Tuesday, January 31, 2006

மார்கழிக் குருவி

முத்து தன் வாயில் நுரை நிரம்ப பல் துலக்கிக் கொண்டிருந்தான். பள்ளியினைக் காரணம் காட்டி அவனது தாய் அவனை விடிகாலையிலேயே எழுப்பிவிடுவது வழக்கம். அன்றைய விடுமுறை நாளிலும் எழுப்பப்பட்டிருந்தான். வீட்டின் கொல்லைப் பகுதியில் உலாத்தியவாறு பல் துலக்கிவிட்டு தெருவில் உள்ள திருகு பைப்பில் வாய்-முகம் கழுவி விட்டு வரும் செயல் எல்லா நாட்களிலும் மாறாததொன்று.

பல்வேறு காட்சிகள் 'என்றும்போல் இன்றும் குதூகலமான நாள்தான்' என்பதை உணர்த்துவது போல் அன்று காலையும் நிகழ்ந்தன: கதிரவன் தெரியாவிட்டாலும் ஏற்பட்டிருக்கிற வெளிச்சம்; வேலிக்கு அப்பால், வாய்க்காலின் கரைகளில் அமர்ந்திருக்கும் குருவிகள்;

மேலும், எப்போதும் போல் இல்லாமல்.... சற்று வித்தியாசமாகத் தென்னவோலைகளினூடே காணப்பட்ட அப்பறவை.

அதனை அன்றைக்கு முன் அவன் கண்டிருந்ததில்லை. நீண்டவாலுடன் காப்பிக்கொட்டை நிறத்திலிருந்த அது. அவனுடைய ஆவலைத் தூண்டியது. மட்டைகள் மறைக்காவண்ணம், வைக்கோல் போரின் மீதேறி அதனை முழுமையாகக் கண்டான்.

'வாசுகி வகுப்பிற்கு அடிக்கடி அணிந்துவரும் உடையின் நிறத்திலேயே'.

வாயிலிருந்த நுரையை வேலிக்காலில் உமிழ்ந்து விட்டு தன் தாயிடம் சென்று அப்பறவையைப் பற்றிக் கேட்டான். அவனது தாய் அதில் சிரத்தைக் கொண்டவளாகத் தெரியவில்லை. தொலைவிலிருந்தே அதைப் பார்த்துவிட்டு,

' அது ஒரு வெளிநாட்டுக் குருவி'.

இந்த பதில் அவனது வியப்பைத் தூண்டியது.

'அப்படீன்னா ?'

'மார்கழி மாசம் வந்துடிச்சுன்னா, இப்படித்தான் பல பறவைகள் வர ஆரம்பிக்கும்'.

அவனது சிந்தனையும் கற்பனையும் மிக வேகமாகத் தூண்டப்பட்டன.

தனது மனதினுள், 'இருக்கலாம் வெளிநாட்டுக் காரர்கள் சுற்றுலா பேர்வழிகள் என்று டீச்சர் கூறியிருக்காங்களே !' என்று நினைத்தவாறு வாய் மற்றும் முகத்தினை கழுவினான்.

'போயும் போயும் நம்ம ஊருக்கு வந்திருக்கே ! வெளி நாட்டினர் நேர்த்தியான வாழ்க்கை முறையினை உடையவர்களாம். இன்னிலையில் நம்மைப் பார்த்துவிட்டு என்ன நினைக்குமோ ?!'

ஒரு டம்ளர் காஃபியை எடுத்துக்கொண்டு அதனைக் கவனித்தான் முத்து. அது சுள்ளிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி அருகிலிருந்த பூவரசன் மரத்தில் கூடு சேர்க்க ஆரம்பித்திருந்தது. அது அங்கு தங்கப் போகிறது என்பதை அறிந்து முத்து உள்ளம் பூரித்தான். அவனது எண்ணமும் கண்களும் அந்தப் பறவையைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது.

'கீரிப்பிள்ளையினால் தொந்தரவு வருமோ...?! ஆனால் இது மரத்து மேலேயில்ல இருக்கு. கீரிப்பிள்ளைக்கு மரம் ஏறத் தெரியுமா ?'

அவனது சேவல் சென்ற கோடையில் கீரிக்கு இரையாகியிருந்தது; ஒரு மதிய மழையின் முடிவில்; வேலிக்கு அருகில்.

ஒவ்வொரு நாட்களும் பள்ளிக்கு போவதற்கு முன்னும், பள்ளியிலிருந்து வந்த பின்னும், அதன் செயல்களைக் கவனிப்பது அவனது பொழுதுபோக்கு ஆகிவிட்டது. அதனுடைய கவனத்தைத் தன்னை நோக்கி ஈர்ப்பது அவனுடைய நோக்கங்களில் ஒன்றும் ஆகிவிட்டது. அது எப்போதாவது எழுப்பும் ஒலியை இவனும் எழுப்புவான். அது உண்ண மறுத்தாலும், தானியங்களை அதனை அழைத்தவாறு தெளித்து தன் அன்பினை வெளிப்படுத்திக் கொள்வான்.

'ரொம்பத் தான் கரிசனம் காட்டாதே. கொஞ்ச நாட்களில் அது இங்கிருந்து போயிடும்'. இது இவனது தந்தையின் கூற்று. தந்தை எப்போதும் இவனது எண்ணத்திற்கு முரனாகவே எப்போதும் கூறுவதாக இவனது கணிப்பு; 'எதுப்பா வெற்றிபெறும் ? ரயிலா ? கிரேனா ?' என்று இவன் கேட்டிருந்தபோதும் கூட.

வாரங்கள் பல சென்றன. குளிர்காலம் அவர்களை விட்டுச் சென்றுகொண்டிருந்தது. அப்பறவையும் தான் வழமையாக்கிக் கொண்டிருந்த தன் வாழ்க்கையினைத் தொடந்து கொண்டிருந்தது.

தனக்காகத் தான் குளிர்காலத்திற்குப் பிறகும் அது அங்கு தங்கியிருப்பதாக அவன் நினைத்தான். தனது நட்பினை அப்பறவைத் தெரிந்துக் கொண்டது என்பது போல் உணர்ந்தான்.

இருப்பினும் அதன் தனிமையிலும் அவன் அக்கறைக் கொண்டவனாக இருந்தான். கொல்லைக்கு விளையாட வரும் தன் நண்பர்களின் சந்தடி அப்பறவையின் இயல்பான வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்வான். பெரும்பாலான சமயங்களில் தன் தந்தை உறங்குவதாக அவர்களிடம் கூறி அவர்களை அனுப்பிவிடுவான். அல்லது சத்தம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வான்.

அவனது நண்பன் வேலு தன் கழுத்தில் கவண் ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு முத்து வீட்டின் கொல்லைக்கு வரும்பொழுதெல்லாம் இவன் சற்று பயத்துடனே அவனுடன் சுற்றிக் கொண்டிருப்பான். வேலு கொள்ளைப் புறத்திற்கு செல்வதோடல்லாமல் அங்குள்ள மரங்களையும் நோட்டமிடுவது அவன் இயல்பு. அவனது கவண்-குறி எப்போதும் தப்பிவிடும் என்றாலும் முத்துவிற்கு சற்று பயம் இருக்கத்தான் செய்தது.

வேலுவிடம் அவனுக்குப் பிடிக்காத மற்றொன்று அவனது பிடிவாத வாதம். பறவைகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்று முத்து ஒரு சமயம் கூறியிருந்தபோது 'குட்டிப் போட்டுப் பாலூட்டும் பறவைகளும் உண்டு' எனும் வேலுவின் வாதத்திற்கு நண்பர்களின் ஆதரவு வேறு.

அப்பறவை அங்கு வாழ்ந்துவருவதை அவர்கள் அறிந்து கொள்ளாதபடி அவன் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், அவர்களிடமிருந்து பல நாட்கள் மறைக்க முடியவில்லை. ஒரு விடுமுறை நாளின் போது அதனை அவர்களே கண்டறிந்துவிட்டனர். ஆனால் முத்து, தான் அதன் மீது அன்புடையவன் என்பதை மட்டும் காட்டிக் கொள்ளவே இல்லை. அது அவர்களுக்குத் தெரியவந்தால் முத்துவினை இட்டு அழைப்பதற்கு ஒரு பட்டப் பெயரினைக் கண்டறிந்துவிடுவார்கள்.

நண்பர்களின் கேள்விகள் பல எழுந்தன.

'எத்தனை நாட்களாக இது இங்கே இருக்கு ?'

'இரண்டு நாட்களாகத் தான் தென்படுது.' - முத்து

'இதோட கூடு எங்கே இருக்கு'

'யாருக்குத் தெரியும் ?!' - முத்து

'இது எங்கிருந்து வந்திருக்கு. நாம இந்த மாதிரிப் பறவையைப் பார்த்ததே இல்லையே !'

'அடச் சீ .. நான் எத்தனை முறை வருடம் முழுவதும் நம்ம பள்ளிக்கூடத்திலிருக்கிற ஆலமரத்துல பார்த்திருக்கிறேன்!! இது ஒரு சாதாரணமான பறவைத் தான்' - முத்து.

ஒரு வழியாக அவர்கள் அனைவரையும் சமாளித்ததும், மதிய உணவிற்காக அவரவர்கள் வீட்டிற்குச் சென்றனர். இவனது உண்டியும் நிறைவுற்றது. அவனது எண்ணம் அப்பறவையை வலம் வந்துக் கொண்டேயிருந்தது.

