Thursday, September 15, 2005

பூனை - சிறுகதை

பூனை - சிறுகதை


அன்று மாலை ஜன்னல் அருகில் அமர்ந்தவாறு அன்றைக்குறிய வீட்டுப் பாட வேலைகளை செய்து கொண்டிருந்தாள் ராஜி. அவைகள் அவள் படிக்கும் ஐந்தாம் வகுப்பிற்குறியதைவிடச் ச்ற்று அதிகம்தான். ஆனால் அவள் டீச்சரின் கையிலிருக்கும் நீண்ட மெல்லிய பிரம்பு, அவளுக்கு வீட்டுப்பாடத்தின் மீது அதிக அக்கறையையும் பயத்தினையும் கொடுத்திருந்தது. அன்று, அவளால் அவைகளை அதிக ஈடுபாட்டுடன் செய்யமுடியவில்லை. காரணம் - எதிர்த்த வீட்டு வனஜா. அவளுடன் பள்ளியில் நிகழ்ந்த வார்த்தைப் பரிமாற்றம் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இருப்பினும், இடையிடையே அவளுக்கு உற்சாகமளிப்பது அவளருகில் அமர்ந்திருந்த பூனை. அதனுடைய அனைத்துச் செயல்களும் அவளைப் பொருத்தவரை அழகுதான். அது கொட்டாவி விட்டாலும், சோம்பல் முறித்தாலும் அதனைக் கண்டு புன்முறுவல் அளிப்பதோ அல்லது அதனை வருடி விடுவதோ அவள் வழக்கம். அவள் அதற்கு குறிப்பிட்ட பெயர் எதுவும் வைக்கவில்லை. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைப்பாள். (ஏய், மியாவ், பூனை, பூஸ் ...).


அந்த பூனையை அவளது தந்தையிடமிருந்து வரும் எதிர்ப்புகளுக்கு இடையில் அதை வளர்த்து வந்தாள். அது, பல நேரங்களில் பால் பாத்திரத்தைத் தள்ளிவிட்டு பால் குடிக்குமாகையால், அதனை பல முறை கோணிப் பையில் போட்டு வெகு தூரத்திற்கு கொண்டு சென்று விட்டுவிட்டு வந்திருக்கிறார், அவளின் தந்தை. அனால் சில மணி நேரங்களில், அது ஜன்னல் ஓரமாக அமர்ந்திருப்பதைக் கண்டு, தன் கோபத்தை ராஜியிடம் காட்டிவிட்டுச் சென்றுவிடுவார். அனால் ராஜியைப் பொறுத்தவரை அது சில வீரச் செயல்களைப் புரிவதாகவே கருதினாள். அவளது தாய் நடுநிலை வகித்தாலும், தந்தை சமாளிப்பதற்குச் சற்று சிரமமானவராகவே தென்பட்டார்.


பூனை, தன் கண்களை மூடித்திறப்பதும், தன் காதுகளைப் பின்னோக்கி அசைப்பதும் மிகச் சாதாரணமான செயல்கள். ஆனால் அவைகள் அவளைப் பொறுத்தவரை மிகவும் அர்த்தம் பொதிந்தவை. அவைகளை, 'ஆம்' மற்றும் 'இல்லை' என்பதன் சைகைகளாகக் கருதி, அதனுடன் பேசிக்கொண்டிருப்பது, ராஜியின் பொழுதுபோக்கு.


அது கண்களை மூடினால் 'ஆம்' என்றும், காதுகளை அசைத்தால் 'இல்லை' என்றும் பொருளாம். 'ஆம்' அல்லது 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் பதிலளிக்கக் கூடிய கேள்விகளைக் கேட்டு அதன் பதிலைத் தெரிந்து கொள்வாள்.


'அப்பா புது புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாங்களா ?' -- ராஜி

'ஆமாம்' -- பூனை ( கண்களை மெல்ல மூடித்திறந்த்தது).

'நாளைக்குப் பள்ளியில் டீச்சர் என்னை அடிப்பாங்களா ?'

'அடிக்க மாட்டாங்க'. (காதுகளை அசைத்தது).

'தேர்வு எளிதாக இருக்குமா ?'

'இருக்காது'

'தேர்வு எளிதாக இருக்குமா ?'

'இருக்காது'

'தேர்வு எளிதாக இருக்குமா ?'

