Tuesday, December 20, 2005

திருக்கை மீன்

நஞ்சை புஞ்சை மிகு தஞ்சை மாவட்டம். அது தன்னை எண் திசைகளிலிருந்தும் அண்மியவர்களுக்கு தன் தனிச்சிறப்பினை பல காட்சிகள்-நிகழ்ச்சிகள் மூலம் தெரிவித்து அவரிடம் பல விளைவுகளை ஏற்படுத்தும் காரணி. சாலைகளை இடமிருந்து வலமாகவும் மறுமுறையிலும் பாலங்களின் கீழ் குடைந்து செல்லும் ஆறுகள், காற்றின் வருடலில் சிலிர்க்கும் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் விரிக்கப்பட்ட வயல்வெளிகள், மேலும் இத்தாளின் இவ்விடத்தில் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் புகழ்ச்சியணி வரிகளைக் கொண்டு நிரப்பிக்கொள்க. ஆனால் ஆறுகள் வறண்டுள்ளபோது: நீங்கள் கேட்ட-படித்த சோகக் கதைகள் அனைத்தும் இங்குதான் நிகழ்ந்தவை என்பதைத் தெரிந்துகொள்க.

பெத்தான் புரிந்து கொண்டான், ஏன் அவனது நண்பர்கள் அவனை வேலைக்கு அழைத்துக் கொண்டு செல்லவில்லை என்பதை. ஆனால் இது போன்ற காரணங்கள் அங்கு சாதாரணம் என்பதால், அது அவனது மனதில் அதிக மாற்றங்களை ஏற்படுத்திவிடவில்லை. பெத்தான், வேளான்மை சம்பந்தப்பட்ட அனைத்து நுணுக்கங்களையும் அறிந்தவன்.
இருவர் செய்யும் வேலையை அவனொருவனே செய்து முடித்துவிடும் ஆற்றலைப் பெற்றவன். அனைத்திற்கும் மேலாக 'முதலாளிக்கு உண்மையானவன்' என்ற பெயரையும் பெற்றிருந்தான். இந்த பெயரின் விளைவுகள் நண்பர்களின் வட்டாரத்தில் பாதகமாகவே இருந்தது. அதற்கு அவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்று அர்த்தமல்ல. அதன் காரணம் வேறு.

முதலாளி விவசாயத்துடன் வேறு ஏதொ தொழிலையும் செய்துவருபவர். பெத்தானுக்கு அது பற்றி தெளிவு கிடையாது. அவர் ஏதோ வேலைக்குச் செல்கிறார் என்று மற்றுமே தெரியும். முதலாளிக்கு விவசாயத்தால் வருவாய் என்று ஏதும் கிடையாது என்றாலும், 'பல தலைமுறையாக அவரது குடும்பத்தில் உள்ள ஒரு வேலி நிலம்' என்ற எண்ணம் அவரை விவசாயத்தில் ஈடுபடுத்தியிருந்தது. அதிக பச்சமாக போட்ட பணத்தை எடுத்துவிட முடியும். சில சமயங்களில் அதுவும் சிரமம். பாரம்பரிய நல்லுணர்விற்காகவே விவசாயம் செய்து வருபவர்களில் அவரும் ஒருவர். 'உணவு பயிர்களை உற்பத்தி செய்கிறோம்' என்ற மனநிறைவேயன்றி வேறில்லை. இந்த 'மன நிறைவு' எனும் உணர்வு, பாரம்பரிய உணர்வுடன் அவரது மனத்தில் வலுவாக இருந்து வந்தது. துணைத் தொழிலற்ற மற்ற பலருக்கு வேளாண்மைக் கடினமென்றாலும் இவ்வுணர்விற்காகவே அதைப் புரிந்து வருகின்றனர். ஆழ்ந்து சிந்தித்தால், இப்பகுதிகளில் நிலங்கள் வரப்புகளைக் கொண்டு உடைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது விளங்கும்.

பெத்தான் தன்னால் முடிந்தவரை அனைத்து வேலைகளையும் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களைக் கொண்டு முடித்துவிடுவதால் முதலாளியின் நன்மதிப்பினைப் பெற்றவனாக இருந்தான். அவனது இச்செயல்தான் அவனது நண்பர்களின் சலசலப்பிற்குக் காரணமாக இருந்தது. இதனால் அவரவர்களின் பண்ணைகளில் நடைபெறும் வேலைகளில் பெத்தான் வேலையாற்ற முடியாமல் இருந்தது. அவன் வேலைப்பார்க்கும் பண்ணை நொடித்திருக்கும் அந்நிலையில், வேறு சில பெரும்பண்னைகளில் வேளாண்மை சிறப்பாகப் பாய்ந்துக் கொண்டிருந்தது, ஆழ்குழாய் கிணறுகளின் உதவியுடன். ஆனால் பெத்தான் தன் பண்ணையில் பெற்றிருக்கும் உரிமையளவிற்கு பெரும்பண்ணைகளில் வேலைப் பார்க்கும் மற்றவர்கள் பெற்றிருக்க முடியாது. பெரும்பண்ணைகளில் முதலாளிக்கும் வேலையாட்களுக்குமிடையில் 'காரியக் காரர்' எனும் பதவியுள்ளதே! அப்பதவியினை அவனோ அல்லது அவன் போன்றவர்களோ வகிக்கமுடியாது; வாழும் மரபுக்கொடுமைகளுக்கு நன்றி. ஆனால் பெத்தான் தான் வேலை பார்க்கும் பண்ணையில், கோடைப் புழுதி அடிப்பது முதல், அண்டை வெட்டுதல், நீர்வைத்தல், விரைத்தெளித்தல், நடவு, களையெடுத்தல் போன்ற அனைத்து வேலைகளுக்கும் நாட்களையும், ஆட்களையும் குறிக்கும் உரிமையைப் பெற்றிருந்தான்.

அனைத்து வேலைகளிலும் அவனுக்கு மிகுந்த ஆர்வமிருப்பினும், தான் மட்டுமே பார்த்து முடித்துவிடும் வேலைகளின் மீது அவனுக்கு அதி மிகுந்த ஆர்வமுண்டு. அவைகளிலும் அவனுக்கு பிடித்தமான வேலை - பயிர்களுக்கு துத்தநாக சல்ஃபேட் தெளிப்பதுதான். அது ஏனோ அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது. அது ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் கூட இருக்கலாம். மற்ற உரங்களைப் போல அல்லாமல் நிறம்கொண்ட உரமாக அது இருந்தது. வேறு எந்த பண்ணையிலும் அடிக்கப் படாத உரத்தை முதலாளி தன் பண்ணையில் அடிப்பதாக அவனுக்கு ஓர் உணர்வு. அதனால் அப்பண்ணையில் உள்ள பயிர்கள் அதிக நலத்துடன் இருப்பதாகவும் அவன் உணர்ந்தான். முதலாளி அவ்வுரத்தினை வாங்கிக் கொடுத்துவிட்டால் அவனுக்குக் கொண்டாட்டம்தான். அதிகப் பரவசத்துடன் முகத்தில் ஒரு துண்டினைக் கட்டிக்கொண்டு வயலில் இறங்கி தெளிக்க ஆரம்பித்துவிடுவான். முகத்தில் துணியினைக் கட்டிக் கொள்வதற்குக் காரணம், அவனைப் பொருத்தவரை உரத்திற்கும் பூச்சிக்கொல்லிக்கும் உரத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது. அனைத்தும் உயிர்கொல்லிதான்; அசோஸ்ஃபைரில்லம் எனும் நுண்ணுயிர் உரம் கூட. அவனது இச்செயலைப் பார்த்து முதலாளி நகைக்கும்போது கூட அவன் ஒரு அசட்டுச் சிரிப்பினைச் சிரித்துவிட்டு தான் செய்வதைத்தான் செய்வான்.

ஆற்றில் வெள்ளம் இருந்தால், வாழ்கையும் வெல்லம் போலவே இருக்கும். வயல் அவனது புறவாழ்க்கையாக இருந்ததுபோல பட்டு அவனது அகவாழ்க்கையாக இருந்தாள். அவளுக்கும் அவனது முதலாளின் வீட்டில்தான் வேலை. மனமகிழ் நேரங்கள் அவ்வப்போது இருந்து கொண்டிருந்தன.

"சாராயம், கள்ளு குடிக்காத பயல் ஒருத்தன் கூட கிடையாது, அனால் உன் வீட்டாண்டான் இருக்கான்" என்பது போன்ற தன்னை மெச்சும் வரிகளைக் கூறி அவளுடன் ஊடல் கொள்வான். அவனது நாள் கூலி வெளவால், செப்பிலி போன்ற மீன்களை வாங்கும் அளவிற்கு போதுமானதாக இல்லாவிட்டாலும், பலப்பொடி, திருக்கை மீன் போன்ற மலிவான மீன்களையாவது வாங்கும் அளவிற்கு இருந்தது. திருக்கை மீனை விரும்புவோர் மிகக் குறைவு என்பதால் அது மலிவாகக் கிடைக்கக் கூடியதாக இருந்தது. பெத்தான் போன்றவர்களுக்கும் மீன் கிடைக்கவேண்டும் என்பதற்காக மீன் விற்பவரும் அவைகளை தினமும் கொண்டுவந்து தெருவோரத்தில் அமர்ந்திருப்பார். இருப்பினும் முதலாளிவீட்டில் வெளவால் மீன் சமைக்கப்படும்போது அவ்வப்போது பட்டுவின் மூலமாக இவர்கள் வீட்டிற்கும் மறுநாள் வரும். வாழ்கை சற்று எளிதானதாகவே இருந்து வந்தது; ஆற்றில் நீர் இருக்கும்போது.

அவனது கெட்ட செயல் என்று கொண்டால், அது அவனது அரசியல் மாநாட்டிற்கான பயணம்தான். ஆண்டுக்கொரு முறை முதலாளியிடம் வழிச் செலவுக்கான தொகையினைப் பெற்றுக்கொண்டு சென்னை, மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு மற்றவர்களுடன் லாரி ஏறிச் சென்று விடுவது வழக்கம். அவனது அச் செயல் அவனது முதலாளிக்கும் பிடிக்காத செயலாகவே இருந்தது. அவனது பிடிவாதம் அவனுக்கு தொகையினை பெற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தது. இதுவும் ஆற்றில் நீரிருக்கும்போதுதான். தற்போது நிகழ்ந்து வரும் வறட்சியினால் முதலாளி மறுத்துவிட்டிருந்தார். ஒட்டுமொத்ததில் அவனுக்கு ஒரு விரும்பாத ஓய்வு நிகழ்ந்துவந்தது.
வழக்கமாக குறுவைப் பட்டம் மட்டுமே நீரின்மையால் பாதிக்கப்படும். ஆனால் சென்ற ஆண்டு முதல், மூன்று பட்டங்களுக்கும் நிலம் தரிசுதான். பெத்தான் போன்ற பலரின் நிலையும் திண்ட்டாட்டம்தான். அவன் தனக்குப் பிடித்த திருக்கை மீன் சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. பலர் வீட்டுப் பொருட்கள் அடகுக் கடைக்குச் செல்லும் அளவிற்கு உயர்ந்தவையாக இல்லாவிட்டாலும், பெட்டிக் கடைகளில் வட்டியை அடகுக் காத்துக்கொண்டிருந்தன. வட்டிக் காரர்களும் ஜரிகை ஏறிய பட்டு வேட்டியுடன் தெருக்களில் உலவிக்கொண்டிருந்தனர். வயல் வேலைப் பார்ப்பவர்களைவிட கட்டிட மற்றும் தச்சுத் தொழிலாளர்களின் நிலை ஒப்பீட்டில் சற்று மேலாகவே காணப்பட்டது. ஒருபுறம் வயல்கள் கட்டிட மனைகளாக மாறும் நிலையில், மரபுக் கொடுமைகளோ பெத்தான் போன்றவர்கள் தொழில் மாற அவ்வளவு எளிதில் அனுமதிப்பதில்லை. அவ்வப் போது வாழ்கையை தாங்களாகவே முடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். பெத்தான் வட்டிக் கொடுமைக்கு ஆளாகியில்லாததால் அவனுக்கு அவ்வெண்ணம் வந்ததில்லை.

