Friday, February 03, 2006

கண்ணியமும் சுதந்திரமும்

நபிகள் அவர்களைப் பற்றி வரையப்பட்ட 12 கார்டூன்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய-கிழக்கு ஆசியாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அவைகள் டென்மார்க் நாட்டின் நாளேடு ஒன்றில் முதன் முதலில் வெளியானது. டென்மார்க் மீது தன் எதிர்பினை மத்திய கிழக்கு நாடுகள் தெரிவித்துக்கொண்டன. சில நாடுகள் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டனர். பல நாடுகளின் மக்கள் டென்மார்க் பொருட்களை வாங்க மறுத்தனர். டென் மார்க் இந்த நிலைக்குத்தள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், ஜெர்மனி, ஸ்பெயின், நார்வே, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள நாளேடுகளும் இந்த கார்டூனைப் பிரசுரித்தன. எனவே மேலும் இந்த எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. ஃபிரான்ஸ் நாளேடு தன் ஆசிரியரை நீக்கியுள்ளது.

கார்டூனுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு என்று தான் நானும் முதலில் நினைத்திருந்தேன். நபிகளை படமாக வரையக் கூடாது எனும் முஸ்லீம்களின் நம்பிக்கையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கலாம் என்றுதான் நானும் மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஆனால் பிறகுதான் அந்த கார்டூன்கள் எத்தகையவை என்பது புரிந்தது.

அவைகள் நபிகளை அவமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வரையப்பட்டுள்ளது என்று பிறகு தான் புரிந்தது.

அவைகளில் நபிகளை பயங்கரவாதி போல சித்தரித்து இருந்தனர்.

ஒரு கார்டூனில் அவருடைய தலைப்பாகை, வெடிகுண்டு போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

மற்றொன்றில் 'தற்கொலைப் படையினருக்கான பெண்துணைவியர்களுக்கு சொற்கத்தில் பஞ்சம் ஏற்பட்டுள்ள்து' என்று நபிகள் கூறுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

அந்த கார்டூன்களுக்கு விவேகத்தின் அடிப்படையில் வெளியீட்டாளர்களால் காரணம் கூற இயலாது என்று நான் நினைக்கிறேன். அதிகபட்சமாக அவர்களால் 'அது என் நாட்டிலிருக்கும் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு உட்பட்ட செயல்' என்று தான் கூற முடியுமே தவிர அந்த கார்டூன்களின் நோக்கம் யாது என்று அவர்களால் கூற இயலாது. அவைகள் கருத்துப்-படம் என்றால் ஏதாவது உண்மைக் கருத்தினைத் தாங்கியதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதற்கு காழ்புணர்வே காரணம் என்று நான் கருதுகிறேன்.

'ஏசுவைப் பற்றியும் அவ்வாறு எங்களால் வரையமுடியும்' என்று பத்திரிக்கையாளர்கள் கூறுவது இச் செயலுக்கான பதிலாகாது. 'ஏசுவையும், புத்தரையும் இவ்வாறு நாங்கள் வரைகிறோம்; எனவே முகம்மதே நீர் கவலைப் படவேண்டாம்' என ஃப்ரான்ஸ் நாளேடு சித்திரம் வரைந்திருந்தது.


இவ்வாறே விவேகத்தினால் புரிந்துக் கொள்ள முடியாதவாறு நபிகளின் மனைவியரைப் பற்றி விரசமாக சல்மான் ருஷ்டி எழுதினார். அதற்காக அவர் மீது விதிக்கப் பட்டுள்ள ஃபத்வா மீது மாற்று கருத்து நான் உட்பட பலருக்கும் உண்டென்றாலும், அவரது அந்த செயல் கண்டிக்கத்தக்கது, ஏனெனில் அது நியாயத்துடன் புரிந்து கொள்ள முடியாத ஒரு செயல்.


