Thursday, February 04, 2010

கடவுளின் இருப்பிற்கான ஆதாரம்

ஒரு நல்ல கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதன் சாரம்சத்தினை மொழிபெயர்த்து சற்று விளக்கியுள்ளேன்.

கடவுள் இருப்பதற்கு நான்கு விதமான வாதங்களை வைக்கலாம்.

(கீழே Universe என்பதினை 'அகிலம்' என எழுதாமல், 'உலகம்' என எழுதுகிறேன். இங்கே உலகம் என்பது பூமி என்று மட்டும் இல்லை. அனைத்துமே)

1. உலகில் (Universe) உள்ள விதிகளின் படி அதன் தோற்றத்திற்கான காரணம் ஏதேனும் இருந்தே ஆக வேண்டும். அக்காரண கர்த்தாவே கடவுள்

(குறிப்பு: இதே வாதத்தினை கடவுளின் தோற்றத்திற்கு வைக்கமுடியாது. ஏனெனில், "ஒரு தோற்றத்திற்கு காரணம் தேவை" எனும் கூற்றானது உலகில் நாம் காணும் உண்மை. அவ்வுலகம் தோன்றுவதற்கு முன்பு உள்ள நிலையில் இது சரியான கூற்றா என நமக்குத் தெரியாது. ஏனெனில் நாம் உலகின் ஓர் அங்கம். இது பற்றி எனது முந்தைய பதிவினைப் படிக்கவும். )

2. இவ்வுலகத்தில் எண்ணற்ற அமைப்புகள் உள்ளன. விளைவுகள் நிகழ்கின்றன. உலகம் மிகச் சிக்கலான பெருவமைப்பாக உள்ளது. ஆனால் அவைகளில் ஒர் ஒருங்கு தென்படுகிறது. இது ஒரு மிகச்சிறந்த வடிவமைப்பாளனாலேயே சாத்தியம்.

3. மேலே உள்ள இரண்டு வாதங்களும் ஒரு விதத்தில் ஒத்தவை. விளைவுகளைச் சுட்டிக்காட்டி, காரணத்தினை அனுமானித்தல் அல்லது ஏற்றல் எனும் வகையைச் சார்ந்தது. ஆனால் இப்போ கூறப்போகும் மூன்றாவது வாதம் சற்று வேறுபட்டது. விளைவினைத் துணைக்கு அழைக்காமலேயே, விளைவுடன் காரணம் சேர்ந்து இயங்குகிறது என்பதாகும். இந்த வாதத்தின் மூலம் இப்னு சினா எனும் இஸ்லாமிய அறிவியல் அறிஞர் ஆவார். அவரது "அஷ் ஷிஃபா" எனும் மருத்துவ நூலில் கூறி இருப்பதாக இந்த பக்கம் கூறுகிறது. இப்போது அந்த வாதத்தினைப் பார்ப்போம்:

பொருட்களின் இருப்பு என்பதினை, "இருக்கக் கூடியது" என்றும் "இருக்க சாத்தியமானது" என்றும் பிரிக்கலாம். இது அரிஸ்டாட்டிலின் வகைப்படுத்தல் ஆகும். இந்த வகைப்படுத்தலில், தற்போது இருப்பவைகளையும், எதிர்காலத்தில் இருக்கப்போவைகளையும் உள்ளடக்க முடியும். இப்போது இப்னு சீனாவின் வாதம் இவ்வாறாக செல்கிறது: இருக்கின்றவைகள் இருக்கின்றன. சாத்தியமானவகள் என்பவைகளும் இருக்க முடியும், ஆனால் அதை இருக்கச் செய்ய ஒரு செயல்பாடு தேவை. அந்த செயல்பாடு தற்போது இருப்பவைகளின் மீது செயல்பட்டு, அந்த சாத்தியமானதினை இருக்கச் செய்யும். தற்போது இருப்பவைகளும் அவ்வாறே இருப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த இருப்பிற்கு காராணமான செயல்பாடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏனெனில் புது சாத்தியமான பொருட்கள் இருக்கக்கூடியவைகளாக ஆகுகின்றன. எனவே விளைவுகளை உணரும் நாம் அச்செயல்பாடுகளுடன் அல்லது காரணத்துடன் இணைந்தே வாழ்கிறோம் எனக் கூறுகிறார். இது நேரடியாக கடவுளின் இருப்பு என்பதினை மிகத் தெளிவாக சுட்டாவிட்டாலும், அதனை கீழ்கண்டவாறு உணரலாம். அதாவது பொருட்கள் இருக்கக்கூடியவைகளாக ஆகுகின்றன. ஆனால் அவைகள் காலத்திற்குட்பட்டவைகளாகுகின்றன. ஆனால் செயல்பாட்டுத் தொடரோ காலவரையற்றதாக இருந்து வருகிறது. எனவே செயல்பாட்டின் காரணம், அந்த செயல்பாடுகளினால் இருக்கக்கூடியவைகளாக ஆகும் சாத்தியமானவைகளுக்கு அப்பாற்பட்டது. எனவே அந்த 'அப்பாற்பட்டது' இருக்கிறது.

