Wednesday, December 28, 2005

பூர்வீகர்கள் - இந்தியர்கள் - ஒரு கருத்தோட்டம்

சமீபத்தில் நண்பன் அவர்கள் ஒரு அருமையான சமூகப் பிரச்சனையைப் பற்றிய பதிப்பு ஒன்றினைச் செய்துள்ளார்கள். அதனைப் பற்றி மேலும் நான் இங்கு விவாதிக்கிறேன்

வலதுசாரி/சங்பரிவார்களின் 'பூர்வீக ஆரியர்கள் கொள்கை' (Aryan Non-invasion theory) -யில் அநேக விஷமங்கள் நிறைந்துள்ளன.

பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிற நாட்டில் திடீரென ஒரு சாரார்கள் எழுந்து 'நாங்கள் இந்த நாட்டின் பூர்வீகர்கள்' என வலியுறுத்துவதின் நோக்கம், அவ்வாறு தாங்கள் பூர்வீகர்கள் என்று அரசு இயந்திரங்களை ஒத்துக் கொள்ளச் செய்துவிட்டால், அந்த பூர்வீகத்தைக் காரணம் காட்டி தங்கள் சாதியக்கருத்துக்களை தேசியம் என்ற போர்வையில் அரங்கேற்றுவதுதான் என்பதைத்தவிர வேறெதுவுமில்லை.

அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது தேசியமாக்கப்பட்ட சாதியக் கருத்துக்கள், அரசின் கொள்கைகளாக மாறும். பிறகு அரசு இயந்திரங்களான கல்வி-நிறுவனங்கள், ராணுவம், நீதி மன்றங்கள், காவல்துறை முதலியவற்றை இந்த அரசு கொள்கைகள் கொண்டு கைப்பற்ற இயலும் பின்பு இவைகளைக் கொண்டு எதுவும் செய்ய இயலும். இதுவே இவர்களின் நோக்கம்.

சில சமயங்களில் சங்பரிவாரத்தினர், 'ஆரியர்களை அந்நியர்கள் என்று வரலாறு கூறுவதால் அதனை ஆரியர்கள் என்ற முறையில் எதிர்க்கிறோம்; அதிலென்ன தவறு' என்று வாதிடுகின்றனர். இது ஒரு பூசி மெழுகும் வாதம். ஆரியர்களை அன்னியர்கள் என்று வரலாறு கூறவில்லை. ஆரியர்களைப் பற்றி 'மத்திய ஆசியாவிலிருந்து இந்தியத்துனைக் கண்டத்தில் குடியேறியவர்கள்' என்றே கூறுகிறது வரலாறு. அதற்காக இப்போதுள்ள ஆரியர்கள் அன்னியர்கள் என்று அர்த்தமல்ல. அதற்காக அவர்களை, 'மத்திய ஆசியாவான உஸ்பெக்கிஸ்தான், ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கு செல்லுங்கள்' என்று யாரும் கூறவில்லை. அவ்வாறு இருந்தும் அவர்கள் இதனைப் பற்றி பேசி, தாங்களை பூர்வீகர்கள் என்று அவர்கள் வலியுறுத்துவதன் நோக்கம், நான் மேலே கூறியது போல கொள்கை மேலாதிக்கத்திற்காகத்தான். அத்துடன் பிற்காலத்தில் படையெடுத்தவர்களாகிய ஆஃகானியர் / ஆங்கிலேயர்கள் மூலமாகப் பரவிய தத்துவங்களான இஸ்லாம் / கிறிஸ்தவம் போன்றவற்றைப் பின்பற்றுபவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கவும் இந்த 'பூர்வீக ஆரியர்கள் கொள்கை' அரங்கேற்றப்பட்டு வருகிறது.

சங்கப்பரிவார்கள் உருவாக்கியுள்ள 'யார் இந்த நாட்டின் குடிமக்கள் ?' என்ற வரையறுப்பில், மக்களின் தாய் தந்தையர் இந்நாட்டினராக இருந்தால் மட்டும் போதாது; அவர்கள் பின்பற்றும் கொள்கை (அல்லது மதம்) இந்த நாட்டில் தொடங்கியதாக இருக்கவேண்டும். இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையைப் பரிக்கும் வரையறுப்பு.