இது போல அனைவரும் அறிந்த மற்றொரு செய்தி, வான்-காஃப் அவர்களின் கொலை. அவர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளி தண்டனைக் குறியவன் என்பதில் எனக்கு கருத்து வேற்றுமைக் கிடையாது. ஆனால் இந்த கொலையைத் தன் காழ்புணர்வினால் தூண்டியது அவரும் அவரது பெண் நண்பியுமான அயான் ஹிர்சி அலியும் தான் என கொள்ள முடிகிறது. அவர்கள் எடுத்த திரைப் படத்தில் வரும் காட்சியான ஒரு நிர்வாணப் பெண் தன் உடலில் குர்ஆன் வாசகங்களை எழுதிக் கொண்டு வருவது விவேகத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளமுடியாத செயல். இதற்கு நெதர்லாந்து அரசு அவர்களைக் கண்டித்திருக்குமானால் இந்த கொலைக் குற்றத்திற்கு தூண்டப்படும் வெறித்தன்மைக்கு அந்த மொராக்கோ நாட்டு மனிதன் ஆளாகியிருக்க மாட்டான் எனக் கருதுகிறேன். அவர்கள் எடுத்த திரைப்படத்தின் நோக்கம் இஸ்லாத்தில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமையைப் படம் பிடிப்பதற்காக. ஆனால் அந்த நோக்கம் தவறி காழ்புணர்வில் அவர்கள் நுழைந்துவிட்டனர். வான்-காஃப் அவர்கள் இறந்தாலும் அயான் ஹிர்சி அலி காழ்புணர்வினைத் தொடர்வார் என்றே தோன்றுகிறது. இங்கே பார்கவும்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடந்த மற்றொரு செய்தியையும் நான் பகிர்ந்துக் கொள்ள நான் விழைகிறேன். இத்தாலிய நாட்டு பெண் எழுத்தாளரின் நிறவெறிப் புத்தகத்தினைத் தடுக்க முஸ்லீம்கள் வழக்குத் தொடர்ந்த பின்னும், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, புத்தகத்தினை அனுமதித்து விட்டனர். அந்த புத்தகத்தில் அவர், "முஸ்லீம்கள் எலியைப் போல புளுத்துவிட்டனர்; தினமும் ஐந்து வேளைத் தொழுது தன் ஆசனவாயை அந்தரத்தில் மிதக்கவிடுகின்றனர்" என்று கூறியிருந்தார். இருப்பினும் கருத்துச் சுதந்திரத்தைக் காரணம் காட்டி அந்த புத்தகம் அனுமதிக்கப் பட்டுவிட்டது. இங்கே பார்க்கவும்.

ஆகவே கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், கூறப்படும் கருத்துக்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று வரைமுறையும் விதிக்க வேண்டும்.

மனிதர்களுக்கும் சுதந்திரம், உரிமை, கண்ணியம் ஆகியவைகள் அனைத்தும் தேவை.

உரிமை மற்றும் கண்ணியத்தைக் குலைக்கும் சுதந்திரத்தையும், சுதந்திரத்தைப் பறிக்கும் உரிமைகளையும் ஒருவரோ ஒரு அமைப்போ கோரக்கூடாது.

25 comments:

சிறில் அலெக்ஸ் said...

சில சிந்தனைகள்...

நீங்கள் இஸ்லாமின் பேரில் நடக்கும் தீவிரவாதத்தை எதிர்க்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். எந்த பாவமும் செய்யாத அப்பாவி மக்களை இவர்கள் யார் பேரில் கொல்கிரார்கள், இஸ்லாம் மற்றும் நபிகள் பேரிலல்லவா? இஸ்லாமியர் பலரும் எதிர்க்கும் இந்த தீவிரவாதத்தைத்தான் கார்ட்டூனிஸ்ட் பலவாறாக வெளிப்படுத்தியுள்ளார்.

கன்னி மேரியை பிச்சைக்காரியாக உருவகித்து ஒருவர் கவிதை வரைகிறார் கேட்டால் அதற்கு அர்த்தமே வேறு என்கிறார். அதெப்படி அதற்கு மட்டும் உள்ளர்த்தம் பார்ப்பவர் இதற்கு நேரடி அர்த்தம் கொள்கிரார்?

உலகளவில் சகிப்புத்தன்மை சற்றுமில்லாததாக இஸ்லாம் உணரப்படுவதற்கு முதற்காரணம் கருத்துச் சுதந்திரத்திற்கு சிலர் போடும் தடை.

எந்த நம்பிக்கையும் கேள்விக்கப்பாற்பட்டதல்ல. மதங்களை விட, அவற்றின் கோட்பாடுகளைவிட கடவுளே பெரியவர்.

நபிகள் தான் இயேசுவைப்போல தானும் கடவுளாக்கப்படக்கூடாதென்பதற்காகத்தான் தன் படம் வரயப்படக்கூடாதென்றார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கார்டூன்களை யார் துதிக்கப் போகிறார்கள்?

Anonymous said...

வான் கோ கொலையை கூட நியாயப்படுத்த முஸ்லிம்களால்தான் முடியும். மதம், மதம், மதம் இதைத்தாண்டி வேறெதையும் சிந்திக்கவே மாட்டிர்களா?
சரி, அதெல்லாம் தூண்டி விட்டு செய்யப்பட்டது.

http://fjordman.blogspot.com/2005/11/death-of-samira-munir-accident-murder.html
http://www.flonnet.com/fl2302/stories/20060210000605800.htm

நார்வேயை சேர்ந்த சமீரா முனீரின் சாவு? வன்முறை தானா எல்லாவற்றிற்கும் தீர்வு?

