Friday, September 07, 2012

"நஜ்த்" எனும் நிலப் பகுதி பற்றிய பீஜேயின் ஃபத்வா

"புகாரி" எனும் ஹதீஸ் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட ஒரு ஹதீஸின் படி, நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் கீழே சொல்லப்பட்டுள்ளதைப் போல ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது:

"யா அல்லாஹ் "ஷாம்" (டமாஸ்கஸ்) பிரதேசத்தையும், "ஏமன்" எனும் பிரதேசத்தையும் செழிக்கச் செய்வாயாக" என நபிகள் நாயகம் வாழ்த்தும் போது, அங்கிருந்த ஒருவர் தனது "நஜ்த்" எனும் பகுதியையும் நபிகள் நாயகம் வாழ்த்த வலியுறித்துகிறார். நபிகள் நாயகமோ அவரை சட்டை செய்யாமல் மீண்டும் ஷாமையும் ஏமனையும் மட்டுமே வாழ்த்துகிறார்கள். அதனைக் கேட்ட அவர் மீண்டும் தனது "நஜ்த்" பகுதியை வாழ்த்த வலியுறுத்த, நபிகள் நாயகம் மறுத்துவிடுகிறார்கள். மேலும் நஜ்த் பகுதி பூகம்பம், குழப்பங்கள் மற்றும் சைத்தானின் கொம்பு ஆகியவற்றின் இருப்பிடம் என முன்னறிவிப்பு செய்கிறார்கள்.

இந்த ஹதீஸில் வரும் "நஜ்த்" எனும் பகுதி என்பது எது என்று விக்கிப்பீடியாவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்: http://en.wikipedia.org/wiki/Najd

இது அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள பீடபூமி. நமது நாட்டு தக்காணப் பீடபூமி போல அரேபியாவில் அமைந்துள்ள ஒரு பீடபூமி. சவுதி அரேபியாவின் தலை நகரான "ரியாத்" எனும் நகரம் இந்தப் பீடபூமியில் அமைந்துள்ளது. மேலும் நபிகள் நாயகம் முன்னறிவிப்பு செய்தது இந்தப் பகுதியைப் பற்றிதான் என்பதற்கு வலுச்சேர்க்க மேலும் ஒரு காரணம் மற்றொரு ஹதீஸ் ஆகும்.

புகாரி மற்றும் முஸ்லீம் எனும் ஹதீஸ் புத்தகங்களில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள்படி நபிகள் நாயகம் அவர்கள் கிழக்குத் திசையினைச் சுட்டிக்காட்டி அது குழப்பங்களின் பிறப்பிடம் என அறிவித்துள்ளார்கள் (ஆதாரம்: சஹீஹ் புகாரி, பகுதி 9, புத்தகம் 88, எண் 213. மற்றொரு ஆதாரம்: சஹீஹ் முஸ்லிம், புத்தகம் 41, எண் 6939)

நபிகள் நாயகம் வாழ்ந்த மதீனாவிற்கு நேர் கிழக்கே இருப்பது ரியாத் எனும் நகரம் ஆகும். தற்போதயை சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் எனும் அதே ரியாத் தான். "கூகிள் மேப்"பின் வரைபடத்தினைக் கீழேக் காட்டியுள்ளேன். கவனிக்க.


எனவே நஜ்த் எனும் பகுதி ரியாத் அமைந்துள்ள பீடபூமீயே ஆகும் எனத்தெரிகிறது. மற்றப் பீடபூமியாக இருக்க வாய்ப்பு இல்லை.

இந்தப் பகுதியிலிருந்துதான் நபிகள் அவர்கள் காலத்திலேயே, "முஸ்லைமா" எனப் பெயர் உடையவன் தன்னை "நபிகள்" எனப் பிரகடனம் செய்து, பின்னர் அபூபக்கர் அவர்களின் ஆட்சியில் மாபெரும் போரினைப் புரிந்து பலர் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்.

