Wednesday, December 19, 2007

வகாபிய மன்னிப்பு

இந்த செய்தியினை விவாதிப்பதை கைவிட அவ்வளவாக மனம் இடம் கொடுக்கவில்லை. ஏற்கனவே இது பற்றி ஒரு பதிவு இட்டுள்ளேன். இது விஷயமாக மேலும் நிகழ்ந்துள்ள சம்பவம் பற்றிய விமர்சனம் இப்பதிவு.

அந்த ஷியா பிரிவினைச் சேர்ந்த அப்பெண்ணிற்கு "மன்னிப்பு" வழங்கியுள்ளாராம் அந்த சவுதி நாட்டு குண்டு ராஜா (இங்கு 'குண்டு' எனும் வார்த்தை 'சட்டத்திற்கு புரம்பான' அல்லது 'சமூக விரோதி' எனும் பொருளில் பயன்படுத்தப் படுகிறது).

இச் செய்தியினை வெளியிடும்போது, பெரும்பாலும் நடுனிலையில் உள்ள செய்தி நிறுவனங்கள் எவ்வாறு இச் செய்திக்கு தலைப்பிட்டன என பார்ப்போம்.

அசோசியேட்டட் பிரஸ்ஸின் தலைப்பு:

1. சவுதி மன்னர் கற்பழிக்கப் பட்ட பெண்ணை மன்னித்தார்

சவுதியின் கோரத்தை ஒரே வரியில் 'நச்'சென்று பிடித்துள்ளது இந்த தலைப்புச் செய்தி. இதில் மேற்கோள் குறிகள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தொக்கி நிற்கும் செய்தி: சவுதி மன்னர் மீதான கேலி, கிண்டல். இது எனக்கு மிகப் பிடித்தமான தலைப்பு.

அடுத்து பிபிசியின் தலைப்பு:

2. சவுதி மன்னர் "கற்பழிக்கப் பட்ட பெண்ணை மன்னித்தார்"

இதில் பிபிசி 'கொஞ்சம் உஷாராக இருக்கலாமே' என்று முயன்றுள்ளது. "கற்பழிக்கப்பட்ட பெண்ணை சவுதி மன்னர் மன்னித்ததாகக் கூறப்படுகிறது" எனும் தொனியில் இத்தலைப்பு அமைந்துள்ளது.

அடுத்து அல்ஜசீராவின் தலைப்பு:

3. சவுதி மன்னர் கற்பழிக்கப் பட்ட பெண்ணை "மன்னித்தார்"
"கற்பழிக்கப் பட்ட பெண்ணை மன்னிப்பதா ? மன்னிப்பது எனும் வார்த்தைக்குப் பொருள்தான் என்ன ? அவளுக்கு நியாயமல்லவா வழங்கப் பட வேண்டும்" எனும் தொனியில் உள்ளது. இதுவும் அருமைதான்.

வகாபிய தேசத்தில் வகாபிசத்திற்கு செவி சாய்க்காதவராக இருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இச் சம்பவம்.

அப்பெண் உரிமை மீறலுக்கு இலக்கான போது, அவள் 'காத்திஃப்' எனும் ஷியாபிரிவு மக்கள் வாழும் பகுதியைச் சேர்ந்த காரண‌த்திற்காக, அவளின் அவல நிலையில் வகாபிய நீதிபதிகள் மகிழ்வு கண்டுள்ளது தெரியவருகிறது. அவள் தொடுத்த வழக்கினை ஏள‌னத்துடன் அவர்கள் நடத்தியுள்ளது தெரியவருகிறது. மேலும் அவளை ஏளனம் செய்வதற்காக, தொடுக்கப் படாத வழக்கினை அவர்கள் உருவாக்கி அவளுக்கு 80 கசையடிகளையும் 6 மாத சிறைத்தண்டனையையும் வழங்கினர் அந்த மகாகணம் பொருந்திய வகாபிய நீதிவான்கள். "கூட்டுக் கற்பழிப்பு" எனும் மிருகங்களில் கூட காணமுடியாத வன்முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் வழக்குத் தொடர்கின்றனர். செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையோ 5 மாதம் முதல் இரண்டு வருடம் வரை சிறைத்தண்டனைகள். ஆனால் வகாபிய நீதிபகள் கண்டெடுத்த‌ தொடுக்கப் படாத வழக்கு, "பாதிக்கப் பட்ட ஆணும் பெண்ணும், சம்பவம் நடப்பதற்கு முன்பு தனித்து இருந்தனர்" என்பதாகும். தகாத உறவு வைத்திருந்தனரா இல்லையா என்பதே தெரியா நிலை. எது எப்படியோ ஆனால் பாதிக்கப் பட்ட இருவரும் ஒருவருக்கு ஒருவர் யார் என ஆராயும் போக்கே அவர்களது மனதில் உள்ள வெறித்தனத்தினையும், அப்பெண் ஷியா பிரிவினைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அந்த நீதிபதிகள் இந்த கோணத்தில் விசாரிக்க ஆர்வம் கொண்டதையும் நாம் அறிய முடிகிறது.

