Tuesday, January 29, 2008

ஐரோப்பாவில் மத மேலாண்மைப் பூசல்கள்

நமது வாழ்வியலை நமக்குள் மட்டும் சுருட்டிக் கொண்டு வாழ்வது இயலாத ஒன்று. சமூகம் என்ற அமைப்பு உருவாக நமது வாழ்வியலின் ஒரு பகுதியைபொதுவில் நீட்டியே ஆகவேண்டும். ஒவ்வொருவரும் "பொதுநலன்" என்று தான் கருதியவற்றை தனது புறவாழ்க்கையாகக் காட்ட முயற்சிக்கிறார். இவ்வாறு அவரவர்கள் காட்டும் புறவாழ்க்கைகளில் ஒத்த கருத்து காண்பவர்கள் அவ்வாறு காணதவர்களிடம் பலப்பரீட்சையினை மேற்கொள்ள முனைகின்றனர்.

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் சில சமீப காலங்களாக சகிப்புத் தன்மையில் தாழ்ந்து காணப்படுகின்றன. உதாரணம்: நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், ஃபிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி.

பெல்ஜியத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேரணி ஒன்று தடையை மீறி நடத்தப் பட்டு ஒரு சிறு ரகளையாகியிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அம்சம் எதுவெனில், அதில் பங்கேற்றவர்கள் அணிந்திருந்த 'டி சட்டை'. அதில் மிக வெளிப்படையாகவே ஒரு பள்ளிவாசலின் படத்தினையும் அச்சடித்து அதன் மீது சிவப்பு வண்ணத்தில் குறுக்குக் கோடிட்டு தனது மதத்துவேசத்தினை வெளிப்படுத்தி இருந்தனர் அப்பேரணியின் அமைப்பாளர்களான "ஃப்ளெமிஷ் நலன்" எனும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

டென்மார்க் பற்றி சொல்லவேண்டியதில்லை. மேற்கண்ட கோணத்திலான "கருத்துச் சுதந்திரம்" அபரிமிதமாக உள்ள நாடு.

ஃபிரான்ஸ் பற்றியும் அனைவரும் படித்திருப்பீர்கள். வேலைவாய்ப்புகளிலும் கல்வியிலும் புறக்கணிக்கப் படுவதோடு அடக்குமுறைகளுக்கும் ஆளான குடியேறிய வர்க்கத்தினர் ஒரு வார கால நீண்ட போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். ஆனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் ஆயிரக்கணக்கான கார்களைக் கொழுத்தி, அதனால் சாதாரண மனிதனையும் சர்கோசி போன்ற நிறவெறிக் கொள்கையை உடையவர்களை ஆதரிக்கும் நிற்பந்தத்திற்குத் தள்ளிவிட்டனர்.

பிரிட்டன். "தொழிற்கட்சி" எனும் இடதுசாரித் தோற்றத்தை பெயரளவில் வெளிப்படுத்தும் இதன் ஆட்சியைப் பற்றி மிக அறிந்திருப்பீர்கள். டோனி பிளேர் ஒருவர் போதுமானவர். ஆனால் இதனைவிட தோரிக்கள் அதிக மதவாதமும் இனவாதமும் உடையவர்கள். இவர்களையும் விட "பிரிட்டிஷ் தேசியக் கட்சி"யினைச் சேர்ந்தவர்கள் உச்சனிலையிலான மதவெறியையும் இனவெறியையும் உடையவர்கள்.

நெதர்லாந்து. அயான் ஹிர்சி அலியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் உள்ளனரா ? சோமாலியாவில் பிறந்து நெதர்லாந்தில் குடியேறியர். பிறகு அவரும் வான்காஃப் என்பவரும் சேர்ந்து இஸ்லாத்திற்கு எதிராக சில குறும்படங்களைத் தயாரித்து புகழ்பெற்று பாராளுமன்ற உறுப்பினரானவர். பெண் குழந்தைகளுக்கு பெண்ணுறுபினை சேதப்படுத்தும் சடங்கு ஆஃப்ரிக்காவிலுள்ள பழங்குடி மக்களிடையே உள்ள ஒன்று. இருப்பினும் அதனையும் இஸ்லாத்தினையும் தொடர்பு படுத்தி நெதர்லாந்தில் புகழின் உச்சியை அடைந்தார்.
தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் குற்றம் சாட்டியவர் இவர்.

ஆனால் சமீபகாலத்தில் இவர் செய்த வண்டவாள‌ங்கள் தண்டவாளம் ஏறின.