இந்த நயவஞ்சக வரையறுப்பில் சீக்கியர்கள், சங்பரிவாரத்தினருக்குப் பிடிக்காவிட்டாலும் குடிமக்கள் ஆகிறார்கள். மேலும் "சாதி" எனும் ஆரியக் கொள்கையை எதிர்த்த காரணத்தினால் ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து அகற்றப்பட்ட புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களும் இந்த புதிய வரையறுப்பில் ஆரியர்களுக்குப் பிடிக்காவிட்டலும் இந்தியக் குடிமக்களாகிறார்கள். இந்த கையறு நிலையைப் போக்கவும், சாதி முறைகளைக் கட்டிக் காக்கவும் ஆரியர்கள் மற்றொரு கொள்கையையும் தயாரித்து இந்த 'பூர்வீக ஆரியர் கொள்கை'-யுடன் தருகிறார்கள். அதுதான் 'புத்தரைப் பத்தாவது அவதார'-மாக்கும் கொள்கையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பெளத்தம் மற்றொரு கொள்கையாகயிராமல் ஆரியக் கொள்கையின் ஒரு அங்கமாகவே கருதப்படும். இவ்வாறு ஆரியர்களால் அனைத்து வழிகளிலும் சிந்தித்து உருவாக்கப்பட்டக் கொள்கைகள்தான்...

(1) 'பூர்வீக ஆரியர்கள் கொள்கை',
(2) 'இந்தியக் குடிமக்கள் கொள்கை' மற்றும்
(3) 'புத்தர் - பத்தாவது அவதாரக் கொள்கை'.

சில வருடங்களுக்கு முன் Frontline-ல் வந்த, சிந்துவியலை (Indology) தன் ஆராய்சிப் பாடமாகக் கொண்ட இரு ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர்களின் (Witzel & Farmer) ஒரு ஆய்வுக் கட்டுரையைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் [1].

தங்களது கொள்கைளை எந்த தவறான யுத்திகளைக் கடைபிடித்தும் நிறுவ ஆரிய-சக்திகள் தயாராக உள்ளன என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை வெளிக்கொணர்ந்து இருந்தது.

இந்த ஆரியர்களது வருகை ஏறத்தாழ கி.மு. 1500-ல் நடந்தது என்று வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஹரப்பா நாகரீகம் கீ.மு. 5500 முதல் கிமு 3500 வரை ஓங்கி இருந்தது. N. S. இராஜாராம் மற்றும் ஜா என்பவர்கள் ஆரியக் கொள்கையை ஒட்டி, 'வேத காலம் என்பது ஹரப்ப நாகரீகத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது' என்றும், "ஹரப்ப நாகரீகம் என்பது பிற்கால வேதகால நாகரீகம்' என்றும் வாதிட்டனர். இவ்வாறு வாதிட்டு, 'இந்த வேத கால இலக்கியங்களின் முறைப்படி, ஹரப்பா நாகரீகத்தின் எழுத்துமுறையை புரிந்து கொள்ளும் உத்தியை உருவாக்கலாம்' என்று கூறி புத்தகத்தினையும் வெளியிட்டு இருந்தனர். அவர்களின் அந்த புத்தகத்தின் மீதான விமர்சனமே இந்த ஹார்வர்டு பேராசிரியர்களான விட்சல் & ஃபார்மர் என்பவர்களின் ஆய்வுக்கட்டுரை.

இந்தியாவிற்கு குதிரை அறிமுகமானது ஐரோப்பாவிலிருந்துதான் என்பது தொல்பொருள் ஆய்வு முடிவு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது அவனது குதிரைப் படையைக் கண்டு புருஷோத்தமன் படை பயந்தது என்பது வரலாறு. இவ்வாறிருக்க பல இந்திய இதிகாசங்களில் குதிரையைப் பற்றிய சம்பவங்கள் வருவதால் அந்த இதிகாச இலக்கியங்கள் பிற்காலத்தில் எழுதப் பட்டவையாகவே இருக்கும் என்பதற்கு மொழியியல் வல்லுனர்களின் (linguists) கருத்து. ஆரியக் கொள்கைவாதிகளுக்கு இந்த கூற்றின் மீது ஒரு கண். இந்த கூற்றினை எவ்வாறாவது பொய்யென ஆக்குவது என்று தீர்மானித்து, இராஜாராம் & ஜா-வினை புத்தகம் எழுத ஏவிவிட்டிருந்தனர். இதில் என்ன கூத்து என்றால், இராஜாராம் & ஜா மொழியியல்/சிந்துவியல் வல்லுனர்களில்லை. இராஜாராம் என்பவர் ஒரு NASA விஞ்ஞானி. ஜா- எனப்படுபவர் சமஸ்கிருதத்தில் சில நூல்களை எழுதியவராம். இவர்களைக் கொண்டு ஆரியர்கள் முயன்றுள்ளனர்.

