Tuesday, November 06, 2007

தொடங்கிவிட்ட‌ முஷரஃபின் வீழ்ச்சி

முஷரஃப் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்து தனது நலனுக்காக பல விதங்களிலும் அவர் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

தன்னை ஜனநாயகத்தின் பிரதிநிதியாகப் பிரகடனப்படுத்தும் அமெரிக்கா, உலகில் ஜனநாயகம் இருந்த நாடுகளில் கூட தலையிட்டு அதன் வீழ்ச்சியை விளைவித்தது. உலகில் ஜனநாயகம் இல்லாத பல நாடுகளிடம் நட்புக்கொண்டு அவ்வரசுகளின் இறையாண்மையை அங்கீகரித்தது. அதற்குக் கைமாறாக அந்த நாடுகள் அமெரிக்காவின் நோக்கத்திற்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு அவைகளின் முடியாட்சி மன்னர்களோ, சர்வாதிகாரிகளோ அல்லது வாக்குகளைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தவர்களோ, அல்லது எதிர்கட்சிகளை தடைசெய்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர்களோ அந்நாடுகளை ஆட்சி செய்து வருகின்றனர்.

முஷரஃப் இத்தகையவர்களில் ஒருவர்.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா விமான‌ தாக்குதல் தொடர தளம் வழங்கினார். அமெரிக்கப் போர் தாலிபான்கள் எனும் கேடுகெட்ட வகாபிய மதவாதிகளுக்கு எதிரானதுதான் எனினும் அப்பாவி குடிமக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

இதனால் மதவாதிகளின் கோபத்திலிருந்து தப்பிக்க முஷரஃப் உள் நாட்டில் மதவாதிகளுக்கு அரசியல் ரீதியான ஆதரவுகளை வழங்கினார்.

இவ்வாறு இருக்க ஆஃப்கானிஸ்தானத்தின் சாதாரணக் குடிமக்கள் கூட தாலிபனுக்கு ஆதரவு அளித்ததுடன், அவர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் குழுமி திட்டங்கள் தீட்டி வந்தனர். பாக்கிஸ்தான் பகுதியில் இருந்த அவர்களின் மீது அமெரிக்கா தாக்குதல்கள் தொடுக்கக் கூட நேர்ந்தும் முஷரஃபின் அமெரிக்க ஆதரவு தொடர்ந்தது. சும்மா பேருக்காக முஷரஃப் அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டாலும் அதனுடனான நட்பு பலமாகவே தொடர்ந்தது. சமீபத்தில் காலித் ஷேக் முகம்மத் எனும் அல்காயிதா தீவிரவாதியை கைது செய்யவேறு முஷரஃப் காரணமாக இருந்தார். இது, அவரது ஆட்சியின் செல்வாக்கு வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான முயற்சி.

ஆனால் அதே சமயத்தில் உள்நாட்டில் மக்களின் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க மதவாத கட்சிகளுக்கு (MMA) ஆதரவு அளித்து வந்தார். சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு, "தான் நினைப்பது தான் சட்டம்" எனக் கூறிய மற்றும் சட்ட ஒழுங்குகளில் தலையிட்ட செம்பள்ளிவாசல் (Red Mosque) மதவாதிகளின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டிருந்தார். அம்மதவாதிகளின் 'பர்தா ‍போலீசுகள்' (Burqha Clad) எனும் மதக்கல்வி மாணவர்கள், அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் என அவர்களின் உரிமையில் தலையிட்டு அட்டகாசம் செய்து வந்தனர். இறுதியாக இவர்களின் மீது முஷரஃப் நடவடிக்கை எடுத்தது கூட சீனாவின் அழுத்தத்தினால்தான்.

இவ்வாறாக முஷரஃப் தனது நலனுக்காக அனைத்து விதங்களிலும் அனைத்தையும் செய்து தண்ணிகாட்டிக் கொண்டிருந்தார்.

பிறகு ராணுவ பொறுப்பில் இருக்கும் போது அதிபர் தேர்தலுக்கு போட்டியிட எத்தணித்தார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி இஃப்திகார் இதற்கு துணைபோகுபவர் அல்ல. எனவே முன்னெச்சரிக்கையாக தேர்தல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே இஃப்திகாரை அவரது பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார். மக்களிடம் செல்வாக்கு பெற்ற அவரது பதவிநீக்கத்தினால் போராட்டம் வெடித்தது. தொடரப்பட்ட வழக்கில் இஃப்திகார் வெற்றி பெற்று மீண்டும் தலைமை நீதிபதி பொறுப்புக்கு வந்தார்.

இது இப்படியாக இருக்க மேலும் சில சுவையான திருப்பங்கள் நிகழ்ந்தன. இவையும் முஷரஃப்பின் தன்னல அரசியலால் தான்.

பெனாசிரின் மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அவைகளுக்கு பயந்த்து பெனாசிர் பல வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். முஷரஃபிற்கு இதற்கிடையே ஒரு யோசனை: "பெனாசீரை நாம் ஏன் ஆதரித்து அவரை பிரதமராக்கக்கூடாது; அதனால் நான் இராணுவ பதவியைத் துறந்தால் கூட நம்மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் அவர் நம்மைக் காப்பற்ற வாய்ப்பு உள்ளது ". இந்த யோசனையின் படி அவர் பெனாசீரை பாகிஸ்தானுக்கு வந்து அரசியலில் ஈடுபட கேட்டுக்கொண்டார். மேலும் அவர்மீது இருந்த ஊழல்வழக்குகளை எவ்வித காரணமும் காட்டாமல் தள்ளுபடி செய்தார் (இதுதான் பாக்கிஸ்தான்). அத்தோடில்லாமல் யாரும் அவர்மீது புதிய வழக்குகள் தொடரக்கூடாது என சட்டம் வேறு இயற்றினார் !!!!!!!!
இதனால் பெனாசீர் பாகிஸ்தான் திரும்பினார். (குறிப்பு: அவ்வாறு பெனாசீர் பாக்கிஸ்தான் திரும்பும்போது அமெரிக்கா சென்று ஆசிகள் பெற்று திரும்பியதை அனைவரும் இங்கு நினைவுகூறவேண்டும்).

இதற்கிடையில், இராணுவ பொறுப்பில் இருக்கும் முஷரஃப் போட்டியிடும் அதிபர் தேர்தலை பெரும்பாலான அரசியல் கட்சிகள் புறக்கணித்துவிட்டன. அவைகள் தங்களது ஆட்களைப் போட்டியாக நிறுத்தவில்லை. இத்தேர்தலில் போட்டியிட முஷரஃபை தகுதியற்றவர் என திர்மானிக்கும்படி வழக்குத் தொடரப்பட்டது.

முஷரஃ மட்டும் போட்டியிட்டதால் அவரும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் நீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்ததால், அவரது வெற்றி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இவ்வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாக இல்லை எனத் தெரிந்ததும் முஷரஃப் 'அவசர நிலை'யைப் பிரகடனம் செய்தார். இஃப்திகாரை வீட்டுகாவலில் வைத்துள்ளார்.

நவாஸ்ஷெரிஃப், இஃப்திகார், இம்ரான்கான் உள்ளிட்ட பலர் மக்களை கிளர்ந்தெழக் கேட்டுக்கொண்டுள்ளனர். "மக்கள் தியாகம் செய்ய முன்வரவேண்டிய தருணம் இது" என இஃப்திகார் கேட்டுக் கொண்டுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை முஷரஃபின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்றுதான் கணிக்க முடிகிறது.

No comments: