Friday, July 23, 2010

பிஜேயின் பயணம்: நாத்திகத்திலிருந்து உருவ வழிபாடு நோக்கி

(இந்த விமர்சனம், வாசகர்களின் புரிதலுக்காக, எடிட் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

பிஜே எனும் பி. ஜெயினுல் ஆபிதீன், தான் வணங்கும் கடவுளைப் பற்றி சென்னையில் நடந்துள்ள விவாதத்தில் விவரித்துள்ளார்.

அந்த விவாதம் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருக்கும் பிஜேக்கும் இடையே நடைபெற்றுள்ளது. அந்த விவாதம் "இறைவனுக்கு உருவம் உண்டா ? இல்லையா ?" என்பது பற்றியது. பிஜேயின் நிலைப்பாடு, "இறைவனுக்கு உருவம் உண்டு" என்பதாகும். அப்துல்லாஹ் ஜமாலியின் நிலைப்பாடோ, "இறைவனுக்கு உருவம் இல்லை".

இந்த விவாதத்தினை பிஜேயின் இணையதளத்திலேயே, அவரது எடிட்டிங்குகளுக்கு உட்பட்ட வீடியோவினைப் பார்த்தே தெரிந்துக் கொண்டேன். இணைய தளத்தில் முதன்மையாக வெளியிட்டு இருப்பவர் இவர்தான் என்பதினால், நான், "எங்கே பிஜே பக்கம்தான் அசைக்கமுடியாத வாதங்கள் இருக்கிறது போலும்; அதனால்தான் பறைசாற்ற ஏற்றியுள்ளார்" என்று நினைத்தேன். ஆனால் பார்த்தால் தான் தெரிகிறது, பிஜேயின் ஏமாற்றுவாதங்கள். ஆனால் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் நுணுக்கமாக பிஜே செய்யும் தில்லுமுல்லுகளை தண்டவாளம் ஏற்றுகிறார். பிஜே இந்த விவாதப் பதிவினை முதலில் தனது தளத்தில் ஏற்றிக்கொள்வதற்கு காரணம், அவரது அடிவருடி விசிறிகள் வழக்கம் போல தனது வாதத்தினை மட்டும் பார்த்து ஆர்ப்பரிப்பவர்கள் என்று பிஜே கருதியிருப்பார் போலும்.

இதற்கு முன் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது, பிஜே, தான் ஒரு நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியதாக அறிவிப்பு செய்து அறிமுகம் செய்துக்கொண்டவர். பிஜேயின் இந்த பிண்ணணியினை நாம் கருத்தில் கொண்டு அவரை எடைபோடுவது நல்லது. அது அவரது இறைநம்பிக்கையின் தரத்தினை நமக்கு உரைப்பதாக உள்ளது.

சரி, இப்போது அந்த விவாதத்திற்கு வருவோம்.

பிஜேயின் வாதத்திலிருக்கும் தில்லுமுல்லு, அவருக்கு அளிக்கப்பட்ட முதல் பேச்சிலேயே எடுத்த எடுப்பில் தென்படுகிறது. இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு ஆதாரமாகத் தான் எடுத்து வைத்த ஹதீஸினை "சுருக்கி சொல்கிறேன் பேர்வழி" என்ற பேரில் இருட்டடிப்பு செய்துள்ளார். வேண்டுமானால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது அவரது இணையதளத்தில் முதல் பாகத்தில் உள்ளது. அந்த ஹதீஸினைப் பிஜே "சுருக்கிச்" சொல்லும் போது, இறைவன் மறுமை நாளில் மக்களிடம் தோன்றும்போது முதலில் ஒரு வடிவத்தில் வருவதாகவும், மக்கள் அவனை அடையாளம் காணமுடியாது என்றும், பிறகு இறைவன் வேறு வடிவத்தில் தோன்றுவதாகவும், இறைவன் தனது காலைக் காட்டுவதாகவும் கூறியவுடன் மக்கள் அவனுக்கு சஜ்தா செய்வதாகவும் கூறினார். இவ்வாறு பீஜே இந்த ஹதீஸினைச் "சுருக்கி"ச் சொன்னதற்கு காரணம், அது ஒரு நீண்ட ஹதீஸ் என்பதனால் தான் என்று காறணம் கூறுவார். (ஆனால் அது பொய் காரணம் என்பது ஜமாலியின் வாதத்தின் போது தெளிவாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு வருவோம்). இவ்வாறு "சுருக்கிச்" சொலவ்தாகக் கூறியப் பீஜே, தனது சுருக்கத்தினால் "பொருள் ஒன்றும் மாறவில்லை" என்று வேறு சொல்கிறார்.

ஆனால் இது உண்மையல்ல என்பது ஜமாலியின் வாதத்தின் போது, ஜமாலி எடுத்துக்காட்டுகிறார். அந்த ஹதீஸில், மக்கள் ஏற்கனவே பார்த்திருந்த தனது உருவத்தில் வருவான் என்று வருவதைப் பீஜே தனது "சுருக்க"த்தின் போது மறைத்துவிட்டதினை உணரலாம். இறைவன் தன்னை முதன் முதலில் வெளிப்படுத்தும் போது, மக்கள் எப்படி முதலிலேயே பார்த்திருக்க முடியும் ? இந்த கேள்வியினை ஜமாலி திறமையாக வெளிக்கொணர்வார்.

பிஜேயின் மொழிபெயர்ப்பு தவறு என்பதினை ஜமாலி உணர்த்துவார். பிஜே தனது மொழிபெயர்ப்பின் போது, "உருவம்" என்றும், "கால்" என்றும் எந்த அரபி சொற்களை (அரபியில் "சூரத்", மற்றும் "சாக்") மொழிபெயர்த்தாரோ அதன் மொழிபெயர்ப்பு அவ்வாறு இல்லை என்பதினை ஜமாலி உணர்த்துவார். ஏனெனில் "சூரத்" என்ற சொல்லுக்கான அர்த்தத்தினை "உருவம்" என்றுக் கொண்டால் மேலே சொன்ன முரண்பாடு தோன்றுகிறது. அதாவது மக்கள் இறைவனின் உருவத்தினை இதற்கு முன் பார்த்ததே இல்லை; ஆனால் "இதற்கு முன் பார்த்திருந்த உருவம்" என்று ஹதீஸில் வருகிறது. எனவே இந்த முரண்பாடு. எனவே "உருவம்" என்று மொழிபெயர்க்கப் பட்ட அரபி வார்த்தையான "சூரத்" எனும் சொல்லின் மொழி பெயர்ப்பு "வடிவம்" எனும் பொதுப்படையான வார்த்தையாகும். வடிவம் என்றால் உருவம், பண்பு, நிலைகள் (வாயு, திரவம், திடப்பொருள்) ஆகிய எதற்கும் பொருந்தும். இந்த ஹதீஸ் இடத்தில் "வடிவம்" என்ற சொல் "பண்பு" என்று பரிணாமம் எடுக்க வேண்டும் என்று ஜமாலி எடுத்து இயம்புவார். மேலும் ஹதீஸில் வரும் மற்றொரு அரபி வார்த்தையாக "சாக்" என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு "கடுமை" என்று இருந்திருக்க வேண்டும்; "கால்" அல்ல. அப்படி பொருள் கொண்டால் அந்த வாக்கியத்தின் படி "அல்லாஹ் கடுமையை விலக்குவான்" என்று பொருள் பெறும். பிறகு மக்கள் சஜ்தா செய்வார்கள். இவ்வாறு ஜமாலி விளக்கினார்.