மேலும், இந்தப் பகுதியிலிருந்து தான் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் எனும் ஒரு அமைதியானவரைக் கொன்ற யஜீதினைப் புகழ்ந்து கொள்கைகள் வகுத்த வஹ்ஹாபிகளின் குருவான "முகம்மது இப்னுஅப்துல் வஹ்ஹாப்" தோன்றினார். அந்த வஹ்ஹாபிகள் ஆட்சி செய்யும் நகர்தான் ரியாத். மேலும் சவுதி அரசின் ஆஸ்தான குருமார்கள் அனைவரும் இந்தப் பகுதியில் இருந்துதான் வருபவர்கள். அவர்கள் "இப்னு பாஸ்" எனப்படும் காலஞ்சென்ற குருவாக இருந்தாலும் சரி, தற்போதைய குருவாக இருந்தாலும் சரி. சுருங்கச் சொன்னால், இந்த நஜ்த் பகுதியே அரசியல் ரீதியிலும் மதக்கொள்கை ரீதியிலும் குல அடிப்படையிலும் சவுதி அரேபியாவை ஆட்சி செய்து வருகிறது.

இந்தப் பகுதிப் பற்றி பிஜே ஒரு ஃபத்வா போட்டுள்ளார். "நஜ்த்" எனும் அந்தப் பகுதி ஈராக் என்றுக் கூறுகிறார். பிஜே, தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லிக்கொண்டே, ஆங்கில மொழியில் அமைந்த விக்கிப்பீடியாவில் கூறப்பட்டுள்ள செய்தியையே தனது ஃபத்வா எனத் தனது இணையதளத்தில் பிஜே போட்டுள்ளார். இந்த ஹதீஸ் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கம்: http://en.wikipedia.org/wiki/Hadith_of_Najd

இந்த விக்கிப் பீடியா பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தியையும், அவர் போட்டுள்ள ஃபத்வாவையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

 (மேலும் படிக்கும் முன் ஒரு குறிப்பு: எனது இந்த இணையதளத்தில் பழைய பதிவுகளில் பிஜே "ஒரு பொய்யன்" என வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பொய்யன் என்றே இந்தப் பதிவிலும் அழைக்கப்படுகிறது. பிஜே இதற்கு தகுந்த முறையில் காரணங்களைக் கூறி ஆட்சேபனைத் தெரிவித்தாலோ அல்லது எனது நிரூபணம் தவறு என அவர் நிரூபித்தாலோ, நான் அவரை பொய்யன் என அழைப்பதை விட்டு விடுவேன் என அறிவிக்கிறேன்.)

அடப் பொய்யா உன்னிடம் சிலக் கேள்விகள்:

1. ஈராக் என்பதுதான் நஜ்த் என்றால் ஈராக் நாடானது, நபிகள் நாயகம் வாழ்ந்த மதினாவிற்குக் கிழக்குப் பக்கம் இல்லையே! பதில் சொல்.

2. ரியாத் அமைந்துள்ள நஜ்த் (பீடபூமி) மதினாவிற்கு கிழக்கே இருக்கிற பீடபூமியாக இருக்கே! அப்போ நபிகள் நாயகம் சுட்டிக்காட்டிய கிழக்குப் பகுதி ரியாத் தானே! பதில் சொல். இந்த கேள்வியைச் சற்று உடைத்துக் கேட்கிறேன்: ரியாத் இருக்கிறப் பகுதி மேட்டு நிலம் என்று சொல்லக் கூடிய உயரமான பகுதியா இல்லையா ? (அந்த பகுதி கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர்கள் வரை உயர்ந்துள்ளது. அப்புறம், அது மதினாவிற்கு கிழக்கே இருக்கா இல்லையா?

