Friday, October 26, 2007

டெஹல்காவினால் அம்பலப்படுத்தல்: பின்விளைவு எச்சரிக்கை

எனது நண்பர் இதனைச் சொன்னார். டெஹல்காவின் துப்புதுலக்கலினால் வெளிக்கொணரப்பட்ட உண்மையால் கணிசமான அளவு மக்களிடம் பரபரப்பு உள்ளது. இதனால் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பிஜேபி, பஜ்ரங்தள் மீது மக்களின் வெறுப்பு மிகுந்திருக்கலாம் என்றார். மேலும் அவர் தொடர்ந்து சொன்னது எனக்கு சரியாகப் பட்டது. அதனை தங்களுக்கான எச்சரிக்கையாக இங்கே பதிகின்றேன்.

மக்களிடம் தற்போது நிகழும் வெறுப்பு / பரிவு ஆகியவைகள் படர்ந்துள்ள தரப்புகள் மாற்றப்படுவதற்கு முயற்சிகள் நடக்கலாம். மும்பையில் இரயிலில் குண்டு வெடித்தது போல் அல்லது சென்ற தீபாவளியின் போது புதுடில்லியில் குண்டு வெடித்தைப் போன்றோ குண்டுகள் வெடிக்கலாம். தீபாவளி வேறு நெறுங்குகிறது. மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(இது பீதியைக் கிளப்புவதற்கான பதிவல்ல. ஒரு நல்லெண்ணத்தோடுதான் பதியப்படுகிறது. நன்றி )

Tuesday, October 23, 2007

ஹாலிவுட்-ல் அராபியர்கள்

ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் தான். சாஃட்வேர் தொழில்கள் கணிசமான இளைஞர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்திவிட்டது. திரையரங்கு கொத்துகளும் (Multiplex) ஆங்காங்கே முளைத்துவிட்டன.

ஜேம்ஸ்பாண்ட் (James Bond) போன்ற முதலாளித்துவ வாழ்க்கையை தூக்கிப் பிடிக்கும் படங்கள் முதல், சாதாரண குழந்தைகளுக்கான கார்டூன்கள் வரை அப்படங்களில் வரும் வில்லன்கள் அதிகபட்ச வாய்ப்புகளுடன் அவர் ஒரு கருப்பராகவோ, ரஷ்யனாகவோ அல்லது ஒரு இஸ்லாமிய மத அடையாளங்களுடனோ அல்லது சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ளவராகவோ இருப்பார்.

பழைய ரோஜர்-மூர் (Roger Moore) ஜேம்ஸ் பாண்டாக நடித்த படங்களிலும் இதே கதைத்தான். பியர்ஸ் ப்ராஸ்னன் (Pierce Brosnan) நடித்த படங்களிலும் இதே கதைத் தான். ஸ்பீல்பர்க் (Steven Spielberg) படங்களும் விதி விலக்கல்ல. தனது நிற மக்களான யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மக்களுக்கு சொல்ல ஷின்ட்லர்ஸ்-லிஸ்ட் (Schindlers List) எனும் திரைப்படத்தில் படம் பிடிக்கும் அவர், தனது திரைப்பட தொடரான இண்டியான-ஜோன்ஸ்-ல் (Indiana Jones) பல கலாச்சாரங்களையும் மக்களையும் தாக்கி எடுத்திருப்பார். அர்னால்டு-ஸ்வாஸ்னேகர் நடித்த படங்களிலும், சில்வஸ்டர்-ஸ்டாலோன் நடித்த படங்களிலும் வில்லனைப் பொறுத்த இலக்கணம் இதுதான். ராம்போவினயும், ட்ரூ-லைஸ்-யினையும் மறந்து இருக்க மாட்டீர்கள். மேலும் போதை பொருட்கள் பற்றிய காட்சிகள் அல்லது சதித்திட்டம் தீட்டப்படும் காட்சிகள் ஆகியவைகள் திரைபடங்களில் வந்தால், அந்த காட்சியில் சம்பத்தப் பட்டவர்கள் வெள்ளையர்களாக இருந்தாலும் கூட, இந்த காட்சிகள் நடக்கும் இடத்தில் தூரத்தில் ஒரு அராபியரும் (சகிதம் அவர்களின் கலாச்சார உடையில்) தென்படுவதுபோல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் மேலைநாட்டுக் கலாசாரத்திற்கு மாறுபட்ட கலாச்சாரம் உள்ள நாடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றிய படம் எண்று வைத்துக்கொள்வோம். அப்படங்களில் அப்பிரச்சனைகளை யார் வந்து தீர்த்து வைப்பாரெனில், ஒரு வெள்ளை நிறத்தினைச் சேர்ந்த மேலை நாட்டுக்காரராகவே இருப்பார். :-) அப்பிரச்சனைகள் ஆஃப்கானிஸ்தானத்தில் இருந்தாலும் சரி, லைபீரியா, சியராலியோன், கென்யா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தாலும் சரி. அல்லது பர்மா, சீனா, கொரியா போன்ற ஆசிய நாடுகளானாலும் சரி. ஒரு வெள்ளையர் வந்து அந்த நாட்டு இனத்தினைச் சேர்ந்த வில்லன்களிடமிருந்து அந்த நாட்டு மக்களைக் காப்பாற்றுவார். அது தான் இலக்கணம்.