மேலும் அந்த ஹதீஸில், இறைவன் முதலில் ஒரு வடிவத்தில் வருவதாகவும், மக்களால் அந்த வடிவத்தினைக் அடையாளம் காண முடியாது என்பதினால் வேறு வடிவத்தில் வருவதாகவும் வருகிறது. இங்கே வடிவம் என்றால் உருவம் என்ற பொருளில் பதில் சொல்லும்போது சிக்கல் ஏற்படுவதால், சூரத் என்றால் பண்பு என கொள்ளவேண்டும் என்பதினையும் ஜமாலி வலியுறுத்துவதை நாம் அறிவு பூர்வமாக ஆமோதிக்கலாம். உண்மைதான், நாம் ஒருவரின் குணத்தினை 'ரூபம்' என்று சொல்வதுண்டு. ரூபம் என்றால், உருவம் என்று மட்டும் தான் பொருள் என்றில்லை. ஜமாலி சொல்லும்படி மொழிபெயர்த்தால் தான் அந்த ஹதீஸ் அர்த்தம் பெறுகிறது. எப்படி என்று பார்ப்போம்.

இந்த ஹதீஸில் உள்ள சம்பவம் மறுமையில் நடைபெறும் ஒன்று. அங்கு குணங்கள்/பண்புகள் மக்கள் உணரும் வடிவங்களாக (form) இருப்பதில் ஆச்சரியமில்லை. முதலில் இறைவன் தனது ஒரு பண்பில் தோன்றும் போது மக்களால் உணரமுடியாததற்கான காரணம், இறைவனது பண்புகள், மக்களினால் உணரக்கூடிய பண்புகளுக்குள் மட்டும் அடைபட்டதல்ல. மக்களால் உணரக் கூடிய இறைவனின் பண்புப் பெயர்கள் மட்டும் தான் 99 பெயர்கள். இது தவிர அவனுக்கு எண்ணற்ற பண்புப் பெயர்கள் இருக்கின்றன. எனவே அவன் வேறொரு வடிவத்தில், அதாவது தனது 99 பெயர்களுக்கு உட்பட்ட பண்புப் பெயராளனாக இரண்டாம் முறையாத் தோன்றுகிறான். பிறகு மக்களின் கடுமையை விலக்குகின்றான். ஜமாலி அவர்கள் நமக்கு இதனை விளங்க அளித்ததற்கு அவருக்கும், பிஜேயின் சூனியத்திலிருந்து காத்ததற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் நன்றி.

மேலும் பீஜே பேசும்போது, "மக்கள் சூரியனையும் சந்திரனையும் காண்பது போலக் காண்பார்கள்" என்று கூறி "இறைவனின் உருவத்தினைக் காண்பார்கள்" என்று நம்பும் படி மாயாஜாலம் செய்தார். ஆனால் ஹதீஸில் இருப்பதுவோ, மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பதினைப் பற்றி சஹாபாக்கள் கேள்வி எழுப்பிய போது, நபி(ஸல்) அவர்கள் சூரியனையும் சந்திரனையும் பார்ப்பதில் ஐயப்படுகிறீர்களா ? என்று கேட்டுவிட்டு அல்லாஹ்வினைப் பார்ப்பீர்கள் என்று நவின்றார்கள். இதில் "பார்த்தல்" என்பது அறிதல் என்பதாகும் என ஜமாலி விளக்கினார்கள். இதில் பிஜே செய்த தில்லுமுல்லு "மக்கள் சூரியனையும் சந்திரனையும் காண்பது போலக் காண்பார்கள்" என்று கூறி உருவத்தினைக் காண்பார்கள் என்றத் தோற்றத்தினை ஏற்படுத்தியது. ஆனால் ஹதீஸில் அவைகள் வெவ்வேறு வாக்கியங்களாக இருக்கின்றன.

பிஜே தனது முதல் பேச்சில் செய்த தில்லுமுல்லுகள்:
-------------------------------------------
1. ஹதீஸின் சுருக்கம் என்ற பேரில், அவரது சொந்த வாதத்தினையே சீர்குலைக்கும்படி ஹதீஸில் உள்ள அம்சத்தினை வெளியில் சொல்லாமல் தவிர்த்தது.
2. அதற்கு, ஹதீஸின் நீளத்தினைக் கருத்தில் கொண்டு சுருக்குவதாக பொய்க் காரணம் காட்டியது.
3. மேலும் ஹதீஸினை அவர் விருப்பப்படி சுருக்கிக் கூறும்போது, அதிலுள்ள, ஆனால் பிஜேயால் கூறப்படாதக் கருத்துகள், தான் (பிஜே) கூறிய கருத்துக்களுக்கு முரண்படாது எனப் பொய் கூறியது.

இவரது முழு விவாதத்தில் இவர் செய்துள்ள தில்லுமுல்லுகளை இவ்வாறு நுணுக்கமாக ஆராய்ந்தால் இக்கட்டுரை மிக நீண்டு விடும். எனவே சற்று தவிர்க்க முயல்கிறேன். மேலும் பார்ப்போம்.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பேசும்போது, பிஜேயின் வாதத்திலுள்ள பிழைகளையும், மொழிபெயர்ப்பிலுள்ள பிழைகளையும், மேலே சொல்லியவாறு விளக்கிய பின்பு அவர் மேலும் ஒரு கேள்வியை வைத்தார்: "இறைவன் முதலில் ஒரு உருவத்தில் வருகிறான்" என்று பிஜே மொழிபெயர்த்தவாறே எடுத்துக்கொள்வோம் என்றால், "பிறகு தனது உருவத்தினை இரண்டாம் முறையாக மாற்றினான்" என்றால், இறைவனின் உருவம்தான் என்ன ? அவனுக்கு எத்தனை உருவம் ? பிஜே இதற்கு பதில் கூற முடியவில்லை. ஏனெனில் இவர் வாதத்தின் படி, ஹதீஸில் உள்ள "வடிவம்" என்ற வார்த்தை "உருவம்" என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால், இறைவனுக்கு என்று சொந்தமாக எந்த உருவமும் கிடையாது என்றே அந்த ஹதீஸ் கூறுகிறது. பீஜே தனது அடுத்த வாதத்தில் இந்தக் கேள்விக்கு பதிலளிக்காததைப் பார்க்கலாம். மேலும், "ஏற்கனவே பார்த்த உருவம்" என்று பிஜேயின் மொழிபெயர்ப்பில் வருகிறதே ? என்பதற்கான விளக்கத்தினையும் பிஜே அளிக்கும் போது அவரது மடமை வெளிப்படுகிறது. அதாவது அவர்கூறுகிறார், இறைவன் தனது இரு உருவங்களில் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுவதற்கு முன்பாகவே அவன் சூரியனைப் போலவும், சந்த்திரனைப் போலவும் காட்சித்தந்து விட்டானாம். பிறவு இறைவன் வேறு வடிவத்தில் வந்தானாம். ஆனால் மக்களால் அடையாளம் காண முடியவில்லையாம். எனவே மீண்டும் இறைவன் அவர்கள் பார்த்த சூரியன் போலவும் சந்திரன் போலவும் மூன்றாம் முறையாகக் காட்சித்தந்தானாம் !! சரி இவர் சொல்லுவது போல அவர்கள் பார்த்த சூரியன் போலவோ சந்திரன் போலவோ காட்சித்தந்தால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் கால் ஏது ? எப்படி சூரியன் போன்ற இறைவன் தனது காலினைக் காட்டமுடியும் ? மடமையின் சிகரமாகப் பிஜே இருப்பதினைப் பார்க்கலாம். இதற்கு மேல் சிகரமாக, இந்த "அறிஞர்" பிஜே, ஜமாலிக்கு அறிவுரை வேறு சொல்கிறார் !!! ஜமாலி ஹதீஸ்களைச் சரியாகப் பார்க்கவேண்டுமாம் !!! ஆனால் என்ன கொடுமையென்றால், பிஜே பொய்வேறு சொல்லியிருக்கின்றார். சூரியனையும் சந்திரனையும் பார்ப்பது போல ஏற்கனவே இறவனைப் பார்த்துவிட்டார்கள் என பிஜே சொன்னது பொய். இது ஹதீஸில் இல்லை. இதனை ஜமாலி சுட்டிக் காட்டுகிறார். சுட்டிக் காட்டியபின்பு பீஜேயோ, "ஹதீஸில் இல்லாவிட்டாலும் அப்படித்தான் விளங்க வேண்டும்" என்று அறிவுரைக் கூறுகிறார் !!!. இவரெல்லாம், தன்னைக் குர்ஆன்-ஹதீஸினைப் பின்பற்றுபவர்கள் என்றுவேறு கூறிக்கொள்கின்றனர் !!! "அப்படி ஹதீஸில் இல்லாவிட்டாலும், அப்படித்தான் விளங்க வேண்டும்" என்று கூறிய பிஜே அபாண்டமாக என்னக் கூறினார் தெரியுமா ? நான் மேலே சொன்னது போல ஜமாலி ஹதீஸினைச் சரியாகப் பார்க்கவில்லை என்றுக் கூறியவர் இந்த பிஜே.

