Thursday, February 13, 2014

"கடவுள் ஒருவன்", "கடவுள் எல்லையற்றவன்": ஒரு சிந்தனை

 கடவுள் ஒருவனே என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது திருமந்திரத்தின் முதல் வரி. "உங்கள் எஜமானன் ஒருவனே" என்பது ஷிர்டி சாய்பாபாவின் முதன்மையான போதனை. இதனையே கபீரும் கூறியுள்ளார். ரிக்-வேத வரிகளும் கூறுகின்றன. "இறைவன் ஒருவன், அவன் எத்தேவையும் அற்றவன்" என்பது முஸ்லிம் குழந்தைகள் மனனம் செய்விப்பதற்கு அவர்களது தாய்மார்கள் தேர்ந்தெடுக்கும் முதல் குர்-ஆன் வரிகள். கடவுளுக்கு ஒப்பில்லையென்று வள்ளுவர் சொல்வதிலிருந்தும், வள்ளுவரும் "கடவுள் ஒருவனே" என்று கூறுபவரென அறியலாம்.

 (இந்தப் பதிவில் "உலகம்" என்ற வார்த்தையை Universe என்ற பொருளிள் பயன்படுத்துகிறேன்). உலகம் ஒரு காலப் புள்ளியில் தோன்றி இருக்கலாம் என்பது அறிவியலும் பல மத-நம்பிக்கைகளும் முன்வைக்கும் கொள்கை. இதன் அடிப்படையில் கடவுளின் "ஒருமை"ப் பற்றி, அதாவது, கடவுளின் ஒருமைத் தன்மைப் பற்றி சில சிந்தனைகள் கீழே:

"உலகம் தோன்றியதன் மூலம் மற்றும் காரண கர்த்தா கடவுளே" என்ற கருத்தினையும், "கடவுள் ஒருவன்" என்ற கருத்தினையும் சேர்த்து ஒரு நேர்கோட்டு சிந்தனை (straight forward thought), சில விஷ‌யங்களைக் கூறுகிறது.

இந்த "ஒருமை" அல்லது "ஒன்று" என்பது, நாம் மனதில் புரிந்து வைத்துள்ள "ஒன்று" என்பதாகாது. ஆனால் பாமர நிலையுள்ள பெரும்பான்மையான மக்கள் கடவுளின் "ஒருமைத் தன்மை" என்பதினை நாம் வழக்கில் பயன்படுத்தும் "ஒன்று" என்பதைப் போன்றதென்று கருதுவது ஆன்மீகத்தின் ஆரம்ப நிலைக்கு ஏற்றதே.

 ஏன் கடவுளின் ஒருமையும் நாம் புரிந்து வைத்துள்ள "ஒருமை" அல்லது "ஒன்று"-ம் சமமானதல்ல? சற்று சிந்திப்போம்

நாம் புரிந்து வைத்துள்ள "ஒன்று" எனும் வார்த்தை, அல்லது "ஒருமை" எனும் வார்த்தை, "பன்மை" எனும் வார்த்தையின் புரிதலினால் ஏற்பட்டது. உதாரணத்திற்கு, "இரண்டு" எனும் வார்தையின் அர்த்தத்தை மையப்படுத்தி, "ஒன்று" எனும் வார்தையைப் புரிந்து வைத்திருக்கின்றோம். அல்லது, "மூன்று", "நான்கு" எனும் வார்த்தைகளின் அர்த்தங்களை மையப் படுத்தி, "ஒன்று" எனும் வார்த்தையினைப் புரிந்து வைத்திருக்கின்றோம்.

 ஆனால், கடவுளின் "ஒருமை"யென்பது ஆழமானது. உலகம் "தோன்றியது" எனும் கருத்தில் நம்பிக்கை வைத்தால், கடவுளுக்கு அருகில் எதுவுமில்லை என்பது விளங்கும். எனவே "கடவுள் ஒருவன்" என்பதினைப் "பன்மை" என்பதிலிருந்து விளங்க முடியாது.

உங்களுக்கு அருகில் எந்தப் பொருட்களுமே இல்லாத நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலையில், நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, நீங்கள் "ஒருவன்" என்றக் கருத்துக்குப் பொருள் உள்ளதா?

கடவுளின் ஒருமையை அவ்வளவு எளிதாக விளங்கிக் கொள்ள முடியாது. விளங்கிக் கொள்ளும் நிலையைத்தான், சூஃபிக்கள், "மாரிஃபத்" (இறை ஞானம்) என்கிறார்கள். பெளத்தர்கள் இந்த புரிதலை, "பேருண்மையை விளங்குதல்" என்கின்றனர். ஏன் எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை நம்மால்? காரணம், நாம் பன்மையில் ஊறித் திளைக்கின்றோம். பன்மையெனும் அர்த்தத்திலிருந்துதான் ஒருமையெனும் அர்த்தத்தினை விளங்குகிறோம்.

