Friday, October 19, 2007

நோபல் பரிசின் அரசியல்

இது ஒரு நல்ல பதிவு. நோபல் பரிசுகள் புனிதமானவைகள் அல்ல. குவாண்டம் ஃபிசிக்ஸ் (Quantum Physics), புள்ளியீட்டு இயற்பியல் (Statistical Physics) போன்ற ஜல்லிகளுக்கு கொடுக்கப் பட்ட நோபல் பரிசுகள் பெரும்பாலும் அரசியல், மத, இன நோக்குடையவை.

சில சமயங்களில் இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகளும் இது போன்ற கரையான்களால் பாதிக்கப்படும்.

"கம்யூனிஸ்டுகள்" என்பதற்காக பரிசினை இழந்தவர்களும் உள்ளனர்.
"பொறியியளார்கள்" என்பதற்காக பரிசுகளை இழந்தவர்களும் உள்ளனர்.
ஃபெயின் மேன் போன்ற அறிவுத் திருடர்களின் விசுவாசிகளால் கூட பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். ஜார்ஜ் சுதர்ஷன் பலமுறை பரிந்துரைக்கப்பட்டும் பரிசினை இழந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்.

(see also: http://www.flonnet.com/fl2224/stories/20051202002610200.htm )

மேலும் அமெரிக்கர்கள் என்பதற்காக பரிசுகளைப் பெற்றவர்களும், ராயல் சொசைட்டிக்கு விசிட் அடித்த தெரிந்தவர் என்பதற்காகப் பரிசினைப் பெற்றவர்களும் உள்ளனர்.

பரிந்துரை மூலம் பரிசுக்கான தகுதியுடையவர்களைக் கருத்தில் கொள்ளும் முறையை கைவிட வேண்டும். பரிசுகளைத் தீர்மானிப்பவர்கள் யார் யார் என அறிவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் பின்னணியினை ஆராய முடியும். பரிசு பெறுபவர்களைத் தீர்மானிக்கும் முறையில் ஒவ்வொரு படிகளையும் சுவீடன் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு படியிலும் யார் யாரை வெளியில் தள்ளுகிறதோ அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

7 comments:

ROSAVASANTH said...

நோபல் பரிசில் அரசியல் இருக்கலாம், ஆனால் அது என்ன குண்டை தூக்கி போடுகிறீர்கள். குவாண்டம் இயற்பியல் ஜல்லியா? உங்களுக்கு புரியாத விஷயத்தை எப்படி ஜல்லி என்ற முடிவுக்கு வந்தீர்கள்? (புள்ளியீட்டு இயற்பியலை சொன்னதை கூட (ஜல்லி என்று சொல்வது அபத்தம் எனினும்) ஏதோ அர்தமுள்ளதாக சொன்னதாக எடுத்துக் கொள்ளமுடியும்.)

ROSAVASANTH said...

மேலும் ஃபெயின்மேன் அறிவு திருடர் என்று எழுதியிருப்பதையும் இப்போதுதான் பார்தேன். எந்த ஆதாரத்தின் பேரில் அப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா?

மு மாலிக் said...

///

நோபல் பரிசில் அரசியல் இருக்கலாம், ஆனால் அது என்ன குண்டை தூக்கி போடுகிறீர்கள். குவாண்டம் இயற்பியல் ஜல்லியா? உங்களுக்கு புரியாத விஷயத்தை எப்படி ஜல்லி என்ற முடிவுக்கு வந்தீர்கள்? (புள்ளியீட்டு இயற்பியலை சொன்னதை கூட (ஜல்லி என்று சொல்வது அபத்தம் எனினும்) ஏதோ அர்தமுள்ளதாக சொன்னதாக எடுத்துக் கொள்ளமுடியும்.)

By ROSAVASANTH, at 1:26 PM ///


எனது வாக்கியத்தில் பிழை உள்ளது. ஷ்ரோடிங்கர், டிராக், ஹெய்சன்பர்க் போன்றவர்கள் உருவாக்கிய குவாண்டம் இயற்பியல் அருமைதான். பின்னர்தான் அது நாளடைவில் ஜல்லியாகி விட்டது. குறிப்பாக சொல்லப் போனால் "Unification of forces" -ல் ஜல்லி அதிகம். இதன் பிள்ளையான "String theory" -ல் இன்னும் கொஞ்சம் அதிகம்.

சில பல்கலைக் கழகங்களில் சில பேராசிரியர்கள் உள்ளனர். வேலைப் பார்ப்பதே கிடையாது. கேட்டால்,"நான் String Theory-ல் ஆராய்ச்சி செய்றேன்", என்பார்கள். கடினமான கணித இயற்பியலில் ஆராய்ச்சி செய்கிறார் என்று பேரும் வாங்கிக் கொண்டு விடுவார்கள். வருடத்திற்கு இரண்டு முறை மக்களின் வரிப்பணத்தில் "Conference" என்ற பெயரில் கூட்டம் போட்டு கும்மாளமிட்டு "Banquet" போன்ற சாமானியன் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத விருந்தினையும் ஒரு புடி புடிச்சுட்டு வருவார்கள்.

போல்ட்ஸ்மானின் புள்ளியீட்டு இயற்பியலும் அருமை. நாளடைவில் தான் அதுவும் ஜல்லியாக மாறிவிட்டது. ஏகப்பட்ட மாடல்கள் (Models), அந்த மாடல் தரும் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் என ஜல்லி பல திசைகளில் சென்றது. அந்த மாடலினை தோராயமாக (approximinate method) தீர்க்க ஒரு இயற்பியல் அடிப்படை ஏதும் இல்லாமல் எண்ணியல் முறையினைப் (Numerical method) பயன்படுத்தியவர்களும் நோபல் பரிசு பெற்றுள்ளனர் (Renormalization). (இது வெறும் விமர்சனம் மட்டும் தான். இது நானாக உணர்ந்தது. மற்றவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என எனக்கு தெரியாது. மாற்றுக் கருத்து இருந்தால் வரவேற்கிறேன்). ஆனால் எனக்கு புள்ளியீட்டு இயற்பியல் பிடித்த பாடம்.

மு மாலிக் said...

/// ROSAVASANTH said...

மேலும் ஃபெயின்மேன் அறிவு திருடர் என்று எழுதியிருப்பதையும் இப்போதுதான் பார்தேன். எந்த ஆதாரத்தின் பேரில் அப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா?///நான் அவ்வாறு கூறியதற்கான காரணம் நான் கொடுத்துள்ள தொடுப்பில் கூறப்பட்டுள்ளது (அல்லது விளக்கப்பட்டுள்ளது). (ஆனால் அதில் சற்று கண்ணியம் கருதி மிருதுவாகக் கூறப்பட்டுள்ளது).

ROSAVASANTH said...

குவாண்டம் இயற்பியலே ஜல்லி என்று நீங்கள் சொன்னதால் (குவாண்டம் இயற்பியலில் ஒரு மாதம் பாடம் படித்தவர் கூட அப்படி சொல்ல இயலாது என்பதால்) உங்களுக்கு புரியாத விஷயம் பற்றி எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன். இப்போதய உங்கள் பின்னூட்டம் படித்த பின்பு...

உங்களின் இந்த பதிவின் பல வார்த்தைகள் மிக கடுமையானவை, முரட்டுத்தனமான கோபம் மட்டும் கொண்டவை என்று நினைக்கிறேன். இந்த கோபத்தின் பிண்ணணியில் இருக்கும் ஒருவித அமேரிக்க எதிர்ப்பிற்கான நியாயங்களை நானும் கொள்கையளவில் அங்கீகரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, உங்களின் விமர்சனத்தின் கடுமையை கடுமையாய் மறுக்கிறேன். இது போன்ற பார்வைகள் எந்த ஆரோக்கியமான விவாதத்திற்கும் இட்டு செல்லாது என்று நம்புகிறேன்.

ஏற்கனவே சொன்னதுபோல் நோபல் பரிசு விஷயங்களில் பல அரசியல்கள் இருக்கலாம், அது குறித்து பேச வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் முற்றும் முழுதுமாக அது அரசியலால் மட்டும் தீர்மானிக்க படுவதாகவும், ஜல்லிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக சொல்வதும் உண்மையல்ல என்பது என் கருத்து. string theory யில் பலர் ஜல்லியடிக்க வாய்புள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மொத்த கோட்பாட்டையும் அப்படி சொல்வது சரியல்ல, உதாரணமாய் இந்தியாவின் அசோக் சென்னின் பங்களிப்புகளை. (அவர் ஒரு நாளுக்கு 10 மணி நேரத்திற்கு மேல் வேலையில் ஆழ்ந்திருப்பவர் என்று அறிகிறேன்.) ஜார்ஜ் சுதர்சனுக்கு அளிக்கப் பட்டதை விமர்சிக்கும் அனைவரும் க்ளோபரின் பங்களிப்பை ஜல்லி என்ற வகையில் சொல்லவும் இல்லை என்பதை கவனிக்கவும்.

நீங்கள் கொடுத்துள்ள தொடுப்பிலும் ஃபெயின்மேனை அறிவு திருடர் என்ற தொனியில் சொல்லவில்லை; கண்ணியம் கருதியும் அவ்வாறு சொல்லாமல் விடவில்லை. "/Of course, Feynman has graciously acknowledged this in his famous remark in 1974: "We have a conventional theory of weak interactions invented by Marshak and Sudarshan, published by Feynman and Gell-Mann and completed by Cabibbo. / என்றுதான் சொல்லப் பட்டுள்ளது. இந்த விஷயத்திற்காகவும் ஃபெயின்மேனை விமர்சித்தால் நியாயம் உண்டு;(அவரை விட அதிகமாய் publicationsஐ முன்வைத்து இயங்கும் அமைப்பை விமர்சிக்க வேண்டும்.) அறிவு திருடர் என்பது எந்த விதத்திலும் நியாயமில்லாதது. மேலும் ஃபெயின்மேனின் மற்ற பல மிக அடிப்படையான பங்களிப்புகளை எப்படி மறுக்க முடியும்? உங்களது இது போன்ற முரட்டுத்தனமான (அதுவும் விஷயம் அறிந்த உங்களை போன்றவர்களது) கடுமை பயனளிக்க கூடியது அல்ல என்பது என் கருத்து. நன்றி!