அந்த "கால்" விஷயத்திற்கு பிஜே ஒரு குர்ஆன் வசனத்தினைச் சுட்டுவார், அதில் "கால் திறக்கப்படும்" என்ற அர்த்தத்தில் வரும் படி "சாக்" எனும் அரபிச் சொல்லை "கால்" எனும் அர்த்தத்தில் மொழிபெயர்த்து பிஜே கூறுவார். ஆனால் ஜமாலியோ, "சாக்" எனும் அரபி வார்த்தைச் சம்பந்தப்பட்ட அந்த ஆயத்தினையும், ஹதீஸினையும் தான் ஆமோதிப்பதாகவும், சாக் எனும் அரபிச் சொல்லுக்கு அர்த்தம்தான் பிஜே கொடுப்பதல்ல என்றும் விளக்குவார். "சாக்" என்பதற்கு "பண்பு" என்றுதான் மொழிபெயர்க்கமுடியும் என்று விளக்குவார். அது "கால்" என்று இருக்க முடியாது என்பதற்கு குர் ஆன் வசனம் மற்றொன்றினைச் சுட்டிக் காட்டுவார் ஜமாலி. பிஜே கூறியதன் படி "சாக்" என்றால் "கால்" என்று கொண்டால், ஒரு குர்ஆன் வசனம் "அல்லாஹ்வின் முகத்தினைத் தவிர அனைத்தும் அழியும்" எனக் கூறுவதால் அல்லாஹ்வின் காலும் அழியும் என்று வருகிறது என்றும், அரபி வார்த்தை "வுஜூத்" என்பதற்கு அல்லாஹ்வின் முகமல்ல என்றும், வுஜூத் என்றால் அல்லாஹ்வின் உள்ளமை என்றும், அதுபோல "சாக்" என்றால் அல்லாஹ்வின் பண்பு என்றும் விளக்குவார். பிஜேயோ முகம் என்றால் முகம் மட்டுமல்ல அல்லாஹ்வின் முழு உடல் என வாதிடுவார். அது எப்படி ? !!! மனோ இச்சையின் அவதாரம்தான் பிஜேயா ? ஜமாலி அவர்கள் "உன் முகத்திற்காகப் பார்க்கிறேன்" என்றால் உனக்காகப் பார்க்கிறேன் என அர்த்தம் என்று கூறியதை, "அல்லாஹ் அந்த அர்த்தத்தில்தான் கூறுகிறான். அங்கு அல்லாஹ்வின் முகம் என்றால் அல்லாஹ்வின் உள்ளமை" என்று பிஜே, அரபி மொழியில் வேறு ஒரு பொருளை எடுக்கத் தயாராக இருக்கும்போது, "சாக்" என்ற சொல்லுக்கு மட்டும், "கால்" என்றுதான் அர்த்தம் எடுப்பேன் என்பது மனோ இச்சையாகத் தெரியவில்லையா ? "சூரத்" என்ற "வடிவம்" (form) என்ற பொதுப்படையான சொல்லுக்கு "உருவம்" என்றுதான் பொருள் எடுப்பேன் என்பது மனோ இச்சையாகத் தெரியவில்லையா ?

"சூரத்" என்ற சொல்லுக்கு "உருவம்" என்று பொருள் என்று பிஜே சொல்வதை, அதை ஏன் நபி அவர்கள் விளக்காமல் சென்றார்கள் என்று ஜமாலி அவர்கள் கேட்டதினைத் தொடர்ந்த்து, "சூரத்" என்ற சொல் "பண்பு" என்று பொருள்பெறும் என்று ஜமாலி அவர்கள் கூறியதை மறுக்க பிஜேயும் அதே கேள்வியைக் கேட்டார்: "நபி அவர்கள் இதைச் சொன்னார்களா ?" என்று. ஆனால் நபி அவர்கள் பண்பு என்ற பொருளில்தான் கூறியிருப்பார்கள் என்பது தெளிவு, ஏனெனில் அப்படி மொழிபெயர்த்தால், குர்ஆன் ஹதீஸ் ஆகியவை தங்களுக்குள் முரண்படாமல் அர்த்தம் பெருகிறது. ஆனால் பிஜே சொல்லும் படி சூரத் என்றால் உருவம் என்று பொருள் கொண்டால் சுட்டிக்காட்டப்பட்ட முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

மேலும் ஜமாலி அவர்கள் தனது வாதத்தில், இறைவன் தனது முதல் (பண்பு-வடிவத்) தோற்றத்தின் போது மக்கள் அடையாளம் காணமுடியாததன் காரணம், இறைவன் மக்களுக்கு பரீச்சயமான 99 பண்புகளில் வரவில்லை என்றும், பரீச்சியமில்லாத பண்பில் வந்ததாகவும் கூறினார். இதையும் பிஜே "நபி அவர்கள் சொல்லித்தரமால் சென்று விட்டார்களா ?" என்று கேட்டார். ஆனால் ஜமாலியோ, "இறைவனது அனைத்துப் பண்புகளையும் அறிந்து அவனை முழுமையாக ஒருவன் அறிந்துவிட்டால், அவன் எப்படி கடவுளாக இருக்க முடியும் ?" என்று கேள்வி எழுப்பினார்கள். இறைவனின் பண்புகள் அனைத்தும் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கும் பிஜேயின் மடமையை யாரும் கவனிக்க முடியும்.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் மேலும் பேசும்போது, நபி அவர்கள் உருவச் சிலைகளை போட்டு உடைத்ததற்கான காரணமே இறைவனுக்கு உருவம் இல்லை என்பதினால் தான்; இதைத்தான் நபி அவர்கள் செய்முறையாகச் செய்துக் காட்டினார்களென்று கூறினார். ஆனால் பிஜே பதில் கூறும்போது, "அப்படியானால் உருவம் இல்லாததை வணங்கலாம் என்கிறீர்களா ?" என்று கேட்டுத் தடம் மாறினார். காற்றினை வணங்கலாமா கூடாதா என்பதே தலைப்பு அல்ல. இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா என்பதுதான் தலைப்பே. ஜமாலி அவர்கள் அடுத்த பேச்சில் இதனை அவருக்கு உணர்த்தினார்.

