Sunday, April 06, 2008

சீனாவும் தலாய்லாமாவும் இந்து பத்திரிக்கையும்

தலாய்லாமாவினை பின் லாடனுடன் இந்து ராம் ஒப்பிட்டுவிட்டதாக ஒரு பதிவினைப் படிக்க நேர்ந்தது. இந்து ராம் அவ்வாறு ஒப்பிடவில்லை என்று அவர் எழுதியதைப் படிக்கும் போது புரிந்தது.

தலாய்லாமாவினை பின்லாடனுடன் ஒப்பிட முடியாதெனினும், தலாய்லாமாவினை அவரது தோற்றத்தினுடனும் ஒப்பிட முடியாது. இந்த தொடுப்பினைப் பார்க்கவும்.

தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களின் முழுவீச்சான கோறுதலான, "திபெத்தியர்களின் சாவு எண்ணிக்கை 99" என்பதினை உண்மை என்று கொண்டாலும், இது சாதாரணமாக இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனத்தில் 10 அல்லது 20 நாட்களில் கொல்லும் மக்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், பிபிசி போன்ற இணைய தளங்களில் இச்ச்ய்தி அதி முக்கியத்துவம் பெறுவதற்கு, பிபிசி உள்ளிட்ட ஊடகங்களின் சீனா விரோத போக்குக்கும், தலாய்லாமாவின் போக்குக்கும் ஒத்த நிலை இருப்பதுவே ஆகும். இதனால் தலாய்லாமாவின் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்ட, "பண்பாட்டு அடிப்படையிலான இன்வொழிப்பு திபெத்தில் நிகழ்கிறது" எனும் கோறுதல்கள் இவ்வூடகங்களில் எதிரொலிக்கப்படுகின்றன.

இவைகளுக்கு முக்கிய காரணம், சமீபத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியே. அதன் செல்வாக்கு கிழக்கு ஆசியாவுடன் மட்டும் நின்றுவிடாது, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஃப்ரிக்காவிலும் வளர்ச்சிஅடைந்துள்ளது. அதனுடைய அரசியல் நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கடந்த லெபனான் போரின் போது வெளிப்பட்டது. சூடான் மேற்கத்திய மதிப்புகளுக்கு எதிராக இருப்பதினால், சூடானில் நிகழும் கலவரத்தினை "இனவொழிப்பு" எனும் சொல்லாடலைக் கொண்டு வர்ணித்து மகிழ்வுற மேற்கத்திய நாடுகள் எத்தனிக்கும் போது, அதனுடன் சீனா நல்லுறவு கொண்டுள்ளது. மேலும் அதன் உறவு வடகொரியாவுடனும் வெனிசுவேலாவுடனும் க்யூபாவுடனும் சிறப்பாகவே உள்ளது. மிக முக்கியமாக ஈரானுடனான‌ அதன் உறவு மிகச் சிறப்பாகவே உள்ளது.

இதனால் இவை அனைத்திலும் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்த கருத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது, அதிக வியப்பினை அளிக்கவில்லை. திபெத்தில் இறந்ததாக‌ தலாய்லாமா கூறிக்கொள்ளும் 99 பேர்கள் அவர்களின் பார்வையில் ஈராக்கில் இறந்த மில்லியன் மக்களைவிடவும், ஆஃகானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளில் கூட விமான‌குண்டு வீசி கொள்ளப்பட்ட மக்களைவிடவும் அதிகமாகத்தோன்றுவதால் அவைகள் தலைப்புச் செய்திகளாக அவ்வூடகங்களின் இணையதளங்களில் பல மணி நேரமோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ நீடித்தன. இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தில் கொல்லும் செய்திகள் பெரும்பாலும் அந்த பிராந்திய செய்தியாக மட்டுமே சுருங்கிவிடுகின்றன.

ஊடகங்களின் மூலம் நான் பார்த்த வரையில், திபெத்தில் மனிதஉரிமை மீறல்கள் இல்லை. உலகில் உள்ள மற்ற ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பகுதிகளில் நிகழும் மனிதவுரிமை மீறல்களான வீட்டிற்குள் புகுந்து கற்பழித்தல், காணாமல் போகுதல், என்கவுண்டர் எனும் பேரில் போட்டுத் தாக்குதல் போன்றவைகள் திபெத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. தலாய்லாமா சார்பான பிபிசியில் கூட நான் காணவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நிலைக்கு தாளம் போடாமலும், இந்திய‌ மதவாதிகளின் நிலைக்குத் தாளம் போடாமலும், "தேசியம்" மற்றும் "பிராந்தியம்" எனும் பேரில் இந்தியாவில் தாண்டவமாடுபவர்களுக்கு சார்பில்லாமலும், "தமிழ்த்தேசியம்" எனும் பேரில் மதவெறியினைக் கொண்டு செயல்படும் கூட்டத்திற்கு எதிரான நிலையைக் கடை பிடித்தும், பெண்ணுரிமை மற்றும் சாதிவொழிப்பு போன்ற பெரியாரின் முற்போக்கான கொள்கைகளையும் தூக்கிப் பிடித்திருக்கும் இந்து பத்திரிக்கையின் ஆசிரியரான ராம் வியக்கத்தக்கவர். ஆனால் அவர் மீதான விமர்சன‌ங்கள் இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.