மு மாலிக் said...

நன்றி அலெக்ஸ்,

கருத்துப் படத்திற்கு நேரடி பொருள் கொள்ளக்கூடாது என்று வரைமுறை விதிப்பதைவிட கருத்துப் படம் என்ன பொருள் கூறுகிறது என்றே நாம் பார்க்கவேண்டும். அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ. எப்பொருள் மிக அண்மையில் உள்ளதோ அதையே கொள்ளவேண்டும் என நான் கருதுகிறேன்.

தீவிரவாதத்தினை எதிர்ப்பவர்களில் ஒருவனாக என்னைத் தாங்கள் கருதியதற்கு நன்றி. நிச்சயமாக அத்தகையவர்களில் ஒருவன்தான் நான்.

//கார்டூன்களை யார் துதிக்கப் போகிறார்கள்?//

அலெக்ஸ், மேலை நாடுகளில் உள்ள எதிர்ப்பு துதிப்பதற்காக படங்கள் வரைந்துவிட்டார்கள் என்பதற்காக அல்ல.

மு மாலிக் said...

Anonymous,

தூண்டப்பட்டது என்று கூறினேனே தவிர, நான் கொலையைக் கண்டிக்கவே செய்தேன். மீண்டும் படிக்க. மேலும் அந்த கொலையைத் தூண்டப்பட்டது என்று நான் கூறியதை ஆமோதித்த தாங்களுக்கு நன்றி.

நான் இந்த பிரச்சனையைப் பற்றி மதம் எனும் கோணத்தில் பார்க்கவில்லை. மதச் சடங்குகளைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. கார்டூனாக வரையப் பட்டவரை சாதரண மனிதராகக் கொண்டே நான் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். இந்த தொனியில் கட்டுரையை மீண்டும் படிக்க கோருகின்றேன்.

சமீரா முனீரின் மரணத்தைப் பற்றி தாங்கள் கொடுத்துள்ள ஃபிரண்ட்லைன் கட்டுரைரையை வாசிக்கின்றேன். முதலில் அந்த ப்ளாக்ஸ்பாட் தொடுப்பினை வாசித்தபோது சற்று நம்பத்தயங்கினேன். அந்த வலைப்பதிவில் நான் படித்தபோது, "தனது அரசியல் கட்சியினரிடமிருந்து ஆதரவில்லாத காரணத்தினால் கூட அந்த தற்கொலை நிகழ்ந்திருக்கலாம். சர்ச்சைக்குறிய சூழ்நிலையில் இறந்திருக்கும் அவரின் சாவுக்கு காரணம் இஸ்லாமியத்தீவிரவாதிகள் தான் என்று கூறுவது முதிர்ச்சியற்ற செயல்" என்று நினைத்தேன். ஆனால் Frontline-ல் ஒரு நீண்ட கட்டுரை வந்திருப்பது என் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. இனிமேல்தான் தான் அந்தக் கட்டுரையை நான் வாசிக்கவேண்டும். நன்றி.

Thangamani said...

அன்புள்ள மாலிக்:

கண்ணியமான அணுகுமுறை என்பது எந்த விதயத்தைக்குறித்து அணுகுகிறோமோ அதைப் பொருத்து மாறுவதாக இருந்தால் அது உண்மையான கண்ணியம் ஆகாது என்பது என் கருத்து. ஏனெனில் உண்மையான கண்ணியம் என்பது பின்பற்றும் ஒரு கொள்கை அல்ல. மாறாக ஒருவரது இயல்பான வெளிப்பாடு. நிற்க.

பிறரது நம்பிக்கைகளை கண்ணியத்துடன் அணுகுதல்... எப்போதும் நம்பிக்கை பிறரது அங்கீகாரத்தைக் கோருகிறது. ஏனெனில் எல்லா நம்பிக்கையின் பின்னும் சந்தேகமே இருக்கிறது. அது எவ்வளவு ஆழமான நம்பிக்கையான இருந்தாலும் சரி. எனவே நம்பிக்கை மறுப்பாளர்களைப்பற்றிய பயத்தையும், அங்கீகாரம் பற்றிய ஏக்கத்தையும் எப்போதும் சுமந்தே திரிகிறது. நம்பிக்கை அதை நம்புகிறவர்களின் செயலால் பலமடைகிறது; சிறப்படைகிறது; சில சமயம் நலிவடைகிறது; கேலிக்கும் கண்டனத்துக்கும் ஆளாகிறது. ஆனால் உண்மையான அனுபவம் நம்பிக்கை போன்றதல்ல. அதற்கு இன்னொருவர் தேவையற்றவர். ஒருவரது அனுபவத்தை இன்னொருவருக்குத் தரமுடியாது என்ற புரிதலே அது இன்னொருவரது அங்கீகாரத்தைக்கோராது தன்னளவில் முழுமையாக இருக்கச்செய்கிறது. இந்த இடத்தில் அல்ஹிலாஜ் மன்சூரை உங்களுக்கு நினைவுக்குக் கொண்டுவருகிறேன். அது தான் அனுபவம் தருகிற அத்தாரிட்டி. அது சமய நூலகளையோ, சமூகத்தையோ, இன்னொருவரையோ அங்கீகாரத்துக்காக ஏறிட்டு நோக்காது. 'சாத்தானை வெறுத்து ஒதுக்குங்கள்' என்ற குரானின் வரிகளை (தனது பிரதியில்) அடித்த ஒரு பெண் சூபியைப் பற்றி நான் படித்திருக்கிறேன். அந்த சூபி சொன்னார், ' என்னால் அன்பு செய்யவே முடிகிறது; அது சைத்தானாக இருந்தாலும் என்னில் இருந்து அன்பைத்தவிர வேறொன்றை செய்யமுடியாது; இது என் அனுபவத்துக்கு மாறானது' இதுதான் அனுபவம். தங்களது நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டும், கண்ணியப்படுத்தப்படவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்; ஆனால் உண்மை காப்பாற்றுவதற்குரிய ஒன்றல்ல; அது எப்போது இருப்பது; யாருடைய தயவும், எதிர்ப்பும் அதைப்பொருத்த வரையில் சம்பந்தமில்லாதது. அதை அறிந்துகொள்கிறவன் மற்றவர்களின் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

நன்றி.

நிலா said...

//குற்றவாளி தண்டனைக் குறியவன் என்பதில் எனக்கு கருத்து வேற்றுமைக் கிடையாது. ஆனால்//

மாலிக்,

இந்த 'ஆனால்'தான் உறுத்துகிறது. என் அனுபவத்தில் இதுவரை ஒரு இஸ்லாமியர் கூட 'முழுமையாகக் கண்டிக்கிறேன்' என்று சொல்வதோடு நிறுத்தியதில்லை. ஆனால் என்று ஆரம்பித்து ஒருவகையில் நியாயப் படுத்தவே செய்கிறார்கள். அதுதான் ஏன் என எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

பிரச்சனைகளுக்கெல்லாம் வன்முறைதானா வழி? எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வன்முறையை முழுமையாகக் மறுதலித்தால்தானே மனிதம் வளரும்?

dondu(#4800161) said...

இந்துக் கடவுள் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த எஃப்.எம். ஹுஸேன் பற்றி உங்கள் கருத்து?

ஹுஸேனை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ந்டத்தியபோது அதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்ததும் பல இசுலாமியர்கள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்கள் செய்ததே.

கராத்தே ஹுஸைனீ பத்திரிகையாளர்களை அழைத்து அந்த நிர்வாண படத்திற்கு அழகாக உடையை எழுதிப் பொருத்தினார். பிறகு எஃப்.எம். ஹுசேனின் நிர்வாணப் படத்தையும் பெரிதாக வரைந்து டிஸ்ட்ரிப்யூட் செய்தார். அப்போதும் பலர் எதிர்த்து கூக்குரலிட்டனர்.

ஃஎப்.எம்.ஹுஸேன் என்ற ஒரு பேர்வழி செய்ததற்கு ஒரு இசுலாமியரும் கண்டனம் தெரிவித்ததாகத் தெரியவில்லையே.

இதற்கு என்ன சமாதானம்?

இப்பின்னூட்டம் என்னுடையத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். அங்கு வருகிறதா என்பதை சிரமத்தைப் பார்க்காது சோதனை செய்தே நீங்கள் இப்பின்னூட்டத்தை அனுமதிக்கவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு மாலிக் said...

நிலா,


தங்களுடைய வருகைக்கு நன்றி.

எனது வரியில் 'ஆனால்' எனும் சொல் இருந்தாலும், அது நீங்கள் பயப்படும் பொருளில் இல்லை என்று கூறிக் கொள்கிறேன்.

நிச்சயமாக, வன்முறை ஒரு தீர்வல்ல.

நான் கூறியிருந்தது அந்த வன்முறையைக் கையாள ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைத்தது போன்ற நிலை ஏற்பட்டது என்பதுதான். அந்த கண்டிக்கத்தக்க வன்முறையைக் கையாளும் மற்றும் அந்த வன்முறைக்கு பலியாகும் துரதிர்ஷ்டசாலிகள் உண்டென்பதுதான்.