தீயவர்களைச் சித்தரிப்பதில் மிகச் சன்னமாகவாவது இது போன்ற காட்சிகள் வரும். (இதைத் தான் இயக்குனர் ஷங்கர், தனது வலதுசாரி தேசியவாத சங் சித்தாந்தத்தில் அமைந்த "அன்னியன்" எனும் திரைப்படத்தில் கையாண்டு உள்ளதாக எனது நண்பன் கூறுவான். நான் அப்படத்தினைப் பார்க்க வில்லை.)

அராபியர்களை எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என 1000 படங்களை ஆய்ந்து ஒரு புத்தகத்தையும், குறும்படத்தினையும் எடுத்தவர் ஒருவரிடம் (Jack shaheen) காணப்பட்ட பேட்டியை இப்பதிவின் மூலம் அறிமுகம் செய்கிறேன். (இத்தகைய பேட்டி இருப்பதை இப்பதிவின் மூலம் அறிய நேர்ந்தது)

Friday, October 19, 2007

நோபல் பரிசின் அரசியல்

இது ஒரு நல்ல பதிவு. நோபல் பரிசுகள் புனிதமானவைகள் அல்ல. குவாண்டம் ஃபிசிக்ஸ் (Quantum Physics), புள்ளியீட்டு இயற்பியல் (Statistical Physics) போன்ற ஜல்லிகளுக்கு கொடுக்கப் பட்ட நோபல் பரிசுகள் பெரும்பாலும் அரசியல், மத, இன நோக்குடையவை.

சில சமயங்களில் இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகளும் இது போன்ற கரையான்களால் பாதிக்கப்படும்.

"கம்யூனிஸ்டுகள்" என்பதற்காக பரிசினை இழந்தவர்களும் உள்ளனர்.
"பொறியியளார்கள்" என்பதற்காக பரிசுகளை இழந்தவர்களும் உள்ளனர்.
ஃபெயின் மேன் போன்ற அறிவுத் திருடர்களின் விசுவாசிகளால் கூட பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். ஜார்ஜ் சுதர்ஷன் பலமுறை பரிந்துரைக்கப்பட்டும் பரிசினை இழந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்.

(see also: http://www.flonnet.com/fl2224/stories/20051202002610200.htm )

மேலும் அமெரிக்கர்கள் என்பதற்காக பரிசுகளைப் பெற்றவர்களும், ராயல் சொசைட்டிக்கு விசிட் அடித்த தெரிந்தவர் என்பதற்காகப் பரிசினைப் பெற்றவர்களும் உள்ளனர்.

பரிந்துரை மூலம் பரிசுக்கான தகுதியுடையவர்களைக் கருத்தில் கொள்ளும் முறையை கைவிட வேண்டும். பரிசுகளைத் தீர்மானிப்பவர்கள் யார் யார் என அறிவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் பின்னணியினை ஆராய முடியும். பரிசு பெறுபவர்களைத் தீர்மானிக்கும் முறையில் ஒவ்வொரு படிகளையும் சுவீடன் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு படியிலும் யார் யாரை வெளியில் தள்ளுகிறதோ அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

ஹோலோகாஸ்ட், ஜெனோசைட், கலவரம், போக்ரம், வன்முறை

பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ள அல்லது விரட்டப் பட்டுள்ள சம்பவங்கள் பல இருக்க அவைகளில் எவற்றை "மக்களொழிப்பு" (Genocide) என அறிவிப்பது என்றோ, எவற்றை அறிவிக்கக் கூடாது என்பதையோ நிர்ணயிப்பது அரசியலே. எந்த அரசியல்வாதி செல்வாக்குப் பெற்றவனோ அவன் எடுக்கும் முடிவு பெரும்பாலும் அங்கீகரிக்கப் படும்.