10 comments:

Anonymous said...

நல்ல பதிவு. உங்கள் கருத்தில் பெருமளவு ஒத்து போகிறேன்.

பகிர்தலுக்கு நன்றி!

Vajra said...

//
உலகில் உள்ள மற்ற ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பகுதிகளில் நிகழும் மனிதவுரிமை மீறல்களான வீட்டிற்குள் புகுந்து கற்பழித்தல், காணாமல் போகுதல், என்கவுண்டர் எனும் பேரில் போட்டுத் தாக்குதல் போன்றவைகள் திபெத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. தலாய்லாமா சார்பான பிபிசியில் கூட நான் காணவில்லை.
//

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது.

http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990218/ige18008.html

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் கூட வந்துள்ளது.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6041870.stm

இது பி.பி.சி யிலிருந்து.


சீனா திபெத்தில் செய்வது அக்கிரமம். அதை எதிர்த்துப் பேச வக்கில்லாமல் பீஜிங்கிலிருந்து விழும் எலும்புக்த் துண்டுக்கு வாலாட்டும் நாய் தான் நரசிம்மன் ராம் என்கிற இந்து பத்திரிக்கை ஆசிரியர்.


பத்திரிக்கை உலகின் அசிங்கம், கம்யூனிச அடிவருடிகளின் தலைவன் என்ற பட்டமெல்லாம் இந்து ராமுக்குப் பொருந்தும் பெயர்கள்.

இந்து போன்ற தொரு தேசவிரோதப் பத்திரிக்கை தமிழகத்தில் தமிழில் கூட இல்லை.


அதை என்று படிப்பதை விட்டொழித்தேனோ அன்றே என் வாழ்வில் நல்ல காரியங்கள் நிகழ்ந்தன.

என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தில் பிறந்து மாதச் சம்பளத்தில் வாழ்பவர்களை வாட்டி வதக்கி தற்கொலைக்கு முயற்சி செய்யத் தூண்டும் பத்திரிக்கை இந்து பத்திரிக்கை.

மு மாலிக் said...

வஜ்ரா,

Tibet Information Network எனும் அமைப்பு வெளியிட்டதை ஒரு மேற்கோள் குறி கூட இல்லாமல் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் பத்திரிக்கை தர்மத்தினை என்னெவென்று நாம் சொல்வது. அந்த அமைப்பு கூறுவதை எல்லாம் ஒரு பத்திரிக்கை நிருபரின் அறிக்கை அளவிற்கு நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஏதோ இப்பத்திரிக்கையின் தனிப்பட்ட நிருபரின் அறிக்கை போல இந்தியன் எக்ஸ்பிரஸ் செயல்பட்டுள்ளது.

பிறகு, சகட்டு மேனிக்கு நீங்கள் அள்ளிவிடும் ராம் மீதான தனிமனித தாக்குதலை தணிக்கை செய்துவிட்டு, உங்கள் பின்னூட்டத்தின் முதல் பாகத்தினை மட்டும் வெளியிட நினைத்தேன். அதற்கான தொழில் நுட்ப அறிவு இல்லாததால் முழுமையாக அனுமதித்துவிட்டேன்.

தமிழ் சசி / Tamil SASI said...

திபெத் பிரச்சனையை சார்ந்த நிகழ்வுகளில் சில முரண்பாடுகளை கவனிக்க முடியும்.

திபெத் விடுதலையை இந்தியாவில் "வலுவாக" ஆதரிப்பவர்கள் இந்து மத அடிப்படைவாத கும்பல்களான பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்திய தேசியவாதிகள். இவர்கள் திபெத் விடுதலையை ஆதரிப்பது போல பாக்கிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாண விடுதலையையும் ஆதரிப்பார்கள். ஆனால் பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரேலை ஆதரிப்பார்கள். அது போல காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகளை பயங்கரவாதப் பிரச்சனையாக பார்ப்பார்கள். இவையெல்லாம் இந்திய தேசிய நலன் என்ற வரையறைக்குள் அமைக்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் திபெத் விடுதலையை ஆதரிக்க மாட்டார்கள். காரணம் இந்து மதவாதிகள் ஆதரிக்கும் எந்த விடயத்தையும் இவர்களால் ஆதரிக்க முடியாது. ஆனால் காஷ்மீர், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் விடுதலைக்காக போராடுவதால் அதனை ஆதரிப்பார்கள்.

இந்து மத அடிப்படைவாதிகள் கோசோவா குறித்து என்ன பேசினார்கள் என்பது நமக்கு தெரியும். கோசோவா விடுதலை இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களின் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள். எனவே கோசோவா விடுதலையை எதிர்க்கிறார்கள்.

உங்களின் பதிவையும், இங்கிருக்கும் சில பின்னூட்டங்களையும் இந்தச் சார்புகளை கொண்டே நான் புரிந்து கொள்கிறேன்.