சோமாலியாவிலிருந்து அவர் நெதர்லாந்த்திற்கு குடியேற விண்ணப்பித்த மனுவில் அவர் காட்டிய காரணம் சோமாலியாவில் நிகழும் உள்நாட்டுப் போர். ஆனால் உண்மை என்னவெனில் இந்த அம்மையார் சோமாலியாவில் உள்நாட்டுப் போர் துவங்கும் முன்பே கென்யாவிற்கு குடியேறியவர். அவர் விண்ணப்பிக்கும் போது இத்தகவலை வெளிப்படுத்த மறைத்துவிட்டார். மேலும் இவரது உண்மையான பெயர் அயான் ஹிர்சி மாகன் என்பதாகும். அதையும் அம்மையார் மறைத்துவிட்டார்.

இவைகள் வெளியில் தெரியவந்ததும் அம்மையாருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தினை திரும்பப் பெற்றுகொள்வது பற்றி நெதர்லாந்து விவாதிக்க ஆரம்பித்தது.

உடனே அமெரிக்க அண்ணன் அம்மையாரின் துணைக்கு வந்தார். "அமெரிக்கன் எண்டர்பிரைஸ் கழகம்" எனும் திட்டம் தீட்டுபவர்களின் கழகத்தில் வேலைக்கிடைத்தது. தற்போது அம்மையார் அமெரிக்க தொலைக்காட்சிகளில் இஸ்லாத்தினைத் தூற்றுவதோடல்லாமல் அவ்வப் போது இஸ்ரேலையும் புகழ்ந்து வருகிறார்.

ஆனால் நெதர்லாந்தில் ஓய்ந்தபாடில்லை. மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் குர்ஆனைத்தாக்கி ஒரு திரைப்படம் தயாரித்துள்ளதோடு அதனை ஒளிபரப்பு செய்ய அனுமதியும் பெற்றுவிட்டார். இந்த முழு பதிவுமே இந்த செய்தியினை அறிமுகப்படுத்தான். இங்கே அழுத்தவும்

4 comments:

G.Ragavan said...

மத்த நாடுகளைப் பத்தி எனக்குத் தெரியலை. ஆனால் நெதர்லாந்து பத்தி நீங்க சொல்லியிருக்கீங்க. நானும் இங்க இருக்குறதால அதப் பத்தித் தெரிஞ்சதச் சொல்றேன்.

// இவைகள் வெளியில் தெரியவந்ததும் அம்மையாருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தினை திரும்பப் பெற்றுகொள்வது பற்றி நெதர்லாந்து விவாதிக்க ஆரம்பித்தது. //

விவரம் தெரிஞ்சதும் அவங்க எடுக்குற நடவடிக்கை இதுதான்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாம் பத்தி ஏதோ தப்பாச் சொல்லீட்டாரு. உடனடியா அரசாங்கம் அது தனிப்பட்ட அவருடைய எண்ணம். அது அரசாங்கத்தின் எண்ணமல்ல. நெதர்லாந்து எல்லா மதங்களையும் (குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் சப்பைக்கட்டோடு ஆதரிக்கலை) மதிக்கிறதுன்னு அறிக்கை விட்டாங்க.

// ஆனால் நெதர்லாந்தில் ஓய்ந்தபாடில்லை. மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் குர்ஆனைத்தாக்கி ஒரு திரைப்படம் தயாரித்துள்ளதோடு அதனை ஒளிபரப்பு செய்ய அனுமதியும் பெற்றுவிட்டார். இந்த முழு பதிவுமே இந்த செய்தியினை அறிமுகப்படுத்தான். //

அதிகப்படியா எழுதீருக்கீங்க. நெதர்லாந்தோட சட்டதிட்டம் தெரியாம. இங்க கருத்துச் சுதந்திரம் உண்டு. ஒருவர் இதுதான் தன்னுடைய கருத்து என்று சொல்லும் உரிமை இருக்கிறது. அது இஸ்லாம் மேல மட்டுமில்ல...கிருஸ்துவம் மேல இருந்தாலும் அதுக்கு அனுமதி உண்டு. அது தனிப்பட்ட நபரோட கருத்து என்கிற வகையில்தான் அந்தப் படத்துக்கும் அனுமதி. அது அரசாங்கத்தின் கருத்து கிடையாது. அதே நேரத்துல அந்தப் படத்த வெச்சி இங்க அரசியல் செய்ய முடியாது. நெதர்லாந்து மக்கள் இந்தியர்களைப் போலக் கிடையாது.

இன்னைக்கு ஆபீஸ் மீட்டிங்குல ஒருத்தர் தும்முனாரு. இன்னொருத்தரு டச்சுல என்னவோ சொன்னாரு. என்ன "god bless you?" சொன்னீங்களான்னு கேட்டேன். "இல்ல இது நெதர்லாந்து. இங்க god எல்லாம் சொல்றதில்லை. good health அப்படீங்குறத டச்சுல சொன்னாரு" அப்படீன்னு சொன்னாங்க. கடவுளுக்கு அவ்வளவுதான் மதிப்பு. இஸ்லாமுக்கு எதிரா நெதர்லாந்து செயல்படுதுன்னு சொல்றது சூப்பர் ஜோக்.