இந்த சம்பவங்களை பெயரிட பல ஆங்கில வார்த்தைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரையறுப்பு போலும். எனக்கு விளங்கவில்லை. நானும் அதிகம் கவலைப் படவில்லை ஏனெனில் நான் ஒரு மொழியியல் வல்லுனன் இல்லை. இதற்கான சரியான பொருள் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நடந்து வரும் அரசியல் எனக்கு ஓரளவிற்கு விளங்குகிறது.

இந்த அரசியல் சொற்களின் வரையறுப்பில் ஒத்த கருத்தின்மையை மையமாகக் கொண்டதல்ல. அந்த குழப்பம் வேறு விஷயம். ஆனால் நான் கூறும் அரசியலின் மையம் நயவஞ்சகத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த அரசியலில் சிலவற்றைப் பார்ப்போம்

1) பூர்வீக அமெரிக்கர்கள் படுகொலை: இதனை மக்களொழிப்பு என அறிவிக்க எந்த நாட்டிற்கேனும் தைரியம் உண்டா ?

2) அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கருப்பு இன அடிமைகள் படுகொலை: இதனை மக்களொழிப்பு என எந்த நாடாவது தனது பள்ளி சிறுவர்களுக்குக் கற்பிக்கிறதா ?

3) வெள்ளையர் குடியேற்றத்தின் போது பூர்வீக ஆஸ்திரேலியர்கள் படுகொலை: எந்த நாடு இதை மக்களொழிப்பு எனக் கூறுகிறது ?

4) யூதப் படுகொலை (Jewish holocaust): இது மக்கொளொழிப்பு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஐரோப்பியர்கள் செய்த இந்த அநியாயத்தின் விளைவாக இனவாத சியோனிச நாடு மத்திய-கிழக்கு பகுதியில் உருவானது.

5) டார்ஃபர் (Darfur, Sudan): இங்கு நடந்தது மக்களொழிப்பு என அறிவிக்க மேலை நாடுகள் முழு மூச்சில் உள்ளனர். சூடான் தனது பலவீனமான குரலில் அதை மறுக்கிறது. "நடு நிலையானவர்கள்" என யார் யாரைக் கருதினார்களோ அவர்களிடம் விளக்கம் கேட்பதற்காக ஐநா சபை சில ஆப்பிரிக்க தலைவர்களை அழைத்தது. அவர்கள் ஐநா சபையில் ஆற்றிய உரையில் ஏகோபித்த விதமாக "அது மக்களொழிப்பில்லை" என கூறிவிட்டனர். அதை வேண்டுமானால் "வன்முறை", "அழிவு" என்று கூறலாம் எனக் கூறிவிட்டனர். இது அமெரிக்காவிற்கு சற்று பின்னடைவு.

6) ஈராக்கியர்கள் படுகொலை: ஈராக் போருக்காக அமெரிக்கா கூறிய காரணம் பொய்யென ஆனதும், இது இன அடிப்படையில் அமைந்த படுகொலை எனும் வாதத்தின் அடிப்படையில் இது மக்கொளொழிப்பு. ("இனவாதத்தின் அடிப்படையில் கிடையாது, மாறாக எண்ணெய் காரணத்தால் தான்" என்று சிலர் கருத்து கூறினால், போரின் போக்கு அதை "மக்களொழிப்பு" என அறிவிக்கும் தகுதியை கொடுக்கிறது). ஆனால் எந்த நாடு இதை (அமெரிக்காவை எதிர்த்து) ஒத்துக் கொள்கிறது ?