'இருக்கும்'

தனக்குப் பிடிக்காத பதிலைக் கூறினால், அது பதிலை மாற்றும் வரை, அதே கேள்வியைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாள்.

'வனஜா ஒரு வன் குரங்கு. அவள் உன்னைப் பார்த்தால், துரத்துவாள். அவள் வீட்டுப் பக்கம் போகாதே. போவியா ?"

அது, 'மாட்டேன்' என்று சொல்லும் வரை அவளது கேள்வி தொடருந்துக் கொண்டேயிருக்கும்.


'ராஜீ...!'

அம்மாவின் குறள் சற்று வெம்மையாகவே இருந்ததால், அது, 'பூனையைப் பற்றிய புகாராகவே இருக்கக் கூடும்' என்று மனதினுள் எண்ணியவாறே சமையலறைக்குள் சென்றாள், ராஜி.

'அது என்ன செஞ்சிருக்குன்னு நீயே பார் !'.

அவளது தாய் உண்மையிலேயே கோபமாகக் காணப்பட்டாள். வறுத்த மீன் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்தன. பேச சொற்களின்றி விழித்துக் கொண்டிருந்தாள், ராஜி.

'அதனுடைய அழிச்சாட்டியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுது. அப்பா அதைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலைப் பார்ப்பாங்க'

அவளது தாய் சத்தமாக பேச பேச, ராஜியின் உள்ளங்கைகள் வியர்த்து சோர்ந்து போயிருந்தன.

'போன தடவையே அப்பா தெளிவா சொல்லிட்டாங்க, கோணிப் பையில் போட்டு சென்னைக்குப் போகிற ரயிலில் வைத்துவிட்டு வந்துவிடுவேன்னு. என்னால் அதுவும் செய்யபுடியாது. நீயும்..., உன் பூனையும்...'

ராஜி நீர்த்த கண்களுடன், அமைதியாக ஜன்னலை நோக்கிச் சென்றமர்ந்தாள். பூனை பந்து போல உடலைச் சுருக்கி அமர்ந்திருந்தது. அப்பாவின் மீதிருந்த பயமும் கோபமும் அழுகையாக உருவெடுத்தது.
வழக்கம் போல் தாய் சமாதானத்திற்கு வந்தாள். நீண்ட நேரமாக ராஜியின் அழுகை நிற்காததால், தாய் சற்றே இரக்கமுடையவளாக,

'சரி, சரி... அழுவதை நிறுத்து. நான் அப்பாவிடம் சொல்வதாக இல்லை'

என்று கனிவுடன் கூறினாள். இதைக் கேட்டதும் ராஜி உள்ளூரப் பூரித்தாலும், விம்மலை உடனே நிறுத்த முடியவில்லை. அம்மா தொடர்ந்தாள், 'இத மாதிரி பண்ணும்போது, பூனையை அடிச்சா தான் திருந்தும். அப்படி செய்யும் போது நீ எங்க மேல கோபப் படக்கூடாது'.

சிறிது நேரங்களில் ராஜி சமாதானம் ஆகிவிட்டாள். பூனை அவள் மடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது.

'அப்பா உன்னை சென்னைக்கு அனுப்பி விடுவாங்களா ?'

'ஆம்'

'அப்பா உன்னை சென்னைக்கு அனுப்பி விடுவாங்களா ?'

'ஆம்'

'அப்பா உன்னை சென்னைக்கு அனுப்பி விடுவாங்களா ?'

'ஆம்'

கேள்வியைப் பல முறைத் தொடர்ந்தும், பதில் 'ஆம்' என்பதாகவே இருந்தது.

'உன்னால் என்னைப் பிரிந்து இருக்க முடியுமா ?'

பூனை மெல்ல கண்களை மூடித்திறந்தது. இக்கேள்வியினை எத்தனை முறைக் கேட்டும், 'ஆம்' என்பதுவே பூனையின் பதிலாக இருந்தது. கோபத்துடன் அருகிலிருந்த அழி-ரப்பரை எடுத்து எறிந்துவிட்டு, சிறிது நேரம் அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, அதன் தலையில் செல்லமாக அடித்துவிட்டு, 'இனிமேல், நீ காதை அசைததால் - ஆம் என்றும், கண்ணை மூடினால் - இல்லை, என்றும் அர்த்தம். என்ன ? சரியா ?' என்று கேட்டுவிட்டு அதன் காதுகளை அசைத்துவிட்டாள், ராஜி.