இவர்கள் செய்தது என்ன வென்றால் ஹரப்பா முத்திரைகளில் காணப்படும் காளை மாட்டினை, "கணிப் பொறியைக் கொண்டு ஆராய்கிறோம்' என்று அதனைக் குதிரையாக்கிவிட்டு, 'இந்தியாவில் ஹரப்பா காலத்திலேயே குதிரையிருந்தது' என்று தாங்கள் எழுதிய புத்தகத்தில் பொய்யால் நிறுவ முயற்சித்திருந்தனர். அதனை இந்த ஹார்வர்டு பேராசிரியர்கள் வெளிக் கொணர்ந்ததும், அவ்ர்கள் சாயம் வெளுத்தது. அதற்கு பிறகு ராஜாராமே Frontline-ல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் [2]. நடந்த தவறை ஒத்துக்கொண்டார். பழியை ஜா-என்பவர் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்ள முயன்றிருந்தார். இதில் மேலும் என்ன கூத்துவென்றால், இராஜாராம் & ஜா தங்களது புத்தகத்தை 'ஐராவதம்'-மகாதேவன் எனும் புகழ் பெற்ற தொல்பொருள்/சிந்துவியல் நிபுணரிடம் ஆய்வுக்காக அனுப்பியபோது அவரிடம் அனுப்பப் பட்ட பிரதியில் இந்த குதிரை கலாட்டாவை காட்டாமல் மறைத்துவிட்டனர். அவரது பெயரையும் தன் புத்தகத்தின் வாதத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். இதனை 'ஐராவதம்'-மகாதேவனே மற்றொரு நேர்காணலில் கூறியுள்ளார் [3].

தனது வெறித்தனத்தை அரங்கேற்ற எதையும் செய்ய தயாராக உள்ளனர் இந்த ஆரியக் கொள்கைவாதிகள். மேலும் இது பற்றி ரோமிலா தாப்பர் அவர்களின் குறிப்பினையும் ஆர்வமுள்ள வாசகர்கள் படிக்கலாம் [4].

(பி. கு. இந்த கட்டுரையின் ஒரு பகுதி நண்பன் அவர்களின் கட்டுரையில் பின்னூட்டமாக இடப்பட்டுள்ளது)
சுட்டிகள்

[1 ] விட்சல் & பார்மர், 'ஹரப்பாவில் ஒரு குதிரை நாடகம்', Horseplay in Harappa, Frontline, volume 17, issue 20, 2000

[2] இராஜாராமின் பதிலுரை, Frontline, volume 17, issue 23, 2000

[3] ஐராவதம் மகாதேவனின் பதிலுரை, Frontline, volume 17, issue 23, 2000

[4] புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர், ரோமிலா தாப்பர் அவர்களின் குறிப்பு, Romila Thapar, Hindutva and History, Frontline, volume 17, issue 20, 2000

9 comments:

சன்னாசி said...