மிக எளிதாக கூற வேண்டுமானால்: நான் வகாபிய தேசத்தில் வாழ்கின்றேன் என வைத்துக்கொள்வோம். எனது வீட்டில் உள்ள பொருட்கள் களவு போய்விட்டது என வைத்துக் கொள்வோம். இது பற்றி நான் முறையிட்டால், நான் வீடு கட்டியது பற்றி விசாரிக்கப் படுவேன். அல்லது, களவு நடந்த சமயத்திலோ அல்லது அதற்கு முன்போ நான் ஏதாவது தப்பு தண்டாக்கள் செய்து கொண்டிருந்தேனா என விசாரிக்கப் படுவேன் !!!!

அளிக்கப்பட்ட தண்டனையினை எதிர்த்து அப்பெண் முறையிட்ட காரணத்திற்காக, அவளுக்கு அளிக்கப் படவேண்டிய கசையடிகளின் எண்ணிக்கை 200 என அதிகரிக்கப் பட்டது. அவளது வழக்குரைஞரின் வழக்காடும் அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

இதனை நான் கேவலம் என கூறமுடியாது. கேவலம் கேவலமாக உள்ளது என்றுதான் கூறமுடியும். வகாபிசத்தைப் பற்றி நாம் வேறு என்ன சொல்வது. உரிமை மீறல், இனவாதம் ஆகியவைகள் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சிகள் நீடிக்க முடியாது. தனது இத்தகைய ஆட்சி நீட்டிப்பிற்காக, இவைகளை உள்ளடக்கிய கருத்தாக்கம்தான் அங்கு கையாளப் படுகிறது. இதில் ஒன்றும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது போன்ற விஷயத்தில் சீனா எவ்வாறு செயல் படுகிறது என்பது பற்றி அறிய இங்கே அழுத்தவும். வகாபிய நீதிபதியும் இவ்வாறுதான் தண்டனைகளைக் கொடுப்பார், ஆனால் குற்றவாளி சீனாகாரராக இருந்தால்.

பாலஸ்தீனியர்கள் ஒவ்வொரு நாட்களும் அல்லது ஒவ்வொரு இரு நாட்களும் கொல்லப்படுகின்றனர். வகாபிய தேசமோ இஸ்ரேலுக்கு வக்காளத்து வாங்குகிறது. 'அன்னாபோலி' எனும் அமெரிக்க நகரில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த‌ கிழக்கு ஜெரூசலத்தினையும் இஸ்ரேலுக்கு தாரை வார்க்க ஒப்புக் கொண்டுள்ளது.

வாழ்க அவர்களது ஆட்சி நீட்டிப்பு வித்தைகள். வாழ்க அவர்களது மன்னிப்புகளும்.

4 comments:

உறையூர்காரன் said...

நேர்மையான பார்வை.

ஆனால் இந்த பதிவை பயன்படுத்தி காவிக் காமாலை நோய் வந்தவர்கள் ஜல்லியடித்துவிட போகிறார்கள்.

மு மாலிக் said...