7) துருக்கியில் அர்மீனியர்கள் (Armenians) படுகொலை : இது தற்போது சூடாக விவாதிக்கப்படும் விஷயம். அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, கிரேக்கம் ஆகியவைகள் உள்ளிட்ட சுமார் 30 நாடுகள் இதனை மக்களொழிப்பு என அறிவித்துள்ளது. என் பார்வையிலும் இது மக்களொழிப்புத்தான். துருக்கிவாழ் அர்மீனியர்கள் "முதலாம் உலகப் போரின் போது துருக்கிக்கு எதிராக செயல் பட்டனர்", எனக் கூறி அவர்களை வெளியேற்ற துருக்கியை ஆண்ட ஒட்டோமானியர்கள் (Ottoman Turks) முடிவெடுத்து அவர்களை கிராமம் கிராமமாக கொண்டு வந்து கூட்டமாக அவர்களை வெளியேற்றினர். பஞ்சத்திலும் நோயிலும் பலர் இறந்தனர். ஆனால் நாசிக்கள் (Nazis) செய்தது போல் இன-ஒழிப்பு-முகாம்கள் (Concentration Camps) நடத்தப்பட்டதா இல்லையா என கருத்து வேறுபாடு நிகழ்கிறது. இறந்தவர்கள் 15 இலட்சம் என கூறப் படுகிறது. தற்போதைய துருக்கி நாடு இதை மறுக்கிறது. "ஒட்டோமான் ஆட்சியில் அர்மீனியர்கள் இறந்தது உண்மைதான். ஆனால் அது மக்கள் மத்தியில் நிலவிய வன்முறையால்தான்" எனக் கூறுகிறது.

( கொசுறு: குஜராத் சம்பவத்தை ஹோலோகாஸ்ட் என பிரதம-மந்திரி மன்மோகன் சிங் கூறியுள்ளார். )

Thursday, October 18, 2007

ஹரால்டு பின்டர் புஷ்‍‍‍‍‍ஷுக்காக எழுதிய உரை அவருடைய நோபல் உரையிலிருந்து

ஹரால்டு பின்டர் (Harold Pinter) அவர்கள் ஒரு அருமையான எழுத்தாளராம். இவ்வாறு பலரும் கூறப் படித்துள்ளேன். இலக்கியங்கள் படிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமையில்லையாதலால் அவர்கள் கூறும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். 2005‍ ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர். அதைப் பெற்ற போது அவர் கீழ்கண்ட வாறு உரையாற்றினார். (ஒரு பகுதி மட்டும் இங்கு தரப் பட்டுள்ளது) . அந்த உரையினைப் படித்த போது புஷ்ஷுக்கு நறுக்கென்று ஊசி ஏற்றியிருப்பதை அறிய முடிகிறது. புஷ் பல தடவை மிக சீரியஸாக பொய்கள் கூறுபவர் என உங்களுக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கலாம். ("ஈராக்கில் மனித குலத்திற்கு பேரழிவான ஆயுதங்கள் உள்ளன" என்பது போன்ற பொய்கள்)

இனி ஹரால்டு பின்டரின் உரையிலிருந்து ......

அமெரிக்க அதிபர் புஷ்ஷிற்கு மேடைப் பேச்சு உரைகளை எழுதுபவர்களில் மிகச் சிறந்தவர்கள் உள்ளனர் என எனக்குத் தெரியும். நான் கூட அந்த பதவிக்கு விண்ணப்பித்து கீழ்கண்டவாறு புஷ்ஷிற்கு மேடைப் பேச்சு உரை எழுத வேண்டும் என எனக்கு ஆவல்.