'இவர்கள் அனைவரும் அதனைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டால், அப்பறவை தன் இடத்தை மாற்றிவிடுமே ! இல்லை, மாற்ற வாய்ப்பில்லை. இது இங்கிருப்பதே நமக்காகத் தானே - இந்த கோடையில் கூட தன் ஊருக்குச் செல்லாமல்.'

தன் தாயின் வற்புறுத்தலால் அன்று மதியம் உறங்கினான் முத்து. அது, அவனது நண்பர்களைச் சமாளித்த களைப்பின் காரணமாக, அன்று மாலை வரை நீண்டிய உறக்கமாக இருந்தது. இது போன்ற மதிய உறக்கத்தினை பண்டிகைகளின் போது மட்டுமே உறங்கியிருக்கின்றான்.

உறங்கி விழித்தபோது, இலேசான தூறல் ஒன்று தூறி விட்டிருப்பதைக் கண்டான். அந்த பொழுது அவனுக்கு ஒரு மதிய மழையின் முடிவில் முன்பு கீரிக்கு இரையாகிவிட்டிருந்த சேவலையே ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.

ஓடிச் சென்று, வைக்கோல் போரின் மீதேறி, பூவரசன் மரத்திருந்த அதன் கூட்டைப் பார்த்தான். அது அங்கு காணப் படவில்லை. கொல்லையில் உள்ள மற்ற மரங்களிலும் கூர்ந்து தேடியும் அது தென் படவில்லை. வெகு நேரம் பொறுத்திருந்தும் அது தென் பட வில்லை. மனம் அலங்கலாய்த்தது.

'கீரி கொண்டு சென்றிருக்குமோ ? அது மரம் ஏறி நான் பார்த்ததில்லையே ! வேலி வழியாகத்தான் வரும்.'

அந்த சேவலைப் பற்றிய நினைவுகள் சில மணித்துளிகள் அவனை ஆக்கிரமித்த பின், மீண்டும் அந்த பறவையைப் பற்றிய நினைவுக்கு வந்தான் முத்து.

'எங்கே அந்த பறவை இரைத் தேடிச் சென்றிருக்குமோ ?'

மனம் பல திசைகளில் அலைந்தது. ஊருக்கு வெளியில் உள்ள மரத்தில் தன் நண்பர்களுடன் ஒரு நாள் கண்ட பருந்தும் ஞாபகத்திற்கு வந்தது. மாலையில் திரும்பாத அப்பறவை அடுத்த நாளும் காணப்படவில்லை.

'நண்பர்கள் அதனைக் கவனித்ததுதான் காரணமா ? இடத்தை மாற்றிவிட்டதா ? இருக்காதே ! அல்லது கீரியா ?' அவன் மனம் மீளவில்லை.

'அது தன் ஊருக்கே சென்றுவிட்டதாக அம்மா சொல்றாங்களே ! உண்மையா இருக்குமோ ? அம்மா சொல்ற மாதிரியே நடந்திருந்தால், நன்றாக இருக்குமே !'

அவனது சிந்தனை அவனருகில் அவனது தாய் வந்து நின்றதுகூட தெரியாமல் சென்றுக் கொண்டிருந்தது.

' இந்தாடா.. முத்து, இந்த காஃபியைக் குடிச்சிட்டு எழுந்திரு', என்று டம்ளரை அவனருகில் வைத்துவிட்டுச் சென்றாள் அவனது தாய்

4 comments:

Thangamani said...

மாலிக், உங்களிடமிருந்து இன்னொரு நல்ல கதை. முத்து வாசுகியையும், டீச்சரையும் பறவையோடு நினைவு கூர்வது நல்ல முயற்சி.

மு மாலிக் said...

தங்கமணி, நன்றி. மின்னல் பொங்கல் இதழிலில் நான் ஒன்றும் எழுதவில்லை. நான் பிரேம் அவர்களிடம் உங்கள் ப்ளாகிலிருந்து multiculturalism பற்றிய பதிவுகளை முன் மொழிந்தேன். அவர் உங்களுடைய பழைய ப்ளாகிலிருந்து எதையோ எடுத்து போட்டிருப்பதாகக் கூறினார். இன்று மாலைதான் மின்னல் வெளியிடப் படவுள்ளது.

மணிமொழி said...

மாலிக், கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மெல்லிய உணர்வுகளை பளிச்சென்று சொற்களால் படம்பிடித்துக் காட்டுவது சிறந்த கலை. அது உன்னிடன் நிறையவே இருக்கிறது.

முத்து.

மு மாலிக் said...

நன்றி முத்து.