Sunday, April 30, 2006

மூழ்கியது

நேற்று, 'Drowned out' (மூழ்கியது) எனும் ஆங்கில குறும் படம் பார்க்க நேர்ந்தது. இது ஃப்ரானி ஆர்ம்ஸ்ட்ராங்க் (Franny Armstrong) அவர்களால் இயக்கப்பட்ட படமாகும். இது நர்மதா பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து அங்கு வாழும் எளிய மக்களை, அவர்களுக்கு மாற்று-நிலம், தகுந்த நிவாரணங்கள், ஆகியவைகளின்றி வெளியேற்றப் பட்ட, உண்மை நிலவரத்தை மறுக்க முடியாத பல காட்சிகளைக் கொண்டிருந்தது. 'தனது நோக்கத்திற்காக புனையப் பட்டப் படம்' என்று சிறிதும் ஐயம் கொள்ள முடியாத குறும்படங்களில் இதுவும் ஒன்று. பாசனவசதி, குடிநீர் திட்டம், நீர் மின் திட்டம் ஆகியவைகளைக் காரணம் காட்டி, இந்தத் திட்டங்களிலிருந்து விடப்படும் கான்டிராக்ட் / ஒப்பந்தங்களிலிருந்து அடிக்கப் படும் கமிஷன் / ஊழல்களுக்காக எளியமக்களை எள்ளி, 'அவர்கள் உரிமை எங்கள் கையில்' எனத் தாண்டவம் ஆடுபவர்களின் கோரத்தினை வெளிப்படுத்தியிருந்தது. இந்த எளியவர்களின் நலனின் மீது அக்கரையில்லாத (அல்லது அவர்களின் அவலத்தை தியானம் செய்யும்) 'தேசிய'வாத கும்பலின் புரட்டுகளையும் அம்பலப்படுத்தியிருந்தது. அந்த மக்களுக்காகப் போராடும் மேதாபட்கரையும், அருந்ததிராயையும் கேலிசெய்து எனது தோழர்களிடமிருந்து வரும் புரட்டு மின்னஞ்சல்களின் தன்மையை சொல்லியது. 'தேசிய'வாத கும்பலை 'உழைக்கும் எறும்புகள்' என்றும் அருந்ததிராயை 'சோம்பித்திரியும் வெட்டுக்கிளி'யென்றும் புனைந்து மின்னஞ்சல் பரப்பி மனப்புலங்காகிதம் அடைந்து வருபவர்களின் புரட்டுகளை வெளிப்படுத்தியிருந்தது.

காண்பதற்குக் குளிர்ச்சியாக இருக்கும் பசுமையான பகுதியினை மூழ்கடிக்கும் திட்டம் இந்த அணைக்கட்டுத்திட்டம். இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு ஒருபுறம். அந்த பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களுக்கான பாதிப்புகளை மட்டும் இந்த திரைப்படம் படம்பிடித்திருந்தது. வெளியேற்றப்பட்டவர்களுக்கு கொடுக்க தன்னிடம் நிலமில்லை என அரசே சொல்லும் அவலம் கேட்கக் கொடுமையாக இருந்தது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒன்றும் புனிதமானவர்களில்லை என்று விளங்கியது. இந்த திரைப்படம் தன் ஊடே அணையின் 'புகழை'ப் பற்றிபேசும் ஒரு அரசு பணியாளரின் பேட்டியினையும், இத்தகைய மற்றொருவரின் தற்குறிப்பேற்ற அணி விளக்கத்தினையும், அதே சமயத்தில், அவைகள் அனைத்தும் புரட்டுகள் எனும் உண்மை நிலையையும் கொண்டிருந்தது. அவ்வாறு உண்மைநிலையை விளக்கியவாறு செல்லும் போக்கிலேயே, இந்த அணைத்திட்டத்தினைப் புகழும் அரசு தரப்பு திரைப்படத்தில் வரும் காட்சிகளையும் இந்த படம் கொண்டிருந்தது. அப்போது அரசு திரைபடத்தில் வரும் கிராஃபிக்ஸ் நிறைந்த காட்சிகளையும் அதன் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளையும் பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் எங்களுக்குள் நகைத்துக் கொண்டோம்; அவ்வப் போது துறுத்திவரும் கண்ணீரின் ஊடே.

இந்த திட்டத்திற்கு பல வருடங்களாக பண உதவி செய்து வந்த உலகவங்கி தரப்பிலிருந்தும் ஒருவர் பேட்டியளித்திருந்தார். இந்த திட்டத்திலிருந்து உலக வங்கி பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. சீமென்ஸ் உள்ளிட்ட சில பன்னாட்டு நிறுவனங்கள் பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அணைக்கட்டு கட்டுவதால் மூழ்கும் பல ஊர் மக்கள் பாதிக்கபடுவதோடு அல்லாமல், இவ்வணையிலிருந்து செல்லும், செயற்கையாக வெட்டப்பட்டிருக்கும் அகன்ற கால்வாய்களில் தன் நிலத்தை இழந்தவர்களும் உள்ளனர் எனும் உண்மையை அறிந்தேன். அவர்களுக்கும் எவ்வித நிவாரணமோ அல்லது மாற்று நிலமோ வழங்கப்படவில்லை.

