவார்.

இவர் வஹ்ஹாபிகளிடமிருந்து பல முகங்களில் வேறுபடுகிறார். வஹ்ஹாபிகளைப் போல் அல்லாமல், அமெரிக்க ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பவர். வஹ்ஹாபிகளைப் போலல்லாமல், இஸ்ரேலையும் கண்டிப்பவர். இவ்விருவிஷயங்களில் வஹ்ஹாபிகளின் முனாஃபிக்தனம் (நயவஞ்சகம்) அற்றவர்.

மேலும் வஹ்ஹாபிகளைப் போலல்லாமல் சிந்திப்பவர். வஹ்ஹாபிகளுக்கு, குர்ஆன் வசனக்களையும், ஹதீஸ்களையும் மேற்கோள் காட்ட மட்டுமே தெரியும். (ஹதீஸ்கள் என்றால், நபி அவர்கள் மொழிந்தவை அல்லது செய்தவைப் பற்றியக் குறிப்புகள்.)

உதாரணத்திற்கு, ஷியா எனும் முஸ்லீம்-பிரிவினர் பற்றி வஹ்ஹாபிகளின் அபிப்ராயத்தின் படி, "ஷியாக்கள் முஸ்லீம்களில்லை" என்பதாகும். அதாவது அவர்களை முற்றிலுமாக ஒதுக்குபவர்கள் வஹ்ஹாபிகள். அதற்கு அவர்கள் காட்டும் காரணம், ஷியாக்கள், நபி அவர்களின் சில தோழர்களைத் தூற்றுபவர்கள் ஆவார்கள். இதனைச் சுட்டிக்காட்டி, அவர்களை முஸ்லீம்களில்லை என்று வஹ்ஹாபிகள் சாடுகின்றனர். ஏனெனில் இது குர்ஆனுக்கு மாற்றமானதாகுமாம். நபி அவர்களின் தோழர்களை அல்லாஹ் தான் பொருந்திக் கொண்டதாக குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

ஆனால், யூசுஃப் அல்-கரதாவியோ, ஷியாக்களை 'வினோதகர்கள்' (Mubtadiyoon) என அழைப்பவர். அதாவது, இஸ்லாத்தில் சில புதியவைகளை கொணர்ந்து கடைபிடிப்பவர்கள் ஷியாக்கள் எனும் அர்த்தத்தில் கருத்துக் கூறியவர் அவர்.

"ஷியாக்கள் முஸ்லீம்களா ?" என்ற கேள்விக்கு இஸ்லாம் ஆன்லைன் தளத்தில், பல ஆலிம்கள் பதில் அளிக்கும் போது, "சுன்னி-ஷியா பிரிவு, இஸ்லாமிய வரலாற்றினைச் சார்ந்தது. வரலாறு ஒருவரை முஸ்லீமா, முஸ்லீம்-இல்லையா என நிர்ணயிக்காது" என பதில் கூறியிருந்தனர்.

சூஃபிக்கள் பற்றியும் வேறுபடுகின்றனர், கரதாவியும், வஹ்ஹாபிகளும்.

இஸ்லாம்ஆன்லைன் தளத்தில், அவர்கள் பற்றிய கேள்விக்கு, நூதனங்கள் இல்லாத சூஃபியிசத்தினை வரவேற்பதாக பதில் கூறி, ஊக்கமும் அளிக்கப்பட்டது.

மேலும் இசைப் பற்றியும் அதே கருத்து அளிக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டு மேதை இமாம் கஸ்ஸாலியின் நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டி, இசையினை வஹ்ஹாபிகளைப் போலல்லாமல், கரதாவி அங்கீகரித்தார். சூஃபி இசையான கவ்வாலியையும், இஸ்லாம்-ஆன்லைன் தளத்தின் பண்டிதர்கள் ஆதரித்தனர். ஆனால் கண்டிப்பாக, அவைகள் இணைவைப்பு, நிராகரிப்பு மற்றும் நூதனங்கள் இருக்கக் கூடாது என்பது அடிப்படை என்றும் கூறியிருந்தனர்.

இது தவிர, ஷியாக்களின் பிரச்சனைகளையும், அவர்கள் புறத்திலிருந்து கட்டுரையாக வெளியிடும் தளமாகவும் இஸ்லாம் ஆன்லைன் இருந்து வந்தது. குர்த்-இனத்து மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் புறத்திலிருந்து அது வெளியிடுகிறது. துருக்கிய எழுத்தாளர்களின் பலக் கட்டுரைகளையும் அது வெளியிட்டது. உதாரணத்திற்கு, ஃபெத்துல்லாஹ் குலன் என்பவரின் எழுத்துக்களை இத்தளம் மூலமாகவும், இதன் சகோதரத் தளமாகிய ரீடிங்-இஸ்லாம் மூலமாகவும்தான் அறிந்தேன்.

ஆனால் இந்தத் தளம், வஹ்ஹாபிகளின் முனாஃபிக் தனத்திற்கு இலக்காகி, வீழும் நிலையில் உள்ளதாக அறியப்படுகிறது.

இந்தத் தளம் எகிப்திலிருந்து செயல்பட்டு வந்தாலும், இந்தத் தளத்தினை நடத்துவதற்குப் பொருளாதாரம் அளிப்பது al-Balagh cultural society எனும் கத்தார் நாட்டு நிறுவனமாகும். இஸ்லாம் ஆன்லைன் தளம் வஹ்ஹாபிகளின் சிந்தனையிலிருந்து சற்று மாறுபட்ட நிலைப்பாட்டினைக் கொண்டு இருக்கையில், அது புகழ்பெற்றத் தளமாக இருப்பதைப் பார்த்து பொறுக்காத வஹ்ஹாபிகள், தங்கள் பணபலத்தால், al-Balagh cultural society யின் புதிய நிர்வாக உறுப்பினர்களாகவும் இயக்குனர்களாகவும் ஆகி, இஸ்லாம் ஆன்லைனின் ஆசிரியர் குழுவிற்கு புதிய கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்துள்ளனர். இதனால், கெய்ரோவிலுள்ள இதன் அலுவலகத்தில், 300க்கும் மேற்பட்ட அனைத்து ஊழியர்களும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தளம் முழுமையாக மூடப்படும் வாய்ப்பும் உள்ளதாம்.

அல்லது அனைவரையும் வேலை நீக்கம் செய்துவிட்டு, இஸ்ரேல்-சார்பு, அமெரிக்க-சார்பு, (அல்லது அவர்களது கொடூரங்களைக் கண்டுக் கொள்ளாத) வஹ்ஹாபிய சிந்தனைக் கொண்ட தளமாக மாற வாய்ப்புள்ளது.

Thursday, March 11, 2010

பேரன்பு - சூஃபி-வழி சிந்தனை -ஆசிரியர்: ஃபெத்துல்லாஹ் குலன்

ஃபெத்துல்லாஹ் குலன் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பு இது.

"அஷ்க்" எனும் வார்த்தையின் பொருள்: மிகைத்த-அன்பு அல்லது விருப்பம். அது பொதுவாக அழகு, ரம்மியமானத் தோற்றம் அல்லது பரிபூரணத் தன்மைகளின் பால் விழைவதைக் குறிக்கும். சூஃபிக்கள் இத்தகையதனை ஒரு வகையானத் "தோற்ற அன்பு" எனக் கூறுகின்றனர். உண்மையான அன்பல்ல அது என்கின்றனர். உண்மையான அன்பென்பது, அது தனக்கெனெ எந்த முடிவுமற்ற மன்னவனாகிய இறைவன் மீது ஏற்படுவது. அது அவனது கண்ணியத்திற்குட் பட்ட கருணை மற்றும் அழகு மீதும், அவனது கருணைக்கேற்றவாறு அவன் பெற்றுள்ள கண்ணியம் மற்றும் அழகு மீதும் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு இவ்வாறு இறைவன் மீது பேரன்பு கொள்ளும் தன்மையானது, மனிதன் கடவுளை நெருங்குவதற்காக அவனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒளிச் சிறகுகள் ஆகும். விளக்கினை ரசிக்கும் விட்டில் பூச்சிகளின் இனம் புரியாத விருப்பத்தினைப் போல இந்த பேர்விருப்பு. ஆனால் விளக்குகள் போலல்லாமல், அந்தப் பேரொளியோ, இருப்பிற்கான பரம்பொருள். இந்த உலக சராசரங்கள் படைக்கப் பட்டதற்கு இந்த இனம் புரியாதப் பேரன்பே அடிப்படையானக் காரணமாகும். கடவுள் இந்த உலக சராசரங்களைப் படைத்தது, அவனை அறிந்து, அவன் மீது அன்பு செலுத்தப்படுவதற்காகவே ஆகும். அவனால் படைக்கப் பட்ட ஆன்மாக்களில், எவைகள் உண்மையினை உணர்ந்து அவனை அறிந்து அவனது பரம்பொருள் மற்றும் தன்மைகள் மீது பேரன்பு கொள்கின்றனவோ, அவைகளுக்காக இந்த படைப்புச் செயலை இறைவன் செய்தான்.

