Friday, November 30, 2007

தினத்தந்தியை என்ன செய்யலாம் ?

தினத்தந்தியை என்ன செய்யலாம் ?

இன்று தினத்தந்தியைப் படிக்கும் போது அதன் மீது எனக்கு எப்போதும் இருந்துவந்த வெறுப்பு சற்று அதிகமானது.

செய்தி என்பது வேறு; தனது எண்ணங்களைப் புனைந்து கதையாக எழுதுவது என்பது வேறு.

தினத்தந்தி ஒவ்வொரு நாளும் கதைகளையே எழுதிவருகிறது. செய்திகளில் சம்பந்தப்பட்டவர் தனது மனதில் என்ன நினைக்கிறார் என்பதுகூட தினத்தந்தி நிருபருக்கு அவர் சொல்லாமலேயே தெரிந்துவிடுகிறது என்பதுதான் அச்'செய்தி'களைப் படிக்கும்போது ஆச்சரியம்.

இன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மணமகன் கடைசி நேரத்தில் திருமணம் செய்து கொள்ளாமல், திருமண மேடைக்கே வராமல் எங்கோ சென்றுவிட்டார் என்பதுதான் செய்தி. இச்செய்தி தினத்தந்திக்கு முக்கியமானதாகவே இருக்கட்டும். ஒரு அரை பக்கத்தினை இச்செய்திக்கு ஒதுக்கியதாகவே இருக்கட்டும். ஆனால் உணர்வுபூர்வமாக எழுதியது ஏன் ? உணர்வு என்பது வாசகர்களுக்கு தானாக வரவேண்டும். இச்செய்தியினை எழுதியவர் தனது எழுத்துகளின் மூலம் தனது உணர்வினை வாசகர்களும் அடையவேண்டும் என வார்த்தைகளையும் வர்ணனைகளையும் பயன்படுத்தியது தர்மமா ?

"பெண்ணின் தந்தையின் நம்பிக்கைத் தகர்ந்தது" போன்ற வாக்கியங்கள். அவரோட நம்பிக்கைத் தகர்ந்துவிட்டது என அவர் இவரிடம் சொன்னாரா ? அவர் நம்பிக்கையை இழந்து இருக்கத்தான் கூடும் எனினும் இவ்வரியினை எழுத வேண்டும் என்று எப்படித் தோன்றியது.

அத்தோடு இல்லாமல் கவலையாக அமர்ந்திருக்கும் பெண்ணின் தந்தையின் புகைப்படம் வேறு. "கவலையுடன் அமர்ந்திருக்கும் பெண்ணின் தந்தை" என்று அதற்கு ஒரு படவிளக்க வரி வேறு (Figure Caption). அவர் அங்கு அவ்வாறு அமர்ந்திருந்திப்பது அவரது தனிப்பட்ட வாழ்க்கைச் சார்ந்த விஷயம். அதிலும் காசு பார்க்கலாம் என தினத்தந்தி முதலீடு செய்திருப்பது வெக்கக்கேடு.

அவ்வப்போது தினத்தந்தியில் வெளிவரும் புகைப்படங்கள் அறுவருப்பினை ஏற்படுத்தும். குடும்பமாக தூக்கில் தொங்குபவர்களின் புகைப்படங்கள், அரைகுறையாக அகற்றப்பட்ட கருப்பிண்டங்களின் புகைப்படங்கள் என அனைத்தையும் முதலீடாக்குகிறது.

யாராவது ஒரு பெண், யார் கூடவாவது ஊரைவிட்டு வெளியேறிவிட்டால், அது பற்றி தினத்தந்தியில் வெளிவரும் 'செய்திகள்', மஞ்சள் பத்திரிக்கைகளின் கதைகளைக்கூடத் தோற்கடித்துவிடும்.

லியாகத் அலி பற்றிய தினத்தந்தியின் கவரேஜ் எப்படி இருந்திருக்குமோ ? நான் படிக்கவில்லை.

நான் தினத்தந்தி வாங்குவது கிடையாது. நான் தினமும் காலை-உணவு அருந்தும் மேசையில் இந்தக் கருமத்தினை வாங்கி போட்டுவிடுகிறார்கள்.

4 comments:

Mic Mohan said...

பின்னுகிறீர்களே.. எப்படிங்க.. இது உங்கள் கருத்து மட்டும் அல்ல. என்னைப்போல பலரது கருத்தும்தான்.

Kamal said...

இது ஏதோ தினத்தந்தி மட்டும் செய்யும் தவறு இல்லை, அனைத்து பத்திரிகைகளுமே இதுபோல் செய்கிறது...தினமலரிலும் கூட நீங்கள் குறிப்பிட்ட வாசகங்களுடன் தான் செய்தி வந்துள்ளது(படம் உட்பட). நக்கீரன் பண்ணாத தவறா ஒரு சின்ன செய்தியை சுவரொட்டியில் ஒட்டி அதை அட்டைப்படத்தில் வேறு போட்டு அப்பப்பா... அதில் பாதி செய்தி அவர்களாகவே புனைந்ததாக இருக்கும்..
வக்கிரத்தை தூண்டி காசு பார்க்கும் பொறுக்கிகள்...

Kamal said...

இது ஏதோ தினத்தந்தி மட்டும் செய்யும் தவறு இல்லை, அனைத்து பத்திரிகைகளுமே இதுபோல் செய்கிறது...தினமலரிலும் கூட நீங்கள் குறிப்பிட்ட வாசகங்களுடன் தான் செய்தி வந்துள்ளது(படம் உட்பட). நக்கீரன் பண்ணாத தவறா ஒரு சின்ன செய்தியை சுவரொட்டியில் ஒட்டி அதை அட்டைப்படத்தில் வேறு போட்டு அப்பப்பா... அதில் பாதி செய்தி அவர்களாகவே புனைந்ததாக இருக்கும்..
வக்கிரத்தை தூண்டி காசு பார்க்கும் பொறுக்கிகள்...

சீனு said...

இது தினத்தந்தி மட்டுமே செய்யும் வேலை இல்லை. ஒரு நாள் சேனல் மாற்றும் பொழுது CNN-IBN-ல் ஒரு அரங்கத்தில் தீவிபத்து ஏற்பட்டிருப்பது போல காட்டினார்கள். நானும் என்னடாவென்று பார்த்தால் தான் தெரிகிறது, 10 வருடங்களுக்கு முன் தில்லி உப்ஹார் தியேட்டரில் ஏற்பட்ட தீவிபத்து. அதை ஏன் இப்பொழுது காட்டுகிறார்கள் என்றால், அன்று அந்த தீவிபத்தின் நீதிமன்ற தீர்ப்பு நாள். அதுக்காக டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்ட 10 வருடங்களுக்கு முன் நடந்தவற்றின் காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள்...

இதே போல சஞ்சய் தத், கோவை குண்டு வெடிப்பு தீர்ப்பின் போதும் இதே நிலை தான்...எங்க போய் சொல்ல?