இந்தியாவின் வலதுசாரிகள் ஹிந்து நரசிம்மன் ராமை இடதுசாரி ஆதரவாளர் என குற்றம்சாட்டுகிறார்கள். இந்தியாவின் சிறுபான்மையினர் இதனால் ஹிந்துவை தாங்கிப்பிடித்துக் கொள்கின்றனர். சிறுபான்மையினர் தங்களை இடதுசாரிகளாக இந்தப் பிரச்சனையில் முன்னிலைப்படுத்துகின்றனர் :). சிறுபான்மையினர் இடதுசாரிகளாக மாறுவது தான் இங்கே உள்ள பெரிய முரண்பாடு.

என்னைப் பொருத்தவரை ஒரு தேசிய இனத்தை அடக்க மற்றொரு தேசிய இனத்திற்கு என்ன உரிமை உள்ளது ? இது ஏகாதிபத்யம் இல்லையா ? திபெத் கலாச்சாரத்தில் பிரச்சனைகள் உள்ளன என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. திபெத் ஒரு நிலப்பிரபுத்துவ பாரம்பரிய அமைப்பு முறையாக உள்ளது என்ற வாதம் முன்னிலைப்படுத்தப்பட்டு கம்யூனிச படையெடுப்பு நியாயப்படுத்தப் படுகிறது. அப்படி பார்த்தால் சீனா இன்று இந்தியா முழுவதையும் தன் வசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் 1950களில் இந்தியாவிலும் திபெத் போன்ற நிலவரம் தான் இருந்தது. இன்றைக்கும் ஆந்திராவில் உள்ள சில கிராமங்களில் இந்த முறை உள்ளதால் தான் அங்கே நக்சலைட்களின் ஆதிக்கம் உள்ளது. எனவே இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சீனா எடுத்துக் கொள்ளலாமா ?

ஒவ்வொரு இனத்தின் சுயநிர்ணய உரிமையும் மதிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாக உள்ளது. அதனால் தான் ஈழம், திபெத், காஷ்மீர், பாலஸ்தீனம் என அனைத்திலும் எனக்கு ஒரே நிலைப்பாடு உள்ளது.

உங்கள் சார்புகளை விலக்கி விட்டு ஹிந்து நாளிதழ் செய்திகளை வெளியிடும் தோரணைகளை கவனித்து பாருங்கள். ஹிந்து சரியான செய்திகளை வெளியிடுகிறதா, அல்லது தன்னுடைய சார்புகளை செய்திகளாக திரிக்கிறதா என்பது தெரியும்.

ஹிந்து ஒசாமா பின்லேடனை இங்கே இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்று விளக்க முடியுமா ? இந்து மதவாதிகளை எதிர்க்க ஹிந்துவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை :)

தமிழ் சசி / Tamil SASI said...

ஹிந்து ராம் ஒரு கம்யூனிஸ்ட் என்ற நகைச்சுவையை எப்பொழுதும் பலர் முன்வைக்கின்றனர். முன்பு நண்பர் சங்கரபாண்டி இது குறித்து எழுதிய கருத்தினை இங்கே முன்வைக்கிறேன்

"இராம் ஒரு மார்க்ஸியவாதி என்று அழைக்கப் படுவதில்தான் இராமுடைய வெற்றியே அடங்கியிருக்கிறது. மார்க்ஸிய முகமூடியை அணிந்து கொள்வதன் மூலம் தமிழரல்லாத மார்க்ஸிய அறிவுஜீவிகளான அருந்ததி ராய், நோம் சாம்ஸ்கி போன்றவர்களை ஏமாற்றி அவர்கள் தமிழர் பிரச்னைகளை மார்க்ஸ்சியக் கண்களால் பார்ப்பதை விட்டு இராமின் கண்களால் பார்க்கச் செய்ய முடிகிறது.

ஒருவகையில் பார்க்கப் போனால், இராமின் மார்க்ஸிய அபிமானத் தோற்றத்தையும், மாலனின் திராவிடக் கருத்தியல் அபிமானத் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் புலப்படும்.

மார்க்ஸியமும், திராவிடக் கருத்தியலும் ஒடுக்கப் பட்டவர்களின் ஆயுதங்கள். அவ்வாயுதங்களை ஒடுக்கப் பட்டவர்கள் கையில் எடுப்பதைத் தவிர்க்க பல வழிகள் உண்டு. அதில் ஒருவழி அவ்வாயுதங்களை தாங்களே கையில் ஏந்திக் கொண்டால், ஒடுக்கப் பட்டவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னால் ஒடுக்கப் பட்டவர்களின் பாதையை, ஈழம் முதல் இந்தி வரை தாங்களே வகுக்க முடியும்".

மு மாலிக் said...

தமிழ்சசி,

நான் எதை பற்றி உங்களுக்கு கூறமுடியும் என சற்று குழப்பமாக உள்ளது. எனது பதிவினில் நீங்கள் ஏதோ புரிதல் கொண்டுள்ளதாக எழுதுயுள்ளீர்கள். அதாவது பதிவரின் மதம் சார்ந்த புரிதல் என்று சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்.