மேலும் ஜமாலி அவர்கள் பேசும்போது, இறைவனுக்கு உருவம் இருக்கின்றதென்றால், அதன் தன்மைகள் யாது, அது எப்படி இருக்கும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தோன்றும் என்றும், எனவே ஏகத்துவத்தில் நாம் இருக்க முடியாது என்றும் விளக்கினார். ஆனால் பிஜே இதற்கு பதில் கூறும்போது, "இறைவனுக்கு உருவம் இருக்கின்றதென்றால் அதன் தன்மைகளைப் பற்றி ஒருவன் சிந்தித்துதான் ஆக வேண்டுமா ? வைரஸ், அமீபா போன்றவைகளுக்கு உருவம் இருக்கிறது என்பதற்காக அது ஆணா பெண்ணா என்று யாரும் சிந்திக்கிறார்களா ?" என்பது போலக் கேள்வி எழுப்பினார். ஆமாம், இறைவனுக்கு உருவம் இருக்கிறதென்றால் அதன் தன்மைகளைப் பற்றி கேள்வி மனதில் எழும்புவது சகஜமே. இவர் சொன்ன வைரஸ் அமீபா போன்றவைகளைப் பற்றி வேண்டுமானால் ஒருவர் யோசிக்காமல் இருக்கலாம். ஆனால் உலகத்தினைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கு உருவம் இருக்கின்றதென்றால் அது எப்படி சிந்திக்காமல் இருக்கமுடியும். இது போன்ற இடர்பாட்டு சஞ்சலங்கள் இல்லாமல் ஒருவன் எப்படி இறைவனைத் தொழமுடியும் ? "சுப்ஹான ரப்பியல் அளீம்" என்று ஒருவனால் மனப்பூர்வமாக தொழுகையில் கூற முடியுமா ? இந்தக் கேள்வியினை ஜமாலி அவர்கள் கேட்காவிட்டாலும், அவரது பதில்களில் இந்த கருத்து இருந்ததினைப் பார்க்கலாம்.

ஜமாலி அவர்கள் அல்லாஹ்விற்கு உருவமில்லை என்பதினை நிலைநாட்ட "அல்லாஹ்வினைப் போல எதுவுமில்லை" என்ற ஆயத்தினையும், "அவனுக்கு நிகர் யாரும் இல்லை; எதுவுமில்லை" என்ற குர்ஆன் ஆயத்தினையும் எடுத்துக் காட்டினார்கள். எனவே நமக்கு உடல் உள்ளதால், அல்லாஹ்வுக்கும் உடல் உண்டு என்று கூறுவது இந்த ஆயத்தினை நிராகரிப்பதாகும் என்றும், அல்லாஹ்வுக்கு கால் இருக்கிறது என்றாலோ அல்லது கண் இருக்கிறது என்றாலோ அதுவும் இந்த இந்த ஆயத்துகளை நிராகரிப்பதாகும் என்றும் கூறினார். இதற்கு பிஜே பதில் கூறும் போது. மனிதனுக்கு அறிவு இருக்கிறது, அதனால் அல்லாஹ்வுக்கு அறிவு இருக்கிறது என்று கூற முடியாது என்கிறீர்களா ? என்று பிஜே கேட்டார். அல்லாஹ்வுக்கு அறிவு இருக்கிறது என்று கூறுவது இந்த ஆயத்துகளுக்கு எதிராகாது. ஏனெனில், நாம் மனிதனுக்கான அறிவினை அல்லாஹ்வின் அறிவுக்கு நிகரானது என்று கூறுவதில்லை. ஆனால் அல்லாஹ்வுக்கு கால், கை, முகம் இருக்கிறது என்றால் "அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை" என்பதினை ஒரு விதத்தில் நிராகரிக்கிறது. அதே சமயத்தில் "அல்லாஹ்வுக்கு அறிவு இருக்கிறது" என்பது "அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை" என்பதினை எந்தவிதத்திலும் நிராகரிக்காது, ஏனெனில், "அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை" என்பது தோற்ற சம்பந்தமானது; பண்புகள் சம்பந்தமானதல்ல. பண்புகள் சம்பந்தமானதாகவும் என்று எடுத்துக் கொண்டால், "அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை" என்று கூறிவிட்டு, அதே சமயத்தில் "அல்லாஹ் பார்ப்பவன்; கேட்பவன்" என்று குர்ஆன் முரண்பட்டுக் கூறமுடியாது. எனவே "அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை" என்பது பண்புகள் விஷயத்தில்தான் என்று பிஜே வாதிடுவதைப் போல எடுத்துக் கொண்டால், குர்ஆன் தனக்குத்தானே முரண்படுகிறது என அர்த்தமாகும். எனவே "அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை" என்பது தோற்றம் சம்பந்தமாக மட்டும்தான். எனவே பிஜேயின் வாதம் செல்லாது. ஜமாலி அவர்கள் சுட்டிக்காட்டிய இந்த ஆயத்துகள் அல்லாஹ்விற்கு கால், கைகள் இருப்பதினை நிராகரிக்கின்றன.

மேலே உள்ள எழுத்துப் பூர்வமான ஆதாரத்தினைத்தவிர ஜமாலி அவர்கள் கருத்து அடிப்படையிலும் ஆதாரத்தினை வைத்தார்கள். அதாவது அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பது தான் ஆதாரம். ஒரு அரங்கில் ஒருவன் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், அவன் இல்லாததுதான் ஆதாரம் என்று அறிவுபூர்வமான வாதத்தினை எடுத்து வைத்தார்கள். அதாவது அல்லாஹ்வின் 99 பண்புப்பெயர்கள் சம்பந்தப்பட்ட குண நலன்களான ஆற்றல், கருணை, தண்டனை ஆகியவைகளை நாம் உணர முடிகிறது. ஆனால் அல்லாஹ்வை நாம் பார்க்க முடியவில்லை. எனவே அவனுக்கு உருவம் இல்லை என்பது தெளிவாகிறது என்பது ஜமாலி அவர்களது வாதம்.

அடுத்து பிஜே அடுத்த தனது ஆதாரத்தினை எடுத்து வைத்தார். ஒரு புகாரி ஹதீஸில், "தஜ்ஜால் ஒரு கண் ஊணமானவன்; உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமானவன் அல்ல" என்று வருவதாகவும், "மரணிக்கும் வரை இறைவனைக் காணமுடியாது" என்று வருவதாகவும் கூறி, இவைகள் அனைத்தும் அல்லாஹ்வை மரணித்தபின் பார்க்க முடியும் என்றும், அல்லாஹ்விற்கு கண் இருக்கின்றன என்றும் கூறிவதாகக் கூறினார். ஆனால் ஜமாலி அவர்கள் இதற்கு பதில் கூறும்போது தஜ்ஜாலைத் தாழ்த்தி சொல்லவும் அல்லாஹ்வை உயர்த்தி சொல்லவும், தஜ்ஜாலின் ஊனம் பயன்படுத்தப்பட்டுள்ளது; அவ்வளவுதான் என்று கூறினார். அல்லாஹ்விற்கு கண் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக "அல்லாஹ்வின் ஒரு கண் ஊணமல்ல" என்பதினைப் பயன்படுத்தினால், அல்லாஹ்வுக்கு எத்தனைக் கண் என்ற கேள்வியும் எழும். மேலும் சிலர் விஷமமாக "அல்லாஹ்வுக்கு இரு கண் ஊணம்" என்று வாதிடவும் ஏதுவாகும் என்றும் அந்த ஆபத்தினை ஜமாலி விளக்கினார். மேலும் அல்லாஹ்விற்கு கண் இருக்கிறது என்பதினைக் காட்ட ஹதீஸ் கொண்டுவரும் பீஜே, அல்லாஹ் குர்ஆனில் தனது "கண்" என்று கூறும் வசனங்களின் போதெல்லாம் பிஜே "கண்காணிப்பு" எனும் அர்த்தத்தினைப் பயன்படுத்துவதேன் என்று எதிர் கேள்விக் கேட்டார். இந்த அர்த்தத்தில்தான் பிஜே குர்ஆன் வசனங்களை தனது மொழிபெயர்ப்பில் மொழிபெயர்த்துள்ளார். அதே பொருளில் தான் அல்லாஹ் தஜ்ஜாலைப் போலல்லாமல் அனைத்தையும் கண்கானித்து உணர்பவன் என இந்த ஹதீஸிற்குப் பொருள் என்று ஜமாலி கூறினார். மேலும் இவ்வாறு மனோஇச்சைப் படி செயல்படும், பிஜேயின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அவர் ஒரு பொய்யர் என நிறுவினார்.