இந்தப் பன்மையின் அர்த்தத்தினை அழிப்பதற்காகத்தான், சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், "திக்ரு" எனும் பயிற்சியினை செய்கின்றனர். உண்ணும் போதும், உறங்கும் போதும், அமர்ந்த நிலையிலும், நடக்கும் போதும், தனது மூச்சுக்காற்றினை விடும்போதும் இழுக்கும்போதும் கடவுளின் பெயர் கூறிவிடுகின்றனர். தன்னைச் சுற்றி நடப்பவைகள் மீது கவனம் செலுத்தி, அவ்வாறு நடக்கும் செயல்களில் கடவுளின் தன்மைகளைத் தேடுகின்றனர். கடவுளின் தன்மைகளாக இஸ்லாமிய நம்பிக்கை, 99 தன்மைகளைப் பட்டியல் இடுகிறது. "அளவற்ற அன்புடையவன்", "அளவற்ற அருளுடையவன்", "மன்னிப்பவன்", "தோழன்", "வழிகாட்டி" முதலியவைகள் அவனது தன்மைகளின் உதாரணங்கள். இவைகளைத் தனது சுற்று சூழலில் கவனிப்பதும் "திக்ர்"-எனும் பயிற்சியின் அங்கம். பின்பு அந்த கடவுள் தன்மைகளை அந்த மாணாக்கன் வெளிப்படுத்த முயற்சிக்கிக்கவும் அந்த "திக்ரு" அவனை வழிப்படுத்துகிறது. இந்தப் பயிற்சி அந்த மாணக்கனை பண் படுத்துகிறது. இந்தப் பயிற்சி அவனது அகந்தையினை முதலில் அழிக்கிறது. அகந்தையே அந்தப் பன்மை-மையப் புரிதலுக்கு ஊற்று.

எப்போது அந்த மாணாக்கன், பன்மை-மையப் புரிதலிலிருந்து விடுபடுகின்றானோ, அப்போது அவன் எங்கும் இறைத் தன்மைகளைக் காணுவான். குர்-ஆன் வரிப்படி, "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்".

இப்போது வஹ்ஹாபிகளின் கொள்கைப் பற்றி வருவோம். (வஹ்ஹாபிகள் பற்றி நான் பேசாமல் இருக்கவே முடியாதென்றே நினைக்கிறேன்). "திரும்பிய திசைகளிலெல்லாம் அல்லாஹ்வின் முகத்தினைக் காண்பார்கள்" என்று குர் ஆன் கூறினாலும், வஹ்ஹாபிகள் இதனைப் "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் கொள்கை என்றும், அது இஸ்லாத்திற்கு விரோதமானதென்றும் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே சூஃபிக்கள் வழிக்கேடர்கள் என்றும் கூறுகின்றனர்.

வஹ்ஹாபிகளின் இந்தக் கருத்து அறிவிலித்தனமானது. சூஃபிக்கள், தனது பயிற்சியின் மூலம், தான் எனும் அகந்தையினை அழித்தப் பிறகுதான் இது அவர்கள் மனதில் நிகழ்கிரதென்பதினால், அவ்வாறு அகந்தையினை அழிக்காத பாமரனினால் சூஃபிக்களைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்க பாமரன் அவர்களை மதிப்பிட‌ முயற்சிக்கவே கூடாது. (இங்கு அகந்தை என நான் சொல்வதினை, அரபியில் நஃப்ஸ் என்று சொல்லுவார்கள்.)

இது பற்றி மேலும் சிந்திப்போம்.....

"திரும்பிய திசைகளிலெல்லாம் கடவுளின் முகத்தினைக் காண்பார்கள்" என்பதும், "பார்ப்பதெல்லாம் கடவுள்" என்பதும் ஒன்றல்ல. "பார்ப்பதெல்லாம் கடவுள்" எனும் வாக்கியம், பார்க்கும் பொருட்களை "பன்மை" என்பதினைக் கொண்டு வரையறுத்து கடவுளைப் பன்மையின் அடிப்படையிலேயே விளக்க முயச்சிக்கும் வாக்கியம். எனவே இந்த இருவாக்கியங்களும் ஒன்றுபோல தோன்றினாலும் வேறுபட்டவை. இதில் மிக கவனமாக இருக்கவேண்டும். சூஃபி பாதையில் செல்லும் மாணவர்கள், இந்த சருக்கல்களை அறிந்தவர்களே. எனவே இதனை, "கத்திமேல் நடக்கும் பாதை" என்றும் சொல்வார்கள். இந்தப் பாதையில் நடக்கும் போது மதி நுட்பத்துடன் நடக்கவேண்டும்.