இந்தப் பேரன்பானது, ஒரு மனிதனின் உயிரினால் உணரப்படுவது. அந்த பேரன்பினை உணர்வதில் அவனது சுய-விருப்புகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே அதில் அந்த மனிதனுக்கே எந்த கட்டுப்பாடும் இராது. ஏனெனில், அந்தப் பேரன்பானது இறைவனிடமிருந்து தோன்றுவது. இறைவன் இந்தப் பேரன்பினைத் தனது புறத்தில், தனது கண்ணியத்திற்கேற்ற வகையில் தன்மீதே அன்பு கொள்வதற்காகப் பெற்றுள்ளான். நிச்சயமாக அவனது பேரன்பு படைப்புகளைப் பொறுத்து அமைவதல்ல. மேலும், அவனது பேரன்பானது, ஒரு படைப்பு இன்னொரு படைப்பின் மீது கொள்ளக் கூடிய அன்பினும் மிகவும் வேறுபட்டது. கடவுள் தன் மீதே கொண்டுள்ளப் பேரன்பானது புனிதம் மிக்கது; உலகை அவன் படைப்பதற்கான காரணமாக இருப்பது; மனித குலத்தினைக் கடவுள் தோன்றச் செய்வதற்கு காரணமாக இருப்பது. மேலும் இந்தப் பேரன்பே, மனிதன் கடவுள் மீது கொள்ளக் கூடிய அன்பிற்கான அடிப்படை. இதுவே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்துகிறது.

இந்தப் பேரன்பினை அடைவதே கடவுளை நோக்கிய மனிதனின் பயணத்தில், அவன் எடுத்து வைக்கும் கடைசி அடி ஆகும். அதற்கு மேல் வேறு அடியில்லை.கடவுள் கொண்டுள்ள இந்த பேரன்பானது, அவனது கடவுள்தன்மையின்பால் உள்ள ஒரு குணம். கடவுள் தன் மீதே கொண்டுள்ள இந்த பேரன்பினை, ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது கொண்டுள்ள அன்புடனோ அல்லது ஒருமனிதன் கடவுள் மீதே கொண்டுள்ள அன்புடனோ குழப்பிக் கொள்ளலாகாது. கடவுள் அவன் மீதே கொண்டுள்ள இத்தகைய அன்பினைக் குறிக்க வேறு ஒரு வார்த்தை இல்லாததால், "பேரன்பு" எனும் வார்த்தையினைப் பயன்படுத்துகிறோம்.