இந்தப் பிரச்னையில் புதைந்திருக்கும் மற்றுமொரு கண்ணி காலனியாதிக்கத்தின் அதீதபட்ச அராஜகம் - தனக்குத் தோன்றும் கருத்துக்களுக்களுக்கான 'ஆதாரங்களைத் தேடுவது'. Comprehension by contrast என்ற அபத்தமான அடிப்படையில் காலனித்துவம், தன் குடைக்குக் கீழிருந்த நாடுகளின் கலாச்சாரங்களைப் "புரிந்துகொண்டு" உருவாக்கிய பல அபத்தமான முடிவுகளே பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்கீழ் பன்னிரண்டு வருடங்கள் செலவழித்து "இந்திய வரலாற்றை" ஆங்கிலேயப் புரிதலுக்காக 'எழுதிய' ஜேம்ஸ் மில், ஒருமுறைகூட இந்தியாவுக்கு வந்ததில்லை, சமஸ்கிருதம் உட்பட எந்தவொரு இந்திய மொழியையும் அறிந்ததில்லை என்று அமர்த்யா சென்னின் சமீபத்திய புத்தகமான The Argumentative Indianன் ஒரு அத்தியாயத்தில் படித்தேன். உரக்கக் கத்தி உண்மையாக்குவது என்பதை அனைத்துத் தரப்பினரும் செய்து வந்திருக்கின்றனர் என்பதுதான் வருத்தமான உண்மை - இதற்கு ரிஷிமூலம் நதிமூலம் கண்டுபிடிப்பது இயலாத காரியம்; அறிவியலில் மதக் கருத்தாக்கங்களைப் புகுத்துவது அபாயகரமான ஒன்றே.

இதுகுறித்துச் சில வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதைச் சுட்டும் ஒரு பதிவு இங்கே

மு மாலிக் said...

சன்னாசி, உங்கள் கருத்துக்கு நன்றிகள். தங்கள் காட்டியுள்ள சுட்டிகளை படிக்கிறேன். அவைகளில் செய்திச் செறிவுகள் மிகுதியாக உள்ளது போல் இருப்பதால் பொறுமையாகப் படிக்க வேண்டும்.

rahini said...

http://yazhkavi.blogspot.com/

malik thiramaiyin thedalil ithuvum
senru parvai idugkal

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

சம்பந்தமில்லாதது.... சொல்ல வேண்டும் என்று தோன்றியது

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

மு மாலிக் said...

ராகினி,

உங்கள் சுட்டிக்கு நன்றி. நான் பாடல்கள் கேட்பதில் ஆர்வமுடையவன்தான். ஆனால் இயந்திரவாழ்கை அதற்கு இடம் கொடுக்கவில்லை நேரம் கிடைக்கும்போது அங்கு சென்று பாடல்களைக் கேட்பேன். காலந்தாழ்த்தி பதிலளிப்பதற்காக மன்னிப்பீராக. உங்களது மற்ற பின்னூட்டங்களையும் பார்த்தேன்


கல்வெட்டு,

உரிய நேரத்தில் தங்களுக்கு பொங்கல் வாழ்த்து கூற இயலாமைக்கு வருந்துகிறேன். பொங்கல் திருநாளாகிய இந்த உழவர்கள் திருநாளை அனைத்து சமூகத்தவரும் கொண்டாட வலியுறுத்தி, பொங்கலுக்கு வெகுநாட்களுக்கு முன்பே தாங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்திருந்தேன். அருமை. பல நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லையாகையால் நான் உங்கள் வாழ்த்தைப் பார்க்கமுடியவில்லை. மன்னிக்கவும்.

Thangamani said...

ஃபிரண்ட் லைன் கட்டுரைகளை நானும் வாசித்திருந்தேன். இராஜாராமின் பொய் முயற்சிகள் உட்பட. சுட்டிகள் இருந்தால் இங்கு கொடுக்கலாமே மாலிக்.

மு மாலிக் said...

Thanks for your visit thangamani. I will give the link today evening. Thank you.

மு மாலிக் said...

தங்கமணி,

சுட்டிகளைத் தற்போது சேர்த்துவிட்டேன். இந்த கட்டுரையை நான் எழுதியபோது முழுக்க முழுக்க நான் நினைவினை அடிப்படையாகக் கொண்டே எழுதினேன். அகையால் எழுதிய சமயத்தில் சுட்டிகளைத் தேடி இணைப்பது பளுவாகத்தோன்றியதால் அப்படியே விட்டிருந்தேன்.

Raaj said...

// அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது அவனது குதிரைப் படையைக் கண்டு புருஷோத்தமன் படை பயந்தது என்பது வரலாறு.//

I think you should look into this once more.This is not what the history says.Hope to hear abt it more

Thank you
Raaj