இது போன்ற சருக்கல்களின் வாய்ப்பினாலேயே, முகம்மது நபி அவர்கள் இந்தப்பாதையினை தனது நெருங்கிய ஈடுபாடுகொண்ட நண்பர்களுக்கு மட்டும் போதித்தார். அலி மற்றும் அபூபக்கர் போன்றோர்கள் அந்த நெருங்கிய நண்பர்களுக்கு உதாரணம். இருப்பினும் இந்த பாதையின் கருத்துக்கள் குர்-ஆனில் உள்ள பல வரிகளில் ஆங்காங்கே பிரதிபலிக்கின்றன. இந்தப் பாதையில், ஒரு மாணவன் செய்யவேண்டிய பணிகள் எல்லாம், உள்ளம் சார்ந்தவை. முகம்மது நபி அவர்கள் போதித்த "ஷரியா" என்பது வெளிரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அவைகள் உடை அமைப்பு, கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டது. அதே சமயத்தில், உள்ளம் சம்பந்தமாக அவர்கள் கற்றுக் கொடுத்தப் பாதையில், "இறை நம்பிக்கை", "இறை யச்சம்" (அரபியில் "தக்வா") மற்றும் "இஹ்சான்" ஆகியவைகள் அம்சங்கள். இதில் "இஹ்சான்" எனும் அரபி வார்த்தைக்கு சமமான தமிழ் வார்த்தை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. இந்த "இஹ்சான்" என்பது தான் நான் இது வரை விவரித்த சூஃபி பாதை. "ஷரியா" எனும் வெளிரங்க வாழ்க்கைமுறையினை பாமரனுக்கும், அந்த ஷரியாவுடன் சேர்த்த "இஹ்சான்" அல்லது சூஃபி பாதையைச் சற்று மதி நுட்பமுடையவர்களுக்கும் என நபி அவர்கள் போதித்தார்கள்.

மேலும் சிந்திப்போம்....

இறைவனது தன்மைகள் அனைத்தும் அளவற்றது. உதாரனத்திற்கு, "அளவற்ற அருளாளன்", "அளவற்ற அன்புடையவன்", "அனைத்தையும் பார்ப்பவன்", "அனைத்தையும் கேட்பவன்". சுருக்கமாகக் கூறவேண்டுமானால் இறைவன் எல்லையற்றவன்.

இந்த "எல்லையற்றவன்" என்பதினைக் கருத்தில் கொண்டால், நாம் இன்னொரு சருக்கலிலிருந்தும் விடுபட முடியும். கடவுள் என்பவனை இருப்பவைகளின் தொகுப்பு என்றும் வரையறுக்கக் கூடாது. இந்த எல்லையற்றத் தன்மை என்பதினை நாம் எளிதாக உணரவே முடியாது. கணிதத்தில் "எல்லையற்றது" என ஒரு "எண்" உள்ளது. எல்லையற்றது என்பதினை பாமரன் எப்படிப் புரிந்து கொள்வான்? எல்லையற்றதிலிருந்து "இரண்டு" எண்ணைக் கழித்தால் அது மீண்டும் எல்லையற்றது என்பதினை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் புரிந்து கொள்ள முடியுமா? முடியாது, ஏனென்றால், "எல்லையற்றது" என்பதினை நாம் உணர்ந்தது கிடையாது.

கடவுளின் இந்த "ஒருமைத் தன்மை" மற்றும் "எல்லையற்றத் தன்மை" என்பதினைப் புரிவதன் முதல் படிதான் அகந்தையினை ஒழிப்பதென்பது.

2 comments:

Unknown said...

கடவுள் ஒருவரே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அந்த ஒரே கடவுளை இந்துக்கள் பல வடிவங்களில் பார்க்கின்றனர். அந்தக் கடவுளையே ஒரு குடும்ப வடிவில் காணலாம், தாய், தந்தை, குழந்தைகள் போன்று. இது கற்பனையாகத் தோன்றினாலும் இந்தியர்களின் குடும்பக் கலாச்சாரத்தை வளர்த்த்து.

மற்ற மதங்கள் ஒன்றைக் காட்டி எதுதான் எல்லாமே என்கிறார்கள். அதே சமயம் இந்து மதம் எல்லாவற்றையும் காட்டி எல்லாமே ஒன்றுதான் என்கிறது. கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றாலும் அவர் உன்னுள்ளே இருக்கிறார் என்கிறது இந்து மதம். அப்படி ஒருவர் சிந்திக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக எல்லா உயிர்களுக்குள்ளும் இறைவனைக் காணலாம் எனும் அஹிம்சை எனும் எண்ணங்கள் உருவாகும். அங்கேயே அன்பு வெளிப்படுகிறது.

எல்லா மதங்களும் வலியுறுத்துவது ஒன்றே என்றாலும், மனிதன் கடைப்பிடிக்கும் முறைகள் வேறுபடுவதால் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

கே. கோபாலன்

நெல்லைத் தமிழன் said...

எப்படி எழுதரப்பா... நல்ல சிந்தனை. நான் மாற்றுமதத்தவனாயினும், உங்கள் எழுத்து சிந்தனை நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்.