Saturday, November 17, 2007

வஹாபிசம் ஏன் ஒழிய வேண்டும்

சில வருடங்களுக்கு முன்பு எனது நெறுங்கிய நண்பர் வகாபிசத்தையும் சூபியிசத்தையும் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் சூஃபியிசத்தின் மீது அதிக மதிப்பு வைத்திருப்பவர். அவர் 'திண்ணை' இணைய தளத்தில் வந்த சில விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு அக்கேள்வியைக் கேட்டிருந்தார்.

நான் ரெண்டு பக்கமும் சாயாம ரொம்ப டிப்ளமேட்டிக்கா பதில் சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வெளிப்படையாத் தான் எழுதினேன். அது ஒரு நீண்ட‌ பதில். அதில் நான் சொன்ன கருத்துக்களை இங்கே தமிழில் கொடுக்க எனக்கு நேரமில்லை.

ஆனால் 'இதை பற்றி ஒரு பத்தியேனும் சொல்ல வேண்டும்' என்பதற்கு ஒரு தருணம் வந்துள்ளது. பிபிசி யில் வந்துள்ள ஒரு செய்திக்கான அறிமுகத்திற்காக இந்த பதிவு.

(வகாபிகள் தாக்குதல் தொடுக்க வாய்ப்புள்ளது என்பதால்) முதலில் சூபியிசத்தைப் பற்றி என்ன சொன்னேன் என்று பாதுகாப்புக்காக முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சூபிகளின் சில இலக்கியங்களை நான் படித்துள்ளவரை அது இஸ்லாமிய மதத்துடன் நாம் குழப்பிக் கொள்ளவேண்டிய விஷயம் அல்ல. அது ஒரு வகையான சிந்தனையைத் தூண்டக் கூடிய இலக்கியங்கள். சூபி தனது இறைவனையும் தனக்கு பிடித்த மனிதரையும் புகழ்ந்து பாடியிருப்பார். மனித மனத்தினைப் பற்றியும், தமது பிறப்பிற்கான காரணத்தினைப் பற்றியும் தனது கவனிப்புகளையும் எண்ணங்களையும் கூறியிருப்பார். அதில் அவரது சிந்தனையை நாம ரசிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம். சூபியிசத்துல எனது ஈடுபாடு இந்த அளவில் மட்டும்தான். நான் சூபிக்கு தெய்வீக சக்தி இருக்குன்னு ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது இஸ்லாத்தின் முதுகெலும்புக்கு விரோதமானது.

இவ்வாறு எழுதிவிட்டு, சூபிகளை வணங்கும் சூபியிசத்தைப் புகழ்ந்து 'திண்ணை'யில் எழுதும் சிலருடைய கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை எனக் கூறினேன்.

இப்போது வகாபிசம் பற்றி .........

வகாபியிடம் போயி 'சூபி பற்றி என்ன நினைக்கிறீங்க ?' என்று கேட்டால் 'சூபிக்களெல்லாம் ஒரு கஞ்சா பேர்வழிங்க' என்று சொல்வார். ஆனால் அதோடு அவர் நிக்க மாட்டார். ரொம்ப நேரம் உங்களிடம் பேச ஆரம்பிச்சிடுவார். நீங்க கொஞ்சம் நிதானமா அவர் பேசுவ‌தைக் கேட்டீர்களானால் கீழ் கண்ட முடிவுகளுக்கு வருவீர்கள்

1) "ஆண் என்பவன் ஆண்குறியையும், பெண் என்பவள் பெண்குறியையும் உடையவர்கள்" என்பது போன்ற உன்னதமான சிந்தனையைத் தவிர, ஒரு வகாபி, அதற்கு அப்பால சிந்திக்க மாட்டார் என்று நீங்கள் உணரலாம். ஒருவருடைய வாழ்வியல் இதை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என அவர் வாதிடுவதைப் பார்க்கலாம்.

2) "உலகம் இடத்திற்கு இடம் புவியமைப்பில் மாறுபட்டு இருந்தாலும், மேலும் ஒரே இடத்தில் காலத்திற்கு காலம் மாறுபாடுகள் இருந்தாலும், 1400 வருடத்திற்கு முற்பட்ட அராபிய வாழ்வியல் முறையே அனைத்து காலத்திலும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும்" என வாதிடுபவர்களாக வகாபிகள் இருப்பதை உணரலாம்.