இந்த படம் முடிந்ததும், அந்த இடத்திற்கு நேரில் சென்றுவந்த ஒருவர் சில விளக்கங்களைக் கொடுத்தார். அரசு தரப்பில் கூறப்படும் விவரங்கள் உண்மையல்லவாம். 'இத்தனை லட்சம் ஏக்கர்கள் நிலம் பாசனவசதி பெறுகின்றன; இத்தனை லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர்; இத்தனை மெகாவாட் மின்சாரம் எற்பத்திசெய்யப்படும்' என்று தனது பிரச்சாரத்தில் ஏமாற்றுவேலையை செய்ய முனைகிறதாம். அந்த ஆற்றிலிருந்து செயற்கையாக வெட்டப்பட்டுள்ள கால்வாய்களுக்கு நீர் பாயவேண்டுமென்றால், அது அணை மூடப்பட்டிருந்தால்தான் சாத்தியம். எனவே பாசனவசதியை கருத்தில் கொண்டால், மின் உற்பத்தி தடைபடுமாம்.

மேலும் அந்த திரைப்படத்தில் காட்டியுள்ளவாறு அந்த செயற்கைக் கால்வாய்கள் பணப்பயிர் நிலங்கள் வழியாக வறட்சிதாக்கப்பட்டுள்ள பகுதிக்கு வெட்டப்பட்டுள்ளது. பணப்பயிர்களுக்கு மிகுதியான நீர் தேவைப்படும். எனவே வறட்சிதாக்கிய பகுதியைக் காரணம் காட்டி வெட்டப்பட்டுள்ள கால்வாய்கள் திட்ட ரீதியாக தோல்வியடையுமாம். மேலும் இந்த கால்வாய்களை நம்பி பல நட்சத்திர விடுதிகளும், கேலிக்கை பூங்காக்களும் உற்பத்தியாகி வருகின்றனவாம். அரசியல் செல்வாக்குப் பெற்ற இதன் மூலதனர்கள்தான் இந்த திட்டத்தினால் பயனடைவார்களாம். வறட்சித் தாக்கியுள்ள அந்த தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் முன்பே அந்த கால்வாய்கள் வற்றிவிடும் அபாயம் உள்ளது.

திரைப்படத்தினை திரையிட்ட குழுவினர் ஒரு கைப் பிரதியினையும் வினியோகித்தனர். அது 'நர்மதா ஆற்றின் நண்பர்கள்' எனும் இயக்கத்தின் இணையதளத்திலிருந்து செய்திகளை அடக்கிய பல அதிர்சியான ஆச்சரியபடத்தக்க கேள்வி பதில்களைக் கொண்டிருந்தது.

இது தவிர பெரிய அணைக்கட்டுத்திட்டங்களினால் சுற்று சூழல் பாதிப்பும் நிகழ்கிறதாம். மேகாங் எனும் ஆற்று வழியாக சீனா கட்டியுள்ள 12 அணைகளினால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக National Geographic Magazine-ல் படித்துள்ளேன் (இணையதள தொடுப்பு கிடைக்கவில்லை). இது பற்றி வேறொரு ரிப்போர்ட்: http://www.mongabay.com/external/dying_mekong_river.htm

Monday, April 24, 2006

இஸ்ரேலின் லாபி (Lobby)

இஸ்ரேலின் செயல்களையும் மற்ற உலக நாடுகளின் செயல்களையும் இந்த உலகம் வேறுபட்ட வெளியுறவுக் கொள்கைகளைக் கொண்டு பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே.

'ஈரான் பத்து வருடங்கள் கழித்தே அணு ஆயுதத்தைத் தயாரிக்க இயலும்' என்ற நிலையிலும், அதன் மீது அனைத்து வழி அழுத்தத்தயும் உலக நாடுகள் அமெரிக்கா-வின் தலைமையில் கொடுத்து வருகின்றன. சரியாக சொல்லப் போனால், உலக நாடுகளும் அமெரிக்காவின் அழுத்ததின் காரணமாகவே இவ்விசயத்தில் அதன் தலைமையை ஏற்று இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்தியாவிற்கு 'செரிவூட்டப் பட்ட எரிபொருள் ரக யுரேனியம் அமெரிக்காவிடமிருந்து கிடைக்காது' எனும் அழுத்தத்தையும், சீனாவிற்கு 'தைவானின் சுதந்திரப் பிரகடனத்திற்கு அமெரிக்கா உதவ முயற்சிக்கும்' எனும் அழுத்தத்தையும் கொடுத்து, ஈரானின் அணுத் திட்டத்தைப் பற்றி ஐக்கிய-நாட்டு-சபையின் பாதுகாப்புக் குழுவிடம் பரிந்துரைக்க இந்த நாடுகளின் ஆதரவினை அமெரிக்கா பெற்றது.

ஆனால் அதே சமயத்தில், ஏற்கனவே கள்ளத் தனமாக அணு ஆயுதம் செய்துவிட்ட இஸ்ரேலின் அணுத்திட்டத்தைப் பற்றிக் கண்டுக் கொள்ளாமலும், மற்ற நாடுகள் அதைப் பற்றி மூச்சுவிட்டால், தன் 'அழுத்தும்' தொழில்நுட்பத்தினைக் கொண்டு அவர்களை அடக்கியும் வருகிறது அமெரிக்கா. (இஸ்ரேலின் அணுத்திட்டத்தைப் பற்றி அணுத்தொழிற்சாலைகளில் பணி புரிந்த ஒருவர், முர்டோச்சய் வனுனு, அதனைப் பற்றி வெளியில் சொல்லிவிட்டக் காரணத்தினால், அவரை 20 ஆண்டுகள் சிறையில் தள்ளியதை இந்த இடத்தில் நினைவு கூறலாம்).

இஸ்ரேலின் கீழ் வாடும் பாலஸ்தீனர்களைப் பற்றி கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல், அவர்களை தினமும் மூவராகவோ நால்வராகவோ கொன்று வரும் இஸ்ரேலிடமிருந்து அவர்கள் விடுதலைப் பெற்றுவிடாமல் பார்த்துக் கொண்டும் வருகிறது அமெரிக்கா. இது வரை அறுபதுக்கும் மேற்பட்ட இஸ்ரேலுக்கு எதிராக மற்ற நாடுகள் கொண்டு வந்த ஐக்கிய நாட்டுத் தீர்மானங்களை தன் தடுப்பு (veeto) அதிகாரத்தால் செயலிழக்கச் செய்துள்ளது அமெரிக்கா.

ஆனால் அதே சமயத்தில், சியராலியோன், கிழக்குத் தைமூர், டார்ஃபர், கொரியா போன்ற பல பிரச்சனைப் பகுதிகளில் ஐ.நா தீர்மானங்கள் கொண்டுவரப் பட்டு நிறைவேற அனுமதித்துள்ளது.

1967-ம் ஆண்டுப் போரினை எகிப்து, சிரியா போன்ற நாடுகள் இஸ்ரேலின் மீது துவக்கினார்கள் என்ற ஒரு காரணத்தாலேயே இன்றும் உலக நாடுகள் இஸ்ரேலினை ஒரு அனுசரனைக் கண் கொண்டே நோக்குகிறார்கள் என்பதும் ஒரு காரணம். அனால் உண்மையில், இந்த காரணத்தைப் பயன்படுத்துகிறார்களே தவிர, அவர்களின் போக்குக்குக் காரணம் அமெரிக்காவின் அழுத்தமே என்பது தெளிவு. 1967-ம் ஆண்டு போர் மற்றவர்களால் தொடங்கப் பட்டது என்ற காரணத்தினால், இஸ்ரேல் போரில் வென்று பாலஸ்தீனத்தினைக் கைப்பற்றியது எனும் பச்சத்தில், அவ்வாறு கைப்பற்றியது செல்லும் என்று, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பார்வை.

ஆனால் இது ஒரு நியாயம் கற்பிக்கும் ஒரு பார்வையே ஆகும்.

1948-ல் இஸ்ரேலின் ஒருவாக்கம், சியோனிச சிந்தனைக்குட்பட்டது. அதன் உருவாக்கத்திலேயே நியாயமில்லை. பல பாலஸ்தீனர்களின் கிராமங்கள் இஸ்ரேலுக்குள் ஐக்கியமாக்கப் பட்டிருந்தன. நியாயம் என்பது 1967-ல் இருந்து தான் என்பது அல்ல. ஒரு பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்தே நியாயம் பேச வேண்டும் என்பதுதான் சிறப்பு.

சியோனிசம் என்பது யூதர்களுக்காக ஒரு நாடு உருவாக்கும் கொள்கையாகும். 'இதில் என்ன பெரிய விசயம்; அவ்வாறு பல நாடுகள் பல சமூகத்திற்காக உருவாக்கப் பட்டுள்ளனவே' என்று இங்கே எண்ணத் தோன்றும். ஆனால் இதில் என்ன ஆட்சேபனைக் குறிய அம்சம் என்றால், ஒரு நாட்டில் வாழும் யூதர்களுக்கான பிரிவினை அல்ல இந்த சியோனிச தேச உருவவக்கம்; மாறாக உலக வாழ் யூதர்கள் அனைவருக்கும் என ஒரு இடத்தில் நாடு உருவாக்குவது; அதாவது உருவாக்கப்படும் இடத்திலுள்ள மற்றவர்களை விரட்டிவிட்டு, அயல்நாடுகளில் வாழ்பவற்களுக்காக நாடு உருவாக்குதல்தான் சியோனிசம்.