4. நான்காவது வாதம் "நேர்மை மதிப்புகள்" (moral values) பற்றியது. அடிப்படையான நேர்மை உணர்வுகள் எங்கும் ஒரே விதத்தில் உள்ளன. அது நிறம், மதம், இடம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டுள்ளன. ஒருவனின் மனைவியினை மற்றான் திருடுவது எங்கும் நேர்மையற்ற செயல்தான். ஒருவனின் பொருளை மற்றவன் திருடுவது எங்கும் நேர்மையற்ற செயல் தான். இது இவ்வாறாக இருக்கக் காரணம் கடவுள் மட்டுமே ஆகும். இதில் ஒருவருக்கு இந்த நேர்மைவிதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதா இல்லையா என்பதைப் பொருத்தல்லாமல், இவ்விதிகளால் அவர் ஆளப்படுகிறார் என்பது ஓர் ஆதாரம். இந்த நான்காவது வாதம் பற்றி மேலும், இந்த தளத்தில் படித்துக்கொள்ளலாம்.

4 comments:

கோவி.கண்ணன் said...

//1. உலகில் (Universe) உள்ள விதிகளின் படி அதன் தோற்றத்திற்கான காரணம் ஏதேனும் இருந்தே ஆக வேண்டும். அக்காரண கர்த்தாவே கடவுள்//

கடவுள் இருக்காரா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. எந்த ஒரு பொருளும் தோன்றியது என்கிற கருத்தே தவறு என்று தான் நான் நினைக்கிறேன். மூலப் பொருள் இன்றி எதாவது ஒன்று இருக்கிறதா ? என்று பார்த்தால் ஒன்றின் மூலம் மற்றது மற்றதின் மூலம் வேறொன்று இப்படியா ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும். எதுவுமே இல்லாமல் எதையும் உருவாக முடியாது. எந்த ஒரு காலத்திலாவது புதிதாக ஒன்று ஏற்பட்டது என்று சொல்லும்படி எதுவுமே இல்லை, வடிவம், செயல்பாடு (செயற்கையாக, இயற்கையாக) மாறி இருக்கும் அவ்வளவு தான்.

யுனிவர்ஸ் தோன்றியது என்று உண்மை என்று நம்பினால் அது இருக்கக் கூடிய இடம் தான் முதலில் தோன்றி இருக்கனும் இல்லையா ? இடம் வாங்கிட்டு தானே வீடு கட்டுவிங்க. அந்த இடம் ஏற்கனவே வேறொருவருக்கு சொந்தமானதாக இருக்கும் இல்லையா ? அல்லது அந்த இடம் அங்கே எப்போதும் இருந்தது என்பது உண்மை இல்லையா ?

//2. இவ்வுலகத்தில் எண்ணற்ற அமைப்புகள் உள்ளன. விளைவுகள் நிகழ்கின்றன. உலகம் மிகச் சிக்கலான பெருவமைப்பாக உள்ளது. ஆனால் அவைகளில் ஒர் ஒருங்கு தென்படுகிறது. இது ஒரு மிகச்சிறந்த வடிவமைப்பாளனாலேயே சாத்தியம்.//

ஒழுங்காக ஆக்கிப் பார்ப்பது மனித மனம் தான். மேலிருந்து விழும் நீர் துளி கூட ஒரு வடிவை எடுத்து தான் கீழே விழும். பூமி சுற்றுக் கூட சரியாம 365 நாள் சுற்றவில்லையே, 365 1/4 நாள் அதிலும் வினாடிகள் வேறுபாடும் உண்டு. இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் நிலா பூமிப் பாதையை விட்டு வெளியே சென்றுவிடும் என்கிறார்கள்.

//பொருட்களின் இருப்பு என்பதினை, "இருக்கக் கூடியது" என்றும் "இருக்க சாத்தியமானது" என்றும் பிரிக்கலாம்//

ஒரு பொருள் இருக்கா இல்லையா என்பது நாம் அதன் மீது வைக்கும் கவனத்தைப் பொருத்து, அதன் இருப்பை உறுதி செய்வதே நாம் தான். நாம உறுத் செய்யாவிட்டாலும் இருந்தால் அது இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு காலத்தில் அண்டங்கள் என்று சொல்வது உண்டு, அதை நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கேலக்ஸியாக பிரித்து பார்க்கிறோம், பல மில்லியன் காலெக்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நட்சத்திர கூட்டங்கள் அல்லது மண்டலங்கள் எனப்பட்டன, அறியப்பட்ட அனைத்து உடல் உறுப்புகள் கூட இப்படித்தான். நீங்கள் ஒன்றின் இருப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் அது இருக்கிறது என்று நம்பிகிறீர்கள், உறுதிப்படுத்தாவிடிலும் அது அப்படியே தான் இருக்கும், கொஞ்ச நாள் முன்பு வரை நிலவில் நீர் கிடையாது என்றார்கள். இப்பொழுது இருக்கு என்கிறார்கள். நாம உறுதிப் படுத்திக் கொள்வதைத்தான் உண்மை என்கிறோம். ஆனால் உண்மை, இருப்பு என்பவை மனித மனங்களைக் கடந்தது, நம் மனதுக்கு அறியாவிட்டாலும் இருப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கும். நாம கணக்கு முறை எண்ணியல் கண்டுபிடிக்காத காலத்தில் 5 + 5 = 20 ன்னு இருந்திருக்காதே. நாம கண்டுபிடிக்காவிட்டாலும் ஒன்றின் உண்மை, இருப்பு இருந்தால் அவை அப்படியே தான் இருக்கும். இதில் சாத்தியம் உள்ள இருப்பு, சாத்தியம் இல்லாத இருப்பு ன்னு எதுவுமே இல்லை.

//திருடுவது எங்கும் நேர்மையற்ற செயல்தான். ஒருவனின் பொருளை மற்றவன் திருடுவது எங்கும் நேர்மையற்ற செயல் தான். இது இவ்வாறாக இருக்கக் காரணம் கடவுள் மட்டுமே ஆகும். இதில் ஒருவருக்கு இந்த நேர்மைவிதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதா இல்லையா//

இது மனித சமூகங்களில் இருக்கும் ஒழுங்கு, இது இல்லாத சமூகங்களும் உண்டு. ஆதிவாசிகளின் நிலத்தை அபகரித்து தான் கண்டங்கள் கூட நாகரீக மனிதர்களால் நிறம்பி இருக்கின்றன. விலங்குகள் கூட்டத்தில் நீங்கள் சொல்லும் நேர்மைகளெல்லாம் கிடையாது. நேர்மை என்று நாம் சொல்லுவது நம் மனித சமூகத்தில் சிந்துத்து எடுக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும்.

நான் இந்த பின்னுட்டத்தை கடவுள் மறுப்பாக கட்டமைக்க எழுதவில்லை, கடவுள் இருப்பிற்கான நிருபனங்களைக் கடவுள் தான் செய்யச் சொல்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. :) இருக்கும் ஒன்றிற்கான நிருபனங்கள் தேவையற்றது, இல்லாத ஒன்றிற்கு கட்டமைப்புகள் பயனளிக்காது.

மு மாலிக் said...

கோவி.கண்ணன்,

//யுனிவர்ஸ் தோன்றியது என்று உண்மை என்று நம்பினால் அது இருக்கக் கூடிய இடம் தான் முதலில் தோன்றி இருக்கனும் இல்லையா ? இடம் வாங்கிட்டு தானே வீடு கட்டுவிங்க. அந்த இடம் ஏற்கனவே வேறொருவருக்கு சொந்தமானதாக இருக்கும் இல்லையா ? அல்லது அந்த இடம் அங்கே எப்போதும் இருந்தது என்பது உண்மை இல்லையா ?
//

நீங்கள் யோசிக்கும்போது, இந்த யூனிவர்ஸ் அமைய ஒரு இடம் வேண்டும் என யோசிப்பதில் தவறு நிகழ்கிறது. இடம் எனும் கருத்தே பொருட்களின் தோற்றத்திற்கு பிறகே அர்த்தம் பெறும். இதனை நான் எனது முன்னொரு பதிவில் சுட்டியுள்ளேன். அந்தப் பதிவிற்கான தொடுப்பு இந்த பதிவிலும் காணப்படுகிறது. அதனை சற்று கவனிக்கவும். நாம் யூனிவர்ஸின் அங்கம். எனவே நம்மால் அதற்கு வெளியே சிந்திக்க முடியாது. ஏனெனில் இந்த யூனிவர்ஸ் ஒரு எல்லையற்றது. "எல்லையற்ற யூனிவர்சுக்கு வெளியே" என்ற சிந்தனையில் பொருள் உள்ளதா ? "எல்லையற்ற யூனிவர்ஸ்" எனும்போதே, "அதற்கு முன்பு" எனும் சிந்தனை அடைபடுகிறது.

நிகழ்காலத்தில்... said...

\\பொருட்களின் இருப்பு என்பதினை, "இருக்கக் கூடியது" என்றும் "இருக்க சாத்தியமானது" என்றும் பிரிக்கலாம்.\\

பிரிக்க வேண்டியதே இல்லை, எல்லாமே ஒன்றுதான்..

விதை என்பது இருக்கக்கூடியது, அதில் உள்ளடங்கிய செடி இருக்கச் சாத்தியமானது

அவ்வளவுதான் எல்லாமே ஒன்றுதான்

நன்றி நண்பரே..

மு மாலிக் said...

உண்மைதான் நண்பரே. ஒரு பேச்சு வசதிக்காகத்தான் பிரித்தேன். உங்கள் கருத்திற்கு நன்றி