Monday, August 16, 2010

வஹ்ஹாபி பிரிவுகள் - தொழுகைக் குழப்பங்கள்

நான் புதுக்கல்லூரியில் படித்த காலங்களில் என் சக அறைவாசிகள் வஹ்ஹாபிகள். அவர்களுடனான ஒரு அனுபவத்தினை எனது கடந்த பதிவு ஒன்றில் எழுதிவிட்டு அழித்துவிட்டேன். அது எழுதிய சமயத்தில், எனக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது, அப்பதிவு தேவையற்ற ஒன்றோ என்று. எனவே அழித்தேன். ஆனால் அழித்தது தவறு என்று எனக்கு இப்போது புரிகிறது. வஹ்ஹாபிகளின் குறைகளை அடையாளம் காட்டிவரும் வரை, மேலும் பலர் வஹ்ஹாபிகளாக ஆவதிலிருந்து தடுக்கலாம்.

நான் கல்லூரிகளில் படித்தக் காலங்களில், எனது சக-அறைவாசிகள் இருவரும் வஹ்ஹாபிகள் ஆவார்கள். அவைகள் 14 வருடங்களுக்கு முற்பட்ட அனுபவங்கள்.

எனக்கும் வஹ்ஹாபிகளுக்கும் ஏற்பட்ட முரண், அவர்கள் முஸ்லீம்களுக்கு மத்தியில் குழப்பம் விளைவிக்கும் காரணத்தினை முன்வைத்தே. வஹ்ஹாபி என்ற பதம் மேற்குலக ஊடகங்களில் வேறொருக் காரணத்திற்காக, அவர்களை அடையாளம் காட்ட அச்சொல் பயன்படுத்தப் படுகிறது. தீவிரவாதம், உரிமை மீறல்கள் மற்றும் மடமைத்தனம் போன்றவற்றை அடையாளம் காட்ட இந்த சொல், அந்த மேற்கு உலக ஊடகங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் தீவிரவாதத்தினைக் கொண்டே மடமைத்தனத்தினை சவுதி அரேபியாவில் அரங்கேற்றி, தனது வஹ்ஹாபியத்தினை அரசாங்கமதமாக்கினார். ஆனால் மேற்குலத்தினரின் போக்கு சற்று ஆட்சேபனைக்குறியது. எல்லா தீவிரவாதத்தினையும், வஹ்ஹாபிசம் என்பது தவறு. சில தீவிரவாதங்கள் நல்ல காரணங்களின் மீது வேறூண்றியவை. உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற காரணத்திற்காக எதிர்த்து நின்றல் சில சமயங்களில் தீவிரவாதம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இத்தகைய நல்ல காரணங்களால் எழும் போராட்டங்களை "வஹ்ஹாபியம்" என்று அழைத்தால், வஹ்ஹாபியர்களைப் புகழ்வது போன்றதாகும். இந்த தவறு ஏற்படச்செய்கிறது. இந்தத் தவறினை மேற்குல ஊடங்கள் செய்வதற்கான காரணம், உயிர் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை தரக் குறைவாகக் காட்டவேண்டும் என்பதற்காக இந்த சொல்லைக் கையாளுகிறார்கள். மூல காரணம், அந்த மேற்குலகினரே உரிமை மீறல்கள், படுகொலைகளை நிகழ்த்துவதால்.

வஹ்ஹாபிகளின் தீவிரவாதம் வேறுபட்டது. அது "காத்தல்" என்ற படியிலிருந்து "தாக்குதல்" என்றப் படியினைச் சென்றடைந்தது. தாக்குதல் என்பது காத்தல் என்பதற்காக நிற்கும்போது மட்டும் அந்த தாக்குதலை நபி அவர்களது வாழ்க்கை வரலாறு அங்கீகரிக்கிறது. ஆனால் இப்னு-அப்துல்-வஹ்ஹாபின் தீவிரவாதம், தனது கொள்கை பரப்பிற்காக நிகழ்த்தப்பட்ட ஒன்று.