பிஜேயின் அடுத்த ஆதாரம் என்று சொல்லப்படுவது இதுதான். அவர் ஒரு ஹதீஸினை மேற்கோள் இடுகிறார். அந்த ஹதீஸில் இருப்பது: ஒரு பாதிரியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ் தனது ஒரு விரலில் வானத்தினையும், இரண்டாம் விரலில் பூமியையும், மூன்றாம் விரலில் மரங்களையும், நான்காம் விரலில் தண்ணீரையும், ஐந்தாம் விரலில் மற்றவைகளையும் வைத்துள்ளான் என்று அந்த பாதிரியார் நபி அவரிகளிடம் கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் தனது கடவாய்ப் பற்கள் தெரியும்படி சிரித்து விட்டு, அதனை உண்மைப் படுத்திய பின்பு, மக்கள் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்று கூறி விட்டு, "அல்லாஹ் இணைவைப்பதைவிட்டும் தூய்மையானவன்" என்ற குர்ஆன் ஆயத்தினை ஓதினார்கள்.(ஹதீஸ் முடிவுற்றது) இந்த ஹதீஸினை பிஜே மேற்கோள் காட்டிவிட்டு, அல்லாஹ்வுக்கு ஐந்து விரல்கள் உள்ளன என்றும் நபி அவர்கள் அதனை உண்மைப் படுத்தியுள்ளார்கள் என்றும் வாதிட்டார். இதற்கு ஜமாலி பதில் கொடுக்கும் போது, "விரல் என்றால் அல்லாஹ்வின் வல்லமை என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். வல்லமை என்பதினை அல்லாஹ்வின் விரல் என்று அந்தப் பாதிரியார் உருவகப்படுத்துவதினால்தான், நபியவர்கள் "மக்கள் சரியாகப் புரிந்துக் கொள்வதில்லை" என்று கூறிவிட்டு "இணைவப்பதை விட்டும் அல்லாஹ் மிகத்தூய்மையானவன்" என்ற ஆயத்தினையும் ஓதுகிறார்கள். "உண்மைப் படுத்தினார்கள்" என்று அந்த ஹதீஸில் வந்துள்ளது, அல்லாஹ்வின் வல்லமையைத் தான். மேலும் நபி அவர்கள் சிரித்ததன் காரணம் அவர் கூறியதில் உள்ள பொருளற்ற விளக்கத்தினைப் பார்த்துதான். அதாவாது ஒரு விரலில் வானம்; இன்னொரு விரலில் பூமி என்று கூறிவிட்டு, மற்ற விரல்களில் பூமியில் உள்ளவைகள் என்று பொருளில்லாமல் அந்தப் பாதிரியார் உளறியதானால் தான் நபியவர்கள் சிரித்தார்கள்" என்று விளக்கினார்கள். இந்த விளக்கம் மட்டுமே இந்த ஹதீஸினை முழுமையாக விளக்குகிறது. பிஜேயின் விளக்கமோ ஏன் நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்றோ, ஏன் நபி(ஸல்) அவர்கள் "மக்கள் சரியாக விளங்கவேண்டிய விதத்தில் விளங்கவில்லை" என்று கூறினார்கள் என்றோ கூறவில்லை. பிஜேயின் விளக்கப்படி, உண்மைப்படுத்துவதற்காகத்தான் கடவாய்ப் பற்கள் தெரியும்படி சிரித்தார்களாம் !!. யாராவது ஆமோதிக்கும் போது அப்படி சிரிப்பார்களா ?

பின்பு அடுத்த ஆதாரம் என்று சொல்லிக்கொண்டு பிஜே வைக்கும் ஆதாரம், "அல்லாஹ் கேட்கக்கூடியவனாகவும் பார்க்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, காதையும் கண்ணையும் காட்டி பேசினார்கள். எனவே அல்லாஹ்வுக்கு காதும் கண்ணும் இருக்கிறது என்பது பிஜேயின் வாதம் !!! இதை மறுப்பது யாருக்கும் வெகு சுலபம் என்பதினால், ஜமாலி அவர்களுடைய மறுப்பினைக் கூறித்தான் ஆக வேண்டும் என்றில்லை. பிஜே யின் மடமை வெட்ட வெளிச்சம் ஆகிறது.

பின்பு அடுத்த ஆதாரம் என்று பிஜே சுட்டுவது குர்ஆன் ஆயத்தினை. "ஏ இப்லீஸே, நான் இருகைகளால் படைத்துள்ள ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுப்பதேன் ?" என்று அல்லாஹ் தனது திருமறையில் வினவுகிறான். எனவே அல்லாஹ்வுக்கு இருகைகள் உண்டு என்பது பிஜேயின் வாதம். ஜமாலி அவர்கள் இதற்கு பதில் கூறும்போது, மற்ற உயிர்களைப் போலல்லாமல் ஆதமை அவரது முழுமையாக வளர்ந்த உயரத்தில் அல்லாஹ் அவனை நேரடியாகப் படைத்தான் என்பதினால், அவனது பிரத்யேகத்தினைக் குறிக்கவே அந்த வசனம் என்று கூறினார். மேலும் அவரது கருத்தினை நிறுவ ஒரு ஹதீஸினைச் சுட்டுகிறார் ஜமாலி. அதில் அல்லாஹ் ஆதமினை தனது ஒரு கையால் படைத்ததாகக் கூறுகிறான். எனவே இங்கு "கை" கையல்ல என்றும், அவனது பிரத்யேக, அதாவது அவனே நேர்டியாக இறங்கி செய்த செயல் என்று விளங்குகிறது.