"கடவுள் நல்லவன். கடவுள் மிகப் பெரியவன்.
கடவுள் நல்லவன். என் கடவுள் நல்லவன்.
பின்லாடனின் கடவுள் தீயவன். அவனுக்கு தீய கடவுள்
சதாமின் கடவுளும் தீயதுதான்.
ஆனால் அவனுக்குக் கடவுள் நம்பிக்கைத்தான் இல்லை.
சதாம் ஒரு காட்டுமிராண்டி.
நாம் காட்டுமிராண்டி கிடையாது.
நாம் மக்களின் தலைகளை வெட்டுவதில்லை
நாம் சுதந்திரத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.
கடவுளும் அதைத் தான் விரும்புபவர்.
நான் ஒரு காட்டுமிராண்டியல்ல.
ஜன‍நாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திர ஜனநாயகத்தின் தலைவன்.
நாம் ஈரவுள்ளம் உடையவர்கள்.
இந்த ஈர வுள்ளம் இருப்பதால் தான், நாம் மரண தண்டனையை நிறைவேற்ற‌
மின்னிறக்கத்தையும் (electrocution) விஷ ஊசியையும் பயன்படுத்துகிறோம்.
நாம் ஒரு மகத்தான தேசத்தவர்கள்.
நான் ஒரு சர்வாதிகாரன் கிடையாது.
ஆனால் அவன் (சர்வாதிகாரன்).
நான் காட்டுமிராண்டி கிடையாது.
ஆனால் அவன் (ஒரு காட்டுமிராண்டி)
இன்னும் அழுத்தமாக‌ அவன் (ஒரு காட்டுமிராண்டி)
அவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள்.
நான் ஒரு நேர்மையான அதிகாரத்தினைக் கொண்டுள்ளேன்.
என் கரத்தினைப் பாருங்கள். தெரிகிறதா ?
இதுதான் என் நேர்மையான அதிகாரம்.
இதனை மறந்துவிடாதீர்கள்.

Wednesday, October 10, 2007

அமெரிக்காவின் நீதித் துறை

பிபிசியின் இந்த செய்தியைப் பார்க்கவும் (http://news.bbc.co.uk/2/hi/europe/7036051.stm).

சிஐஏ தன்னை சித்திரவதை செய்தார்கள் என ஒருவர் புகார் செய்தார்.

உலக நாடுகளின் மனித-உரிமை தர வரிசையை (Human Rights Index) ஒவ்வொரு வருடமும் வெளியிடும் நாடு அமெரிக்கா என்பதை இந்த நேரத்தில் உங்களின் நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.

அதன் ஒரு நீதி மன்றம், "நாட்டின் பாதுகாப்பினைக் கருதி இந்த வழக்கை விசாரிக்க முடியாது"(!!!) என அவரது வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டது.

பாதிக்கப் பட்ட அந்த ஜெர்மானியர் (ஆனால் வெள்ளையர் அல்ல), அமெரிக்காவின் நீதி மீது நம்பிக்கைக் கொண்டவர் போலும். உச்ச நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தார்.

உச்ச நீதி மன்றமோ எந்த காரணத்தையும் காட்டாமல் அவரது வழக்கை விசாரிக்காமல் தூக்கி எறிந்து விட்டது. வாழ்க அமெரிக்காவின் நீதி.

Tuesday, October 09, 2007

உங்களுக்குத் தெரியுமா: அமெரிக்கக் கப்பல் லிபர்டி (USS Liberty)

'லிபர்டி' எனும் அமெரிக்கக் கப்பல் (USS Liberty) 1967 -ம் ஆண்டு இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆளானது.

இஸ்ரேலினால் துவக்கப்பட்ட, 'ஆறு நாள் போர்' (Six days war) என அனைவராலும் அறியப்பட்ட போரில், இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவின் இக்கப்பல் தாக்கப் பட்டதன் காரணம் தற்போது வெளிவந்த வண்ணமாக உள்ளது.

கடந்த நாற்பது வருடங்களாக இதனைப் பற்றி பேசுவதற்கு சிஐஏ உளவு அமைப்பினருக்குக் கூட தைரியம் இல்லை. 'இஸ்ரேல்' என்றால் அவ்வளவு பயம். ஆனால் சிஐஏ-வின் முன்னாள் உளவாளிகளும், அக்கப்பலில் பணியாற்றிய கடற்படை சிப்பந்திகளும் இப்போது வாய் திறக்கின்றனர். இது நாள் வரை (இப்போதும் கூட) இஸ்ரேலைக் குறைக் கூறுவதால், அமெரிக்காவிற்காகப் பணியாற்றும் அமெரிக்கர்களுக்குக் கூட அவர்களின் பதவிக்கும், இயல்பான வாழ்க்கைக்கும் ஆபத்து நிகழ்ந்து வந்தது. இஸ்ரேலைக் குறைக் கூறுபவர்களுக்கு "யூத வெறுப்பாளர்" (Anti semite) எனும் பட்டம் கிடைத்து வந்தது. ஆனால் இன்று இவர்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம், "இஸ்ரேல் லாபியும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்" (Israel Lobby and US foreign policy) எனும் கட்டுரையும், அதை விரிவுபடுத்தி அனைத்து ஆதாரங்களையும் உள்ளடக்கி (இவ்வாறு நான் நம்பிக்கைக் கொண்டுள்ள விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளது) வெளியிடப்பட்ட புத்தகமுமே. இதற்குப் பிறகு, யார் யார் வாய் மூடி இருந்தார்களோ அவர்கள் சற்று தைரியம் பெற்றவர்களாக இஸ்ரேலைப் பற்றி பேச வாய் திறக்கின்றனர்.