வஹ்ஹாபிகள் என்றப் பதத்தினை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. ஆனாலும் அவர்கள் வஹ்ஹாபிகளே. வஹ்ஹாபிகளிடத்தில் பல பிரிவினர் உள்ளனர். இயக்க-ரீதியாக, தனித்தனி அமைப்புகள் கொண்டு செயல்படும் வஹ்ஹாபி இயக்கங்களைத் தவிர கொள்கை ரீதியான பிரிவுகள் உள்ளன. அவைகளை அறியும் பொருட்டு கீழே பட்டியல் இடுகிறேன்.

1) சவுதி அரசாங்கத்தினைக் காக்க செயல்படும் வஹ்ஹாபிகள்:

இந்தப் பிரிவினர், சவுதி அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் சில பேச்சாளர்கள் மற்றும் அறிஞர்களால் வளர்க்கப்படும் பிரிவு. உதாரணத்திற்கு இப்னு பாஸ், அபூ கதீஜா போன்றவர்களைக் கூறலாம். இப்னு பாஸ் வாழ்ந்து மறைந்தவர். அபூ கத்தீஜா இன்னும் இங்கிலாந்தில் வாழ்பவர். இளவயது காரர். இந்தப் பிரிவினரின் கொள்கைப் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பாகக் கொள்கைக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் சார்பாகா இருந்து தனது முடியாட்சியினை அங்கீகாரம் பெற்றதொன்றாகவும், மேற்குலகில் செல்வாக்குப் பெற்றதாகவும் ஆக்க சவூதி அரசினர் விருப்பப்படிகின்றனர். அதனை இஸ்லாம் ரீதியாக அங்கீகரிக்க ஃபத்வாக்கள் கொடுக்க அவர்களால் இந்த வஹ்ஹாபிய ஆலீம்கள் (அறிஞர்கள்) போற்றப்படுகின்றனர். இவர்களது போதனைகளில், அமெரிக்காவினை நண்பனாகக் காட்டுவதும், இஸ்ரேலினை வெறுக்கத்தக்க நாடு அல்ல எனக்காட்டுவதும், ஈரானை எதிரியாகக் காட்டும் போக்கும் தென்படும்.

2) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான "வஹ்ஹாபிகள்":

இவர்களுக்கு உதாரணம், பின் லேடன், அன்வர்-அல்-அவ்லாக்கி, தாலிபான்கள். இவர்கள் முற்கூறிய வஹ்ஹாபிகளைவிட மத விஷயங்களில் சற்று மிருதுவானவர்கள். இவர்கள், ஷியாக்களைக் காஃபிர்கள் என்றுப் புறந்தள்ளுவதில்லை. மத்ஹபுகளை (சட்ட நுணுக்கங்கள் ரீதியாக வேறுபட்ட பள்ளிகளை) வெறுப்பவர்களில்லை. மேலும் மேற்கூறப்பட்ட ஒன்றாம் வகை வஹ்ஹாபிகளின் நயவஞ்சகம் அற்றவர்கள் இந்த வஹ்ஹாபிகள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் இவர்களை வஹ்ஹாபிகள் என அழைப்பது, மேற்குலச் சித்தாந்தத்தின் படி மட்டுமே. உண்மையில் வஹ்ஹாபி என்ற சொல் இவர்களுக்குப் பொருந்தாது. இந்த ரகத்து "வஹ்ஹாபிகள்" தங்களை "ஸலஃபிக்கள்" என அழைத்துக் கொள்வதை விரும்புகின்றனர். முதல் ரகத்தில் சொல்லப்பட்ட சவுதி சார்பு வஹ்ஹாபிகளும் தங்களை "ஸலஃபிக்கள்" என அழைத்துக்கொள்ள விரும்பினாலும், அவர்களது நயவஞ்சகத்தினாலும், கொள்கைத் தீவிரவாதத்தினாலும், "வஹ்ஹாபிகள்" என்றே அம்பலப் படுகின்றனர்.

3) "குர்ஆன் ஹதீஸ்" வஹ்ஹாபிகள்:

இவர்கள் நபித்தோழர்களின் கூற்றுக்களையோ அல்லது குர்ஆன்-ஹதீஸ் பற்றி நபித்தோழர்களின் அபிப்ராயங்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. தனது மனோ இச்சையினை மட்டுமே பின் பற்றுவார்கள். உதாரணத்திற்கு பி.ஜெயினுல் ஆபிதீன்

4) "ஸலஃபிக்கள்":

இவர்கள் குர்ஆன்-ஹதீஸினையும் பின்பற்றுவார்கள், மேலும் நபி அவர்களின் அடுத்த தலைமுறையினரான "தாபியீன்கள்" மற்றும் "தபஉத்தாபியீன்கள்" ஆகியோரின் அபிப்ராயத்தினையும் மதிப்பவர்கள். ஆனால் வஹ்ஹாபிகளைப் போல மத்ஹபுகளை விமர்சிப்பவர்கள்.