பிஜேயின் அடுத்த ஆதாரம் ஒரு ஹதீஸ்: "அல்லாஹ் ஆதமை அவர் அல்லது அவன் வடிவில் படைத்தான்". இந்த ஹதீஸை சுட்டிவிட்டு பிஜே அல்லாஹ் ஆதமை அல்லாஹ் வடிவில் படைத்தான் என்று சொல்கிறார். ஜமாலியோ அல்லாஹ் ஆதமை ஆதம் வடிவில் படைத்தார் என்று சொல்கிறார். அதற்கு பிஜே, "அல்லாஹ் ஆதமை ஆதம் வடிவில் படைத்தான் என்றால் அபத்தமாக இருக்கிறது. கழுதையை கழுதை வடிவில்தான் படைக்க முடியும். கழுதையை கழுதை வடிவில் படைத்தேன் என்று சொல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க பொருள் இல்லை. அது போல ஆதமை ஆதம் வடிவில் படைத்ததாக அல்லாஹ் கூறுவதற்கு ஆச்சரியப்படத்தக்கப் பொருள் இல்லை" என்று (பிஜே) வாதிடுகிறார். ஜமாலி அவர்கள் பதில் கூறும்போது, "ஆதமை ஆதம் வடிவில் அல்லாஹ் படைத்தான் என்றால் அதற்கு ஆச்சரியப்படத்தக்க அர்த்தம் இருக்கிறது. ஆதமை குழந்தையாகப் படைத்து வளர்க்கவில்லை. அவனை வளர்ந்த உருவில் படைத்தான் என்று பொருள். அந்த ஹதீஸில் அதற்கு அடுத்த வரியிலேயே ஆதமின் உயரம் 60 முழம் என்று வருகிறது. இறைவன் ஆதமை இந்த 60 முழ நீளத்தில் நேரடியாகப் படைத்தான். இதைத் தான் அல்லாஹ் ஆதமை ஆதம் உருவில் படைத்தான் என்கிறான்", என்று ஜமாலி விளக்கமளித்தார். மேலும் பிஜே சொன்ன வாதத்தின் படி "அல்லாஹ் ஆதமை அல்லாஹ் உருவத்தில் படைத்தான். ஆதமின் உயரம் 60 முழம்" என்று எடுத்துக் கொண்டால், அல்லாஹ்வின் உயரம் 60 முழம் என்று கண்ணியக் குறைவு ஏற்படும் என்று கூறினார். பிஜே அதற்கு பதில் கூறும் போது, "அல்லாஹ் ஆதமை அவன் சாயலில் மட்டும் தான் படைத்தான்; உயரத்தில் அல்ல" என்றார். பிஜே இவ்வாறு சுயமாகக் கூறுவது ஹதீஸில் இல்லாத ஒன்று என்பதினை ஜமாலி உணர்த்தினார்.

பிஜே அடுத்த ஆதாரமாக ஒரு ஹதீஸினைக் கூறுகிறார். அதில் நபி (ஸல்) அவர்கள் குத்பா பிரசங்கத்தின் போது அல்லாஹ் வானத்தினை பூமியினை எடுப்பான் எனக் கூறும்போது தனது இருகைகளாலும் எடுப்பது போல ஆட்டி பேசினார்கள் என்று (அந்த ஹதீஸில்) கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸினைக் கூறிவிட்டு, அல்லாஹ்விற்கு இருகைகள் உள்ளன என்று வாதிட்டார். இதற்கு மறுப்பு தேவையே இல்லை. இவர் இந்த ஹதீஸினைக் கூறிவிட்டு அவ்வாறு அல்லாஹ் பற்றிக் கோருவது, அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு.

பிஜே எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் ஒரு ஹதீஸ்: ரொட்டி சுடுபவன் ரொட்டியைப் புரட்டிப் போடுவது போல அல்லாஹ் பூமியை புரட்டுவான். இந்த ஹதீஸினைக் கூறிவிட்டு, அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதிடுகிறார். அவரது கோரல் அபத்தத்தின் உச்சம்.

பிஜே அடுத்து எடுத்து வைக்கும் ஆதாரம் ஒரு ஹதீஸ்: நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள், யாரையும் முகத்தில் அடிப்பதினைத் தவிர்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அல்லாஹ் ஆதமை தனது சாயலில் படைத்தான். இந்த ஹதீஸினைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் முகம் மனித முகம் போன்றது என்றார் பிஜே. சரி,இப்போ பிஜே யின் இதற்கு முந்திய ஆதாரத்தில், அல்லாஹ் ஆதமின் மொத்தவடிவையும் தன் உருவத்தில் படைத்தான் என்றார். ஆனால் இந்த ஹதீஸில் முகத்தினை மட்டும் அடிக்கக் கூடாது என்று கூறுவதால் இதிலுள்ள முரண் வெளிப்படுகிறது. எனவே இந்த ஹதீஸ் கோளாறுள்ளது. பிஜேயின் வாதப்படிப் பார்த்தால் ஒரு மனிதனை வேறொரு மனிதன் எந்த உறுப்பிலும் அடிக்கக் கூடாது என்பதாகும். அப்படி இருக்க இந்த ஹதீஸ் ஏன் மனிதனை முகத்தில் மட்டும் அடிக்கக் கூடாது என்று கூறுகிறது ? இப்போது தான் பீஜே ஒரு சதி செய்கிறார். ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று பொய் கூறி தப்ரானியிலிருந்து ஒரு ஹதீஸ் சொல்கிறார் பிஜே. அந்த ஹதீஸின் படி அல்லாஹ் ஆதமின் முகத்தினை மட்டும்தான் தன் சாயலில் படைத்தான் என்று கூறுகிறார். ஆனால் ஜமாலி அந்த ஹதீஸினை பலகீனமானது என்று நிரூபிக்கிறார். அந்த ஹதீஸில் உள்ள இரு அறிவிப்பாளர்கள் விமர்சனத்திற்குள்ளானவர்களாகிறார்கள்.

பிஜேயின் அடுத்த ஆதாரம் ஒரு ஹதீஸ்: நீதியாக நடப்பவர்கள் ரஹ்மானுடைய வலது புறத்திலே இருப்பார்கள். எனவே அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பது பிஜேயின் வாதம். ஆனால் பிஜே இந்த ஹதீஸினை முழுதுமாக வாசிக்கவில்லை. இந்த ஹதீஸில் பிஜே சொன்ன வரிக்கு அடுத்த வரியினை ஜமாலி படித்தார். அதன் படி அல்லாஹ்வுக்கு இரண்டு கைகளும் வலக்கரங்கள் !!! அல்லாஹ் ஆதமினை அல்லாஹ் சாயலில் படைத்ததாக நம்பும் பிஜே ஆதமின் சந்ததியான நமக்கு இருகைகளும் வலக்கரங்களாக இல்லையே !! பிஜே ஏன் இப்படி முரண்படுகிறார். இப்போ பிஜே தனது வாதத்தினை சரிகட்ட மனோ இச்சைப்படி செயல் பட ஆரம்பித்தார். இருகைகளும் வலக்கரங்கள் என்றால், இரு கைகளும் பரக்கத்தானவை என அர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டுமாம் !! ஜமாலி அவர்கள் பிஜேயின் மனோ இச்சையைக் கண்டித்த பின், முஸ்லீம்களில் பலர் அல்லாஹ்வினை இவ்விதத்தில் விக்கிரகமாக மனதில் வடித்து தொழ வாய்ப்புள்ளது என்பதினையும் உணர்த்தினார்.

பிஜேயின் அடுத்த ஆதாரம் ஒரு ஹதீஸ்: அதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முசா நபியிடம், தெளராத் வேதத்தினை தனது கையினால் எழுதித்தந்தான் என்று கூறினார்கள். இதில் கை என்பது ஒருவகமல்ல. மற்ற நபிமார்களுக்கு ஜிப்ரீல் அலைகிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக வேதத்தினை இறக்கி வைத்தது போலல்லாமல், நேரடியாக பாறைகளில் எழுதப்பட்ட வேதமே அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரத்யேகத்தினையே ஆதம் அவர்கள் சுட்டுவதாக இந்த ஹதீஸ் சொல்கிறது.