3. இப்ன் ஹாஜர் சொல்லுகிறார் என்பதற்காக ஈராக் தான் நஜ்த் என்கிறாயே, அவர் என்ன ஆதாரம் சொன்னார் என்று சொன்னாயா ? ஈராக்கில் பூகம்பம் வருவதால் அதுதான் நஜ்த் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கவாதமா ? "பூகம்பம்" என்றால் உண்மையான பூகம்பம் தானா ? சரி வைத்துக்கொள்வோம். "சாத்தானின் கொம்பு" என்றால் ஈராக்கில் சாத்தானின் "கொம்பு" அதாவது உண்மையான கொம்பு ஒன்று அல்லவா அங்கு உருவாகி இருக்க வேண்டும். இதிலிருந்து பூகம்பம் என்றால் உண்மையான " நில நடுக்கம்" என சொல்லப்படுகிற பூகம்பம் இல்லை என்றுத் தெரியவில்லையா? அது கொள்கை மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமான சொல்லாடல் என்று உனக்குப் புரியத் தெரியவில்லையா?

4. சரி, இப்னு கத்தாபி மற்றும் இப்னு ஹாஜர் தெளிவு படுத்தியுள்ளனர் என்று சொன்னாயே, அவர்கள் கூறிய "அந்த தெளிவு படுத்தலில்" ஈராக் மதீனாவிற்கு கிழக்கே உள்ளது என்று கூறியுள்ளனரே! அது சரியா தவறா என்று பார்த்தாயா? இப்போதாவது மேப்பினை எடுத்து வைத்து பார்த்து தெரிந்து கொள்வாயா?

5. மேலும் நீ எழுதுகிறாய்: "குழப்பங்களும் பிரச்சனைகளும் வழி கெட்டக் கொள்கைகளும் ஈராக்கில் தான் முதலில் தோன்றின." அடப் பொய்யா, "முஸ்லைமா" என்பவன் நபிகள் நாயகம் காலத்திலேயே பிரச்சனை செய்தானே, அவன் ஈராக் பகுதியையா சேர்ந்தவன் ? சவுதி அரேபியா தலை நகரான ரியாத் அங்கம் வகிக்கும் நஜ்த் பகுதியைத் தானே சேர்ந்தவன். பதில் சொல்லு.

Sunday, April 06, 2008

சீனாவும் தலாய்லாமாவும் இந்து பத்திரிக்கையும்

தலாய்லாமாவினை பின் லாடனுடன் இந்து ராம் ஒப்பிட்டுவிட்டதாக ஒரு பதிவினைப் படிக்க நேர்ந்தது. இந்து ராம் அவ்வாறு ஒப்பிடவில்லை என்று அவர் எழுதியதைப் படிக்கும் போது புரிந்தது.

தலாய்லாமாவினை பின்லாடனுடன் ஒப்பிட முடியாதெனினும், தலாய்லாமாவினை அவரது தோற்றத்தினுடனும் ஒப்பிட முடியாது. இந்த தொடுப்பினைப் பார்க்கவும்.

தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களின் முழுவீச்சான கோறுதலான, "திபெத்தியர்களின் சாவு எண்ணிக்கை 99" என்பதினை உண்மை என்று கொண்டாலும், இது சாதாரணமாக இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனத்தில் 10 அல்லது 20 நாட்களில் கொல்லும் மக்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், பிபிசி போன்ற இணைய தளங்களில் இச்ச்ய்தி அதி முக்கியத்துவம் பெறுவதற்கு, பிபிசி உள்ளிட்ட ஊடகங்களின் சீனா விரோத போக்குக்கும், தலாய்லாமாவின் போக்குக்கும் ஒத்த நிலை இருப்பதுவே ஆகும். இதனால் தலாய்லாமாவின் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்ட, "பண்பாட்டு அடிப்படையிலான இன்வொழிப்பு திபெத்தில் நிகழ்கிறது" எனும் கோறுதல்கள் இவ்வூடகங்களில் எதிரொலிக்கப்படுகின்றன.