5) கலவையான வஹ்ஹாபிகள்:

இந்த வஹ்ஹாபிகளைப் பற்றி புரிந்துக் கொள்ளலாம், ஆனால் அவைகளை எழுத்துக்களாக எழுத முற்பட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு; இருப்பினும் சொல்கிறேன். இந்தப் பிரிவில் மேலே சொன்ன நான்குப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். ஒருவர் ஸலஃபியாகவும் இருப்பார், அதே சமயத்தில் சவுதி, அமெரிக்கா, இஸ்ரேல் சார்பாகவும் இருப்பார். ஒருவர் அமெரிக்காவிற்கு எதிராகவும் இருப்பார், குர்ஆன்-ஹதீஸ் மட்டும்தான் பின் பற்றுவேன் என்றும் இருப்பார்.


தமிழக முஸ்லீம்களைப் பொருத்தவரை முதல் இரு பிரிவு வஹ்ஹாபிகளால் அவ்வளவு பிரச்சனை கிடையாது. 3-ம் பிரிவும் 4-ம் பிரிவும் தான் பிரச்சனைக்குறியவர்கள்.

குறிப்பாக சுவுதிக்கு சென்று தொத்திக்கொண்டு வந்த வியாதிகளைத் தமிழகத்தில் பரப்பிய சிலராலும், அதே வியாதியினால் பீடிக்கப்பட்டவர்களாலும் பள்ளிவாசல்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த வஹ்ஹாபிக்களைப் பொறுத்தவரை, வஹ்ஹாபியல்லாத ஹனஃபி மத்ஹபு பிரிவினர்தான் ஹதீஸ்களிலிருந்து அதிக பட்சமாக முரண்படுபவர்கள். ஹன்பலி மத்ஹபு பிரிவினர்தான் தங்களுடன் அதிகபட்சமாக ஒத்து போகுபவர்கள்.

இந்த வஹ்ஹாபிகள், வஹ்ஹாபியல்லாதவர்களின் பள்ளிவாசல்களில், "தொழுகிறேன் பேர்வழி" என்ற பேரில் குழப்பங்களை விளைவிப்பார்கள். ஹனஃபி பள்ளிகளுக்கு சென்று அவர்களை வெறுப்பேத்தும் தொனியில், மிக சப்தமாக தொழுகையின் போது ஆமின் சொல்லுதல்; இரு நபர் நிற்க வேண்டிய இடத்தில், காலை அகட்டி வைத்துக் கொண்டு தான் ஒருவனாக மட்டும் இருத்தல் அல்லது அருகில் நிற்பவனை நெறுக்குதல்; நெஞ்சில் கைக்கட்டுகிறேன் என்ற பேரில், அருகில் உள்ளவனுக்கு சிரமம் ஏற்படுத்தல்; தொழுகை அமர்வில், விரலைத் துடிப்பது போல ஆட்டிக் கொண்டே இருத்தல்; தொப்பி அணிந்து தொழுபவர்களை விட அணியாது இருப்பதே சிறந்தது என்பது போல இத்தகைய அனைவரும் தொப்பி அணியாதிருத்தல். தொழுகை முடிந்தவுடன், பிரார்த்திப்பவரை ஏளனம் செய்யும் தொனியில், எழுந்து செல்லுதல் போன்றவைகள் இவர்கள் செய்யும் குழப்பங்கள். இவர்கள் வணங்குவது இறைவனையா அல்லது தனது இறுமாப்பினையா என்பதை அல்லாஹ் அறிவான் என்றாலும், அவர்களது நடத்தைகள் மூலம் நமக்கும் இறைவன் காட்டவே செய்கிறான்.

இத்தகைய வஹ்ஹாபிகளுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பதில் அளிக்கிறார்கள்: http://www.jamalinet.com/category/thavarana-kolgaikalum-thakka-badhiladiyum

No comments: