Wednesday, September 21, 2005

இளவரசியைத் தேடி - சிறுகதை

பகல் ரயில் பயணம் எனக்குப் புதிதல்ல. ஆனால் இது போன்ற பயணத்தில் நேரத்தைக் கழிப்பது மிகச் சிரமமானதொன்று. பலர் குழுக்களாக, குதூகலத்துடன் பேசிக் கொண்டு செல்வர். மேலும் சிலர் படிப்பதில் மூழ்கியிருப்பர். வேறு சிலர் புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொண்டு மின்னஞ்சல் முகவரிகளையும், தொலைப்பேசி எண்களையும் பகிர்ந்துக்கொண்டு செல்வர். ஆனால் நான் தனியாக கனவுகள் பல கண்டுக் கொண்டு செல்வது வழக்கம். இப்பழக்கம் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே தொற்றிக் கொண்டதொன்று.

என் படிவத்திற்கேற்றவாறு என் பயணக் கனவுகளும் மாறுபட்டு வரும். செயற்கரிய செயல் வீரனைப் போலவும், புரட்சியாளனைப் போலவும் என்னைப் புனையக் கூடியவைகளாக அவை இருக்கும். முன் பதிவு செய்த பயணச் சீட்டுடன் ரயிலுக்காகக் காத்திருந்த அந்த நேரம் உட்பட, ஏறத்தாழ என் கனவுகள் அனைத்தும் ஏதோ ஒரு பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது பற்றியே இருக்கும். அந்த கனவுகளில் தீயவன் யாரேனும் இருந்தால், என்னையும் அறியாமல் அவன் இராஜராஜனைப் போலவே இருப்பான்.

இராஜராஜன் என் பள்ளிப் பருவத்து நண்பன். அவனுக்கும் எனக்கும் ஒரே பெண்ணைப் பிடித்திருந்தது. இது போல பலர் நிஜ வாழ்க்கையிலிருந்து என் கற்பனையில் நுழைந்துவிடுவர்.

அன்று வீட்டிலிருந்து ரயில் நிலையத்துக்கு கிளம்பும்போது கூட என்னுடன் ஒரு பெண் பயணம் செய்யப்போவதுபோல் கற்பனை செய்திருந்தேன். ஆனால் இது போன்ற எதிர்பார்ப்புக் கனவுகள் ஏமாற்றத்தையே தந்திருந்தன. என் நேரம்.... காலாட்படையாட்களும், அரசியல்வாதிகளுமே பயணம் செய்வார்கள்.

இரயில் வந்ததும் அனைவரும் ஏறினோம். ஜன்னல் அருகிலிருந்த என் இருக்கையில் நான் அமர்ந்தேன். எதிர் இருக்கையில் ஒரு வயதானவரும், என்னருகில் என் சக வயதுக்காரனும் அமர்ந்தனர். நான் கற்பனையை உடனே ஆரம்பிக்கவில்லை. விற்பவர்கள் வந்து செல்லும்வரைக் காத்திருந்தேன்.

என்னையே பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் மெளனத்தைக் கலைத்தார்.

'நீங்க எங்க இறங்கனும் ?'

'சென்ட்ரல்', என்றேன்.

'உங்களுக்கு சென்னைப் பற்றி நன்குத் தெரியுமா ?'

'தெரியும்'

'சென்ட்ரலிலிருந்து மந்தைவெளி போகனும்னா எந்த வண்டியில ஏறனும் ?'

முன்னூறு கிலோமீட்டருக்கு முன்னாடியே பெரியவர் கவலைப் பட ஆரம்பித்துவிட்டார். பதில் கூறினால் அறுவையை ஆரம்பித்துவிடுவார் என்று எண்ணி மெளணம் சாதித்தேன்.
தேநீர்க்காரரும், உலர்ந்த உணவு பொருட்கள் விற்பவரும் வந்து சென்றனர். பயணச் சீட்டாய்வாளர் வந்து செல்லக் காத்திருந்தேன். எனக்கு அருகில் அமர்ந்திருந்தவனின் கவனத்தை சற்றூ தூரத்தில் அமர்ந்திருந்த பெண் கவர்ந்திருந்தாள். அவளொன்றும் பேரழகு கிடையாது; என்றாலும் அவன் கவனம், அவள் மீதே அடிக்கடி சென்றுக் கொண்டிருந்தது.

எதைப் பற்றி கற்பனை செய்வது. அனத்துவிதமான கற்பனைகளையும் இதற்கு முன்பே செய்தாகிவிட்டது. மீண்டும் ஒரே மாதிரி கற்பனை செய்வதில் களிப்பு ஏற்படுவதில்லை.

பயணச் சீட்டு ஆய்வாளர் வந்து சென்றார். என் கனவு, என்னையும் அரியாமல், என் சொந்த ஊரிலிருந்து ஆரம்பமானது.

நான் கிணற்றில் நீரிரைத்துக் கொண்டிருந்தபோது என்னருகில் ஓர் ஒற்றன் வந்து ஒரு ஓலையை என்னிடம் நீட்டினான். குலோத்துங்க சோழனின் முதன்மை மந்திரியால் அவ்வோலை எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இளவரசி கடத்தப்பட்டுள்ளதையும், அது பற்றிய செய்திகளையும் விளக்கிய பிறகு, இறுதியில் என் உதவியைக் கேட்டு அக்கடிதம் முற்றுப் பெற்றிருந்தது. கடத்திச் சென்றவன் வழக்கம்போல இராஜராஜனைப் போலவே என் கற்பனையில் தெரிந்தான். உடனே அவசரமாக உடையை அணிந்து கொண்டு குதிரையில் புறப்பட்டேன்.

பக்கத்திலிருந்தவன் திடீரெனெ எழுந்தவுடன் என் கனவு கலைந்தது. அப்பெண் ஜன்னல் கதவுகளை மூட முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது இவனால் மூடப்பட்டது. இட்லிக்காரர் மீண்டும் மீண்டும் வந்து இடையூறு செய்ததால் ஏற்பட்ட வெறுப்போ என்னவோ, இராஜராஜன் இந்த இட்லிகாரர் சாயலைச் சற்றே பெற்றிருந்தான்.

அரண்மனைக்குச் சென்று முழுச் செய்திகளையும் கேட்டறிந்து, வாழ்த்துக்கள் பல பெற்று, கடத்திச் சென்றவர்களின் குதிரைச் சுவடுகளைப் பின் பற்றி என்குதிரையில் புறப்பட்டேன். குதிரைச் சுவடு, மகத நாட்டுக்குச் செல்லும் வணிக பாதையில் சென்று முடிந்தது (அட, மகத நாடு...! பல அம்புலிமாமா கதைகளில் வரும் நாட்டின் பெயர்..!).

கற்பனை மிகச் சுவராசியமாகச் சென்றுக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாகத் தெறியும் குன்றுகளிலெல்லாம் என் கற்பனை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக்கொண்டிருந்தேன். பல தந்திரத் திட்டங்களை (பெரும்பாலும் சாண்டில்யன் கதைகளில் கூறப்படுபவை) வெற்றிகரமாகச் செயல்படுத்தி, இளவரசி அடைத்துவைக்கப்பட்டுள்ள அந்த மர்மக் கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

இடையில், இரயில் போகும் அவ்வழியில், ஆறு ஒன்று வறண்ட நிலையில் தென்பட்டது.

இளவரசியைத் தேடும் என் மேலான பணிக்கிடையில்.....
நீர் பெருக்கெடுத்து ஓடும் அவ்வாற்றில் அடித்துச் செல்லப்படும் அழகிய பெண் ஒருவள் என்னால் காப்பாற்றப் பட்டாள்'. (கற்பனையில் தான்).

பக்கத்திலிருந்தவன் திடீரெனெ தன் கைகளை ஒரு திசையில் நீட்டியவுடன், மீண்டும் நான் கனவு கலைந்தேன். அப்பெண்ணின் தண்ணீர்க் குடுவை கீழே சாய்ந்து உருள்வதை அவளிடம் காட்டிக்கொண்டிருந்தான்.

கோபத்துடன் எழுந்து நுழைவாயிலை நோக்கி நான் செல்லும்போது உள்ளூர எனக்கோர் எண்ணம், 'சாதாரணமான இவளுக்கே இவன் இவ்வளவு வியக்கிறான்; இளவரசியைக் காணோம் என்றால், இவன் போன்றவர்கள் எத்தனை பேர் கிளம்புவார்களோ ?'

வாயிலில் நின்றுக்கொண்டிருக்கும்போது என் கற்பனைத் தொடர்ந்தது.

தூரத்திலிருந்த குன்றை மிகச் சிரமப்பட்டு ஏறிக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். குன்றின் மீது ஏறியவுடன் .... அதன் மறுபக்கத்தில், நிறைய பேர் குதிரைகளில் சென்றுக்கொண்டிருப்பதைக் கண்டேன். எனது கற்பனை என்னையும் அறியாமல் சென்றுக் கொண்டிருந்தது. என் குதிரையை வேகமாக செலுத்தி அவர்களில் ஒருவனை அடைந்தேன்.

'எங்கு செல்கிறாய் ?'

'இளவரசி காணாமல் போய்விட்டாள். இத்திசையில்தான் கடத்தியவர்கள் சென்றிருக்கக் கூடும். நான் அவளைத் தேடி அழைத்துவர அனுப்பப்பட்டுள்ளேன்'

அவனது இப்பதில் என்னை நிலைக் குலையச் செய்தது. 'எனக்கு இணையாக இத்தனை பேருக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்திகளை அனுப்பியுள்ளார்கள்', என்று ஏமாற்றத்துடன் எண்ணினேன்.

அல்லது என் கற்பனையின் போக்கு சரியில்லையோ ?
கற்பனையை மீண்டும் வீரம் மற்றும் காதல் நிரம்பியதாக திருத்த முயற்சித்தேன். தூரத்தில் தெரிந்த அக் குன்றை மீண்டும் மிகச் சிரமப்பட்டு ஏறினேன். அப்பா, நல்ல வேளை..., அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இளவரசியைத் தேடிச் சென்றுக் கொண்டிருக்கவில்லை.

மிக மகிழ்ச்சியுடன் குதிரையை குன்றின் இறக்கத்தில் செலுத்திக் கொண்டிருக்கும் போது...., எனக்குப் பின்னால் தூரத்தில் குதிரைகளின் காலடி ஓசைக் கேட்டது. நான் திரும்பிப் பார்க்கையில் பல குதிரை-வீரர்கள் அந்த இறக்கத்தில் இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் நான் சற்று நேரத்திற்கு முன் சந்தித்த அவனே தான்.

என் கனவு மீண்டும் கெட்டது.

நான் மீண்டும் மீண்டும் கனவு காண எவ்வளவோ முயற்சித்தும், அந்த குதிரையாட்கள் இல்லாமல் என்னால் கனவு காண முடியவில்லை. அவர்களும் எங்கிருந்தோ எனக்குப் போட்டியாக வந்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது எனக்கு ஒரு எண்ணம்: ஏன் நான் மட்டும் இளவரசியைத் தேடிச் செல்லவேண்டும். என் நோக்கம் இளவரசியைக் காப்பாற்ற வேண்டும் என்பதா ? அல்லது அவள் காதலைப் பெற வேண்டும் என்பதா ? நான் கனவு மீதான ஈடுபாட்டினை இழந்தேன். மற்ற குதிரை வீரர்களும் தோன்றும் அக்கனவினை என்னால் அவ்வளவு லேசாக தொடர முடியவில்லை.

எனது இருக்கைக்குத் திரும்பிச் சென்று உட்கார்ந்தேன். பெரியவர் ஜன்னல் வழியாக குன்றுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து,

'இருபத்தொன்று என்று எண்ணிட்ட பேருந்துகள் மந்தைவெளி போகும்', என்றேன்.

பல மணி நேரம் கழித்து நான் அளித்த அப் பதிலைக் கேட்டு வியப்புடன் என்னை நோக்கித் திரும்பினார் அவர்.

8 comments:

-/பெயரிலி. said...

மாறுதலான முயற்சி

மு மாலிக் said...

நன்றி பெயரிலி அவர்களே.

Thangamani said...

நல்ல கதை மாலிக்!

Dharumi said...

கொஞ்சம் தட்டி கிட்டி சரி பண்ணினா பயங்கரமா மாறிடும்னு நினப்பு வந்திச்சு...என்னமோ சொல்லுவாங்களே...சர்ரியலிஸம்..அப்டி இப்டின்னு...அது மாதிரியோ..

Dharumi said...

என்ன ஆச்சு? நிஜ இளவரசியைத் தேடிப் போயாச்சோ?

rahini said...

arumaiyana kathai thodarnthu eluthugkal
rahini
germany

மு மாலிக் said...

பெயரிலி, தங்கமணி, தருமி மற்றும் ராகிணி அனைவருக்கும் எனது நன்றிகள்.

ரூபா. said...

அடடா.வித்தியாசமான கதைதான்.வாழ்த்துக்கள் மாலிக்.