இவைகளுக்கு முக்கிய காரணம், சமீபத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியே. அதன் செல்வாக்கு கிழக்கு ஆசியாவுடன் மட்டும் நின்றுவிடாது, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஃப்ரிக்காவிலும் வளர்ச்சிஅடைந்துள்ளது. அதனுடைய அரசியல் நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கடந்த லெபனான் போரின் போது வெளிப்பட்டது. சூடான் மேற்கத்திய மதிப்புகளுக்கு எதிராக இருப்பதினால், சூடானில் நிகழும் கலவரத்தினை "இனவொழிப்பு" எனும் சொல்லாடலைக் கொண்டு வர்ணித்து மகிழ்வுற மேற்கத்திய நாடுகள் எத்தனிக்கும் போது, அதனுடன் சீனா நல்லுறவு கொண்டுள்ளது. மேலும் அதன் உறவு வடகொரியாவுடனும் வெனிசுவேலாவுடனும் க்யூபாவுடனும் சிறப்பாகவே உள்ளது. மிக முக்கியமாக ஈரானுடனான‌ அதன் உறவு மிகச் சிறப்பாகவே உள்ளது.

இதனால் இவை அனைத்திலும் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்த கருத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது, அதிக வியப்பினை அளிக்கவில்லை. திபெத்தில் இறந்ததாக‌ தலாய்லாமா கூறிக்கொள்ளும் 99 பேர்கள் அவர்களின் பார்வையில் ஈராக்கில் இறந்த மில்லியன் மக்களைவிடவும், ஆஃகானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளில் கூட விமான‌குண்டு வீசி கொள்ளப்பட்ட மக்களைவிடவும் அதிகமாகத்தோன்றுவதால் அவைகள் தலைப்புச் செய்திகளாக அவ்வூடகங்களின் இணையதளங்களில் பல மணி நேரமோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ நீடித்தன. இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தில் கொல்லும் செய்திகள் பெரும்பாலும் அந்த பிராந்திய செய்தியாக மட்டுமே சுருங்கிவிடுகின்றன.

ஊடகங்களின் மூலம் நான் பார்த்த வரையில், திபெத்தில் மனிதஉரிமை மீறல்கள் இல்லை. உலகில் உள்ள மற்ற ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பகுதிகளில் நிகழும் மனிதவுரிமை மீறல்களான வீட்டிற்குள் புகுந்து கற்பழித்தல், காணாமல் போகுதல், என்கவுண்டர் எனும் பேரில் போட்டுத் தாக்குதல் போன்றவைகள் திபெத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. தலாய்லாமா சார்பான பிபிசியில் கூட நான் காணவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நிலைக்கு தாளம் போடாமலும், இந்திய‌ மதவாதிகளின் நிலைக்குத் தாளம் போடாமலும், "தேசியம்" மற்றும் "பிராந்தியம்" எனும் பேரில் இந்தியாவில் தாண்டவமாடுபவர்களுக்கு சார்பில்லாமலும், "தமிழ்த்தேசியம்" எனும் பேரில் மதவெறியினைக் கொண்டு செயல்படும் கூட்டத்திற்கு எதிரான நிலையைக் கடை பிடித்தும், பெண்ணுரிமை மற்றும் சாதிவொழிப்பு போன்ற பெரியாரின் முற்போக்கான கொள்கைகளையும் தூக்கிப் பிடித்திருக்கும் இந்து பத்திரிக்கையின் ஆசிரியரான ராம் வியக்கத்தக்கவர். ஆனால் அவர் மீதான விமர்சன‌ங்கள் இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.

Saturday, November 17, 2007

வஹாபிசம் ஏன் ஒழிய வேண்டும்

சில வருடங்களுக்கு முன்பு எனது நெறுங்கிய நண்பர் வகாபிசத்தையும் சூபியிசத்தையும் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் சூஃபியிசத்தின் மீது அதிக மதிப்பு வைத்திருப்பவர். அவர் 'திண்ணை' இணைய தளத்தில் வந்த சில விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு அக்கேள்வியைக் கேட்டிருந்தார்.

நான் ரெண்டு பக்கமும் சாயாம ரொம்ப டிப்ளமேட்டிக்கா பதில் சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வெளிப்படையாத் தான் எழுதினேன். அது ஒரு நீண்ட‌ பதில். அதில் நான் சொன்ன கருத்துக்களை இங்கே தமிழில் கொடுக்க எனக்கு நேரமில்லை.