பிஜேயின் அடுத்த வாதம்: அல்லாஹ்வின் அர்ஷினை 8 மலக்குகள் தூக்குகின்றனர் என்ற ஹதீஸ். ஆனால் இந்த ஹதீஸ்படி மலக்குகள் தூக்குவது அர்ஷை மட்டும்தான். ஆனால் பிஜேயோ அல்லாஹ்வினை மனித உருவத்தில் அர்ஷில் உட்காரவைத்து தூக்குவது போல் உருவகம் செய்கிறார் என்பதினை ஜமாலி சுட்டுகிறார். இதன் மூலம் பிஜே அல்லாஹ்வினையே கேலி செய்கிறார். ஏனெனில் எட்டு மலக்குகள் சேர்ந்தால் அல்லாஹ்வினைத் தூக்கமுடியும் என்பது அவனது கண்ணியத்திற்கேற்ற உருவகமல்ல.

பிஜேயின் அடுத்த ஆதாரம் மற்றொரு ஹதீஸ்: அல்லாஹ் தனது இருகைகளை சேர்த்து (அகப்பைப் போலாக்கி) நரகிலிருந்து மக்களை அள்ளி சொர்க்கத்தில் வீசுவான். பிறகு மேலும் மக்களுக்கு இன்பம் அளிப்பதற்காக தன்னைக் காணும் பாக்கியத்தினை வழங்குவான். இதிலும் ஜமாலியின் முந்தைய வாதமான "காணுதல்" என்றால் "அறிதல்" என்பது பொருத்தமாகிறது. இறைவனுக்கு உருவம் இருந்தால் தானே காண முடியும். இறைவனுக்கு மனிதனைப் போல பிஜே சொவது போல முகம் இருந்தால் "அவனைப்போல எதுவும் இல்லை" எனும் குர்ஆன் வசனத்திற்கு முரண் ஏற்படும். மேலும் மக்கள் காணவேண்டும் என்பதற்காக போலியான உருவத்தில் வருபவனாகவும் அவனை உள்ளடக்க முடியாது. இந்த ஹதீஸ் மூலம் அவனைப் பற்றி முழுமையாக அறியும் பாக்கியத்தினை அம்மக்களுக்கு வழங்குவான் என்பதே இதன் பொருள்.

பிஜேயின் ஒரு வாதப்படி, அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்றால், யாரும் பயப்படமாட்டார்கள்; உருவம் இருக்கிறதென்றால்தான் பயப்படுவார்கள் என்றார். ஜமாலி இதற்கு பதிலலிக்கையில், பிஜேயின் அகீதாப்படி அல்லாஹ் ஒரு பூச்சாண்டியின் உருவம் போலும் என்றார். மேலும் அல்லாஹ் என்றால் ஒரு பயங்கரமான உருவத்தில் இருப்பவன் என பிஜே கூட்டத்தினர்கள் நம்புகிறார்கள் போலும் என்றும் கூறினார்.

பிஜே தனது சப்பைக் கட்டுக்கு இப்னு தைமிய்யாவை துணைக்கு அழைப்பார். இப்னு தைமிய்யா அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு எனக் கூறியுள்ளதாக பிஜே கோருவார். ஜமாலி அதற்கான ஆதாரத்தினைக் கேட்பார். பிஜே அதற்கான ஆதாரம் என்று சொல்லி இப்னு தைமிய்யாவின் சில வரிகளைப் படிக்கும் போது தில்லு முல்லு செய்வார். அதனை விரிவாகப் பார்ப்போம். பிஜே இப்னு தைமிய்யாவின் வரிகள் எனப்படிக்கும் வரிகள் இதோ: "அல்லாஹ்வைப் பற்றி நம்புவது என்பது அவன் தனது நூலில் (குர்ஆன்) தன்னைப் பற்றி எப்படி விவ்ரித்திருக்கின்றானோ அப்படி நம்பவேண்டும். ரசூல்(ஸல்) அவர்கள் அவனைப் பற்றி எப்படி சொல்லி இருக்கிறார்களோ அப்படி நம்ப வேண்டும். அதில் மாற்றம் இல்லாமல், அவைகளைப் பொருளற்றதாக்கி விடாமல், அதற்கு குறிப்பிட்ட இந்த முறை என்று ஒரு முறையினைக் கற்பிக்காமல், கற்பனையாக ஏதும் சொல்லிவிடாமல் இருக்கவேண்டும். அவனைப் போல எதுவுமில்லை என்றும் நம்பவேண்டும். உருவம் இருக்குது ஆனால் மற்ற உருவம் போல இல்லை. கண் இருக்கிறது ஆனால் மற்றக் கண்ணைப் போல இல்லை. கை இருக்கிறது ஆனால் மற்ற கையைப் போல இல்லை என்பதையும் நம்பவேண்டும். அவனை மறுத்துவிடக் கூடாது. தனக்கு என்ன இருப்பதாக அவன் வர்ணித்திருக்கின்றானோ அதை மறுத்து விடக் கூடாது". இவைதான் இப்னு தைமிய்யாவின் வரிகள் என அவர் மொழிபெயர்த்துக்கூறுவார். ஆனால் பிஜே செய்யும் மோசடி என்னவென்றால், இவரது இந்த மொழிபெயர்ப்பில், "உருவம் இருக்குது ஆனால் மற்ற உருவம் போல இல்லை. கண் இருக்கிறது ஆனால் மற்றக் கண்ணைப் போல இல்லை. கை இருக்கிறது ஆனால் மற்ற கையைப் போல இல்லை என்பதையும் நம்பவேண்டும்", என்ற வரிகள் மட்டும் இப்னுதைமிய்யா கூறுவது இல்லை. இதனை ஜமாலி மிகத் தெளிவாக விளக்குவார். மேலும் இப்னு தைமிய்யாவின் வரிகளுக்கு ஒப்ப பிஜேயே நடந்த்திக்காததினையும் ஜமாலி விளக்குவார். பிஜே தனது குர்ஆன்-மொழிபெயர்ப்பில், "அல்லாஹ்வின் கண்" என்று வரும் இடங்களிலெல்லாம் அல்லாஹ்வின் கண்காணிப்பு என்று மொழிபெயர்த்திருந்தது இவர் கூறிய இப்னுதைமிய்யாவின் வரிகளுக்கு முரண் அல்லவா ? !!! பிஜே முரண்பாட்டின் சின்னமாக இருப்பதினையும், பொய்யனாக இருப்பதினையும் இதிலிருந்து விளங்கலாம். அல்ஹம்துலில்லாஹ், இதற்கான ஆதார வீடியோக்ககளை பீஜேயே தனது இணையதளத்தில் வைத்துள்ளார்.

அடுத்து "அல்லாஹ் அர்ஷினில் அமர்ந்திருக்கின்றான்" என்ற அர்த்தத்தில் அல்லாஹ் அர்ஷில் மட்டும் இருக்கின்றான் என்று பிஜே வாதிடுவார். ஆனால் ஜமாலி அந்த வசனத்தினை முழுமையுடன் படிக்கும் போது "அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்திருக்கின்றான். மேலும் அல்லாஹ் உங்கள் கூட இருக்கின்றான் நீங்கள் எங்கிருந்தாலும்" என்று வருகிறது. எனவே "உங்கள் கூட இருக்கின்றான் எங்கிருந்தாலும்" என்பதினை "அல்லாஹ் நாம் செய்வதினை அறிந்திருக்கின்றான் எங்கிருந்தாலும்" என்றுதான் அர்த்தம் கொள்வது போல, "அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்திருக்கின்றான்" என்பதினையும் அவ்வாறுதான் பொருள் கொள்ளவேண்டும். அவனுக்கு உருவம் கற்பித்து அவனை எங்கோ இருக்கும் அர்ஷின் மீது உட்காரவைத்து அவனை மலக்குகளை விட்டு தூக்குவது போல கற்பனை செய்யக் கூடாது என்பதினை ஜமாலி விளக்குவார்.