3) நீங்கள் அறிவினைப் பயன்படுத்த விருப்பப் பட்டால், அவர்கள் ஆதாரபூர்வமான மத நூல்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்பார். நீங்களும் என்னைப் போல மத நம்பிக்கை உடையவர் என வைத்துக் கொள்வோம். நீங்களும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொள்வீர்கள். ஆதாரபூர்வமான நூலில் காணப்படும் வாழ்வியல் முறையை பின்பற்ற ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் 'ஆதாரபூர்வமானது' என்பது எது என்பதையும் அதற்கான வரைமுறைகளையும் அவர்களே வகுப்பார்கள் என்பது தான் பிரச்சனையே. "ஆதாரபூர்வமானவைகளையே நாம் பின்பற்ற வேண்டும்; ஆனால் 'ஆதாரபூர்வமானது' எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நான் தான் கற்பிப்பேன்" என அவர் முரண்டு பிடிப்பதை நீங்கள் காணலாம்.

இது பற்றி நாம எழுதிகிட்டே போகலாம்... எனக்குத் தான் நேரமில்லை.

எனது ஊர்காரர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வது போல சவுதி எனும் வகாபிச தேசத்துல சட்ட ஒழுங்கு பாரபட்சமானது.

அராபிய தேசங்கள் வகாபிசத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கான காரணமே, அது அரபு மேலாண்மையைத் தூக்கிப் பிடிப்பது தான். மற்ற பண்பாடுகளின் அழிவினை நாடக்கூடியவைகள் தான். அந்த பண்பாடுகளில் இஸ்லாமிய இறைக் கொள்கைக்கு எதிரான கூறுகள் இல்லாவிட்டாலும் அதன் அழிவினை வகாபிசம் நாடுகிறது.

இந்த சிந்தனையில் எழுப்பப் பட்ட வாகாபிசத்தைப் பின்பற்றும் மத்திய் கிழக்கு நாட்டினரிடம் அராபியர்‍/அரபியல்லாதார் பாரபட்சம் வருவது இயற்கையே. இந்த பாரபட்சத்தை வகாபிசம் நேரடியாக போதிக்காவிட்டாலும், அது எழுந்து நிற்கும் அடித்தளம் இந்த பாரபட்சத்தினை நியாபடுத்துகிறது. வகாபி/வகாபியல்லாதார் என்று வரும்போது கூட இப்பாரபட்சம் இயற்கையாகவே தலைதூக்க்குகிறது.

வகாபிசம் என்பதாவது, ஒரு மனிதனின் சிந்தனையைவிட சிலர் எழுதிய புத்தகங்களே மேலானவை என கருத்தாக்கம் கொண்டு, "ஆதாரப்பூர்வமானவை" என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளால் தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும் புனிதப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் என்பதால் அடிப்படைவாதமும் உரிமை மீறல்களும் மலிந்து கிடக்கின்றன.

நிச்சயமாக வகாபிசம் ஒழிய வேண்டும். இது சூபியிசம் போல ஒருவருடைய தனிமனித வாழ்க்கையைச் சார்ந்த கருத்தியலில்லை. சட்டம், நீதி, அரசியல் போன்ற பொது வாழ்க்கை அம்சங்களில் நுழைவதால், தனி மனித உரிமைகளைக் காக்கும் பொருட்டு வகாபிசத்தை எதிர்க்க வேண்டியது கடமையாகிறது:

இனி பிபிசி செய்தி: http://news.bbc.co.uk/2/hi/middle_east/7098480.stm

இச்செய்தி வகாபிச சிந்தனையின் கோரமுகத்தினை திரைவிலக்கம் செய்து காட்டுகிறது.

(குறிப்பு: இந்த செய்தியினை சங்-கூட்டத்தினர் தங்கள் வலைபதிவுகளில் ஏற்றி விமர்சிப்பதற்கு என்னுடைய இந்தப் பதிவுக்கு சுட்ட (cite) வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் சங்-சித்தாந்தத்திற்கு விரோதி.)

(2012 செப்டம்பர் மாதத்தில் இந்த பின் குறிப்பினை எழுதுகிறேன்: இந்த கால கட்டத்தில், சூஃபியிசம் பற்றிய நிலைப்பாடு மாறியுள்ளது. 2007-ல் இந்த பதிவில் சூஃபியிசம் பற்றி நான் கூறியுள்ளவைகளை இப்போது நான் ஏற்கவில்லை)

13 comments:

nagoreismail said...