கடவுளின் தனித் தன்மைகளில், சிலர் பரிபூரண ஞானத்தினைக் கடவுளின் முதன்மையானச் சிறப்பாகக் கூறுவர். ஏனெனில், படைப்புகள் தன்னை அறிவதற்காகவே அவைகளைக் கடவுள் படைத்தான் என்பதனால். இறைவனின் புனிதப் பேரன்பானது இறைவன் தன் மீது அன்புகொள்ளக் காரணமாகிறது. அதுவே அவன் தான் அறியப்படவேண்டிய ஆவலைத்தூண்டுகிறது. அது அவனுக்கு தன்னை உற்று நோக்கவும், உற்று நோக்கப்படுவதற்கும் ஆவலைத் தூண்டுகிறது. இறைவனின் முதன்மையான ஞானத்தின் பெயர்களாக "ஜபரூத்" (அரபியில் "மிக உயர்ந்தது" எனப் பொருள்) என்ற வார்த்தையும் "அஹ்மதின் உண்மை" என்றும் வழங்கப்படுகிறது (அஹ்மத் என்பது முகம்மது அவர்களின் மற்றொரு பெயராகும். இந்தப் பெயராலேயே குர்ஆனுக்கு முந்தைய வேதங்களில், இத்தகைய பெயரில் ஒரு நபி (தீர்க்கதரிசி) வரப்போவதாக நன்மாராயம் கூறப்பட்டிருந்தது. இதனை மொழிபெயர்க்கும் எனது புரிதலில், இறைவனின் ஞானத்திற்கு "அஹ்மதின் உண்மை" எனப் பெயர் இருப்பதன் காரணம். அந்த ஞானம் அவர் மூலமாக வெளிப்பட்டதாலேயே. அந்த இறைவனைப் பற்றிய ஞானத்தினை, "அவன் ஒருவன்; இணையற்றவன்" எனும் ஞானத்தினை இவர் மூலமாக மட்டுமே பல எண்ணிக்கையான மனிதர்களைச் சென்றடையச் செய்யப்படுள்ளதினைக் கருத்தில் கொள்ளவேண்டும்.)

புனிதப் பரம்பொருளுக்கு, இந்தப் புனிதப் பேரன்பே தனித்துவமான குணமாகும். அப்பரம்பொருளின் மற்றைய குணங்கள் யாவும், அவனது இக்குணத்தின் மீது சார்புடையானதாகும். எனவே, இப்பேரன்பினைச் சுவைக்க நாடி, தனது அன்பினைக் கொண்டு அவனை அடைய முயற்சிப்பவர்கள், அப்பேரன்பினைச் சுவைக்க ஆரம்பித்தவுடன் அவர்கள் அப்பரம்பொருளையே அடைந்தவர்களாகின்றனர். இது அப்பரம்பொருளை நேரடியாகச் சென்றடைவதற்கான வழியாகும். இருப்பினும், ஒருவர் இவ்வழியின்றி வேறு வழியிலும் சென்றடையலாம். அது இவ்வுலக வாழ்க்கையினை செம்மையாக வாழ்ந்து, இறைவனின் மற்ற குணங்களைக் குறிக்கும் பேர்களைக் கொண்டு ஆகும்.

மேலும் தொடர்ந்து படிக்க, இங்கே அழுத்தவும்.

சூஃபி வழி: ஃபெத்துல்லாஹ் குலன் (Fethullah Gullen)

சூஃபி-வழி என்பது பற்றிய எண்ணம் பலரது கண்ணோட்டத்தில் பலவைகளாக வேறு படுகின்றன. பெரும்பாலான மக்களின் பார்வையில் சூஃபி-வழி என்பது ஒரு மகானின் கல்லறையில் செய்யப்படும் வழிபாட்டு முறைகளென்று தவறான அபிப்ராயம் வழங்கப்படுகிறது. இவ்வபிப்ராயத்தினை உடையவர்களில் முஸ்லீம்களும் முஸ்லீம் அல்லாதவர்களும் அடக்கம்.

"ஏக இறைவனை வழிபடு" என்பது இஸ்லாம். இஸ்லாத்தின் மீது சற்று அதிக நம்பிக்கை வைத்து இறைவனின் தேட்டத்தில் தன்னை ஒருவர் மிகைத்துக் கொண்டால் அது சூஃபி-வழி.

உஸ்பெக்கிஸ்தான், கஸக்ஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற மத்திய ஆசியா பகுதிகளிலும், ஒட்டோமான் துருக்கியர்களின் ஐரோப்பாவிலும், செச்சன்யா, டாஜஸ்தான், இங்குஷேத்தியா போன்ற காக்கஸஸ்-மலைப் பகுதிகளிலும், பாரசீகப் பகுதிகளான, ஈரான், ஈராக், அசர்பைஜான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலும், இந்தியா பாக்கிஸ்தான் போன்ற இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளிலும் இஸ்லாம் பரவியது சில சூஃபி-வழியில் வாழ்ந்த மகான்களின் (சூஃபிகள்) போதனைகளினாலேயே ஆகும்.