குழப்பங்கள் நிறைந்த உலகத்தில் அனைத்து விதமான மாதிரிகளும் (samples) மனித சமுதாயத்தில் உண்டு. கெட்ட மாதிரிகளும் உண்டு என்று கொண்டே நான் எழுதினேன்.


தங்கமணி,

சிந்தனையைத் தூண்டும் உங்களுடைய பின்னூட்டத்திற்கு பிறகு பதிலளிக்கிறேன்.

மு மாலிக் said...

திரு டோண்டு ராகவன்,

அந்த துரதிர்ஷ்ட சம்பவத்தினை இங்கு நினைவு கூர்ந்ததற்காக நன்றி.

ramachandranusha said...

மதங்களை குறித்து பேசும்பொழுது எல்லாம் கண்ணியம் என்ற வார்த்தை தென்படுகிறது. இந்த கண்ணியத்துக்கு அளவு கோல் என்ன? சார்ப்பு நிலை என்பது எல்லாரிடமும் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு நண்பர் போனில் சொன்ன கருத்து இது. ஆனால் அளவுகள் மாறுகின்றன. சிலர் பொதுவில் விமர்சிக்கிறார்கள், சிலர் தங்கள் வட்டத்தில் பேசுகிறார்கள், சிலர்
முகத்தை மூடிக் கொண்டு எதையாவது மிக தைரியமாய் சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஆக சார்ப்பு நிலைமை என்று எல்லாருக்கும்
இருக்கிறது. என்னைப் போன்ற சிலர் இவைகளை அலட்சியப்படுத்திவிட்டுப் போனாலும், டோண்டு சார், ஏன் ஹ¥சேன் சரஸ்வதியை அவமானப்படுத்தியப் பொழுது நீங்கள் ஆட்சேபிக்கவில்லை என்னும் பொழுது, என் சார்ப்பு நிலைமை லேசாய் புன்னகைக்க சொல்கிறது.

முகத்தில் அறையும் உண்மையின் வீச்சு பலமானது. ஆதனாலேயே அதைக் கண்டு அஞ்சி ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

AATHAVAN said...

கலை என்ற பேரால் சரஸுவதியை உசேன் ஆபாசமாக வரைந்தப் பொழுது இசுலாமிய அறிஞர்களும் பத்திரிக்கையாளர்களும் கண்டித்ததாகவே ஞாபகம். 'இன்னொரு மதத்தின் கடவுளை இழிவுப்படுத்தக்கூடாது' என்று குர் ஆனில் இருப்பதாகக்கூட சொல்லியிருந்தனர். குறைந்தபட்சம், எந்த ஒரு இசுலாமியரும் அதை ஆதரித்ததாக நினைவில்லை.

கருத்துசுதந்திரம் என்ற பெயரில் ஆதரித்தவர்களில் அதிக அளவு இந்து பெயர் கொண்டவர்களும், சில கிறித்த பேராளிகளும் ஒரு சில முசுலிம் பேர் தாங்கிகளும் அடங்குவர். மதத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுவதாக சொல்லிக்கொள்ளும் அவர்களை எல்லாம் அந்த மதத்தில் நாம் திணித்து வைத்திருக்க வேண்டியதில்லை.

கருத்து சுதந்திரம் ஆயினும் ஒரு எல்லை உண்டு தானே.
'கருத்து சுதந்திரம்' என்ற பெயரில்/சாக்கில் தனிமனிதரோ, அல்லது மனித திரளோ காயப்படுத்தப்படும் போது அந்த காயத்தை துடைப்பது தான் மனித நேயம் மிக்கவர்களின் செயலாக இருக்க முடியும். இந்த மாதிரி நேரங்களிலும் 'சக மனித உணர்வு காயப்பட்டாலும் கவலையில்லை, 'கருத்து சுதந்திரம்' தான் முக்கியம் என்றால் அது வக்கிரத்தை வெளிக்காட்டுவதாகவே அமையும்'

மு மாலிக் said...

அன்புள்ள தங்கமணி, உங்கள் பின்னூட்டத்தின் பொருள் ஆழத்தினைப் பார்த்தேன்.

என்னால் எழுதப்பட்டது, ஒரு நம்பிக்கை பற்றிய விஷயம் என்றும் அது அங்கீகாரத்தை கோருகிறது என்றும், அனுபவம் நம்பிக்கையுடன் ஒத்து போகும்போது பலப்பட வாய்ப்புள்ளது; இல்லாவிட்டால் நலிவடைகிறது என்றும் கூறியுள்ளீர்கள்.

அவ்வாறு நம்பிக்கை தன் அனுபவத்துடன் ஒத்துபோகாமல் இருக்க நேர்ந்ததைக் கண்ட இரு உதாரணங்களைக் கூறியுள்ளீர்கள்.

நன்றி.