உலகில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. பல பகுதிகளில் மக்கள் போராடுகின்றனர். போராட்டங்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துதான் எனினும், எதிர்ப்பதற்கான காரணங்கள் மாறுபடுகின்றன.

ஒருவகை : அப்போராட்டங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் அக்கிரமத்தினை எதிர்ப்பதற்காக.

ஆனால் போராடும் குழுக்கள் அக்கிரமங்கள் செய்ய தகுதி அற்றவர்களா ? போராட்டக் குழுக்கள் செய்யும் அக்கிரமங்கள், பெருவாரியான எண்ணிக்கையில் உள்ள மக்களைப் பாதிக்காதவரையில், ஒரு மதம் அல்லது மொழி ஆகியவற்றால் வேறுபட்டுள்ள ஆனால் ஆக்கிரமிப்பு வர்க்கத்திற்கு உட்படாத சிறு பிரிவு மக்களுக்கு எதிரானதாக இருக்கும் பட்சத்தில் நாம் அதை அனுமதித்து விடலாம் என்று கூறிவிடலாமா ? என்னால் முடியாது. ஆக்கிரமிக்கப் பட்டுள்ள சில இடங்களில் போராட்டக் குழுக்களின் அக்கிரமங்கள் புனிதப் படுத்தப்பட்டு, பாதிக்கப் பட்டவர்கள் மேலும் "துரோகிகள்" போன்ற சொற்களினால் கேவலப்படுத்தப் படுகின்றனர். போராட்டக் குழுக்கள் ஆக்கிரமிப்பினை எதிர்க்கிறார்கள் என்பதற்காக பலர் ஆதரவு தருகின்றனர். அவர்கள் அக்கிரமக் காரர்களாக இருந்தாலும் கூட. அவர்களின் ஆதரவினால் தான் பெற்றுள்ள பதவியினையும் பேரினையும் தக்கவைத்துக் கொள்ள மற்ற போராட்டக் குழுக்களினை அவர்கள் வளர விடுவதில்லை.

இது போன்ற சமயங்களின் நான் அப்போராட்டக் குழுவிற்கும் ஆதரவில்லை, அனால் ஆக்கிரமிப்பிற்கும் ஆதரவில்லை. அக்கிரமம் செய்யும் போராட்ட குழுவிற்கு எதிராக ஏதேனும் மற்றொரு போராட்டக் குழு வருமானால், ஆனால் அது அக்கிரம் செய்யும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்கக் கூடியதாக இருக்குமானால் அதற்கு எனது ஆதரவு.

போராட்டக் குழுக்கள் அவ்வாறு இனம் சார்ந்த ( அல்லது மதம் மொழி சார்ந்த ) அக்கிரமங்களில் ஈடுபடாத வரையில் போராடக் கூடியவைகளாக இருக்குமானால் எனது மனம் சார்ந்த ஆதரவு உண்டு.

அது ஈழமாக இருந்தாலும் சரி பாலஸ்தீனமாக இருந்தாலும் சரி. மதம் சார்ந்த உங்களின் புரிதல் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகிவிடாது.

ஹமாஸ் இயக்கம் கிறிஸ்தவர்களை ஓரம் கட்ட ஆரம்பித்தால் அதற்கு ஆதரவு நிச்சயமாக என்னிடமிருந்து இல்லை. காஷ்மீரிலும் எனது இந்த நிலைப்பாடு செல்லும். கொசோவோவிலும் செல்லும்.

இந்து பத்திரிக்கை, எனது இந்த நிலைப்பாட்டுடன் ஒத்து செல்வதால் எனக்கு உகந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த நிலைப் பாட்டிற்கு இந்து பத்திரிக்கை வந்த வழி வேறு பட்டதாக இருக்கலாம்.

உலகில் வேறொரு காரணத்திற்காகவும் ஆக்கிரமிப்பினை எதிர்த்த போராட்டங்கள் உள்ளன. அது....

இரண்டாம் வகை: ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் மீது அடக்குமுறை செய்வதில்லை. வரலாறு போன்ற காரணத்தினால் ஆக்கிரமிப்பு செய்து இருப்பார்கள். பொது மக்கள் மீது எந்த அக்கிரமங்களையும் ஏவுவதில்லை. ஆனால் தனது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மேலாண்மைக்காக, அவைகளின் காவலர்களாகத் தன்னைக் கருதிக் கொள்பவர்கள் ஆக்கிரமிப்பினை எதிர்ப்பார்கள். அப்போது அடக்குமுறைகள் நிகழும். எனது பார்வையில், இது போன்ற சமயத்தில், அடக்கு முறைகள் அக்கிரமங்கள் ஆகாது.