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளுக்கு சுதந்திரம் வழங்கிக் கொண்டிருந்த காலம் அது. அவைகளை பல நாடுகளாகப் பிரித்தோ, அல்லது கைப்பற்றிய பல நாடுகளை ஒரு நாடாக இணைத்தோ சுதந்திரம் வழங்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறு வழங்கிக் கொண்டிருந்த போது, இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகள் உருவாகின. இதில் இஸ்ரேல் என்பது அங்கு வாழும் யூதர்களுக்கான நாடு என்று உருவாக்கப் பட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு, ஆனால், அது உருவாக்கப் படும் போதும், அதன் பரப்பளவு நிர்ணயிக்கப் படும்போதும், ஐரோப்பா வாழ் யூதர்களும் கணக்கில் கொள்ளப் பட்டனர் என்பது தான் நியாயமற்றத் தன்மை. அதனாலேயே, ஆங்கிலேயர்கள் விதித்த எல்லையில் பல பாலஸ்தீன கிராமங்கள் இஸ்ரேலுக்குள் ஐக்கியமாக்கப்பட்டன. பிறகு இஸ்ரேல் அவர்களை அங்கிருந்து விரட்டி, பாலஸ்தீனர்களை காஸா நிலத் துண்டிற்குள்ளும், மேற்குக் கரைப் பகுதிக்குள்ளும் சென்று அடங்குமாறு செய்தனர். இவ்வாறிருக்க 'நியாயம்', 1967-லிருந்து தான் தொடங்கும் என்பது சரியல்ல.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகள், ஆரம்பக் காலங்களில், இஸ்ரேலின் நிலையை எதிர்த்தே வந்துள்ளன. ஆனால் பிற்காலங்களில், அமெரிக்காவின் அபரிமிதமான பொருளாதார, ராணுவ வளர்ச்சியின் காரணமாக, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆளாகி, பின்பு இஸ்ரேலினை ஆதரிக்கும் அளவிற்கு அதன் வெளியுறவுக் கொள்கைகள் இடம் பெயர்ந்தன.

இவ்வாறு உலக நாடுகள், இஸ்ரேல் சார்பான வெளியுறவுக் கொள்கைகளைக் கொண்டிருக்க அமெரிக்காக் காரணமாக இருக்க, அமெரிக்கா இஸ்ரேல் சார்பாக இருக்கக் காரணம் யாது ? அனைவரும் நினைப்பதற்கு மாறாக, இதற்குக் காரணம் மதமன்று. குறைந்த பட்சம், ஆரம்ப காலங்களிலாவது, இந்த ஒரு-சார்பு நிலைக்கு மதம் காரணமன்று. 1967-ம் ஆண்டு, அந்த 6 நாட்கள் போரில், இஸ்ரேலின் வல்லமையைக் கண்டு அமெரிக்கா வியந்து, பரவி வரும் கம்யூனிச சோவியத் யூனியனின் வளர்ச்சியைத் தடுக்க, 'ஆசியாவிலிருந்து ஒரு நண்பன்' என்ற நோக்கில் அதன் வெளியுறவுக் கொள்கை இஸ்ரேலை நோக்கிச் சாய்ந்தது.

ஆனால் தற்போதைய இஸ்ரேல் சார்பான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவிற்கு இழப்புகளே அதிகம்; பொருளாதார-கொள்கை ரீதியான ஆதாயம் ஏதும் இல்லை; இருப்பினும், அது விடாப்பிடியாக, அதே வெளியுறவுக் கொள்கையினைக் கடைபிடிக்க காரணம், இஸ்ரேலின் கள்ளப் பரிந்துரைக் குழு (Lobby) -தான் என்பது அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியகளின் ஆய்வு முடிவு. கட்சி-அறிவியல் (political science) பேராசிரியர் ஜான் மியர்ஷெய்மர், சிகாகோ பல்கலைக் கழகம், மற்றும் சர்வதேச-உறவு பேராசிரியர் ஸ்டீஃபன் வால்ட், ஹார்வர்டு பல்கலைக் கழகம், ஆகியோர் தனது ஆய்வுக் கட்டுரையில் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.

Journal: London Review of Books

Volume: 28 (number 6)

Authors: John Mearsheimer
Professor of Political Science
University of Chicago

Stephen Walt
Professor of International Relations
Kennedy School of Government
Harvard University

இந்த கட்டுரை மிக அருமையான வாதங்களை முன் வைக்கிறது. அதனை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க நேரமில்லாமையால் வருந்துகிறேன்.

மத்திய-கிழக்கு-ஆசியாவின் அரசியலைப் பற்றி நடுநிலையான கருத்து கூறும் மற்றொரு அறிவுஜீவி நோம் சாம்ஸ்கி ஆவார். அவரது கட்டுரைகளை http://www.chomsky.info -வில் காணலாம். ஆனால் சாம்ஸ்கி அவர்களுக்கு மேற்கண்ட கட்டுரையின் சில வாதங்களுடன் ஒத்த கருத்து இல்லை. அதனை http://www.chomsky.info/articles/20060328.htm எனும் இடத்தில் வாசிக்கலாம்.

இந்த கள்ளப் பரிந்துரைக் குழுவின் உதவியுடன், இஸ்ரேல் சமீபத்தில் பாகிஸ்தானிடமிருந்து தனது நாட்டின் இறையாண்மைக்கான அங்கிகாரத்தினைப் பெற முயற்சித்துள்ளது. இது பற்றி இங்கே வாசிக்கலாம்.

மேலும் நான் கீழ்கண்ட இணைய தளங்களை பரிந்துரைக்கிறேன்.

1) www.democracynow.org
2) www.counterpunch.org
3) www.spinwatch.org

இவைகளில் காணப்படும் கட்டுரைகள், விவாதங்கள் ஆகியவை சிந்தனையைத் தூண்டக் கூடியவைகளாக உணர்கிறேன்.

Friday, February 03, 2006

கண்ணியமும் சுதந்திரமும்

நபிகள் அவர்களைப் பற்றி வரையப்பட்ட 12 கார்டூன்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய-கிழக்கு ஆசியாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அவைகள் டென்மார்க் நாட்டின் நாளேடு ஒன்றில் முதன் முதலில் வெளியானது. டென்மார்க் மீது தன் எதிர்பினை மத்திய கிழக்கு நாடுகள் தெரிவித்துக்கொண்டன. சில நாடுகள் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டனர். பல நாடுகளின் மக்கள் டென்மார்க் பொருட்களை வாங்க மறுத்தனர். டென் மார்க் இந்த நிலைக்குத்தள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், ஜெர்மனி, ஸ்பெயின், நார்வே, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள நாளேடுகளும் இந்த கார்டூனைப் பிரசுரித்தன. எனவே மேலும் இந்த எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. ஃபிரான்ஸ் நாளேடு தன் ஆசிரியரை நீக்கியுள்ளது.

கார்டூனுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு என்று தான் நானும் முதலில் நினைத்திருந்தேன். நபிகளை படமாக வரையக் கூடாது எனும் முஸ்லீம்களின் நம்பிக்கையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கலாம் என்றுதான் நானும் மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஆனால் பிறகுதான் அந்த கார்டூன்கள் எத்தகையவை என்பது புரிந்தது.

அவைகள் நபிகளை அவமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வரையப்பட்டுள்ளது என்று பிறகு தான் புரிந்தது.

அவைகளில் நபிகளை பயங்கரவாதி போல சித்தரித்து இருந்தனர்.

ஒரு கார்டூனில் அவருடைய தலைப்பாகை, வெடிகுண்டு போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

மற்றொன்றில் 'தற்கொலைப் படையினருக்கான பெண்துணைவியர்களுக்கு சொற்கத்தில் பஞ்சம் ஏற்பட்டுள்ள்து' என்று நபிகள் கூறுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

அந்த கார்டூன்களுக்கு விவேகத்தின் அடிப்படையில் வெளியீட்டாளர்களால் காரணம் கூற இயலாது என்று நான் நினைக்கிறேன். அதிகபட்சமாக அவர்களால் 'அது என் நாட்டிலிருக்கும் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு உட்பட்ட செயல்' என்று தான் கூற முடியுமே தவிர அந்த கார்டூன்களின் நோக்கம் யாது என்று அவர்களால் கூற இயலாது. அவைகள் கருத்துப்-படம் என்றால் ஏதாவது உண்மைக் கருத்தினைத் தாங்கியதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதற்கு காழ்புணர்வே காரணம் என்று நான் கருதுகிறேன்.

'ஏசுவைப் பற்றியும் அவ்வாறு எங்களால் வரையமுடியும்' என்று பத்திரிக்கையாளர்கள் கூறுவது இச் செயலுக்கான பதிலாகாது. 'ஏசுவையும், புத்தரையும் இவ்வாறு நாங்கள் வரைகிறோம்; எனவே முகம்மதே நீர் கவலைப் படவேண்டாம்' என ஃப்ரான்ஸ் நாளேடு சித்திரம் வரைந்திருந்தது.


இவ்வாறே விவேகத்தினால் புரிந்துக் கொள்ள முடியாதவாறு நபிகளின் மனைவியரைப் பற்றி விரசமாக சல்மான் ருஷ்டி எழுதினார். அதற்காக அவர் மீது விதிக்கப் பட்டுள்ள ஃபத்வா மீது மாற்று கருத்து நான் உட்பட பலருக்கும் உண்டென்றாலும், அவரது அந்த செயல் கண்டிக்கத்தக்கது, ஏனெனில் அது நியாயத்துடன் புரிந்து கொள்ள முடியாத ஒரு செயல்.


இது போல அனைவரும் அறிந்த மற்றொரு செய்தி, வான்-காஃப் அவர்களின் கொலை. அவர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளி தண்டனைக் குறியவன் என்பதில் எனக்கு கருத்து வேற்றுமைக் கிடையாது. ஆனால் இந்த கொலையைத் தன் காழ்புணர்வினால் தூண்டியது அவரும் அவரது பெண் நண்பியுமான அயான் ஹிர்சி அலியும் தான் என கொள்ள முடிகிறது. அவர்கள் எடுத்த திரைப் படத்தில் வரும் காட்சியான ஒரு நிர்வாணப் பெண் தன் உடலில் குர்ஆன் வாசகங்களை எழுதிக் கொண்டு வருவது விவேகத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளமுடியாத செயல். இதற்கு நெதர்லாந்து அரசு அவர்களைக் கண்டித்திருக்குமானால் இந்த கொலைக் குற்றத்திற்கு தூண்டப்படும் வெறித்தன்மைக்கு அந்த மொராக்கோ நாட்டு மனிதன் ஆளாகியிருக்க மாட்டான் எனக் கருதுகிறேன். அவர்கள் எடுத்த திரைப்படத்தின் நோக்கம் இஸ்லாத்தில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமையைப் படம் பிடிப்பதற்காக. ஆனால் அந்த நோக்கம் தவறி காழ்புணர்வில் அவர்கள் நுழைந்துவிட்டனர். வான்-காஃப் அவர்கள் இறந்தாலும் அயான் ஹிர்சி அலி காழ்புணர்வினைத் தொடர்வார் என்றே தோன்றுகிறது. இங்கே பார்கவும்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடந்த மற்றொரு செய்தியையும் நான் பகிர்ந்துக் கொள்ள நான் விழைகிறேன். இத்தாலிய நாட்டு பெண் எழுத்தாளரின் நிறவெறிப் புத்தகத்தினைத் தடுக்க முஸ்லீம்கள் வழக்குத் தொடர்ந்த பின்னும், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, புத்தகத்தினை அனுமதித்து விட்டனர். அந்த புத்தகத்தில் அவர், "முஸ்லீம்கள் எலியைப் போல புளுத்துவிட்டனர்; தினமும் ஐந்து வேளைத் தொழுது தன் ஆசனவாயை அந்தரத்தில் மிதக்கவிடுகின்றனர்" என்று கூறியிருந்தார். இருப்பினும் கருத்துச் சுதந்திரத்தைக் காரணம் காட்டி அந்த புத்தகம் அனுமதிக்கப் பட்டுவிட்டது. இங்கே பார்க்கவும்.

ஆகவே கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், கூறப்படும் கருத்துக்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று வரைமுறையும் விதிக்க வேண்டும்.

மனிதர்களுக்கும் சுதந்திரம், உரிமை, கண்ணியம் ஆகியவைகள் அனைத்தும் தேவை.

உரிமை மற்றும் கண்ணியத்தைக் குலைக்கும் சுதந்திரத்தையும், சுதந்திரத்தைப் பறிக்கும் உரிமைகளையும் ஒருவரோ ஒரு அமைப்போ கோரக்கூடாது.

Tuesday, January 31, 2006

மார்கழிக் குருவி

முத்து தன் வாயில் நுரை நிரம்ப பல் துலக்கிக் கொண்டிருந்தான். பள்ளியினைக் காரணம் காட்டி அவனது தாய் அவனை விடிகாலையிலேயே எழுப்பிவிடுவது வழக்கம். அன்றைய விடுமுறை நாளிலும் எழுப்பப்பட்டிருந்தான். வீட்டின் கொல்லைப் பகுதியில் உலாத்தியவாறு பல் துலக்கிவிட்டு தெருவில் உள்ள திருகு பைப்பில் வாய்-முகம் கழுவி விட்டு வரும் செயல் எல்லா நாட்களிலும் மாறாததொன்று.

பல்வேறு காட்சிகள் 'என்றும்போல் இன்றும் குதூகலமான நாள்தான்' என்பதை உணர்த்துவது போல் அன்று காலையும் நிகழ்ந்தன: கதிரவன் தெரியாவிட்டாலும் ஏற்பட்டிருக்கிற வெளிச்சம்; வேலிக்கு அப்பால், வாய்க்காலின் கரைகளில் அமர்ந்திருக்கும் குருவிகள்;

மேலும், எப்போதும் போல் இல்லாமல்.... சற்று வித்தியாசமாகத் தென்னவோலைகளினூடே காணப்பட்ட அப்பறவை.

அதனை அன்றைக்கு முன் அவன் கண்டிருந்ததில்லை. நீண்டவாலுடன் காப்பிக்கொட்டை நிறத்திலிருந்த அது. அவனுடைய ஆவலைத் தூண்டியது. மட்டைகள் மறைக்காவண்ணம், வைக்கோல் போரின் மீதேறி அதனை முழுமையாகக் கண்டான்.

'வாசுகி வகுப்பிற்கு அடிக்கடி அணிந்துவரும் உடையின் நிறத்திலேயே'.

வாயிலிருந்த நுரையை வேலிக்காலில் உமிழ்ந்து விட்டு தன் தாயிடம் சென்று அப்பறவையைப் பற்றிக் கேட்டான். அவனது தாய் அதில் சிரத்தைக் கொண்டவளாகத் தெரியவில்லை. தொலைவிலிருந்தே அதைப் பார்த்துவிட்டு,

' அது ஒரு வெளிநாட்டுக் குருவி'.

இந்த பதில் அவனது வியப்பைத் தூண்டியது.

'அப்படீன்னா ?'

'மார்கழி மாசம் வந்துடிச்சுன்னா, இப்படித்தான் பல பறவைகள் வர ஆரம்பிக்கும்'.

அவனது சிந்தனையும் கற்பனையும் மிக வேகமாகத் தூண்டப்பட்டன.

தனது மனதினுள், 'இருக்கலாம் வெளிநாட்டுக் காரர்கள் சுற்றுலா பேர்வழிகள் என்று டீச்சர் கூறியிருக்காங்களே !' என்று நினைத்தவாறு வாய் மற்றும் முகத்தினை கழுவினான்.

'போயும் போயும் நம்ம ஊருக்கு வந்திருக்கே ! வெளி நாட்டினர் நேர்த்தியான வாழ்க்கை முறையினை உடையவர்களாம். இன்னிலையில் நம்மைப் பார்த்துவிட்டு என்ன நினைக்குமோ ?!'

ஒரு டம்ளர் காஃபியை எடுத்துக்கொண்டு அதனைக் கவனித்தான் முத்து. அது சுள்ளிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி அருகிலிருந்த பூவரசன் மரத்தில் கூடு சேர்க்க ஆரம்பித்திருந்தது. அது அங்கு தங்கப் போகிறது என்பதை அறிந்து முத்து உள்ளம் பூரித்தான். அவனது எண்ணமும் கண்களும் அந்தப் பறவையைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது.

'கீரிப்பிள்ளையினால் தொந்தரவு வருமோ...?! ஆனால் இது மரத்து மேலேயில்ல இருக்கு. கீரிப்பிள்ளைக்கு மரம் ஏறத் தெரியுமா ?'

அவனது சேவல் சென்ற கோடையில் கீரிக்கு இரையாகியிருந்தது; ஒரு மதிய மழையின் முடிவில்; வேலிக்கு அருகில்.

ஒவ்வொரு நாட்களும் பள்ளிக்கு போவதற்கு முன்னும், பள்ளியிலிருந்து வந்த பின்னும், அதன் செயல்களைக் கவனிப்பது அவனது பொழுதுபோக்கு ஆகிவிட்டது. அதனுடைய கவனத்தைத் தன்னை நோக்கி ஈர்ப்பது அவனுடைய நோக்கங்களில் ஒன்றும் ஆகிவிட்டது. அது எப்போதாவது எழுப்பும் ஒலியை இவனும் எழுப்புவான். அது உண்ண மறுத்தாலும், தானியங்களை அதனை அழைத்தவாறு தெளித்து தன் அன்பினை வெளிப்படுத்திக் கொள்வான்.

'ரொம்பத் தான் கரிசனம் காட்டாதே. கொஞ்ச நாட்களில் அது இங்கிருந்து போயிடும்'. இது இவனது தந்தையின் கூற்று. தந்தை எப்போதும் இவனது எண்ணத்திற்கு முரனாகவே எப்போதும் கூறுவதாக இவனது கணிப்பு; 'எதுப்பா வெற்றிபெறும் ? ரயிலா ? கிரேனா ?' என்று இவன் கேட்டிருந்தபோதும் கூட.

வாரங்கள் பல சென்றன. குளிர்காலம் அவர்களை விட்டுச் சென்றுகொண்டிருந்தது. அப்பறவையும் தான் வழமையாக்கிக் கொண்டிருந்த தன் வாழ்க்கையினைத் தொடந்து கொண்டிருந்தது.

தனக்காகத் தான் குளிர்காலத்திற்குப் பிறகும் அது அங்கு தங்கியிருப்பதாக அவன் நினைத்தான். தனது நட்பினை அப்பறவைத் தெரிந்துக் கொண்டது என்பது போல் உணர்ந்தான்.

இருப்பினும் அதன் தனிமையிலும் அவன் அக்கறைக் கொண்டவனாக இருந்தான். கொல்லைக்கு விளையாட வரும் தன் நண்பர்களின் சந்தடி அப்பறவையின் இயல்பான வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்வான். பெரும்பாலான சமயங்களில் தன் தந்தை உறங்குவதாக அவர்களிடம் கூறி அவர்களை அனுப்பிவிடுவான். அல்லது சத்தம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வான்.

அவனது நண்பன் வேலு தன் கழுத்தில் கவண் ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு முத்து வீட்டின் கொல்லைக்கு வரும்பொழுதெல்லாம் இவன் சற்று பயத்துடனே அவனுடன் சுற்றிக் கொண்டிருப்பான். வேலு கொள்ளைப் புறத்திற்கு செல்வதோடல்லாமல் அங்குள்ள மரங்களையும் நோட்டமிடுவது அவன் இயல்பு. அவனது கவண்-குறி எப்போதும் தப்பிவிடும் என்றாலும் முத்துவிற்கு சற்று பயம் இருக்கத்தான் செய்தது.

வேலுவிடம் அவனுக்குப் பிடிக்காத மற்றொன்று அவனது பிடிவாத வாதம். பறவைகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்று முத்து ஒரு சமயம் கூறியிருந்தபோது 'குட்டிப் போட்டுப் பாலூட்டும் பறவைகளும் உண்டு' எனும் வேலுவின் வாதத்திற்கு நண்பர்களின் ஆதரவு வேறு.

அப்பறவை அங்கு வாழ்ந்துவருவதை அவர்கள் அறிந்து கொள்ளாதபடி அவன் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், அவர்களிடமிருந்து பல நாட்கள் மறைக்க முடியவில்லை. ஒரு விடுமுறை நாளின் போது அதனை அவர்களே கண்டறிந்துவிட்டனர். ஆனால் முத்து, தான் அதன் மீது அன்புடையவன் என்பதை மட்டும் காட்டிக் கொள்ளவே இல்லை. அது அவர்களுக்குத் தெரியவந்தால் முத்துவினை இட்டு அழைப்பதற்கு ஒரு பட்டப் பெயரினைக் கண்டறிந்துவிடுவார்கள்.

நண்பர்களின் கேள்விகள் பல எழுந்தன.

'எத்தனை நாட்களாக இது இங்கே இருக்கு ?'

'இரண்டு நாட்களாகத் தான் தென்படுது.' - முத்து

'இதோட கூடு எங்கே இருக்கு'

'யாருக்குத் தெரியும் ?!' - முத்து

'இது எங்கிருந்து வந்திருக்கு. நாம இந்த மாதிரிப் பறவையைப் பார்த்ததே இல்லையே !'

'அடச் சீ .. நான் எத்தனை முறை வருடம் முழுவதும் நம்ம பள்ளிக்கூடத்திலிருக்கிற ஆலமரத்துல பார்த்திருக்கிறேன்!! இது ஒரு சாதாரணமான பறவைத் தான்' - முத்து.

ஒரு வழியாக அவர்கள் அனைவரையும் சமாளித்ததும், மதிய உணவிற்காக அவரவர்கள் வீட்டிற்குச் சென்றனர். இவனது உண்டியும் நிறைவுற்றது. அவனது எண்ணம் அப்பறவையை வலம் வந்துக் கொண்டேயிருந்தது.

'இவர்கள் அனைவரும் அதனைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டால், அப்பறவை தன் இடத்தை மாற்றிவிடுமே ! இல்லை, மாற்ற வாய்ப்பில்லை. இது இங்கிருப்பதே நமக்காகத் தானே - இந்த கோடையில் கூட தன் ஊருக்குச் செல்லாமல்.'

தன் தாயின் வற்புறுத்தலால் அன்று மதியம் உறங்கினான் முத்து. அது, அவனது நண்பர்களைச் சமாளித்த களைப்பின் காரணமாக, அன்று மாலை வரை நீண்டிய உறக்கமாக இருந்தது. இது போன்ற மதிய உறக்கத்தினை பண்டிகைகளின் போது மட்டுமே உறங்கியிருக்கின்றான்.

உறங்கி விழித்தபோது, இலேசான தூறல் ஒன்று தூறி விட்டிருப்பதைக் கண்டான். அந்த பொழுது அவனுக்கு ஒரு மதிய மழையின் முடிவில் முன்பு கீரிக்கு இரையாகிவிட்டிருந்த சேவலையே ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.

ஓடிச் சென்று, வைக்கோல் போரின் மீதேறி, பூவரசன் மரத்திருந்த அதன் கூட்டைப் பார்த்தான். அது அங்கு காணப் படவில்லை. கொல்லையில் உள்ள மற்ற மரங்களிலும் கூர்ந்து தேடியும் அது தென் படவில்லை. வெகு நேரம் பொறுத்திருந்தும் அது தென் பட வில்லை. மனம் அலங்கலாய்த்தது.

'கீரி கொண்டு சென்றிருக்குமோ ? அது மரம் ஏறி நான் பார்த்ததில்லையே ! வேலி வழியாகத்தான் வரும்.'

அந்த சேவலைப் பற்றிய நினைவுகள் சில மணித்துளிகள் அவனை ஆக்கிரமித்த பின், மீண்டும் அந்த பறவையைப் பற்றிய நினைவுக்கு வந்தான் முத்து.

'எங்கே அந்த பறவை இரைத் தேடிச் சென்றிருக்குமோ ?'

மனம் பல திசைகளில் அலைந்தது. ஊருக்கு வெளியில் உள்ள மரத்தில் தன் நண்பர்களுடன் ஒரு நாள் கண்ட பருந்தும் ஞாபகத்திற்கு வந்தது. மாலையில் திரும்பாத அப்பறவை அடுத்த நாளும் காணப்படவில்லை.

'நண்பர்கள் அதனைக் கவனித்ததுதான் காரணமா ? இடத்தை மாற்றிவிட்டதா ? இருக்காதே ! அல்லது கீரியா ?' அவன் மனம் மீளவில்லை.

'அது தன் ஊருக்கே சென்றுவிட்டதாக அம்மா சொல்றாங்களே ! உண்மையா இருக்குமோ ? அம்மா சொல்ற மாதிரியே நடந்திருந்தால், நன்றாக இருக்குமே !'

அவனது சிந்தனை அவனருகில் அவனது தாய் வந்து நின்றதுகூட தெரியாமல் சென்றுக் கொண்டிருந்தது.

' இந்தாடா.. முத்து, இந்த காஃபியைக் குடிச்சிட்டு எழுந்திரு', என்று டம்ளரை அவனருகில் வைத்துவிட்டுச் சென்றாள் அவனது தாய்