தற்காலத்தில் முஸ்லீம்களிடம் பிணக்குகள் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருப்பதினைக் காண்கிறோம். 7 வருடங்கள் மத்ரஸாக்களில் படித்து ஜீவியம் தேடும் ஆலிம்கள் கூட சூஃபிகள் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டிருப்பதினைக் காண்கிறோம். வஹ்ஹாபிகள் என்பவர்கள் தங்களை "குர்ஆன் மற்றும் சுன்னாவைப் ( நபி வழியினைப்) பின்பற்றுபவர்கள்" எனக் கூறிக் கொண்டு, அவ்வாறு அவர்களல்லாதவர்களை "குர் ஆன் மற்றும் சுன்னாவினைப் பின்பற்றாதவர்கள்" எனக் கூறுவார்கள். ஆனால் உண்மையென்னவெனில் வஹ்ஹாபிகள் என்பவர்கள் "இறைவனை நினைப்பதினைத் தடுப்பவர்கள்" என வரையறுக்கலாம். ஏனெனில், குர்ஆன் மற்றும் சுன்னாவினைப் பின்பற்றுவர்கள் சூபிக்களும் தான். எனவே வஹ்ஹாபிகள் தங்களை வரையறுக்க தாங்கள் பயன்படுத்தும் ஜோடிப்பு பொருந்தாது. இறைவனை நினைப்பவர்களிடமிருந்து (திக்ரு செய்பவர்களிடமிருந்து), சைத்தான் விலகுகிறான்; நினைக்காதவர்களிடம் சைத்தான் குடிகொள்கிறான். பல விதமான வெறுப்புக்களின் ஊற்று அவன். ஒரு வஹ்ஹாபியினை நண்பனாகக் கொண்டு நீங்கள் இருந்தால், இத்தகைய சைத்தானிய அம்சங்களை அவனிடம் நீங்கள் காணலாம். அவன் என்ன தான் தன்னை நபிவழியினைப் பின்பற்றுபவன் என்று கூறினாலும், அவனிடம் அவைகள் அற்று இருப்பதினைக் காணலாம். அவன் வெறுப்பின் ஊற்றாகவும், புறம்பேசுபவனாகவும், வேறு இருவர்களுக்கு மத்தியில் சண்டையினை மூட்டுபவனாகவும், வாதம் செய்து மற்றவர்கள் ஏதும் சொல்லமுடியாத நிலையினைப் பார்த்து மனமகிழ்ச்சிக் கொள்பவனாகவும், தொழுது முடித்த அடுத்த நிமிடம் புறம்பேச கூடுபவனாகவும் இருப்பதினை நீங்கள் பார்க்கலாம். ஓரிரு வஹ்ஹாபிகள் விதிவிலக்காக இருக்க வாய்ப்பு உண்டு. வஹ்ஹாபியக் கூடாரம் ஊழல்களின் கூடாரமாக இருப்பதினையும், பூசல்களின் ஆதாரமாக இருப்பதினையும் தமிழ்நாட்டு வஹ்ஹாபிய அமைப்புகளைக் கவனிப்பவர்களுக்குத் தெரியும்.

சூஃபிகள் பற்றிய இப்பதிவில் வஹ்ஹாபிகள் பற்றி பேசியது, சூஃபிகள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதற்காகவே.

சூஃபிகள் குர்ஆன் மற்றும் ஹதீஸினைப் (நபி மொழிகளைப்) பின்பற்றுபவர்களாகக் காணலாம். தொழுகைகளை அதிக ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, திக்ரு (இறைவனைத் துதித்தல், தியானம் செய்தல்) மற்றும் துவாவில் (இறைவனிடம் பிரார்த்தித்தல்) அதிக நேரம் செலவழிப்பதினைக் காணலாம். பேசுபவருக்கும் கேட்பவருக்கும் தெரிந்த ஒரு நபரினைப் பற்றி அவர் செய்த தவறுகளைச் சுட்டிப் புறம்பேசாதவர்களாகக் காணலாம். அடக்கமுடையவர்களாகவும், தன்னைத் தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பவர்களிடம் வாதம் செய்யும் விருப்பமுமற்றவர்களாகக் காணலாம்.