ஆனால் 'இதை பற்றி ஒரு பத்தியேனும் சொல்ல வேண்டும்' என்பதற்கு ஒரு தருணம் வந்துள்ளது. பிபிசி யில் வந்துள்ள ஒரு செய்திக்கான அறிமுகத்திற்காக இந்த பதிவு.

(வகாபிகள் தாக்குதல் தொடுக்க வாய்ப்புள்ளது என்பதால்) முதலில் சூபியிசத்தைப் பற்றி என்ன சொன்னேன் என்று பாதுகாப்புக்காக முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சூபிகளின் சில இலக்கியங்களை நான் படித்துள்ளவரை அது இஸ்லாமிய மதத்துடன் நாம் குழப்பிக் கொள்ளவேண்டிய விஷயம் அல்ல. அது ஒரு வகையான சிந்தனையைத் தூண்டக் கூடிய இலக்கியங்கள். சூபி தனது இறைவனையும் தனக்கு பிடித்த மனிதரையும் புகழ்ந்து பாடியிருப்பார். மனித மனத்தினைப் பற்றியும், தமது பிறப்பிற்கான காரணத்தினைப் பற்றியும் தனது கவனிப்புகளையும் எண்ணங்களையும் கூறியிருப்பார். அதில் அவரது சிந்தனையை நாம ரசிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம். சூபியிசத்துல எனது ஈடுபாடு இந்த அளவில் மட்டும்தான். நான் சூபிக்கு தெய்வீக சக்தி இருக்குன்னு ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது இஸ்லாத்தின் முதுகெலும்புக்கு விரோதமானது.

இவ்வாறு எழுதிவிட்டு, சூபிகளை வணங்கும் சூபியிசத்தைப் புகழ்ந்து 'திண்ணை'யில் எழுதும் சிலருடைய கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை எனக் கூறினேன்.

இப்போது வகாபிசம் பற்றி .........

வகாபியிடம் போயி 'சூபி பற்றி என்ன நினைக்கிறீங்க ?' என்று கேட்டால் 'சூபிக்களெல்லாம் ஒரு கஞ்சா பேர்வழிங்க' என்று சொல்வார். ஆனால் அதோடு அவர் நிக்க மாட்டார். ரொம்ப நேரம் உங்களிடம் பேச ஆரம்பிச்சிடுவார். நீங்க கொஞ்சம் நிதானமா அவர் பேசுவ‌தைக் கேட்டீர்களானால் கீழ் கண்ட முடிவுகளுக்கு வருவீர்கள்

1) "ஆண் என்பவன் ஆண்குறியையும், பெண் என்பவள் பெண்குறியையும் உடையவர்கள்" என்பது போன்ற உன்னதமான சிந்தனையைத் தவிர, ஒரு வகாபி, அதற்கு அப்பால சிந்திக்க மாட்டார் என்று நீங்கள் உணரலாம். ஒருவருடைய வாழ்வியல் இதை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என அவர் வாதிடுவதைப் பார்க்கலாம்.

2) "உலகம் இடத்திற்கு இடம் புவியமைப்பில் மாறுபட்டு இருந்தாலும், மேலும் ஒரே இடத்தில் காலத்திற்கு காலம் மாறுபாடுகள் இருந்தாலும், 1400 வருடத்திற்கு முற்பட்ட அராபிய வாழ்வியல் முறையே அனைத்து காலத்திலும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும்" என வாதிடுபவர்களாக வகாபிகள் இருப்பதை உணரலாம்.