நம்பிக்கை என்ற கோணத்தில் இந்த கட்டுரையைத் தாங்கள் கண்டுள்ளீர்கள் என்பதை அறிகிறேன்.

இங்கு நபியை நம்பிக்கையின் அடிப்படியிலான பாத்திரமாக இங்கு முன் நிறுத்துவதைவிட, ஒரு வரலாற்றுப் பாத்திரமாகவும் காணலாம். ஏனெனில் அவரது வாழ்க்கைக் குறிப்புகள், அவரது தோழர்கள் அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தன்மை ஆகியவை அவரது வாழ்க்கையினை 'உண்மையில் நடந்த வரலாறு' எனும் அந்தஸ்தைத் தருவதாக நினைக்கிறேன். இவ்வாறு இத்தகைய மனிதர் வாழ்ந்தாரா இல்லையா எனும் சர்சைக் குறிய வாழ்க்கையல்ல முகம்மதுவினுடையது. அவ்வாறே ஏசு மற்றும் புத்தருடையதும்.

ஒரு சமூகத்தில் செயலாற்றிய ஒரு நபரின் மீது இருக்கும் மதிப்பினை ஒத்த செயலாக, நபியின் மீது உள்ள மதிப்பினைக் கருதலாம்.

இது முற்றிலும் நம்பிக்கையை மட்டுமே பற்றிய விஷயமாக நான் இதைக் கருதவில்லை.

மற்றபடி நம்பிக்கையின் அடிப்படையிலேயே மட்டும் செய்யும் செயல்களுக்கு என்னிடமிருந்தும் ஆதரவிருக்காது. அந்த விதத்தில் நானும் உங்களுடைய பக்கம்தான்.

மு மாலிக் said...

நிலாராஜ்,

உங்களுடைய வாழ்த்து கிடைத்தது. ஆனால் எதோ காரணத்திற்காக எனது inbox-ல் தாமதமாக டெலிவெரி யானது. publish-எனும் பித்தானை அழுத்தியும், ஏதோ ஒரு கோளாறினால் உங்கள் பின்னூட்டம் இங்கு தெரியவில்லை.

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

மு மாலிக் said...

ராமச்சந்திரன் உஷா,

உங்களுடைய பின்னூட்டத்திற்கு எப்போதோ பதில் கூறி இருந்தேன். என் வலைப் பதிவில் ஏதோ கோளாறு உள்ளது என நினைக்கிறேன். நான் அளித்தபதில் எவ்வாறோ இங்கு தோன்றாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் இங்கே நான் கூறுகிறேன்.

நான் கண்ணியம் என்று பயன்படுத்திய சொல்லை எவ்வாறு புரிந்துக் கொண்டீர்கள் என எனக்குப் புரியவில்லை. சுருக்கமாக எழுதவேண்டும் என்பதற்காக நான் எழுதிய வரிகள் தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறதோ என நினைக்கிறேன். சற்று தெளிவுடன் நான் இங்கு கூற நினைக்கிறேன்.

"பத்திரிக்கைகள் கண்ணியத்துடன் நடந்துக்கொள்ளவேண்டும்" என்று பொருள்பட நான் இங்கு கூறவில்லை. பத்திரிக்கைகளுக்கு அந்த வரைமுறையை நான் விதிக்க முற்படவில்லை. இந்த புரிதலிலேயே தங்கமணி அவர்களும் தனது பின்னூட்டத்தின் முதல் பத்தியை எழுதியுள்ளார் அன்று நினைக்கிறேன். கண்ணியத்தைப் பற்றி அவர் கூறுவதுடன் நான் முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன்.

மேலும் ஒருவர் கூறவரும் கருத்தை கண்ணியத்துடனோ அல்லது கண்ணியமற்ற முறையிலோ கூறுவதில் எந்தவித தவறும் இல்லை. அவர் கூற்று சரியானதாக இருந்துவிட்டால் போதுமானது. அவைகள் வரவேற்கப்படும்.

மீண்டும்,

'பத்திரிக்கைகள் கண்ணியத்துடன் நடந்திருக்க வேண்டும்', என்பதல்ல என் வாதம்.

ஒருவர் மீது இருக்கும் (அல்லது இருப்பதாகத் தோன்றும்) கண்ணியத்தை சரியான காரணமின்றி குலைக்க முற்படும் சுதந்திர துஷ்பிரயோகம் கூடாது என்பதே என் வாதம்.