"இந்தா..., இதை சாப்பிட்டுவிட்டு எடு; ஐயா வீட்டுல குடுத்தாங்க ..." என்று கூறிவிட்டு, ஒரு தூக்குக் குவளையை அவனருகில் வைத்துவிட்டுச் சென்றாள் பட்டு.

பெத்தான் அதைத் திறந்தான். அரைக் குவளைவரை நீர்சோறும், அதன்மேல் ஒரு கிண்ணத்தில் குழம்பும் இருந்தது.

அக்கிண்ணத்தை வெளியிலெடுத்தான் பெத்தான்.

அதில் ஒரு மீன் துண்டு கிடப்பது தெரிந்தது.

அது... ஒரு திருக்கை மீன் துண்டு.

"ஆண்டை வீட்டிலிருந்தா ? ... அவங்க வீட்டில் என்றைக்கு இதை வாங்கினார்கள்..?" அவன் சற்று நேரம் மெளனமாக இருந்தான். தன் முதலாளியையும் வறுமை சென்றடைந்துள்ளது போல உணர்ந்தான்.

அவனது பார்வை தூரத்திலிருந்த எஞ்சியுள்ள அந்த துத்தநாக சல்ஃபேட்டின் மீது நிலைத்திருந்தது. அவன் ஏதோ எண்ணத்துடன் சற்றே எழுந்து அதை நோக்கி நடந்தான். ஆனால் ... அவனுக்கு அன்றுவரைத் தெரியாது... துத்தநாக சல்ஃபேடு வெறும் உரம்தான்; பூச்சுக் கொல்லி அல்ல என்று.

3 comments:

Thangamani said...

வாங்க மாலிக். நீண்ட நாளுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். கதையின் நடை சின்ன சுழல்கள், நெளிவுகளுடன் ஓடும் வாய்க்கால் நீர் போன்று தெளிவாக இருக்கிறது. முடிவு எனக்குப் புரியவில்லை.

மணிமொழி said...
This comment has been removed by a blog administrator.
மணிமொழி said...

சில கலைச்சொற்கள் எல்லாம் எனக்குப் புரியவில்லை. கோடைப் புழுதி அடித்தல், அண்டை வெட்டுதல் ....? கதை விவசாயத்தைப் பற்றியது என்றாலும் ரொம்ப technical . ஒவ்வொரு கதையிலும் முடிவை படிப்பவர்களின் கணிப்புக்கு விட்டுவிடுகிறாய். 'மார்கழிக்குருவி' கதையில் குருவி காணாமல் போன விடயமெல்லாம் கனவு என்று சுட்டுவதாக எனக்குப் பட்டது. (அப்படி இருந்தும் குருவிக்கு என்ன ஆனது என்ற ஒரு குடைச்சல் இருக்கத்தான் செய்தது. அத்தகைய குடைச்சல் ஏற்பட வேண்டும் என்று நினைத்து எழுதியிருந்தால் வெற்றிபெற்று விட்டாய்.) இக்கதையில் 'ஏதோ எண்ணத்துடன்...', 'அவனுக்கு அன்றுவரை தெரியாது... பூச்சிக்கொல்லி அல்ல என்று'. ஆனாலும் இந்த அளவுக்கு அதீத கணிப்புக்கு விட்டுவிடக்கூடாது. நான் கணிக்க மாட்டேனே!

முத்து.