என் கருத்து -

வஹாபிசம் பற்றிய கருத்துக்கள் சரியானது தான், ஆனால் சூபியிசம் பற்றிய நிலைப்பாடு நல்ல தொடக்கம் தானே தவிர, இதுவே முடிவாக கொள்ளாதீர்கள் -

நாகூர் இஸ்மாயில்

மு மாலிக் said...

நன்றி இஸ்மயில்,

உங்கள் பதிவில் நிறைய செய்தி உள்ளது. பிறகு பொறுமையாக படிக்கிறேன்.

Naina said...

இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதம் நிலவட்டுமாக!
சகோதரர் மாலிக் அவர்களே!
வாஹாபிசம் என்பதே முதலில் ஒரு மாயை அதன் எதிர்பாளர்களால் ஏற்படுத்த ஒரு அடையாளமாகும். இஸ்லாம் என்பது திருகுர்ஆன்- சுன்னாவாக மட்டும் தான் இருக்க முடியுமே தவிர பிற மனிதர்களின் சுயஆசைகளை (இதனை சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று) புகுத்துதல் கூடாது என்பதில் உறுதியாக இருந்து, அதை இஸ்லாமிய சமூகத்தில் எடுத்துரைப்பதில் மிக அக்கறை காட்டியவர்கள் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (அல்லாஹ் அவர்களுக்கு கருணை காட்டுவானாக!). இதனை ஜீரணிக்க முடியாதவர்கள் இவரை மக்களிடம் புதுமையானவராக காண்பிப்பதற்காக எடுத்து கொண்ட பதமே "வஹ்ஹாபி" என்பதாகும். ஒருவன் ஒருஅமைப்பை உருவாக்கினால் அவன் அதற்கு பெயரிட வேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல. திருகுர்ஆன்- சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்கள் எவரும் தாங்கள் வஹ்ஹாபிகள் என்று அழைத்து கொள்ளவில்லை.
//'சூபிக்களெல்லாம் ஒரு கஞ்சா பேர்வழிங்க'// என்று திருகுர்ஆன்- சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களில் ஒரு சிலர் பழிப்பதாக இருந்தால் அவர்கள் வரம்பு மீறி பேசுகிறார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இக்கருத்துடைய எல்லோரும் இவ்விதமாக நீங்கள் கூறுவதும் வரம்பு மீறியதே என்பதையும் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சூபிகளுடைய கொள்கைகள் இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) கொண்டு வந்த இஸ்லாமிய கொள்கைகளுக்கு எவ்வாறு முரண்படுகிறது என்பதை ஆதாரத்தோடு பொது மக்களுக்கு விளக்கிவிட்டு அதன் முடிவை மக்களிடத்தில் விட்டுவிடுவதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இதற்கு மேல் அணுவளவு கடங்தாலும் அது வரம்பு மீறுதல் என்பது தெளிவு.