மு மாலிக் said...

ம்.... ஆனால் என் பார்வை சற்று வேறுபட்டது.

சற்று சுதந்திரமாக பதில் கூறுகிறேன். பதிவின் பாதையிலிருந்து சற்று மாறு பட்டேனும் என் கருத்தினை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

நான் கொண்டுள்ள கணித-இயற்பியல் மீதான நாட்டமின்மை சற்று எடுத்துரைப்பதற்கு சிக்கலானது.

கணித இயற்பியலில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் மற்றும் புகழ்கள், மக்களை, குறிப்பாக இந்திய மக்களை ஈர்கிறது. நான் பார்த்தவரை இவ்வாறு செல்பவர்களில் பெரும்பாலானோர் சுயசிந்திப்பின்றி கூட்டத்தோடு கூட்டமாக செல்கின்றனர். இவர்கள் இந்த துறையில் வேலைப் பார்க்கக் கூடாது என சொல்ல வரவில்லை. ஆனால் இந்த வேலைகளில் இவர்களின் பங்களிப்புகள் மிகக் குறைவு.

இந்தத் துறைகள் மக்களின் வரிப்பணத்தினைக் கொண்டு ஆதரிக்க வேண்டிய துறைகள் அல்ல. இவைகளினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த துறைகளில் பணியாற்ற விரும்புபவர்கள் தனது செலவில் பணியாற்றினால் ஏற்றுக் கொள்ளத்தக்கது.

மக்களின் பணத்திலிருந்து இவர்களுக்கு ஆதரவு வேண்டுமாயின் இவர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் முழு நேர ஆசானாக இருக்க ஒத்துக்கொள்ள வேண்டும். அதாவது இவர்கள் மாணவர்களுக்கு அடிப்படையான பாடங்களை ஒரு நாளைக்கு மூன்று வகுப்புகளேனும் கற்பிக்கும் முழு நேர ஆசானாக இளனிலைக் கல்லுரிகளில் பணியாற்ற வேண்டும். தனது புகழுக்காக அவர்களது ஆராய்ச்சியினைப் பொழுதுபோக்காக இவர்கள் செய்யலாம்.

ஆனால் இவர்களின் இப்போதைய நிலை எனக்கு வெறுப்பினை ஏற்படுத்துகிறது. இவர்கள் ஒரு வாரத்திற்கு 3 வகுப்புகள் அதுவும் தன் ஆராய்ச்சிப் பாடத்தில் எடுக்கிறார்கள். தனது பேருக்கும் புகழுக்குமாக ஆராய்ச்சி செய்வதற்கான தொழிலுக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓரிரு பாடங்களை எடுத்துவிட்டு தனது புகழுக்கும் பேருக்கும் உதவும் ஆராய்ச்சியை செய்வதை தொழிலாகக் கொண்டுள்ள பேராசிரியர்களை எள்ளி நகையாட எனக்கு சற்று விருப்பம் உண்டு, அவர்கள் இதற்கு மக்களின் வரிப் பணத்தினைப் பயன்படுத்துவதால். (சற்று நீண்ட வாக்கியம் தான்... மன்னிக்கவும்)

இந்த விதத்தில் இவர்கள் மீது "பரிசுகளும் விருதுகளும் பெறுகிறார்கள்" என்பதற்காக மதிப்பு வைப்பற்கில்லை.

வேறொரு முறையிலும் மக்களின் வரிப் பணத்தினைக் கொண்டு இவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம், இவர்கள் சமூகவியலிலும் ஈடுபட ஒத்துக் கொண்டால். ஆம் தனது எழுத்து மூலமாகவாவது இவர்கள் சமூகவியலில் அல்லது பொது வாழ்க்கையில் ஈடு படவேண்டும். உரிமைக்காகக் குரல் கொடுக்கும் எழுத்தாளர்களாகவோ அல்லது செயலாற்றுபவர்களாகவோ இருக்க வேண்டும். இவைகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் அலுவலக ரீதியாகவே செய்ய அரசாங்கம் மாற்றங்கலைக் கொண்டு வர வேண்டும்.

இது போல் செயலாற்றும் ஓரிரு கணித-இயற்பியலார்களை சமீபத்தில் அறிந்தேன்.

என்னுடைய பார்வையிலும் ஃபெயின்மேன் திறமையானவர்தான். அவர் பல பூட்டுகளை சாவி இன்றி திறப்பாராம். அது போகட்டும் ....

ROSAVASANTH said...

மீண்டும் வந்து இப்போதுதான் பார்க்க முடிந்தது. உங்கள் பின்னூட்டத்தின் புதிய கருத்துக்கள் விவாதத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. மீண்டும் உங்கள் கருத்துக்களுடன் பகிர்ந்து கொண்டாலும், பல இடங்களில் வேறுபடுகிறேன் என்று மட்டும் சொல்லிக் கொண்டு உங்கள் நிதானமான பதிலுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.