அல்லாஹ் அர்ஷில் தான் இருக்கின்றான் என்பதற்கு ஆதாரமாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்று பிஜே கூறிவிட்டு, அவைகளை அவசர அவசரமாகப் படிக்க ஆரம்பிப்பார். ஆனால் அந்த ஹதீஸ்கள் அனைத்தும் அர்ஷினைப் பற்றி மட்டுதான் கூறுமே தவிர அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்று வராது. ஜமாலி இதைக் கூறுவார். ஆனால் என்ன கொடுமை என்றால், பிஜேயே தனக்கு முரண்பட்டு தான் ஆசிரியராக இருந்த பத்திரிக்கையில் "அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது" என்று எழுதி இருப்பார். பிஜே முரண்பாட்டின் சின்னம். முரண்பாடு என்பது பொய்யனின் அடையாளம் என்பது நபிமொழி. (பிஜே தான் வெளியிட்டு இருக்கும் வீடியோ பிரதியில், ஜமாலி அவர்கள் பிஜே எழுதிய அந்த வாக்கியங்களைப் படிக்கும் காட்சியில், முக்கியமான வார்த்தைகளைப் படிக்கும்போது ஒலியற்று-no sound இருக்குமாறு எடிட் செய்துள்ளதினைக் கவனிக்கலாம்).

மேலும் குர்ஆனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும்போது, ஒரு ஆயத்தில் தான் வானத்திலும் பூமியிலும் இருப்பதாகக் கூறுகிறான். அந்த ஆயத்தினை ஜமாலி சுட்டிக் காட்டி, "நீங்கள் ஏன் அல்லாஹ் வானத்திலும் இருக்கிறான் பூமியிலும் இருக்கிறான் என்று கேட்கக்கூடாது ?" என்று வினவுவார்.

ஜமாலி அவர்கள் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதினை இரு குர்ஆன் ஆயத்துக்கள் மூலம் நிறுவியதோடு அல்லாமல், இறைவனுக்கு உருவம் உண்டு என்று கொண்டால் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் முரண்பாடுகளையும் காட்டியும் உருவம் இல்லை என்பதினை நிறுவுவார். மேலும் ஒரு அருமையான வாதத்தினை எடுத்து வைப்பார். இறைவனுக்கு உருவம் இல்லை என்பதுதான் மிகப்பெரிய ஆதாரம். இறைவனுக்கு உருவம் உண்டு என்பவர்கள்தான் நேரடியான ஆதாரத்தினத் தரவேண்டும் என்பதுவே அந்த வாதம். ஒருவர் ஒரு அரங்கில் இல்லை என்றால் அவர் இல்லாததுதான் ஆதாராம். இறைவன் இருக்கிறான் என்பது அனைவரும் உணர்ந்தது. ஆனால் அவனைக் காணமுடியவில்லை. எனவே அவனுக்கு ஒருவம் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த நிலையில் "உருவம் உண்டு" என்று கூறுபவர்கள்தான் நேரடியான ஆதாரம் கொண்டுவர வேண்டும். என்று வாதிடுவார்.

இவை தவிர, இமாம் நவவியின் கூற்று ஒன்றினைக் கூறுவார்: "இறைவனுக்கு உருவம் கற்பிப்பவர்கள் எஹூதிகள்". இந்த வாக்கியம் இப்னு தைமிய்யா கூறியதாக கூறிப் பிஜே சொன்ன பொய்யைப் போன்றதல்ல.

பிஜே எதை நோக்கி பயணம் செய்கிறார் என்றும், அவர் எவ்வளவு பெரிய பொய்யர், பித்தலாட்டக்காரர் என்றும் இந்த வாதத்தின் மூலம் எல்லாம் தெளிவாகிறது. பிஜேக்கு அவரது கடவுள் அருட் கடாக்ஷம் அளிக்கட்டும்.

3 comments:

nagoreismail said...

நல்ல அருமையாக விளக்கங்கள்..

பிஜே அவர்களின் மொழி பெயர்ப்பும் விளக்கமும் மிகப் பெரிய காமெடியாக இருந்தாலும் அது விஷத்தை போல் உள்ளது.

இது பாமரர்கள் மற்றும் அவரை கண்மூடித்தனமாக பின்பற்றுவர்கள் மத்தியில் இறைவனுக்கு உருவம் என்ற தவறான கருத்தையும் உள்ளுக்குள் விதைத்து விட்டு சென்று விட்டது.

அவருடைய பின்பற்றிகள் உண்மையை விளங்கிக் கொள்ளும் அர்த்தத்தில் அமருவதில்லை.. கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ரசிகர்கள் தனது அபிமான அணி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்களே அதே போல் தவறோ சரியோ தனது தலைவரின் வாதங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவருடைய அடுத்த ஆய்வு என்னவாக இருக்கும்..?
ஷைத்தானுக்கு உருவம் உள்ளது என்பதா?
அது அவரால் நிச்சயமாக சொல்ல கூடும்.. ஏனெனில்.. (மேற்கொண்டு எழுத விரும்பவில்லை)

Ibn Thahir said...

மாஷால்லாஹ்! பி.ஜேயின் பைத்தியக்காரத்தனங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி.

Ibn Thahir said...

பி. ஜேக்கு மார்க்கம் தெரியாது என்பது மேலே காட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானமும் தெரியாதென்பதற்கு உதாரணம் இதோ:

காற்றுக்கு உருவம் இல்லை என்பதால் "அவனைப்போல் எதுவும் இல்லை" எனும் ஆயத்தை வைத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை எனக் கூற முடியாது என்பது பி.ஜெ முன்வைத்த ஒரு வாதம். சரி, காற்று என்றால் என்ன? அதன் ஆக்கக் கூறுகள் (Components) எவை? காற்றுக்கு உருவம் உண்டா?

எனக்கு நினைவிருக்கிறவாறு 8ம் வகுப்பு சயன்ஸ் புத்தகத்திலிருந்து சில தகவல்கள்:

1. அசையும் வளியே காற்று எனப்படும்.
2. வளி N2, O2, CO2... போன்ற மூலக்கூறுகளால் ஆனது.
3. அணுக்களின் சேர்க்கையே மூலக்கூறுகளை தோற்றுவிக்கும்.
4. அணுவுக்கு பரிமானமுண்டு. அணுவின் ஆரை பிகோ மீட்டர் அளவிலானது. அது எம் கண்ணுக்கு தெரியாதவாறு மிகச்சிறியது.

5. பரிமானமுள்ள அணு சேர்ந்து பரிமானமுள்ள மூலக்கூறை தோற்றுவிக்கும். பரிமானமுள்ள முலக்கூறுகள் ஒன்று சேர்ந்து பரிமானமுள்ள வளியை தோற்றுவிக்கும். காற்றின் மீது அமுக்கத்தை பிரயோகித்தால் அது திரவமாகும்.

6. பரிமானமுள்ள ஒன்றத்தான் உடல் என நாம் கூறுகிறோம். எனவே காற்றுக்கு உடல் உண்டு. இயற்கையின் படைப்புகளெல்லாம் அணுவைக்கொண்டே ஆக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து இயற்கையின் படைப்புகளுக்கும் பரிமானமுண்டு.

அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாக மாட்டான். எனவே அல்லாஹ்வுக்கு உடல், உருவம் இல்லை. புரிஞ்சுக்கோங்கப்பா..!