//உலகம் இடத்திற்கு இடம் புவியமைப்பில் மாறுபட்டு இருந்தாலும், மேலும் ஒரே இடத்தில் காலத்திற்கு காலம் மாறுபாடுகள் இருந்தாலும், 1400 வருடத்திற்கு முற்பட்ட அராபிய வாழ்வியல் முறையே அனைத்து காலத்திலும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும்" என வாதிடுபவர்களாக வகாபிகள் இருப்பதை உணரலாம்.// சகோதரரே! மீண்டும் உங்கள் மனோயிச்சைபடி விமர்சனம் செய்கிறீர்கள். குற்றச்சாட்டுகள் வைக்கும் போது, எதிர்தரப்பு கருத்து என்ன என்பதை உங்களின் சுயகருத்துகள் புகாமல் தெளிவாக எடுத்து கூறி, பிறகு அது எவ்வாறு முரண்பாடாக அமைகிறது என்பதனை ஆதாரத்தோடு விளக்கினால் தான் நீங்கள் உண்மையை தெளிவுபடுத்துகிறீர்கள் என்று இருக்க முடியும். உலகம் இடத்திற்கு இடம் புவியமைப்பில் மாறுபட்டு இருந்தாலும், மேலும் ஒரே இடத்தில் காலத்திற்கு காலம் மாறுபாடுகள் இருந்தாலும், 1400 வருடத்திற்கு முற்பட்ட அராபிய வாழ்வியல் முறையே அனைத்து காலத்திலும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும் என்று எந்த விசயத்தில் அல்லது விசயங்களில் வாதிட்டார்கள் என்று எடுத்துகாட்டோடு கூற முடியுமா? இறையியல் சட்டதிட்டங்கள் என்பது காலமாற்றத்திறகு ஏற்ப மாற்றபட வேண்டிய சட்டங்கள் அல்ல. ஏதெனும் சில சட்டங்களை பொதுவாக அமுல்படுத்த முடியாது என்று அறியபட்டால் அவை வல்ல இறைவனால் அப்போதே எடுத்து சொல்லபட்டுவிட்டது. உதாரணத்திற்கு நோன்பு. பருவ வயதை அடைந்த ஒவ்வொருவரும் ரமழான் மாதம் வந்தால் நோன்பு நேற்க வேண்டும். இது சட்டம். அச்சட்டத்திலேயே முஸ்லிமாக இருந்து பருவ வயதை அடைந்தும் நோன்பு நோற்க விதிவிலக்களிக்க பட்டவர்கள் யார்? அதற்கு பரிகாரம் என்ன? என்பதனை எல்லாம் தெளிவாகவே அல்லாஹ் கூறிவிட்டான். எனவே இஸ்லாத்தின் சட்டதிட்டத்தில் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும் என்பது உங்கள் கூற்றாக இருந்தால், இது ஒரு முஸ்லிமுடைய கூற்றாக இருக்க முடியாது. இஸ்லாத்தில் தவறுகளை நான் காண்கிறேன் என்னும் அடிப்படையில் உங்கள் கருத்துக்களை ஆதாரத்தோடு கூறி காலத்திற்கேற்ப மாறுபாடுகள் அவசியம் என்பதனை சுட்டிகாட்டுங்கள் பார்க்கலாம்.

//நீங்கள் அறிவினைப் பயன்படுத்த விருப்பப் பட்டால், அவர்கள் ஆதாரபூர்வமான மத நூல்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்பார்.//
சகோதரரே! மீண்டும் உங்கள் வாதத்தில் உள்ள பிழையே மேலே கூறியுள்ள குற்றசாட்டு. இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் மனிதனின் அறிவை பயன்படுத்த நினைப்பது அபத்தமான வாதமாகும். ஏனெனில் வணக்க வழிபாடுகள் இறைவனுக்காக செய்யபடுகின்றன. எனவே எவன் தனக்காக செய்யபடும் வணக்கங்களை ஏற்று கொள்ள இருக்கிறானோ அவன் தெளிவாக கூறிய பிறகு மனித அறிவை பயன்படுத்த சொல்வது அபத்தமான வாதமே. உதாரணத்திற்கு சுபுஹ் தொழுகை 2 ரகஅத்துகள் உடையதாகவும், லுஹர் தொழுகை 4 ரக்அத்துகள் உடையதாகவும் இருக்கிறது. ஏன் இரண்டு கடமையான தொழுகைக்கு இடையில் வித்தியாசமான எண்ணிக்கைகள் என்று அறிவை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்ய முற்படவேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது சட்டதிட்டங்களில் அறிவை பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது நடைமுறை வாழ்க்கை வாழ்க்கை விவகாரத்தில் சுயஅறிவுக்கு முக்கியத்துவம் என்கிறீர்களா?

அடுத்து சவுதியில் ஒரு பெண்ணுக்கு நீதிமறக்கப்படடிருப்பதாக BBC செய்தியலிருந்து மேற்கோள்காட்டி சவுதியிலே "சவுதி எனும் வகாபிச தேசத்துல சட்ட ஒழுங்கு பாரபட்சமானது." என்று தீர்ப்பு கூறுகிறீர்கள். சவுதியில் நடத்தபடும் பல்வேறு வழக்குகளில் ஒன்றில் கூட தவறு வரமுடியாது என்று நான் வாதிட முன் வரமாட்டேன். ஏனென்றால் அதைபற்றிய ஞானம் எனக்கு இல்லை. அதே நேரத்தில் இந்த ஒரு வழக்கை ஆதரமாக நிறுவி இதனால், "சவுதி எனும் வகாபிச தேசத்துல சட்ட ஒழுங்கு பாரபட்சமானது." என்பதும் உங்களுக்க சவுதியன் மேல் எள்ள வெறுப்புணர்வே அவ்வாறு பேசதூண்ட வைக்கிறதோ? என்னும் ஐயம் என்னுள் எழுகிறது. ஏனென்றால் நம் நாட்டிலும் ஏராளமான வழக்குகளில் கீழ் கோர்ட்டில் குற்றவாளி என தண்டிக்கபட்டவர்கள் மேல் கோர்ட்டில் விடுதலை ஆகுவதையும், கீழ் கோர்ட்டில் விடுதலை ஆனவர்கள் மேல் கோர்ட்டில் தண்டனை பெறுவதையும், காவல்துறையினரும் மற்ற அரசு துறைகளும் பலமுறை நீதிமன்ற கண்டணங்களுக்க ஆளாகியுள்ளன னெபதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் இது ஒரு நாட்டில் சட்டஒழுங்கு பாரபட்சமானது என்பதன் அளவுகோலாகுமா? எனது கருத்து ஆகமுடியாது இது தனிநபரின் தவறுகளால் ஏற்படும் விளைவுகளே. அப்படி உங்கள் வாதப்படி சட்டஒழுங்கு பாரபட்சமானது என்பதானால் சவுதியும் இன்னும் சில அரபு நாடுகள் மட்டுமே குற்றம்சாட்டபடுவது ஏன்? மேலும் ஒரு தவறு உங்கள் "சட்டஒழுங்கு பாரபட்சமானது" என்ற தீர்ப்பில் உள்ளது. அது என்னவென்றால் ஒரு பக்கத்து செய்தியை மட்டுமே நீங்கள் கேட்டுள்ளீர்கள் நீதிபதி தரப்பிலிருந்து ஏதேனும் தகவல் பெற்றீர்களா? அவருக்கு கிடைக்கப்பெற்ற சாட்சியங்கள், அவர் தீர்ப்பிறகான காரணங்கள் ஏதும் அறிவீர்களா? ஒரு சமயம் நீதிபதியின் தீர்ப்பில் நியாயாம் இருக்கவும் பாதிக்கபட்ட பெண்ணின் வழக்கறிஞர் தன்னுடைய கருத்தை நியாயபடுத்த தவறான தகவல்களை முன் வைக்கலாமே?
தங்களது கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன். நீங்கள் என்னை எனது மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். mohammednaina@hotmail.com
எனது கருத்துக்களில் தவறுகள் இருந்தால் எடுத்து சொல்லுங்கள். அதில் உண்மை இருப்பின் எனது தவறை ஏற்று கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) கூறினார்கள், "ஆதமின் மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. ஆனால் அவர்களில் சிறந்தவர் தனது தவறுக்கு வுருந்தி அல்லாஹ் இடத்தில் மன்னிப்பு கோரியவராவார்"
அல்லாஹ் நன்கறிந்தவன்.
இறை சாந்தி நிலவட்டுமாக!
அன்பு சகோதரன்
நெய்னா முஹம்மது

மு மாலிக் said...
This comment has been removed by the author.
மு மாலிக் said...

நான் செயல்களை சுட்டிக்காட்டி விமர்சிக்கும்போது எனது விமர்சனத்தினை அச் செயல்கள் மீதான விமர்சனமாக மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அங்கு வாழும் மக்களின் மீதான வெறுப்பாக நீங்கள் கருதுவதற்கு வாய்ப்பில்லை. என்னிடம் நிறவெறியில்லை என்பதற்கு எனது மற்ற பதிவுகளே சான்று.

அங்கு நடப்பவைகள் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியாது எனக் கூறியுள்ளீர்கள். தெரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

வகாபிசம் எனும் பெயர் சரியா தவறா எனும் வாதம்மல்ல இப்பதிவு. எந்த கருத்தாக்கம் பற்றி பேசப்படுகிறதோ அது பற்றிதான். நீங்கள் "குர் ஆன் சுன்னதினைப் பின்பற்றுதல்" என்று கூறவிரும்பினால் கூறிக் கொள்ளவும் ஆச்சேபனையில்லை. ஆனால் அதாரபூர்வமான‌ ஹதீஸ் எனக் கூறப்படுவது எல்லாம் சுன்னத்தா ? எனக் கேள்விகள் எழுப்புவது நல்லது. "ஆதாரபூர்வமானது" என அவர்கள் விதிக்கும் வரையரையில் மட்டுமே அதனை நீங்கள் அவ்வாறு ஆதாரபூர்வமானவை என்பதை நீங்கள் நிறுவ முடியும்.