மு மாலிக் said...

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி ராகவன்.

ஐரொப்பிய கருத்து சுதந்திரத்தில் சில மேன்படுத்தல்கள் தேவை.

ஒருவர் கூறும் கருத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அவ்வாறு கூறியவர், " நான் கூறியது சரியோ தவறோ. ஆனால் நான் கூறியது என் சுதந்த்திரத்திற்கு உட்பட்டது " என்ற அள‌வில் வாதிட்டு வெளியில் வந்துவிடும் நிலை உள்ளது. அது மாறவேண்டும். அந்த கருத்துப் பற்றிய விவாதத்தினை நீதிமன்றம் அனுமதித்து, அவர் கூறிய கருத்து நியாமானதா என்பதை ஆய்ந்து, அவ்வாறு நியாமானதில்லை எனும் நிலையில் அவருக்கு தண்டனைகள் வழங்கும் அளவிற்கு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். சுருக்கமாக "பொறுப்பற்ற கருத்து சுதந்திரம்" என்ற நிலைமாறி "கருத்து சுதந்திரம்" எனும் நிலை ஏற்படவேண்டும்.

ஐரோப்பிய கருத்து சுதந்த்திரத்தில், ஒரு நிறத்திற்கு எதிராக கருத்து கூற அனுமதியில்லை என்பதை கவனிக்க. அது ஏன் ? நான் காட்டிய செய்தியினைப் படித்தீர்களானால் ஒரு மதத்திற்கு எதிராகவும், வழிபாட்டு உரிமையை மறுத்தும் கருத்துக் கூற சுதந்திரம் உண்டு என்பதினைக் கவனிக்க.

உங்கள் அலுவலக சம்பவம் அருமை. ஆனால் அது அவர் நாத்தீகர் என்றுதான் காட்டுகிறது. சுதந்திரத்தினை மதிப்பவர் என்று காட்டவில்லை என்பதை கவனிக்க.

G.Ragavan said...

// மு மாலிக் said...
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி ராகவன்.

ஐரொப்பிய கருத்து சுதந்திரத்தில் சில மேன்படுத்தல்கள் தேவை. //

:) மேம்படுத்துதல் எல்லா எடத்துலயும் தேவைப்படுதுங்க. ஐரோப்பாவில் மட்டுமில்லை.

// ஒருவர் கூறும் கருத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அவ்வாறு கூறியவர், " நான் கூறியது சரியோ தவறோ. ஆனால் நான் கூறியது என் சுதந்த்திரத்திற்கு உட்பட்டது " என்ற அள‌வில் வாதிட்டு வெளியில் வந்துவிடும் நிலை உள்ளது. அது மாறவேண்டும். அந்த கருத்துப் பற்றிய விவாதத்தினை நீதிமன்றம் அனுமதித்து, அவர் கூறிய கருத்து நியாமானதா என்பதை ஆய்ந்து, அவ்வாறு நியாமானதில்லை எனும் நிலையில் அவருக்கு தண்டனைகள் வழங்கும் அளவிற்கு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். சுருக்கமாக "பொறுப்பற்ற கருத்து சுதந்திரம்" என்ற நிலைமாறி "கருத்து சுதந்திரம்" எனும் நிலை ஏற்படவேண்டும். //

பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரம்னு நீங்க சொல்றீங்க. ஏன்னா அது உங்களையும் தப்புன்னு சொல்ல வாய்ப்பிருக்குறதால. நியாயம் என்பது எல்லைகளுக்குள்ளேயே மாறுபடுகின்ற விஷயம். நீங்கள் நியாயம் என்று சொல்வதை நான் கட்டாயம் ஏற்க வேண்டும் என்று நினைத்தால் அதுகூட நியாயமில்லைதான்.

// ஐரோப்பிய கருத்து சுதந்த்திரத்தில், ஒரு நிறத்திற்கு எதிராக கருத்து கூற அனுமதியில்லை என்பதை கவனிக்க. அது ஏன் ? நான் காட்டிய செய்தியினைப் படித்தீர்களானால் ஒரு மதத்திற்கு எதிராகவும், வழிபாட்டு உரிமையை மறுத்தும் கருத்துக் கூற சுதந்திரம் உண்டு என்பதினைக் கவனிக்க. //

நிறம்...இது மதம், சாதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு தனிமனிதனைத் தாழ்த்தும். கருப்பன் என்று இழந்தால் அது எல்லா மதத்திலும் மொழியிலும் இனத்திலும் இருக்கின்றவர்களைத் தாழ்த்தும்.

மதத்தை விட தனிமனிதன் உயர்ந்தவன். எனக்கு இந்த விதிமுறை சிறப்பானதாகவே படுகிறது.