திபெத்தில் நிகழ்வது இதுதான். திபெத்தை பொருத்தவரை எனது பார்வை: கம்யூனிசம் வருவதற்கு முன்பே பல சமயங்களில் அது சீன மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சீனாவின் மற்ற பகுதி மக்களைப் போலவே திபெத் சற்று வேறு பட்டது. சீன உருவாக்கத்தில் திபெத் உள்ளடக்கப் பட்டது. மற்றப் பகுதிகள் உள்ளடங்கி இருப்பது போலவே. கலாச்சார மேன்மைக்காக போராடும் குழுவினை நான் எதிர்ப்பதற்குமில்லை, ஆதரிப்பதற்குமில்லை. அவர்களால் முடிந்தால் அவர்கள் வெற்றி பெறட்டும். அவ்வளவுதான் எனது பார்வை.

எனது இந்த பார்வை சீனாவிடம் உள்ள ஜின்ஜியாங் எனும் மாகானத்திற்கும் பொருந்தும். அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காக எனது நிலை மாறிவிடாது. இந்தோனேசியாவின் ஆசேஹ் எனும் பகுதிக்கும் பொருந்தும். தெற்கு தாய்லாந்திற்கும் பொருந்தும்.

மேலும் வடக்கு அயர்லாந்தும், நொகர்னோ கரபா பகுதிகளும் இந்த வகையினைச் சார்ந்தவை.

மூன்றாவது வகை: திமிர் பிடித்த போராட்டக் குழுக்களின் போராட்டங்கள். நகைக்க வேண்டாம்... இப்படியும் ஒரு சமயத்தில் இருந்தன. செச்சன்யாவில் ஆரம்பத்தில் நிகழ்ந்த போராட்டம் கலாச்சாரம் மற்றும் மத மேலாண்மையினை அடிப்படையாகக் கொண்டது. துதாயேவ் என்பவர் செச்சன்யாவிற்கான சுதந்திரப் பிரகடனத்தினை அறிவித்தபோது அங்கு ரஷ்யாவின் அக்கிரமங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. தாங்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகவும் மாறுபட்ட மொழி என்பதற்காகவும் தனி நாடாக இருக்க விரும்பினர். அதில் அவர்கள் ஓரளவு வெற்றிபெற்றவுடன் அருகில் உள்ள மற்றொரு மாகாணமான டாஜஸ்தானில் அதே போராட்டக் குழுக்கள் தனது வேலையினை ஆரம்பித்தன. பிறகு ரஷ்ய அதிபர் புதினுக்கு வழி தெரியவில்லை. பெருமளவில் ராணுவத்தினை அனுப்பியவுடன் அங்கு அக்கிரமங்கள் நிகழ்கின்றன.
(இதிலும் எனக்கு போராட்டக் காரர்கள் மீது ஆதரவில்லை)

எனது இந்த பதில் மூலம் இருவிஷயங்களை விளக்க முயற்சித்துள்ளேன். எனது நிலையானது நீங்கள் கருதுவது போல‌ மதம் சார்ந்தது அன்று. மற்றொரு விஷயம்: சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள் என்பதற்காக நான் யாரையும் புனிதப்படுத்த தயாராக இல்லை. அக்கிரமங்கள் நிகழும் இடங்களில் நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதினைப் பொருத்து எனது நிலை எப்படியும் மாறலாம்.

தமிழ் சசி / Tamil SASI said...

மாலிக்,

உங்கள் கருத்துகள் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. ஈழம், ஹிந்து சார்ந்த விடயங்களில் மட்டும் நான் மாறுபடுகிறேன். ஹிந்து நாளிதழ் குறித்த உங்கள் கருத்துக்களை நான் கடுமையாகவே எதிர்க்கிறேன். பல விடயங்களில் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கும் நீங்கள் ஹிந்து ஆசிரியர் என்.ராமை "வியக்கத்தக்கவர்" என்ற முடிவுக்கு வரும் அளவுகோல் என்ன என்பதை சொல்லாமல் விட்டு விட்டீர்கள். ஹிந்து ராம் ஒரு சிங்கள பேரினவாத ஆதரவாளர் என்பதை என்னுடைய பல பதிவுகளில் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து இருக்கிறேன்.

ஹிந்துவின் இலங்கைச் செய்திகள் வெளியிடும் விதத்தை சில மாதங்கள் கூர்ந்து கவனியுங்கள். நீங்களே கூட இந்த முடிவுக்கு வர முடியும். பிற ஊடகங்கள் (BBC போன்றவை) இலங்கைச் செய்திகளை எவ்வாறு வெளியிடுகின்றன என்பதையும் கவனியுங்கள். உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் சார்பான தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் சிவநேசன் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டார். அதன் எதிரொலி ஹிந்துவில் எப்படி இருந்தது என்பதையும், இன்று கொழும்பில் சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார். அதனை ஹிந்து எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறது என்பதையும் கவனியுங்கள். நான் கூறும் கருத்து புரியும்.

என்னுடைய பதிவில் உங்களுக்கு நான் இவ்வாறான பின்னூட்டம் எழுதினேன்.