மதம் என்பதற்காக அறிவினை பயன்படுத்த தேவையில்லை எனும் உங்கள் வாதம் மீது எனக்கு உடன்பாடு கிடையாது.

200 300 வருட காலம் கழித்து ஹதீஸ்கள் தொகுப்பட்ட காலம் வரை நான் மதத்தின் உருவாக்கத்தினை நீட்டிக்க விரும்பவில்லை. அவைகளுக்கு "ஆதாரபூர்வமானது" என முத்திரையும் வழங்கத் தயாராக இல்லை. அவைகளை "விமர்சத்திற்குட்பட்ட தொகுப்பு" என்றுதான் நான் கருத முடியும். புனிதப்படுத்தப்பட்ட‌ மத நூலாக கருத இயலாது.

உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி நெய்னா முகம்மது.

மஸ்தூக்கா said...

இஸ்லாமிய சமூகத்தில் இடைக்காலத்தில ஏற்பட்ட மடமைகளை இனம் பிரித்துக் காட்டி உண்மையான இஸ்லாத்தை உணரவைத்த முஹம்மது இப்னு அப்துல் வஹாப் தனிக் கொள்கைகள் எதையும் சொல்லவில்லை எனவே வஹாபிஸம் என்னும் வார்த்தைப் பிரயோகமே தவறானது
அடுத்து ஆதாரப்பூர்வமானவை என்பதற்கு அவரவர் அளவு கோள் எதுவும் இல்லை அனவைரும் ஏற்றுக் கொண்ட அளவுகோல் தான்
//உலகம் இடத்திற்கு இடம் புவியமைப்பில் மாறுபட்டு இருந்தாலும், மேலும் ஒரே இடத்தில் காலத்திற்கு காலம் மாறுபாடுகள் இருந்தாலும், 1400 வருடத்திற்கு முற்பட்ட அராபிய வாழ்வியல் முறையே அனைத்து காலத்திலும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும்" என வாதிடுபவர்களாக வகாபிகள் இருப்பதை உணரலாம்.//
சகோதாரரே இஸ்லாம் குறித்து உங்கள் அபிப்பிராயம் இவ்வளவு தானா? இப்படி எழுதும் நீங்கள் இறுதியில் சங்பரிவாரக் கொள்கைக்கு எதிரானவன் என்று கூட எழுதியிருக்கிறீர்கள் இதைக் கவனிக்கும்போது ஒரு நல்ல முஸ்லிம் இஸ்லாம் குறித்து தவறான புரிதல்களோடு இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது
சகோதரர் நைனா அவர்கள் அழகாக தங்களுக்கு பதில் அளித்துள்ளார்

மு மாலிக் said...

மஸ்தூக்கா,

நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள பத்தியில் நான் இஸ்லாத்தைப் பற்றிய எந்த அபிப்ராயத்தையும் எழுதியதாக எனக்கே தெரியவில்லையே !! :))

மீண்டும் மீண்டும் வகாபிசம் பெயர் சரியா தவறா என்று பேசுகிறீர்கள். நான் கூறிய பதில் உங்கள் பார்வையிலிருந்து தப்பியது எப்படி.

"அளவுகோல் எல்லோரும் ஏற்றுக்கொண்டதுதான்" என்று கூறி தாங்கள் புலங்காகிதம் அடைந்து கொண்டதை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

வஹ்ஹாபி said...

//வகாபியிடம் போயி 'சூபி பற்றி என்ன நினைக்கிறீங்க ?' என்று கேட்டால் 'சூபிக்களெல்லாம் ஒரு கஞ்சா பேர்வழிங்க' என்று சொல்வார். ஆனால் அதோடு அவர் நிக்க மாட்டார். ரொம்ப நேரம் உங்களிடம் பேச ஆரம்பிச்சிடுவார். நீங்க கொஞ்சம் நிதானமா அவர் பேசுவ‌தைக் கேட்டீர்களானால் கீழ் கண்ட முடிவுகளுக்கு வருவீர்கள்

1) "ஆண் என்பவன் ஆண்குறியையும், பெண் என்பவள் பெண்குறியையும் உடையவர்கள்" என்பது போன்ற உன்னதமான சிந்தனையைத் தவிர, ஒரு வகாபி, அதற்கு அப்பால சிந்திக்க மாட்டார் என்று நீங்கள் உணரலாம். ஒருவருடைய வாழ்வியல் இதை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என அவர் வாதிடுவதைப் பார்க்கலாம்.//

நல்ல கற்பனை வளம்.