அவ்வாறு பேச ஆரம்பித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர், ஜிம்மி கார்ட்டர் ஆவார். ஆனால் இவ்வாறு பேசுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது. சிஐஏ-வின் முன்னாள் அலுவலர்கள் கூட இந்த பட்டியலில் அடக்கம்.

மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

இந்த லிபர்டி எனும் அமெரிக்கக் கப்பலை எகிப்தின் கப்பல் என்று கருதி இஸ்ரேல் தாக்கியதாம். இவ்வாறு தான் இஸ்ரேல் கூறிக் கொள்கிறது. ஆனால் சிஐஏ-வின் முன்னாள் அலுவர் ஒருவரும் அக்கப்பலில் பணியாற்றிய ஒருவரும் தற்போது கொடுக்கும் தகவல்கள் இதற்கு முரணாக உள்ளன.

இஸ்ரேல் அக்கப்பலை வேண்டுமென்றேத் தாக்கியதாம். அது அமெரிக்கக் கப்பல் என்று நன்றாகத் தெரிந்து, அதனை அழித்து, அதிலுள்ளவர்களைக் கொல்வதே இஸ்ரேலின் நோக்கமாக விருந்தது என அவர்கள் கூறுகிறார்கள். சிரியாவின் 'கொலான்' எனும் மேட்டு நிலங்களை கைப்பற்ற இஸ்ரேல் முனைவதைப் பற்றி அக்கப்பலில் உள்ளவர்கள் துப்பு சேகரித்திருந்தனர். அமெரிக்காவிற்கு இது தெரியக் கூடாது என்பதற்காக இஸ்ரேல் தாக்கி இருக்கலாமாம்.

இதைப் பற்றி நான் படித்தவைகளை விரிவாக எழுத நேரமில்லையாதலால், நான் எவற்றைப் படித்தேனோ அவைகளை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

1. சிஐஏ ஆய்வரின் கட்டுரை

2. எழுத்தாளர் ஜெஃப்ரீ செய்ண்ட் கிளேர் அவர்களின் கட்டுரை

3. சிகாகோ டிரிபியூனின் செய்தி தொடர்பாளர் ஜான் க்ரூட்சன் அவர்களின் கட்டுரை

Friday, October 05, 2007

2007க்கான இக்-நோபல் (Ig Nobel) பரிசுகள்

மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு இக்-நோபல் (Ig Nobel) பரிசுகள் வழங்கப்படுகின்றன. என் பார்வையில் இந்த பரிசுகள் நோபல் பரிசுகளைவிடச் சிறந்தது. நோபல் பரிசுகள் பல வகையான அரசியல் மற்றும் ஓரவஞ்சனைகளினால் கறைப் படிந்த பரிசுகளாகும். பரிசு பெறுபவரின் கொள்கைகள் (Ideology) , நாடு, இனம், மதம் ஆகியவைகள் இங்கு காரணியாக உள்ளது. ஆனால் இக்-நோபல் பரிசுகள் இவைகளுக்கு அப்பாற் பட்டது என தோன்றுகிறது. ஏனெனில் இப்பரிசுகளைப் பெற்றவர்கள் அவர் சார்ந்துள்ள கொள்கைகள், நாடு, இனம், மதம் ஆகியவைகளுக்கு பெருமை சேர்ப்பவர்களாக யாரும் கருத முடியாது என நினைக்கின்றேன். எனவே இந்த குழுக்களின் லாபி (Lobby) இப்பரிசுகளில் தலையிடாது.