"உங்களுடைய வியக்கத்தக்க ராம், சிங்கள அரசு தமிழர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றிய மனித உரிமை மீறல்களுக்கு ஜல்லி அடித்ததாரே அது சரியானது தானா ? புலிகளை விட்டு தள்ளுங்கள். அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஹிந்து இது வரை ஏதேனும் செய்திகளை வெளியிட்டு உள்ளதா ? சிங்கள அரசாங்கமே கருணாவுடன் இணைந்து சிறார்களை கடத்திய பொழுது "ஸ்ரீலங்கா ரத்னா" ராம் என்ன விமர்சனங்களை முன்வைத்தார் என்பதை சொல்ல முடியுமா ? புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்று கூறி விட்டு பொதுமக்கள் மீது ஸ்ரீலங்கா இராணுவம் விமானம் மூலம் தாக்குதல் நடத்துகிறது. செல் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளுக்கு எதிராக இது வரை ஹிந்து ஏதேனும் எழுதியுள்ளதா ? குறைந்தபட்சம் ஒரு முன்னணி பத்திரிக்கை என்றளவில் என்றேனும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று ஹிந்து செய்திகளை சேகரித்து இருக்கிறதா ? சிங்கள அரசாங்கம் கொடுக்கும் செய்திகளை Cut-Copy செய்யும் ஹிந்து உங்களுக்கு வியக்கத்தக்கத்தாக உள்ளதை நினைத்தால் தான் எனக்கு வியப்பாக உள்ளது"

*****

அது போல நீங்கள் ""தமிழ்தேசியம்" எனும் பேரில் மதவெறியினைக் கொண்டு செயல்படும் கூட்டத்திற்கு எதிரான நிலையைக் கடை பிடித்தும்" என குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் யாரை இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள் என புரியவில்லை. ஈழத்தை குறிப்பிடுகிறீர்களா அல்லது தமிழகத்தில் உள்ள தமிழ்தேசியவாதிகளை குறிப்பிடுகிறீர்களா ?

ஹிந்து ராம் பிராந்திய மற்றும் தேசியத்தை மறுக்கிறார் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஹிந்து ராம் பிராந்திய தேசிய உணர்வை மறுத்து இந்திய தேசிய உணர்வை முன்வைக்கிறார். இந்திய நலன் என்பதை முன்வைக்கிறார். இது முரண்பாடாக தெரியவில்லையா ? இந்திய தேசியத்தை முன்னிறுத்த அவருக்குள்ள உரிமை பிராந்திய நலனை முன்வைப்பவர்களுக்கும் உள்ளது தானே ?

இவ்வாறு பெருத்த முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஹிந்து ராமை நீங்கள் எப்படி வியக்கத்தக்கவர் என கூறுகிறீர்கள் ?

என்னைப் பொருத்தவரை நான் இந்தியாவில் இருக்கும் இந்திய தேசியத்தையும் மறுக்கிறேன். தமிழ் தேசியத்தையும் மறுக்கிறேன்.
என்னுடைய இந்தப் பதிவை பாருங்கள் - தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்

*****

ஹிந்து ராம் குறித்து நான் எழுதிய மற்றொரு கருத்தினையும் இங்கே முன்வைக்கிறேன்.

If an Arundati Roy or Noam Chomsky is unable to distinguish between truth and falsehood, 'mask' and 'real' and gets easily carried away by the lies of a fellow marxist, what kind of intellectuals are they? how could we trust their views of imperialism and host other issues concerning humanism, if they lacked originality in vision and thinking?

***********

The so called intellectuals also have their own bias and it does not necessarily mean that intellectuals have indepth knowledge on every aspects of the problems that exists in the world. They may have a good perception on imperialism and humanism. But not about the complex nature of the Eelam problem that is isolated between 2 ethnic groups in a small part of the world. Just like many in India does not know about Darfur or PKK.

Ram has many tags to his name just like he has the Marxist tag. He is also known as the Sri Lankan expert in the Journalist and Marxist circles. That is because he played a major role in Sri Lanka and at one point of time he had close relations with both the LTTE and the Sri Lankan Government. Please see my article -
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...

N.Ram has strong views against USA, Hindu fundamentalists etc., which i also agree with. But he hides his bias with these Masks which i know better because i know the Eelam problem. But someone who doesn't know about the Eelam problem will just take the words of N.Ram as they agree with him on most issues. I also tend to get the views of Hindu on some aspects of the world problems which i don't know :)

Many seek N.Ram's views on Sri Lanka because of Ram's Sri Lankan expert tag. Recently Indian Express Editor Shekhar Gupta did an interview with Mahinda Rajapaksae. Shekhar Gupta does not know much about Sri Lankan problems. But he did quote N.Ram in few places. That is the influence N.Ram has on the intellectual circles on Eelam problems. And that's is what we are trying to expose...

நந்தா said...

அமைதியாக உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தாலே பல விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள முடி்கிறது....

ஆரோக்கியமான விவாதத்திற்கு ஒரு சல்யூட் வெச்சுக்கறேன்...

நண்பன் said...

மாலிக், உங்களுடைய ஒப்பீடுகள் பொதுவாக பத்திரிக்கை வாசிக்கும் பாமரத் தன்மையுடையவாக இருக்கின்றன என்றே தோன்றுகிறது.