மேலும்

'பத்திரிக்கைகள் கண்ணியத்துடன் நடந்துக் கொள்ளவேண்டும்' என்று நான் கூறினால் தான் 'எந்த அளவிற்கு கண்ணியத்துடன் நடக்கவேண்டும்' என்றும் நான் கூறியாக வேண்டும். நான் அவ்வாறு கூறவில்லை. 'பிறருடைய கண்ணியத்தைக் (சரியான காரணமின்றி) குலைக்க வேண்டாம்' என்றே நான் கூறுவதால் நான் அதற்கான அளவினை நான் நிர்ணயிக்கத் தேவையில்லை. அது எந்த அளவிற்குட்பட்ட கண்ணியமாக இருந்தாலும் சரி.

மேலும் மதம் என்ற கோணத்தில் நான் இந்த கட்டுரையை எழுதவில்லை என்பதை மேலே கேள்வி கேட்ட மற்ற அன்பர்களுக்கு கூறிய பதிலைத்தான் இங்கும் உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.

வருகைத் தந்ததற்கும், உங்களுடைய நேரத்திற்கும் நன்றி.

Thangamani said...

மாலிக் நன்றி. நபிகளைப் பற்றிய கேலிச்சித்திரங்களில் சில உண்மையில் வரம்புமீறியவையே. அதாவது நபிகள் என்பவரை முழுக்க கற்பனைப்பாத்திரம் என்றுகொள்ள இயலாது. ஒப்பீட்டளவில் மற்ற சமயத்தலைவர்களைவிட அவரைப்பற்றியே அதிக அளவு தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. எனவே நபிகளைப் பற்றிய பொய்யான கருத்தை (விமர்சனத்தை அன்று) விதைப்பது வரலாற்றைத் திரிப்பதே ஆகும். ஒரு நம்பிக்கையை வளைப்பது போன்று சில வரலாற்று நிகழ்வுகளை (நபர்களை) தமது விருப்பத்துக்குஏற்ப எழுத முடியாது; அங்கு நமது கற்பனைக்கு ஒரு வரம்பு உள்ளது. அந்தவிதத்தில் நபிகளை வன்முறையாளராகச் சித்தரிக்கும் ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் வரம்புமீறியவை. ஒரு அரசியல் தலைவராக மட்டும் நபிகள் இருந்திருந்தால் கூட இந்தக்கேலிச்சித்திரங்கள் வரம்புமீறியவைதான். இப்படி பல தலைவர்களையும் தத்தமது நோக்கங்களுக்காக கேலிக்கும், இழிவுக்கும் ஆட்படுத்தும் விதத்தில் வரையவும், எழுதவும் பலர் முனைவதும் இயல்பு. அதற்குப்பின் அவர்களது அரசியல் நலன் உள்ளது. பெரியார், காந்தி போன்ற பலரது உருவங்கள் அப்படி செய்யப்பட்டிருக்கின்றன.

மறுபுறம் நபிகள் ஒர் ஆன்மீகத் தலைவர் என்ற நிலையில் அவரது நிலை ஒரு நம்பிக்கைக்குள்ளேயே வருகிறது. அப்போது மற்ற நம்பிக்கைகளைக்கு உண்டான நிலையே. அதாவது மற்ற உருவங்களை இகழ்வதும் நபிகளை இகழ்வதும் ஒன்றே என ஆகிறது. நம்பிக்கை என்ற வட்டத்துக்குள் நபிகள் ஒரு வரலாற்றுப் பாத்திரம் அல்ல. அங்கு கற்பனை (நம்புகிறவரின்) முதன்மை பெறுகிறது.

எனவே இந்த சமீபத்திய கேலிச்சித்திரங்கள் விதயத்தில் நபிகள் யார் என்பதை முடிவு செய்யவேண்டியதும் அவசியம். எனவே நபிகளை இழிவுபடுத்துவதற்கான பதிலும் அந்தத் தளங்களிலேயே (அரசியல்-வரலாறு மற்றும் நம்பிக்கை)தரப்படுதல் வேண்டும். அப்படிப்பார்த்தால் சரஸ்வதி ஒவியத்தோடு நபி கேலிச்சித்திரங்களை முழுமையாக ஒப்பிடமுடியாது.

நிற்க.

நபிகளை தமது கருத்தால் (அரசியல்), நம்பிக்கையால் இழிவு செய்பவர்கள் மாற்று மதத்தவர்கள், பத்திரிக்கைகள் மற்றும்தானா என்பது இன்னொரு கேள்வி. இஸ்லாம் பெயரில் செயல்படும் தீவிரவன்முறையாளர்கள், பெண்ணடிமைக்காரர்கள், பன்முகத் தன்மையைக்குலைக்கும் சிந்தனையாளர்கள், மத அடிப்படைவாதத்தை அல்லாவின் பெயரிலும், நபிகளின் பெயரிலும் சுவாசிக்கும் நபர்கள் நபிகளை, அல்லாவை இழிவு செய்வதில்லையா என்பதைப் பற்றி கேள்வி எழுப்பவேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு இஸ்லாமியர்கள் எப்படி முகம் கொடுக்கிறார்கள், அதை எப்படி கண்டிக்கிறார்கள் இதுவும் புறத் தாக்குதல்களைவிட முக்கியமானது. புறசமயத்தினரின் இஸ்லாம் மேலான தாக்குதல்களை நிர்ணயிப்பதில் இந்த விதயமும் முக்கியமானதாக இருக்கிறது.