ஏனெனில் சூஃபிக்களின் வாழ்க்கையில் 'தான்' எனும் அகந்தையினை (நஃப்ஸ்) அழிப்பது முக்கியத்துவம் வாய்ந்த படி. அதனை அவர்கள் திக்ருவினைக் (இறைவன் மீதான சிந்தனை, துதி, தியானம்) கொண்டு அவர்கள் அடைபவர்கள்.

அவர்களது வழியான சூஃபி-வழி பற்றி அறிந்துக் கொள்ள ஒரு அருமையான இணையதளம் ஒன்று உள்ளது. அதற்கான அறிமுகமே இப்பதிவு.

அந்த இணைய தளத்தில் எழுதும் ஆசிரியர் ஃபெத்துல்லாஹ் குலன் என்பவர் ஆவார். இவர் ஒரு மிகச் சிறந்த இஸ்லாமியச் சிந்தனையாளர். துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அவரது இணையதளம்: http://www.fethullahgulen.org/(சூஃபி-வழியினைப் பற்றி அறிந்து கொள்ள சிறந்த வழி யாதெனில், அவ்வழியில் வாழும் ஒரு ஆசானினிடம் பாடம் கற்றலே. ஆனால் அவ் வழி பற்றி ஏதும் அறியாதவர்கள் அது பற்றி சிந்திக்க இந்த இணையதளம் உதவும்.)

Thursday, March 04, 2010

பயணிகளின் உடல் காட்டி: வெள்ளைக்காரர்களைவிட அசிங்கமானவர்கள் யார் ?

அமெரிக்க விமான நிலையங்களில், பயணிகள் மீது "Body Scanners" எனும் கருவிகளைக் கொண்டு, ஒருவரை ஆடைகளின்றிப் பார்த்துப் பரிசோதிக்கிறார்கள். அவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப் படவேண்டிய பயணிகளென எல்லோரையும் இன்றி யாரையாவது அவர்கள் தேர்ந்தெடுத்து, தங்களது அம்மணக் காட்சிக்கு உட்படுத்துகின்றனர்.

இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இதில் மேற்குலக மக்களின் கவலை என்னெவென்றால் பல பிரபல சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு நட்சத்திரங்களின் அம்மணப்படங்கள், இணையதளத்தில் பகிந்துகொள்ள வாய்ப்பு உண்டு என்பது.

இந்த மேற்குலக மக்களின் கவலையை தவிர்த்து, சாதாரணமாக ஒரு மனிதன் என்று நினைக்கும்போது, இவ்வாறு அம்மணமாகப் பார்ப்பது,ஒரு மனிதனை இழிவு படுத்தும் செயல். ஒருவன் தன்னை தன்மானம் உடையவனாகக் கருதினால், அவன் அதை இழக்க முன்வந்தே விமானங்களில் பயணிக்க முன்வரவேண்டும்.

மேற்குலக மக்களைவிட அசிங்கமானவர்கள் வேறு யார் ?

இதனை முதன்மையாகக் கைவிடவேண்டும். குறைந்தபட்சம் இதில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள படிகள்/முறைகள்/விதிகள் யாது எனத் தெரியவில்லை.

1. பெண்களை பரிசோதிப்பவர்கள், பெண்களாகவும், ஆண்களைப் பரிசோதிப்பவர்கள் ஆண்களாகவும் இருத்தல் அவசியம்.

2. பரிசோதிக்கப் படவேண்டிய பயணிகளை ஏதேச்சையாக தேர்ந்தெடுக்கும் போது, அந்தத் தேர்ந்தெடுப்பைக் கருவியினைக் கொண்டே செய்யவேண்டும். அந்த கருவிக்கு பயணியின் பால், மதம், நிறம், நாடு மற்றும் வயது போன்ற எந்த விவரத்தினையும் கொடுத்து அவைகளைப் பயன்படுத்துமாறு பணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.

3. அக்கருவிகள் பயணிகளின் உடல் காட்சிகளை சேமிக்கக் கூடியதாக இருக்க இருக்கக் கூடாது.

ஒரு பாக்கிஸ்தானிய பெண், இந்த சோதனைக்கு மறுத்து, பயணத்தினை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது. வெள்ளைக்காரனின் வக்கிரங்களுக்கு அளவே இல்லை.