சீனாவின் அத்துமீறல்கள் பற்றிய தகவல் ஏதுமில்லை என்கிறீர்கள். அது மிகவும் தவறானது. இணையத்தில் பிளாக் எழுதிய சிலரை – அதுவும் தன் நாட்டு பிரஜையையே சீனா விட்டு வைத்ததில்லை. விடுதலை உணர்வுடன் ஒன்று கூடிய மாணவர்களின் மீது தன் டாங்கிப் படையை ஏவி, நசுக்கியே கொன்ற கோரம், வேறெங்கும் கண்டும், கேட்டுமிராத ஒரு கொடூரம். தைவான் மீது, எப்பொழுதும் அது ஒரு ஆக்கிரமிப்பு பார்வையையே வைத்திருக்கிறது. அதுபோலவே மத்திய ஆசியாவில், இஸ்லாமிய இனக்கிளர்ச்சிகளை மிகக் கொடூரமாக அடக்கி ஒடுக்கியே வைத்திருக்கிறது. தன் நாட்டின் சகல எல்லைகளிலும் அது தன் அண்டை நாட்டுடன் ஒத்துப் போனதே இல்லை. இவ்வாறிருக்கும் பொழுது, அது திபெத்தில் எந்த வித அத்துமீறல்களிலும் ஈடுபடவே இல்லையென எழுதுவது தவறானதாகும்.

இது ஒரு தளத்தில் என்றால், உங்களுடைய மத்திய கிழக்கு பிரச்சினைகளில் நிகழும் மரணங்களை திபெத்திய மரணங்களோடு ஒப்பீடுவதும் தவறாகவே இருக்கின்றது. திபெத்தில் நடத்தப்பட்ட எதிர்ப்புகளுக்கும், மத்திய கிழக்கில் நிகழும் எதிர்ப்புகளுக்குமுள்ள வித்தியாசங்கள் பலப்பல. திபெத்தில் நடந்த நடக்கும் எதிர்ப்பு காந்திய வழியில் அமைதியாக நடத்தப்படுபவை. அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. தலாய்லாமாவால் ஆயுதம் ஏந்திய ஒரு போராட்டத்திற்கு தனது மக்களை இட்டுச் செல்ல முடியாது. ஆனால், பாலஸ்தீனத்தில், லெபனானில், ஈராக்கில், ஆஃப்கானிஸ்தானத்தில் என நீங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து இடங்களிலும் எதிரிகளுடன் மோதுபவர்கள் ஆயுதமேந்திப் போராடுபவர்கள். அவர்கள் அறிந்தே அதனில் ஈடுபடுகிறார்கள். அதனால், விளையும் மரணங்களும் அதிகமாகவே இருக்கத் தான் செய்யும். இங்கு 99 தானே, அங்கு பாருங்கள் எத்தனை என்ற ஒப்பீட்டின் மூலம் எதை நிருவ முயற்சிக்கிறீர்கள்? சாவின் எண்ணிக்கையின் மூலம் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறுவதில்லை. மாறாக, போராட்டங்களின் ஆத்மா, முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் – போராட்ட வழிமுறைகளில் இருக்கின்றது.
ஒரு சாவாக இருந்தாலும், மில்லியன் சாவாக இருந்தாலும், விடுதலை வேட்கையை முடக்கிப் போடும் பொழுது அது முக்கியத்துவம் பெறவே செய்கின்றன. சமீபத்தில், தனது இரண்டு வீரர்களை விடுதலை செய்ய, ஹமாஸின் மீது ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடுத்தது இஸ்ரேல். ஆனால், அதனால் தனது வீரர்களை மீட்க முடியவில்லை. ஹமாஸையும் ஒடுக்க முடியவில்லை. இறுதியாக ராணுவத் தலைமை விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச ஊடகங்களில் மிகவும் விவாதிக்கப்பட்டது. மற்றெந்த செய்திகளையும் விடவும் முக்கியத்துவம் தரப்பட்டு விவாதம் செய்யப்பட்டது. பின்னர் மற்ற செய்திகள் முன்னுக்கு வர, பாலஸ்தீனப் பிரச்சினைப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. செய்தியின் வசீகரம் என்றும் ஒன்று இருக்கிறது. இந்து பத்திரிக்கை இதற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தது, அல்லது தரவில்லை என்பதைப் பற்றிய விவாதம் அல்ல இது. இரண்டு முற்றிலும் வேறுபட்ட இருவித அணுகுமுறையை தகாத முறையில், ஒரு தட்டில் நிறுத்தி எடை போட முயற்சித்தது தான் இந்துவின் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. அந்த நிலையில் இதைப் பார்க்க வேண்டுமே தவிர, இந்தப் போராட்டத்தை இந்துத்வா சக்திகள் ஆதரிக்கின்றன – ஆதலால் இதை மட்டமாக சித்தரிக்க செய்யப்பட்ட முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்பது, ஒரு இன மக்களின் விடுதலை வேட்கையை அழிப்பதற்கு ஒப்பாகும்.