ஆனால் ஒரு நம்பிக்கை பலமாகலாம்; எந்த நேரத்திலும் நிஜமாகமுடியாது என்பது எல்லா நம்பிக்கையாளரும் நினைவிற்கொள்ள வேண்யது. எனவே ஒரு நபிகளின் மேலான தாக்குதலை ஒரு வரலாற்று/ அரசியல் பாத்திரத்தின் மேல் செய்யப்படும் திரித்தல் என்ற அளவிலேயே பார்த்தலும் எதிர்வினையாற்றுதலும் சரியானது என்று நினைக்கிறேன். அப்படியான திரித்தல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் போதும் எதிர்வினை ஆற்றுவது மிகவும் அவசியமானது ஆகும்.

Thangamani said...

மாலிக், இவ்விதயம் குறித்த தமிழ்சசியின் பதிவு:
http://thamizhsasi.blogspot.com/2006/02/blog-post_05.html

மு மாலிக் said...

That is very true Thangamani,

There should be persons to condemn the irresposible actions (or sometimes the actions with resposibility to serve the personal gains) of Muslims too. I completely agree with you.

And thanks for the link you provided. It is a good one.

மு மாலிக் said...

That is very true Thangamani,

There should be persons to condemn the irresposible actions (or sometimes the actions with resposibility to serve the personal gains) of Muslims too. I completely agree with you.

And thanks for the link you provided. It is a good one.

Babble said...

இது போன்ற ஆரோக்கியமான விவாதங்களை காண்பதே அரிதாகிவிட்டது. நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

நண்பன் said...

// கன்னி மேரியை பிச்சைக்காரியாக உருவகித்து ஒருவர் கவிதை வரைகிறார் கேட்டால் அதற்கு அர்த்தமே வேறு என்கிறார். அதெப்படி அதற்கு மட்டும் உள்ளர்த்தம் பார்ப்பவர் இதற்கு நேரடி அர்த்தம் கொள்கிரார்? //

இது குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறேன் - நீங்கள் வந்து வாசிக்கவில்லை என்றால் அது என்னுடைய தவறு கிடையாது.

மீண்டும் ---

கன்னிமேரியைக் கவிதையில் கொண்டு வருவதற்கு - அந்தப் பாத்திரப் படைப்பை சரியான முறையில் பிரதிபலிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது தான் - யாசிக்கும் தோற்றம்.

எதை யாசிக்கிறார்?

தன் மகனுக்கு ஒரு கௌரவமான வாழ்வு. அது தான் கவிதையின் சாராம்சம். அதை தவறவிட்டு விட்டு, பிச்சை என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டிருப்பது - விதண்டவாதத்திற்குப் பயன்படுமே தவிர, வேறு எதற்கும் அல்ல.

மேரியின் - அன்னை என்ற வடிவத்தித்குரிய வெளிப்பாடு தான் அது. நீதியை யாசிப்பது. ஒரு ஜான்சி ராணி போல் குதிரை மீதேறினார் - வாள் சுழற்றினார் என்றோ, பாஞ்சாலி போல அவிழ்ந்த கூந்தல் முடியேன் என்று சூளுரைப்பதோ - மேரி மாதாவின் பாத்திரப்படைப்புக்குப் பொருந்தாது. அதே போல, கிறிஸ்துவ மதத்தின் தாத்பாரியமான, அன்பு என்ற வடிவத்தை ஒட்டி தான், பாத்திரப்படைப்பு அமையுமே தவிர, வேறு விதமாக அல்ல.

இதை மறுதளிப்பது மூலம், நீங்கள் இயேசுவின் மீது வாரிக் கொட்டப்படும் அவதூறுகளை ஆமோதிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. வறட்டு வாதத்திற்காக வாதிப்பது உண்மையான நோக்கங்களை புறக்கணிக்க வைக்கும்.

வேறென்ன சொல்ல?

rahini said...

ARUMAIYAANA THOKUPU,
vaalththukkal.
rahini

மு மாலிக் said...

Babble, நண்பன் மற்றும் ராகிணி ஆகிய உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

savithri kumaran said...

ungaludaiya vivathangalai padithen
migavum arumai
kattayamaga ini mel vimarczanangalai anuppukiren

savithri kumaran said...

vazthugal

savithri kumaran said...

vazthugal