Friday, October 19, 2007

ஹோலோகாஸ்ட், ஜெனோசைட், கலவரம், போக்ரம், வன்முறை

பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ள அல்லது விரட்டப் பட்டுள்ள சம்பவங்கள் பல இருக்க அவைகளில் எவற்றை "மக்களொழிப்பு" (Genocide) என அறிவிப்பது என்றோ, எவற்றை அறிவிக்கக் கூடாது என்பதையோ நிர்ணயிப்பது அரசியலே. எந்த அரசியல்வாதி செல்வாக்குப் பெற்றவனோ அவன் எடுக்கும் முடிவு பெரும்பாலும் அங்கீகரிக்கப் படும்.

இந்த சம்பவங்களை பெயரிட பல ஆங்கில வார்த்தைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரையறுப்பு போலும். எனக்கு விளங்கவில்லை. நானும் அதிகம் கவலைப் படவில்லை ஏனெனில் நான் ஒரு மொழியியல் வல்லுனன் இல்லை. இதற்கான சரியான பொருள் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நடந்து வரும் அரசியல் எனக்கு ஓரளவிற்கு விளங்குகிறது.

இந்த அரசியல் சொற்களின் வரையறுப்பில் ஒத்த கருத்தின்மையை மையமாகக் கொண்டதல்ல. அந்த குழப்பம் வேறு விஷயம். ஆனால் நான் கூறும் அரசியலின் மையம் நயவஞ்சகத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த அரசியலில் சிலவற்றைப் பார்ப்போம்

1) பூர்வீக அமெரிக்கர்கள் படுகொலை: இதனை மக்களொழிப்பு என அறிவிக்க எந்த நாட்டிற்கேனும் தைரியம் உண்டா ?

2) அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கருப்பு இன அடிமைகள் படுகொலை: இதனை மக்களொழிப்பு என எந்த நாடாவது தனது பள்ளி சிறுவர்களுக்குக் கற்பிக்கிறதா ?

3) வெள்ளையர் குடியேற்றத்தின் போது பூர்வீக ஆஸ்திரேலியர்கள் படுகொலை: எந்த நாடு இதை மக்களொழிப்பு எனக் கூறுகிறது ?

4) யூதப் படுகொலை (Jewish holocaust): இது மக்கொளொழிப்பு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஐரோப்பியர்கள் செய்த இந்த அநியாயத்தின் விளைவாக இனவாத சியோனிச நாடு மத்திய-கிழக்கு பகுதியில் உருவானது.

5) டார்ஃபர் (Darfur, Sudan): இங்கு நடந்தது மக்களொழிப்பு என அறிவிக்க மேலை நாடுகள் முழு மூச்சில் உள்ளனர். சூடான் தனது பலவீனமான குரலில் அதை மறுக்கிறது. "நடு நிலையானவர்கள்" என யார் யாரைக் கருதினார்களோ அவர்களிடம் விளக்கம் கேட்பதற்காக ஐநா சபை சில ஆப்பிரிக்க தலைவர்களை அழைத்தது. அவர்கள் ஐநா சபையில் ஆற்றிய உரையில் ஏகோபித்த விதமாக "அது மக்களொழிப்பில்லை" என கூறிவிட்டனர். அதை வேண்டுமானால் "வன்முறை", "அழிவு" என்று கூறலாம் எனக் கூறிவிட்டனர். இது அமெரிக்காவிற்கு சற்று பின்னடைவு.

6) ஈராக்கியர்கள் படுகொலை: ஈராக் போருக்காக அமெரிக்கா கூறிய காரணம் பொய்யென ஆனதும், இது இன அடிப்படையில் அமைந்த படுகொலை எனும் வாதத்தின் அடிப்படையில் இது மக்கொளொழிப்பு. ("இனவாதத்தின் அடிப்படையில் கிடையாது, மாறாக எண்ணெய் காரணத்தால் தான்" என்று சிலர் கருத்து கூறினால், போரின் போக்கு அதை "மக்களொழிப்பு" என அறிவிக்கும் தகுதியை கொடுக்கிறது). ஆனால் எந்த நாடு இதை (அமெரிக்காவை எதிர்த்து) ஒத்துக் கொள்கிறது ?

7) துருக்கியில் அர்மீனியர்கள் (Armenians) படுகொலை : இது தற்போது சூடாக விவாதிக்கப்படும் விஷயம். அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, கிரேக்கம் ஆகியவைகள் உள்ளிட்ட சுமார் 30 நாடுகள் இதனை மக்களொழிப்பு என அறிவித்துள்ளது. என் பார்வையிலும் இது மக்களொழிப்புத்தான். துருக்கிவாழ் அர்மீனியர்கள் "முதலாம் உலகப் போரின் போது துருக்கிக்கு எதிராக செயல் பட்டனர்", எனக் கூறி அவர்களை வெளியேற்ற துருக்கியை ஆண்ட ஒட்டோமானியர்கள் (Ottoman Turks) முடிவெடுத்து அவர்களை கிராமம் கிராமமாக கொண்டு வந்து கூட்டமாக அவர்களை வெளியேற்றினர். பஞ்சத்திலும் நோயிலும் பலர் இறந்தனர். ஆனால் நாசிக்கள் (Nazis) செய்தது போல் இன-ஒழிப்பு-முகாம்கள் (Concentration Camps) நடத்தப்பட்டதா இல்லையா என கருத்து வேறுபாடு நிகழ்கிறது. இறந்தவர்கள் 15 இலட்சம் என கூறப் படுகிறது. தற்போதைய துருக்கி நாடு இதை மறுக்கிறது. "ஒட்டோமான் ஆட்சியில் அர்மீனியர்கள் இறந்தது உண்மைதான். ஆனால் அது மக்கள் மத்தியில் நிலவிய வன்முறையால்தான்" எனக் கூறுகிறது.

( கொசுறு: குஜராத் சம்பவத்தை ஹோலோகாஸ்ட் என பிரதம-மந்திரி மன்மோகன் சிங் கூறியுள்ளார். )

2 comments:

கையேடு said...

நல்ல கட்டுரை மாலிக் - இதில் தீவிரவாதம் என்பதன் வரையறையையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அந்த வார்த்தைக்கான அர்த்தமும் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

மு மாலிக் said...

நன்றி ரஞ்சித். தீவிரவாதம் பற்றி நீங்கள் கூறியதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தனது நிருபர்கள், செய்தி தொடர்பாளர்கள் அனைவருக்கும் "தீவிரவாதம்", "தீவிரவாதி" போன்ற சொற்களைப் பயன்படுத்த தடை விதித்திருந்தது. இந்த வார்த்தைகளின் பின்னுள்ள அரசியலிலிருந்து தப்பிக்கவே அந்த தடை. அது ஒரு நடுனிலை செய்தி நிறுவனமாக இருந்து வந்தது. ஆனால் அந்திறுவனத்தை தாம்சன் எனும் கனடிய நிறுவனம் வாங்கியதிலிருந்து அதன் செய்திகளில் சற்று மாற்றம் காணப்படுகிறது. ஃபாக்ஸ், டைம்ஸ் போன்ற ருப்பர்ட்-முர்டோச் உடைய நிறுவனம் போல் காணப்படுகிறது.