அட... ஏதோ இஸ்லாமை மட்டும் அப்படியெல்லாம் எதிர்த்துச் சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தவறு எனப்பட்டு கிருத்துவ மதத்தையும் குற்றம் சொல்லியிருக்கிறார்கள். உங்களைச் சொல்வது மட்டும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவ்வளவே நீங்கள் அறிந்தது.

// உங்கள் அலுவலக சம்பவம் அருமை. ஆனால் அது அவர் நாத்தீகர் என்றுதான் காட்டுகிறது. சுதந்திரத்தினை மதிப்பவர் என்று காட்டவில்லை என்பதை கவனிக்க. //

அது சுதந்திரத்தைக் குறிப்பதற்காகச் சொல்லவில்லை. மதத்தை விட மனிதனை நினைப்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகச் சொன்னது.

மு மாலிக் said...

ராகவன், ஒருவர் சார்ந்துள்ள கொள்கைகளைவிட மனிதன் தான் முக்கியம் என்பது அருமை. நீங்களும் உரிமைக்காக பேசுபவர் தான் என்பதை உணரமுடிகிறது. மகிழ்ச்சி.

இருப்பினும் சிறு வேறுபாடுகள்:

" நீ " என்று அழைத்து தனி நபர் சார்ந்த தாக்குதலைத் தொடுக்காதவரையில் மதத்தினரை விளித்து "அவர்கள் அனைவரும் கேடிகள், நாட்டை விட்டு வெளியேற்றத்தக்கவர்கள், அவர்களால் நாட்டுக்கு ஆபத்து" என்று தாக்கினால் ஒன்றும் பிரச்சனையில்லை என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்க முடியாது (இது போன்ற தாகுதல்கள் தான் நெதர்லாந்தில் நிகழ்கிறது என்பதை கவனிக்க ) .

(நீங்கள் கூறியது: ) "நிறம்...இது மதம், சாதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு தனிமனிதனைத் தாழ்த்தும். கருப்பன் என்று இழந்தால் அது எல்லா மதத்திலும் மொழியிலும் இனத்திலும் இருக்கின்றவர்களைத் தாழ்த்தும்."

உண்மைதான். ஆனால் ஒருமதத்தினரைத் தாக்கும்போது பல நிறத்தவ்ர்கள் மொழியுடையவர்கள் தாக்கப்படுவதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்று கூறுகின்றீர்கள் போலும்.

ஒன்று தெரியப்படுத்துகிறேன் ராகவன். ஒரு நிறம், மொழி அல்லது மதம் என்று அழைக்கத்தக்க குழுவினரை தூற்றி தனது கருத்தினைக் கூறி, பின்பு தனது கருத்து பற்றிய நிறுவலுக்கு அவர் தயாராகத வரையில் அவர் ஒரு நிறவெறி, மொழிவெறி அல்லது மதவெறி பிடித்தவர்தான். இத்தகைய இனம் சார்ந்த வெறிகள் அமைதிக்கு ஊறுவிளைத்தாலும் இவைகளில் ஒன்று இரண்டை நாம் அனுமதிக்கலாம் என்பது தவறு.

உங்கள் மற்றொரு கூற்று: "பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரம்னு நீங்க சொல்றீங்க. ஏன்னா அது உங்களையும் தப்புன்னு சொல்ல வாய்ப்பிருக்குறதால. நியாயம் என்பது எல்லைகளுக்குள்ளேயே மாறுபடுகின்ற விஷயம். நீங்கள் நியாயம் என்று சொல்வதை நான் கட்டாயம் ஏற்க வேண்டும் என்று நினைத்தால் அதுகூட நியாயமில்லைதான்."

அது டிப்ளமாட்டிக்கான பதில் :) சரி, வேறுபட்டே இருக்கட்டும். நீதிபதியின் நியாயம் என்னவுமாகவே இருக்கட்டும். அவர்கள் எப்படியுமோ தீர்ப்பு வழங்கட்டும். ஆனால் வழக்கும் வழக்காடுதல்களும், தீர்ப்பும் பதிவேடுகளிலும் ஊடகங்களிலும் பதியப்படும். நீதிமன்றதீர்ப்பினைப் பற்றி தனது தீர்ப்பினை மக்கள் தங்கள் மனதில் ஏற்பாடு செய்ய ஏதுவாகும். இதனால் தான் நான் அவ்வாறு கூறினேன். உங்கள் வாதத்தினை நாம் பொதுவாக சுருக்கக் கூறினால், "எவனும் யோக்கியனில்லை; ஒவ்வொருத்தனும் ஒவ்வொருமாதிரி நீதி குடுப்பான்; அதனால நீ நீதியெல்லாம் எதிர்பாக்காதே" என்று சில வரிகளில் சுருங்கு கின்றது.