ஏதேனும் ஒரு கருவைப் பற்றி எழுதுமுன் அதைக் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு எழுதவும்; வெறுமனே உளற வேண்டாம்.

நன்றி!

மு மாலிக் said...

வஹ்ஹாபி வாருங்கள்,

ஒரு வகாபி எவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவு செய்வார் என்றும் இந்த பதிவினை எழுதும்போது ஒரு வரி எழுதலாம் என்று இருந்தேன்.

பின்பு, 'எதுக்கு தேவையில்லாத முன்னறிவிப்புகள் ? யாராவது ஒரு வகாபி வருவார். அவரே தன்னை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வார்' என்று தவிர்த்துவிட்டேன்.

உங்கள் வருகைக்கு நன்றி.

வஹ்ஹாபி said...

//நிச்சயமாக வகாபிசம் ஒழிய வேண்டும். இது சூபியிசம் போல ஒருவருடைய தனிமனித வாழ்க்கையைச் சார்ந்த கருத்தியலில்லை. சட்டம், நீதி, அரசியல் போன்ற பொது வாழ்க்கை அம்சங்களில் நுழைவதால், தனி மனித உரிமைகளைக் காக்கும் பொருட்டு வகாபிசத்தை எதிர்க்க வேண்டியது கடமையாகிறது//

சட்டம், நீதி, அரசியல் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் நுழையும் வாழ்க்கை நெறியின் பெயர்தான் இஸ்லாம்.

"இஸ்லாம்" என்று குறிப்பிடப்பட வேண்டிய இடங்களில் "வகாபிசம்" எனப் பூச்சாண்டிச் சொற்களால் மாற்றி எழுதி இருந்தாலும் ...

வெளிச்சம் வெளியில் தெரிந்து விட்டது.

நன்றி!

மு மாலிக் said...

உண்மைதான். சரியான சட்டம், சரியான நீதி, சரியான அரசியல் ஆகியற்றில் இஸ்லாம் ஒளிரும். ஏனெனில், உண்மையான இஸ்லாம் நேர்மையையும், உண்மையை நிலைநாட்டலையும், அடக்குமுறைகளின் அழிவினையும், உரிமைகளை உறுதிப் படுத்துவதிலும் ஒளிர்கிறது. உண்மையில் அது வெளிச்சம் தான்.

ஒரு வஹ்ஹாபியின் பார்வையில், வஹ்ஹாபிசமும் இஸ்லாமும் ஒன்று என்பதோடும் ஒத்துபோகிறேன்

மு மாலிக் said...

இது விஷயமாக ஒரு மேலதிகத்தகவல்

வகாபிசத்தின் அநீதியினை மக்கள் சவுதி-அரசுக்கு உணர்த்தியுள்ளனர். கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளான பெண்ணுக்கு வகாபிசம் சிறைத்தண்டனயையும் 200 சவுக்கடிகளையும் அளித்ததை அறிவீர்கள். உலகெங்கும் மக்கள் இதனை விமர்சித்த பிறகு, "அப்பெண் தனது கணவரை ஏமாற்றிவந்தாள்" என‌ வகாபிச நீதிபதிகள் சாக்குபோக்கு சொன்னார்கள். ஏதோ இவ்வாறு அப்பெண்ணின் கணவர் குற்றம் சாட்டியது போல !!

ச‌வுதி அரசு இந்த தண்டனையை மறுபரிசீலனைச் செய்ய முன்வந்தாலும், அம் மறுபரிசீலனைக்காக அது கூறும் காரணத்தினை நாம் கவனிக்க வேண்டும். "சவுதி அரசிற்கு எதிராக இவ் வழக்கு பயன்படுத்தப் படுகிறது" என்பதாகும் அவ்வரசின் விளக்கம். இங்கு நீதியைவிட அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது எது என்பது விளங்கும்.

மு மாலிக் said...

2012 செப்டம்பர் மாதத்தில் இந்த பின் குறிப்பினை எழுதுகிறேன்: இந்த கால கட்டத்தில், சூஃபியிசம் பற்றிய நிலைப்பாடு மாறியுள்ளது. 2007-ல் இந்த பதிவில் சூஃபியிசம் பற்றி நான் கூறியுள்ளவைகளை இப்போது நான் ஏற்கவில்லை