3) நீங்கள் அறிவினைப் பயன்படுத்த விருப்பப் பட்டால், அவர்கள் ஆதாரபூர்வமான மத நூல்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்பார். நீங்களும் என்னைப் போல மத நம்பிக்கை உடையவர் என வைத்துக் கொள்வோம். நீங்களும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொள்வீர்கள். ஆதாரபூர்வமான நூலில் காணப்படும் வாழ்வியல் முறையை பின்பற்ற ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் 'ஆதாரபூர்வமானது' என்பது எது என்பதையும் அதற்கான வரைமுறைகளையும் அவர்களே வகுப்பார்கள் என்பது தான் பிரச்சனையே. "ஆதாரபூர்வமானவைகளையே நாம் பின்பற்ற வேண்டும்; ஆனால் 'ஆதாரபூர்வமானது' எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நான் தான் கற்பிப்பேன்" என அவர் முரண்டு பிடிப்பதை நீங்கள் காணலாம்.

இது பற்றி நாம எழுதிகிட்டே போகலாம்... எனக்குத் தான் நேரமில்லை.

எனது ஊர்காரர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வது போல சவுதி எனும் வகாபிச தேசத்துல சட்ட ஒழுங்கு பாரபட்சமானது.

அராபிய தேசங்கள் வகாபிசத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கான காரணமே, அது அரபு மேலாண்மையைத் தூக்கிப் பிடிப்பது தான். மற்ற பண்பாடுகளின் அழிவினை நாடக்கூடியவைகள் தான். அந்த பண்பாடுகளில் இஸ்லாமிய இறைக் கொள்கைக்கு எதிரான கூறுகள் இல்லாவிட்டாலும் அதன் அழிவினை வகாபிசம் நாடுகிறது.

இந்த சிந்தனையில் எழுப்பப் பட்ட வாகாபிசத்தைப் பின்பற்றும் மத்திய் கிழக்கு நாட்டினரிடம் அராபியர்‍/அரபியல்லாதார் பாரபட்சம் வருவது இயற்கையே. இந்த பாரபட்சத்தை வகாபிசம் நேரடியாக போதிக்காவிட்டாலும், அது எழுந்து நிற்கும் அடித்தளம் இந்த பாரபட்சத்தினை நியாபடுத்துகிறது. வகாபி/வகாபியல்லாதார் என்று வரும்போது கூட இப்பாரபட்சம் இயற்கையாகவே தலைதூக்க்குகிறது.

வகாபிசம் என்பதாவது, ஒரு மனிதனின் சிந்தனையைவிட சிலர் எழுதிய புத்தகங்களே மேலானவை என கருத்தாக்கம் கொண்டு, "ஆதாரப்பூர்வமானவை" என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளால் தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும் புனிதப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் என்பதால் அடிப்படைவாதமும் உரிமை மீறல்களும் மலிந்து கிடக்கின்றன.

நிச்சயமாக வகாபிசம் ஒழிய வேண்டும். இது சூபியிசம் போல ஒருவருடைய தனிமனித வாழ்க்கையைச் சார்ந்த கருத்தியலில்லை. சட்டம், நீதி, அரசியல் போன்ற பொது வாழ்க்கை அம்சங்களில் நுழைவதால், தனி மனித உரிமைகளைக் காக்கும் பொருட்டு வகாபிசத்தை எதிர்க்க வேண்டியது கடமையாகிறது:

இனி பிபிசி செய்தி: http://news.bbc.co.uk/2/hi/middle_east/7098480.stm

இச்செய்தி வகாபிச சிந்தனையின் கோரமுகத்தினை திரைவிலக்கம் செய்து காட்டுகிறது.

(குறிப்பு: இந்த செய்தியினை சங்-கூட்டத்தினர் தங்கள் வலைபதிவுகளில் ஏற்றி விமர்சிப்பதற்கு என்னுடைய இந்தப் பதிவுக்கு சுட்ட (cite) வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் சங்-சித்தாந்தத்திற்கு விரோதி.)

(2012 செப்டம்பர் மாதத்தில் இந்த பின் குறிப்பினை எழுதுகிறேன்: இந்த கால கட்டத்தில், சூஃபியிசம் பற்றிய நிலைப்பாடு மாறியுள்ளது. 2007-ல் இந்த பதிவில் சூஃபியிசம் பற்றி நான் கூறியுள்ளவைகளை இப்போது நான் ஏற்கவில்லை)