14 comments:

Balaji-paari said...

Did this story appear in IISc, Tamil magazine Minnal?
Good work maalik.

மு மாலிக் said...

Hi Balaji, surprise. Thanks.

ஆமாம் இப்பத் தான் ஒவ்வொறு கதையையும் ஏற்ற முயற்சிச்சுக்கிட்டு இருக்கேன்.

Balaji-paari said...

Welcome to the world of blogs.
Neenga ezhuthanumnnu pala naal naan ninaichathu undu..
Could you write to me a line at
sbalaji at gmail.com ?

Thangamani said...

அன்புள்ள மாலிக்.

பாலு சொன்னபோதே உங்கள் பக்கம் வந்து பார்த்தேன். அப்புறம் காலையில் ஒரு பின்னூட்டு எழுத் முயன்றேன். வரவில்லை. ஆனாலும் என்னைக் கவர்ந்த இந்த பூனைக்கதையை வெளியிட்டமைக்கு நன்றி. ஆரம்பமே அருமையாக இருக்கிறது.

உங்கள் நிலைப்பாடையும் படித்தேன். சிலகாலம் கொஞ்சம் வலைபதிவுகளை மேய்ந்தால் உங்களுக்கு எழுதுபவர்களின் நோக்கம் புரிபடும்.

இந்த வலைப்பதிவு உங்களுக்கு மகிழ்ச்சியையும், புதியனவற்றையும் தரவிழைகிறேன்.

நண்பர்கள் அனைவர்களுக்கும் என் அன்பைச்சொல்லவும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ram said...

arumiyaana kadai. arumiyaanaa sindhanai. Kulundhain mana ottathai nandraaga solli irukirergal.

மணிமொழி said...
This comment has been removed by a blog administrator.
மணிமொழி said...

பூனையாரே, 'மங்கலகரமாக' பூனையிலிருந்து உமது முற்போக்குக் கருத்துக்கள் தொடங்கிவிட்டனவா?

அல்லது, நான் உனது பூனைப்பற்றிற்குப் புதுவித விளக்கம் தருகிறேனா? கதை படிப்பதற்கு இதமாக இருந்தது.

Dharumi said...

ஆக ஒரு தேர்ந்த எழுத்தாளர் (பல கதைகளை எழுதி, stock வைத்திருக்கும்) தமிழ்மணத்திற்குக் கிடைத்து விட்டார்.
மாலிக், நல்ல கதையோடு நல்ல ஆரம்பம் கொடுத்துள்ளீர்கள். வருக..

கீதா said...

இப்பொழுதுதான் இந்தப் பக்கம் பார்க்கிறேன்.

அருமையான கதை.

சின்னக்குழந்தைகளின் மனோபாவாம் இதுதான். தன்க்கு சாதகமான பதில் வரும்வரை விட்டுக்கொடுப்பதில்லை. என் அக்கா குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடமிது.

காதுகளை அசைத்தால் ஆம் என்றும், கண்களை மூடினால் இல்லை என்றும் - தான் விதித்த விதியை தானே மாற்றிய இடம் மிகவும் பிடித்திருந்தது.

அருமை

அன்புடன்
கீதா

மு மாலிக் said...

தங்கமணி, பாலாஜி, ராம், முத்து, தருமி மற்றும் கீதா ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். தொடர்ந்து எழுத முயல்வேன்

பத்மா அர்விந்த் said...

மாலிக்
உங்களின் கதையை இன்றுதான் படித்தேன். அருமை. சில சமயம் என் மகன் கூட இதுபோல தனக்கு விருப்பமான விட கிடைக்கும் வரை ஆட்டத்தின் விதிகளை மாற்றி விளையாடுவதுண்டு. குழந்தைகளின் மனநிலை படம் பிடிப்பதாக இருந்தது.

மதுமிதா said...

///'இனிமேல், நீ காதை அசைததால் - ஆம் என்றும், கண்ணை மூடினால் - இல்லை, என்றும் அர்த்தம். என்ன ? சரியா ?' என்று கேட்டுவிட்டு அதன் காதுகளை அசைத்துவிட்டாள், ராஜி.///

கதை நல்லாயிருக்குங்க மாலிக்
தொடர்ந்து எழுதுங்க

மு மாலிக் said...

தேன்துளி மற்றும் மதுமிதாவிற்கு என் நன்றிகள்.