இந்த வருடத்திற்கான இக்-நோபல் பரிசுகளைப் பற்றி அறிய இங்கே அழுத்தவும். படித்து சிரித்து மகிழவும். பிறகு சிந்திக்கவும்

Tuesday, October 02, 2007

பிடாரி ஒத்துக்கொண்டது

இஸ்ரேல் எனும் சியோனிச நாடு ஐரோப்பா வாழ் யூதர்களுக்காகவென அராபியர்களை விரட்டிவிட்டு பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அண்டை நாடுகளையும் மிரட்டுவதோடல்லாமல், அவ்வப் போது அங்குமிங்குமாகப் படையெடுத்து பல லட்சம் பேர்களைக் கொன்றுள்ளது. 1967-ம் ஆண்டு நடந்த போர் கூட, உலக ஊடகங்கள் உலகுக்குக் கூறியதற்கு மாறாக, இஸ்ரேல் துவக்கியது தானாம். பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததோடல்லாமல், சிரியாவிடமிருந்து கொலான் சிகரங்களையும், எகிப்திடமிருந்து சில பகுதிகளையும், ஜோர்டானிடமிருந்து சில பகுதிகளையும், லெபனானிடமிருந்து (அந்த நாடு போரில் ஈடபடவில்லை யானாலும்) ஷீபா பண்ணைகளையும் கைப்பற்றியது.

பின்பு 70 களில் திரும்ப போரினைத்துவக்கி அண்டை நாடுகளை அல்லோலகல்லோலப் படச் செய்தது. அவ்வப் போது சூயஸ் கால்வாய் மீது உரிமை முழக்கம் செய்து எகிப்து மீது போர் மேகத்தினை மூட்டியது. 80 களில் லெபனான் மீது படையெடுத்து சப்ரா-ஷட்டிலா எனும் பாலஸ்தீன அகதிகள் முகாமைத் தாக்கி 2000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. சமீபத்தில் ஈரான் மீதும் அவ்வாறே வாய் சவடால் விட்டது.

உலக அமைதிக்கு எதிரான இந்த சியோனிச நாடு, ஒரு நாட்டின் போர் படைக்கூட அல்லாத "ஹிஸ்பொல்லாஹ்" எனும் ஒரு சாதாரண போர் குழுவினால் சமீபத்தில் மூக்குடைபட்டும், கடந்த காலங்களில் பெற்ற வெற்றித் திமிரினால் ஒரு மாதத்திற்கு முன்பு சிரியாவின் மீது வான் தாக்குதலைத் தொடுத்தது. சிரியா இதைப் பற்றி புகார் செய்தும் உலக நாடுகள் மெளனம் சாதித்தன.

அவ்வாறு செய்ததை "இல்லை என மறுக்காலாமா வேண்டாமா" என ஒரு மாத காலம் குழம்பி பின்பு ஏதொ ஒரு நிலைக்குத் தெளிவடைந்து, இப்போது அந்த பிடாரி ஒத்துக் கொண்டது. இவ்வாறு ஒத்துக் கொண்டு ஹெஸ்பொல்லாவிடம் தோற்று இழந்த "வலிமையான நாடு" எனும் மதிப்பை மீண்டும் பெற்று விடலாம் என நினைத்ததோ என்னவோ ?!! ஆனால் உடனே ஒத்துக் கொண்டால் உலக நாடுகளின் ஆமோதிப்புடன் சிரியா தன்னைத் திருப்பித் தாக்கக் கூடும் அபாயம் இருந்ததால் தனது ஒத்துக்கொள்ளலை ஒரு மாத காலம் தள்ளிப் போட்டதோ என்னவோ !! இவ்வாறு உண்மையை இருட்டடிப்புச் செய்ய முயற்சிக்கும் நாட்டிற்கு ஆதரவாக "வாய்மையே வெல்லும்" எனும் தலைப்பின் கீழ் வலைப்பதிவுகளில் எழுதுபவர்களைப் பற்றி என்ன சொல்ல ?

இதைப் பற்றி அல்ஜசீரா தளத்தில் படிக்க இங்கே அழுத்தவும்.

பிபிசி தளத்தில் படிக்க இங்கே அழுத்தவும்.

வழக்கம் போல அல்ஜசீரா-வின் செய்தி அறிக்கை என் பார்வையில் சிறந்தது.