உறையூர்காரன், நீங்கள் கூறுவது உண்மைதான். இதற்கு முன்பு நான் எழுதிய பதிவுகளில் 'நான் சங் கூட்டத்திற்கு எதிரானவன். அவர்கள் இதற்கு சுட்ட வேண்டாம்" என வேண்டுகோள் எழுதியிருப்பேன்.

ஆனால் இப்போ என் யுத்தியை மாற்றிவிட்டேன். சங் கூட்டத்திற்கு பிடிக்காத தொனியிலும் என் கட்டுரை அமைந்திருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

உதாரணத்திற்கு, இப்பதிவில் இஸ்ரேலினை குறைகூறியிருப்பதை சங் கூட்டத்தினர் வரவேற்கமாட்டார்கள்.

மேலும்,

நான் விமர்சிக்கும் செய்திகள் வகாபிசத்தின் முகமூடிகளையே வெளிப்படுத்தும். ஆனால் இச்செய்திகளைக் கொண்டு இஸ்லாத்தின் மீது புழுதி வாற அவர்கள் பெரும்பாலும் முனைவார்களாதலால், எனது நோக்கினை வரவேற்க மாட்டார்கள். எனது பதிவுகளில், "வகாபிசம்தான் கோரமுகமுடையது, இஸ்லாமல்ல" எனும் கருத்தாக்கம் தொக்கி நிற்பதை நீங்கள் பார்க்கலாம். சங் கூட்டத்தினர் இதை வரவேற்க மாட்டார்கள். எனவே நானும் எனது பதிவுகளில் அவர்களிடத்தில் வைக்கும் வேண்டுகோளை கைவிட்டுவிட்டேன்.

அவ்வாறே அவர்கள் தங்கள் தாளத்திற்கு பயன்படுத்திக்கொண்டாலும், நான் கூறவேண்டியதை கூறாமல் இருந்தால், எனக்கு எண்ணம் வேறு எதிலும் செல்வதில்லை. முதலில் சொல்லிவிட்டு தான் மறுவேலை :)

எண்ணத்தினை வெளிப்படுத்தினால் தான் சிந்தனைப் பரிமாற்றம் சாத்தியம்.

நன்றி

Anonymous said...

//செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையோ 5 மாதம் முதல் இரண்டு வருடம் வரை சிறைத்தண்டனைகள். //

செய்தியை திரிக்கிரீர்கள்/மறைக்கிரீர்கள்...மேல் முறையீடு செய்தப்பிறகு அவர்களுக்கு தண்டனை இருமடங்காக உயர்த்தப்பட்டது...

தூற்றுவதற்கு முன் செய்திகளை முழுமையாக படியுங்கள்..

மு மாலிக் said...

உண்மைதான்,

முதலில் வழங்கப்பட்ட தண்டனனை இது பிறகு அத்தண்டனை உயர்த்தப் பட்டுள்ளது, 2 வருடங்களிலிருந்து 5 வருடங்கள் வரை. எந்த இடத்தில் நான் அந்த அளவிற்கான தண்டனையினைக் கூறுகிறேனோ அந்த இடத்தில் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தண்டனையினை "80 கசை அடிகள்" என்று முன்பு வழங்கப்பட்டத் தண்டையினைத் தான் கூறியுள்ளேன். அனானி, எனது நோக்கம் செய்தியினை முழுவதுமாக வரிக்கு வரி மொழி பெயர்த்துத் தருவது அல்ல. செய்திக்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டன. நான் எதைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறேனோ அதற்காகத் தான் இப்பதிவு. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது போதுமானதாக உங்களுக்கு தோன்றுகிறது போலும்.

இது உங்களுக்கு திரிப்பதாக தெரிகிறது. என்ன செய்வது. உங்களுக்கு சாதகமாக வேறு திரிச்சிட்டேனே :) முதலில் வழங்கப்பட்ட தண்டணை 90 கசையடிகள். அதனை உங்களுக்கு சாதகமாக 80 கசையடிகள் என்று கூறிவிட்டதையும் கவனிக்க.