நீங்கள் செய்த மற்றுமொரு ஒப்பீடும் தவறானது. தமிழ் இன மக்களின் போராட்டத்தை மதவெறி போராட்டம் என்று பார்க்கிறீர்கள். அது மிகவும் தவறு. இலங்கையில், முஸ்லீம்கள் ஒரு தவறான நிலைபாட்டை எடுத்ததாகத் தான் நான் கருதுகின்றேன். தமிழர்கள் பக்கம் நிற்பதா, அல்லது சிங்களர்கள் பக்கம் நிற்பதா என்ற இக்கட்டான சூழலில் அவர்கள் அரசின் பக்கம் சாய்ந்தனர். அத்துடன் அவர்கள் நின்றிருந்தால் எந்தப் பிரச்சினையுமிருந்திருக்காது. ஆனால், அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்ட முனைந்த பொழுது, அதுவே உரசலுக்கும் பின்னர் அதன் வழியாக மோதல்களுக்கும் காரணமாயிற்று. என்றாலும், இந்தப் பிரச்சினையை புலிகள் இந்து இஸ்லாமிய போராட்டமாகக் காணவில்லை. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் தமிழர்கள் ஆன பலரையும் கூட ‘அகற்ற’ வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகி இருக்கின்றனர். காரணம், போட்டியினால், அவர்கள் தங்கள் போராளிகளை அடையாளம் காட்ட முனைந்தார்கள் என்பது தான். தங்கள் நலனுக்கு ஊறு விளைவிப்பவர்களாகக் கருதப் பட்ட அரசியல் தலைவர்களுக்குக் கூட இவை நிகழ்ந்திருக்கின்றன. இவை, விடுதலைப் புலிகளுக்கு என்று மட்டுமல்ல – உலகின் எந்த ஒரு போராட்ட இயக்கமும் இந்த வழிமுறைகளைத் தான் கடைபிடித்திருக்கின்றனர். ஆக, இங்கு மதவெறி என்ற வகையில் இந்தப் பிரச்சினையை அணுகுவது முற்றிலும் தவறானது. நாளடைவில் இந்தப் பிரச்சினை சரியாகக் கூடியது தான். சிங்களர்கள் ஒன்றும் இஸ்லாமியர்களை உயர்த்திப் பிடிக்கப் போவதில்லை. இதற்கு கடந்த நூற்றாண்டில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் – சிங்களர்களால் தூண்டப்பட்ட கலவரங்களை நோக்கினாலே போதும் உணர்ந்து கொள்ள முடியும்.

விடுதலை உணர்வைக் கோர ஒவ்வொரு இனத்திற்கும் உரிமை உண்டு. அந்த உணர்வுகள் எழும் அடிப்படையில், ஒன்றை விட மற்றவை முற்றிலும் வேறான தளங்களில் நிகழும் உணர்வுகளால் அமையப் பெற்றிருக்கிறது. ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடும் பொழுது, அவற்றின் அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்து கொண்டே ஒப்பீடுகளையும், மதிப்பீடுகளையும் பொறுப்புள்ளவர்கள் செய்து கொள்ள வேண்டும். தலாய்லாமாவின் வழிமுறைகளையும், பின் லேடனின் வழிமுறைகளையும், ஒரே வீச்சில், ஒற்றைத் தட்டில் எடை போடுவதைப் போன்ற முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதை இந்து செய்கிறதென்றால், அதன் அடிப்படை சித்தாந்தத்தின் கோளாறேயன்றி வேறெதுவும் இருக்க முடியாது.

ராம் எதிர்த்த பலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். ஆனால், அவை எத்தனை தூரம் வலுவான குரலாக ஒலித்திருக்கிறது என்பதைப் பாருங்கள். ஒரு பலவீனமான குரலாகத் தான் அது எப்பொழுதும் ஒலித்திருக்கின்றதேயன்றி, வலிமையாக அல்ல. இந்து ராமிடம் பாராட்டப்பட வேண்டிய குரலை விட, கண்டிக்கப்படக் கூடிய குரல் மிக அபாயகரமான டெசிபலுடன் மிக வலுவாக ஒலிக்கிறது. ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதை அடையாளம் காண்பது, விடுதலை உணர்வுக்காக உலகமெங்கும் ஒலிக்கும் பல கோடி மக்களின் கனவைக் காப்பதாக இருக்கும்.

மு மாலிக் said...

நந்தா,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

தமிழ்சசி மற்றும் நண்பன் அவர்களுக்கு,

உங்களது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுதப் பட்ட பின்னூட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஆனால் நான் தொடர்ந்து உரையாட சமயம் அனுமதி கொடுக்கவில்லை. தமிழ்சசியின் பதிவினைப் பார்த்த போது, அவ்வழியாக கடந்து செல்பவனின் கருத்து தான் எனது பதிவு.

தொடர்ந்து பங்கேற்காமைக்கு வருந்துகிறேன். இன்னும் ஒரு மாத கால அவகாசத்தில் நான் எடுத்திருக்கும் வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இல்லாவிட்டால் ஈடுபாட்டுடன் கருத்துகூறும் உங்களுடன் சற்று நிதானமாகவே உரையாடுவேன்.

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. அவைகள் சற்று நிதானமாக யோசித்துப் படித்துப்பார்க்கக் கூடியவைகள் தான்.