Monday, March 22, 2010

'அஹிம்சை'யும், 'ஹிம்சை'யும்

உயிர்களைக் கொன்று உண்பதென்பதும், உயிர்களை அவைகளின் சுதந்திரத்திற்கு மாறாக பிடித்து வைத்திருப்பது என்பதும் வேறு-வேறுச் செயல்கள்.

இதில் முந்தையதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்; நமது பரிணாமத்தினைக் கருத்தில் கொள்கையில். அதாவது அது இயற்கை. பல உயிர்கள் வேறு பல உயிர்களை நேரடியாகவோ மறைமுகமாவோ சார்ந்து வாழ்கின்றன.

ஆனால் பிந்தையது ? இது மனிதனுக்கே உரிய ஆணவச் செயலின் வெளிப்பாடு. தன்னிடம் உள்ள அந்த ஆணவமானது தவறானதென அவனுக்கே தெரியுமொன்று அது.

மிருகக் காட்சி சாலைகளில், நமது பொழுதுபோக்கிற்காகவும் நாம் கொடுக்கும் காசிற்காகவும் அடைபட்டுக்கிடக்கும் மிருகங்களுக்காக ஏதேனும் ஒரு அமைப்பு போராடுகிறதா ?

'மிருகவதைக்கு-எதிர்' என்ற பேரில், எத்தனை விதமாக காழ்ப்புணர்சிகளை பல அமைப்புகள் கொட்டுகின்றன. காலங்காலமாக மனிதன் பரிணாமத்துடன் ஒன்றி அவன் அசைவனாக இருப்பதினைக் கடிந்து அவனது உரிமையைப் பரிக்க அணிவகுக்கும் அமைப்புகள்தான் எத்தனை !

மேலும் அவ்வாறு காலங்காலமாக அசைவம் அருந்தாமல் இருப்பவர்கள், தங்களது மரக்கறிப் பண்பாட்டு மேன்மைக்காக, அசைவம் உண்பவர்களிடமிருந்து அவர்களது உரிமையைப் பறிக்க, அல்லது சமுதாயத்தில் அவர்களை அடிமட்டத்திற்கு அழுத்த எத்தனை விதங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன ? கல்வி, வேலைவாய்ப்பு முதல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல் வரை இந்த பாகுபாடுகளை மிகத்தெளிவாகக் காணலாம்.

மரக்கறியை மட்டும் உண்போர்களை vegetarian என்றும், அவ்வாறல்லாதவர்களை non-vegetarian என்றும் அழைப்பதில் கூட தவறு உள்ளது. ஏனெனில் non-vegetarian எனப்படுபவர்கள், மரக்கறியையும் அருந்துவது வழக்கம். அதுவும் மரக்கறியைத்தான் அதிக அளவில் அருந்துவர். இருப்பினும் அவர்களை non-vegetarian என அழைப்பது, ஏதோ அவர்களை அசாதாரணமானவர்கள் என்ற தோரனையில் காட்டுகிறது. ஆனால் இந்திய அளவில் நோக்கும் போதும், உலக அளவில் நோக்கும்போதும், அசைவம் அருந்துவது மிகச் சாதாரணமானதாகவும், மரக்கறிமட்டும் அருந்துவதே அசாதாரணமானதாகவும் உள்ளது. எனவே vegetarian/non-vegetarian எனும் பிரித்தல்-முறையைவிட, vegetarian/normal என்ற பிரித்தல்-முறையே சிறப்பானது.

மரக்கறியை மட்டும் உண்போர்களை, அது அவர்களது பண்பாடு என்ற வகையில் மதிக்கிறேன். ஆனால் "உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது" என்பதற்காக அவர்கள் மரக்கறியினை உண்கிறார்கள் என்பதினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய உணர்வு இருப்பவர்கள் இருந்தாலும், மரக்கறி மட்டும் உண்போரில் பெரும்பான்மையானவர்கள், தனது பண்பாட்டினை ஒட்டி நடப்பதற்காக மட்டுமே அதைக்கடைபிடிக்கின்றனர் என்பதினை நாம் பார்க்கலாம். அவ்வாறு ஹிம்சையைத் தளமாகக் கொண்ட பல கூறுகள் அவர்களது பண்பாடுகளில் இருப்பதினைக் காணலாம்.

இந்தப் பதிவினை எழுத ஒரு புகைப்படம் காரணமாக இருந்தது. அப்புகைப்படம் கீழே உள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஆவார். இவரது சீடர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி, Art of Living எனும் பயிற்ச்சியினைக் கற்றுக் கொள்வது வழக்கம். இவர் ஒரு இந்து சமயப் பெரியவர். மரக்கறியைமட்டும்தான் உண்பவர்.

ஆனால் ஒரு கிளியின் சிறகுகளைவெட்டி தனது தோளில் அமரவைத்து போஸ் கொடுக்கவேண்டிய தேவை அவருக்கு. (படம் உதவி: தமிழ்ஹிந்து தளம்)

1 comment:

Anonymous said...

முந்தையதை ஏற்றுக்கொள்ளலாமாம், பிந்தையதை ஏற்றுக்கொள்ள முடியாதாம்! என்னவொரு லாஜிக்!! பிந்தையது இல்லாமல் முந்தையது எப்படி நிகழும்? மனிதன் என்ன காட்டில் வேடர் வாழ்க்கையா வாழ்கிறான்? சுதந்திரமாகச் சுற்றித் திரியும் விலங்குகளையா வேட்டையாடி உண்கிறான்? அவைகளை அடைத்துப்போட்டல்லவா வளர்த்து பருவம் வந்ததும் வெட்டி உண்கிறான். அவராவது சிறகுகளை மட்டும் வெட்டி தனது தோள்ப்பட்டையில் வைத்துள்ளார். நீங்கள் ஒட்டுமொத்தத்தையும் வெட்டி உண்டு உடலை வளர்த்துக்கொள்கிறீர்கள். வழக்கத்தில் உள்ள சைவம் என்னும் சொல்லைப் பயன்படுத்தக் கூசுவது, ஆனால் எதிர்மறைப் பொருளில் அசைவம் என்பதைத் தாராளமாகப் பயன்படுத்துவதில் இருந்தே உங்கள் மத நிலைப்பாடு புரிகிறது.